ஜப்பானும் சுனாமியும் தோழர்கள். கட்டிடத்தின்முதல் மாடியில் கூட கடல் வெள்ளம் வந்து நலம் விசாரித்து விட்டுப் போகும். ஆனால் அதற்கெல்லாம் சளைத்தவர்கள் அல்ல ஜப்பானியர்கள். மீண்டும் மீண்டும் கடலைத்தான் வம்புக்கு இழுக்கிறார்கள்.
தற்போது புதிதாக கடலுக்குள் நகரம் ஒன்றை நிர்மாணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறது ஜப்பான். மிதக்கும் நகரம், செயற்கை நகரம் என்ற ஆர்கிடெக்ட் முயற்சிகளையயல்லாம் முறியடிக்கும் வகையில் இருக்கிறது இந்த கடலுக்குள் நகரம் கான்செப்ட். அது எப்படி கடலுக்குள் வசிக்க முடியும்? வீட்டுக்குள் தண்ணி வந்துவிடாதா?
இது ஒரு பிரம்மாண்டமான பந்து வடிவம். எத்தனை பிரம்மாண்டமெனில் சுமார் 500 மீட்டர் விட்டம் உடைய பந்து. எஃகு ஃபிரேம்களினால் உருவாக்கப்பட்டு பாலிமர் மற்றும் பாலிபுரொபலின் மூலம் பந்தின் வெளிப்பகுதி நிரப்பப் பட்டிருக்கும். இது 4000 அடி நீளமுடைய சுருள் அமைப்பில் பொருத்தப்பட்டு, பந்தின் மேற்புறம் கடல்மட்டத்திற்குவெளியே 50 மீ வரை தெரியும்படி நிறுவப்பட்டிருக்கும். சுருள் அமைப்பு கடலின் அடிபாகத்தில், அதாவது நிலத்தில் வலிமையாக பொருத்தப் பட்டிருக்கும். இதுவே கடல் நகரம்.
ஜப்பான் நியூ டோக்கி யோவில் உள்ள நூறு ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் கட்டுமான நிறுவனமான ´MU கார்ப்பரேஷன் என்ற நிறுவனம்தான் இந்த சுழல் கடல் நகரத்தை உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறது. டோக்கியா கடற்கரை ஓரம் 5000 அடி ஆழத்தில் உருவாக்கப்படும் இந்த சுழற்கடல் நகரத்தில் 1150 வீடுகள் அமைக்கப்பட உள்ளன. ஏறத்தாழ 50,000 ச.மீ பரப்பளவில் அலுவலகங்களும் 400க்கும் மேற்பட்ட ஓட்டல் அறைகளும் இதில் உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள், தியேட்டர்கள் போன்ற பல அம்சங்களை உடைய இந்த குட்டி நகரத்தில் இருந்து வெளியே செல்லவும்/உள்ளே வரவும். சூரிய வெளிச்சம், ஆக்ஸிஜன் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு பிரத்யேக வழிகள் உள்ளன.
இதன் சுருளமைப்பு, நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களைத் தாங்கும் வகையில் பாதுகாக்கும். திமிங்கலம் போன்ற பிரம்மாண்டமான நீர்வாழ்வன அருகே சென்று தாக்காத வகையில் எலெக்ட்ரானிக் பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.
கடலின் மேற்பரப்பில் இந்த நகரைச் சுற்றிலும் பிரம்மாண்டமான பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டு அதன் வழியே படகு, கப்பல் போக்குவரத்து தடைசெய்யப் படுமாம்.
ஏறத்தாழ, 25 பில்லியன் டாலர்கள் செலவில் 5,000 தொழிலாளர்களுடன் இதன் கட்டுமானப் பணி நடைபெற உள்ளது. விவாத நிலையிலேயே இருக்கும் இந்த திட்டம் உரிய அனுமதியுடன் செயலாக்கம் பெற்று விட்டால் 2030க்குள் இதன் ஒட்டுமொத்த கட்டுமானப் பணியும் முடிந்து விடும்.