உலகப்புகழ் பெற்ற இந்திய கட்டட கலைஞர்! சார்லஸ் கொரியா..,
இந்த விரிந்து பரந்த பாரதத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு உள்கட்டமைப்புகளும் குடியிருப்பு கட்டடங்களும் ஒரு நிகழ்கால சாட்சியாக என்றென்றும் இருந்து வருகிறது. அதிலும் சுதந்திரத்திற்கு பிந்தைய நவீன கால இந்தியாவை கட்டமைத்த எண்ணற்ற கட்டிடக் கலைஞர்களும் பொறியாளர்களும் இன்றளவும் நினைவு கூறப்பட்டு கொண்டே இருக்கிறார்கள் .அதில் மிக முக்கிய இடத்தில் இருப்பவர் சார்லஸ் மார்க் கொரியா என்னும் வெளிநாட்டு வம்சாவழி கட்டிட கலைஞர்.
இவர் கோவையில் வசித்து வந்த வெளிநாட்டு பெற்றோர்களுக்கு பிறந்த கத்தோலிக்கராவார். 1930 செப்டம்பர் ஒன்றாம் தேதி செகந்திராபாத்தில் பிறந்த சார்லஸ் மும்பையில் தன்னுடைய உயர் படிப்பை சேவியர் கல்லூரியில் படித்து முடித்தார். அதற்கு பிறகு பிரபல மெக்சிகன் பல்கலைக்கழகத்தில் 1953 வரை ஆசிரியராகவும் பணிபுரிந்தார்.
பின்னர் 1958ல் இந்தியாவுக்கு திரும்பிய சார்லஸ் கொரிய மும்பையில் தனது கட்டிடத்துறை தொடர்பான சொந்த தொழில் பயிற்சி மையத்தை நிறுவினார்.
அவரது முதல் குறிப்பிடத்தக்க ப்ராஜெக்ட் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்தினை புனரமைப்பது தான், மஹாத்மா காந்தியின் இந்த வாழ்விடத்தினை, 1958 முதல் 19563 வரை புணரமைத்த அவர் செய்த இந்த ப்ராஜெக்ட், அவரைப் பற்றிய விழுமியங்களை அக்கால கட்டிடத்துறையில் அழுத்தமாக தோற்றுவித்தது.
அதைத் தொடர்ந்து மத்திய பிரதேச சட்டமன்ற கட்டடத்தினை புனரமைத்தார் .அதன் பின்பு மும்பையில் உள்ள கஞ்சன் துங்கா என்னும் அடுக்குமாடி குடியிருப்புகளை வடிவமைத்தார். இதன் மூலம் வட இந்தியாவில் முதன்முதலாக அடுக்குமாடி குடியிருப்புகளை வடிவமைத்தவர் என்ற பெயரினையும் பெற்றார். அதன் பின்பு, 1975- 1990 இல் அவர் புது டெல்லி உள்ள தேசிய கைவினை அருங்காட்சியத்தினை புதுமாதிரியாக வடிவமைத்தார்.
பெரும்பாலும் அரசுக்கு சொந்தமான கட்டுமானங்களை புனரமைப்பதும் புதிதாக உருவாக்குதிலும் தன்னுடைய கட்டுமான பொறியியல் அறிவை செலவு செய்த சார்லஸ் கொரியாவின் பார்வை, மெல்ல இந்தியாவில் குறைந்த வருமானம் கொண்ட வீடுகள் பக்கம் திரும்பியது.
அதன் பின் எண்ணற்ற எளிமையான வீடுகளையும் அவர் உருவாக்க ஆரம்பித்தார். அவர் தன்னுடைய வாழ்நாளில் மிகப்பெரிய சொகுசு குடியிருப்புகளையும் உருவாக்கி இருந்தார். மிக நவீனத்துவ கட்டிட பொருட்களான கண்ணாடி மற்றும் ஸ்டீல் பயன்பாட்டினை அவர் அறவே தவிர்த்தார். அந்தந்த பிராந்தியத்தில் கிடைக்கக்கூடிய பொருட்களைக் கொண்டு கட்டிடங்களை வடிவமைக்கும் மரபுக் கட்டிடக்கலையை அவர் பெரிதும் விரும்பினார்.
இதன் காரணமாக 2013 ஆம் ஆண்டில், ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் பிரிட்டிஷ் என்ற அமைப்பில் நகர்ப்புற இந்திய கட்டிடக்கலையில் இவரது பணியின் சாதனையை குறித்து பாராட்டி அவருக்கு இந்தியாவின் மிகச்சிறந்த கட்டிடக் கலைஞர் என்ற விருதினை அளித்தார்கள்.
சார்லஸ் பெற்ற பிற விருதுகள்:
1972- ல் சார்லஸ் கொரியாவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பத்மஸ்ரீ விருது பெற்றார்.
2.1984-ல் ராயல் இன்ஸ்டி டியூட் ஆஃப் பிரிட்டிஷ் ஆர்கிடெக்ட்ஸ் கட்டிடக்கலைக்கான ராயல் தங்கப் பதக்கம் .
3. 1994 இல் ஜப்பானின் பிரேமியம் இம்பீரியல் விருதினைப் பெற்றார்.
4. 1998-ல் மத்திய பிரதேச சட்டமன்றத்திற்கான கட்டிடக்கலைக்கான 7வது கட்டடக்கலை விருதுபெற்றார்.
5. 2005-ல் அறிவியல் மற்றும் கட்டடக்கலைக்கான விருது,
6. 2006 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமிடம் இருந்து பத்மவிபூஷன் பெற்றார்.
7. 2011: கோமந்த் விபூஷன் விருது கோவாஅரசால் வழங்கப்பட்டது .
சார்லஸ் கொரியா இந்திய அளவில் அல்ல., உலகின் முன்னணி கட்டிடக்கலைஞர்களில் ஒருவர். 1987 மிமர் மற்றும் 1996 தேம்ஸ் & ஹட்சன் மோனோகிராஃப்கள் உட்பட அவரது படைப்புகள் கட்டடக்கலை இதழ்கள் மற்றும் புத்தகங்களில் பரவலாக வெளியிடப்பட்டுள்ளன.
எத்தனை கட்டடங்களை சார்லஸ் அவர்கள் உருவாக்கியிருந்தாலும், தமிழ் நாட்டில் கோவளத்தில் லீலா ஹோட்டல் சாய்வு கூரை பால்கனிகளும், மும்பை கஞ்சன் துங்கா அபார்ட்மென்ட் கட்டமும், புதுதில்லி கொன்னட் பிளேஸ் பாரதி பில்டிங்கும் அழியாப் புகழைப் பெற்றவையாகும்.
"கட்டிடங்கள் தான் ஒரு நாட்டின் பொருளாதார மற்றும் ஒருங்கிணைப்பின் சூழலை வெளிநாட்டுக்கு எடுத்து கூறுகிறது" என்ற கருத்தை முன்வைத்த சார்லஸ் கொரியர் அவர்கள் உடல்நலக் குறைவால் 16 ஜூன் 2015 அன்று மும்பையில் காலமானார்.
"நமது நாட்டில் ஏறத்தாழ 30 சதவீதம் பேருக்கு வீடு இல்லாமல் இருக்கிற நிலை இருக்கிறது. ஓங்கி உயர்ந்த கூட கோபுரங்களை உருவாக்குவதை விட, அந்த 30 சதவீதத்திற்கான பேருக்கு வீடுகளை உருவாக்குவதில் தான் நாம் உழைக்க வேண்டும்" என்கிற கருத்தினை அவர் முதன்மையாக வைத்திருந்தார்.
நாடறிந்த பெண் கட்டிடக்கலை நிறுவனர் பிருந்தா சோமையா அவர்கள், சார்லஸ் மறைவு குறித்த ஒரு இரங்கல் செய்தியில், "திரு சார்லஸ் கொரியா அவர்கள், மேல்நாட்டு கட்டிட கலையை இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கு அதன் ஆத்மா கெடாமல் அறிமுகப்படுத்தினார். அவர் கட்டிடக்கலை ஒரு மந்திர வார்த்தையாக மாற்றினார். மேலும், எங்களை போன்ற கட்டிடக்கலை வல்லுனர் அனைவருக்கும் எங்கள் தொழில் மற்றும் எங்கள் வேலையின் உண்மையான நோக்கத்தின் மீது ஒரு பெருமையை ஏற்படுத்தினார்" என குறிப்பிடுகிறார்.
பெங்களூரை சேர்ந்த சித்ரா விஸ்வநாத் என்னும் கட்டிடக் கலைஞர் அவரைப் பற்றி குறிப்பிடும்போது, "ஏழைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறிப்பாக அவர்களுக்கான பாதுகாப்பான தரமான வீடுகளை உருவாக்குவது தான் சார்லஸ் அவர்களின் நோக்கம். ஆனால், அவரது நோக்கம் இதுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. ஏழைகளுக்கான தரமான வீடுகளை நாடு முழுவதும் உருவாக்கி தருவது தான் நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி" என குறிப்பிடுகிறார்.
சார்லஸ் கொரியா அவர்களின் வாழும் காலத்தில் அவருடைய சமகாலத்தவர்களான பிரபல கட்டிட கலைஞர்கள் பி.தோஷி, லீ கார்பூசிர் மற்றும் லூயிஸ்கான் ஆகியோர்களும் புகழ்பெற்று விளங்கினாலும், அவர்களிடமிருந்து தன்னுடைய தனித் திறமையால் சார்லஸ் கொரியா அவர்கள் பெரும் புகழை பெற்று இருந்தார்.
கொரியாவின் பணி இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார உண்மைகளைப் பற்றிய ஆழமான புரிதலைக்காட்டுகிறது. “சார்லஸ் கொரியா எப்போதும் ஒரு உத்வேகமாக இருப்பார், ஏனெனில் அவர் சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் நவீன கட்டிடக்கலையை உருவாக்கியவர்,” என்கிறார் கட்டிடக்கலைஞரும் இந்தியாவின் தலைவருமான சுனிதா கோஹ்லி, இவர் பல சந்தர்ப்பங்களில் கொரியாவுடன் பணிபுரியும் வாய்ப்பினைப் பெற்றவர்.
எளிய மக்கள் பயன்படுத்தக்கூடிய கட்டடங்களில் பாரம்பரிய கட்டுமானத்தையும் மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ற கட்டுமானத்தையும், அதைப் பயன்படுத்துவதற்கு தொலைநோக்குடன் கூடிய வசதிகளையும் மற்றும் சமூகப் பொறுப்புடன் கூடிய கட்டுமானங்களையும் படைத்த சார்லஸ் அவர்கள் கட்டிட கலைஞ்ர்களுக்கு முன்பாதிரியாகவும் இருந்து வருகிறார்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2121925
|