கோயம்புத்தூரில் கட்டப் பட்டிருக்கும் ஒரு வீட்டின் பெயர் Casa Roca. அதாவது இயற்கையான கற்களைக் கொண்டு கட்டப்பட்ட வீடு என்பது இதன் பொருள். இந்த வழியாகக் கடந்து செல்பவர்களை ஒரு கணம் நின்று நிமிர்ந்து பார்த்து வியக்க வைக்கிறது இதன் கட்டமைப்பு.
இந்தியாவின் கட்டிடக் கலையின் சிறப்புகளை எடுத்துக்காட்டும் வகையில் இந்த வீடு கட்டப்பட்டிருக்கிறது. கோவையைச் சேர்ந்த சிஎன் ராகவ் என்பவர் கட்டியிருக்கும் வீடுதான் Casa Roca. இவர் ஒரு கட்டிடக்கலை நிபுணர்.
“எத்தனையோ நாடுகளுக்கு நான் பயணம் செஞ்சிருக்கேன். ஆனா இந்தியாவுல இருக்கற கட்டிடக் கலை நடைமுறைகளை நான் எங்கயுமே பார்க்கலை. நம்ம கட்டிடங்கள் தரமானதா இருக்கு. இதுக்கு உதாரணமா எத்தனையோ கட்டிடங்கள் ஓங்கி உயர்ந்து நிக்கறதைப் பார்க்கலாம்,” என்கிறார் ராகவ்.
ராகவ் கோயம்புத்தூரில் 2,500 சதுர அடியில் இந்த அழகான வீட்டைக் கட்டியிருக்கிறார். இது பார்க்க மட்டும் அழகாக இல்லை. கார்பன் வெளியேற்றம் இல்லாத சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடாக இதைக் கட்டியிருக்கிறார். பழங்கால கட்டிடக் கலை நடைமுறைகளை இதில் புகுத்தியிருக்கிறார். இப்படி இந்த வீட்டில் ஏராளமான பிளஸ் பாயிண்ட்களை சுட்டிக்காட்டலாம்.
இந்த வீட்டிற்குத் தேவையான டைல்ஸ்கள் ஆத்தங்குடியிலிருந்து வாங்கப்பட்டன. பில்லர் எழுப்பத் தேவையான கற்கள் காரைக்குடியிலிருந்து வாங்கப்பட்டன.
ஒவ்வொன்றையும் ராகவ் கவனமாகப் பார்த்து தேர்வு செய்திருக்கிறார். கிளாஸ் பாட்டில்கள் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.
”வீட்டைப் பார்க்கறவங்க பொறாமைப்படற அளவுக்கு தனித்துவமான முறையில வடிவமைச்சிருக்கோம். வீட்டோட மேற்கூரைக்கு பயன்படுத்திய ஸ்லாப் எல்லாம் களிமண் தட்டால் செய்யப்பட்டது.
இதனால் 30 சதவீதம் வரைக்கும் வெப்பநிலை குறையும். இயற்கையான வெளிச்சம் வீட்டுக்குள்ள படணும்னு நினைச்சேன். அதுக்காக கிளாஸ் டைல்ஸ் பயன்படுத்தியிருக்கேன். இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களைப் பார்த்து பார்த்து செஞ்சது மின்சாரப் பயன்பாடு குறையவும் உதவுது,” என விவரிக்கிறார் ராகவ்.
தனித்துவமான கட்டுமானம் செங்கல் சுவர்களை கட்டுவதற்கு ரேட் ட்ராப் பாண்ட் (Rat Trap Bond) என்கிற தனித்துவமான நுட்பத்தை ராகவ் பயன்படுத்தியிருக்கிறார்.
இந்த நுட்பத்தின்படி செங்கற்கள் வழக்கமான முறையில் கிடைமட்டமாக வைக்கப்படுவதற்கு பதிலாக செங்குத்தாக வைத்து கட்டப்படும். இதனால் கட்டுமான செலவு குறைவதுடன் வெப்பத் திறனும் மேம்படும்.
அதேசமயம் சுவரும் வலுவானதாக இருக்கும். அதேபோல், பாராபெட் சுவர் எழுப்ப செங்கற்கள் 13 டிகிரி சாய்வாக வைக்கப்பட்டுள்ளன. இதனால் சாலையிலிருந்து பார்க்க பிரமாதமாக காட்சியளிக்கின்றன. மூலிகைகள், காய்கறிகள் வளர்க்க கிச்சன் கார்டன் அமைக்கப்பட்டுள்ளது. மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டப்பட்டுள்ளது. தற்போது வீட்டின் தண்ணீர் தேவைகள் அனைத்தையும் இது பூர்த்தி செய்து விடுவதாக ராகவ் தெரிவிக்கிறார்.
மேலும் சோலார் பேனல் நிறுவவும் ராகவ் திட்டமிட்டிருக்கிறார். 25 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் இத்தனை வசதிகளையும் செய்து காட்டி அசத்தியிருக்கிறார் ராகவ், எல்லாவற்றிற்கும் ஹைலைட்டாக ஆண்டிற்கு மின்சாரத்திற்கு செலவிடப்படும் தொகையில் கிட்டத்தட்ட 36,000 ரூபாய் வரை சேமிக்க முடியும், என்கிறார்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2136994
|