சமீபத்தில் பெய்த சென்னை கனமழையாகட்டும், தென் மாவட்ட பெரு மழையாகட்டும், வீடுகள் மூழ்கின. நாம் படகுகளில் மிதந்தோம். நீர் வடியும் காலம் வரை பொறுக்காமல் அலறினோம். ஆனால், வாழ்நாள் முழுவதும் தண்ணீரில் மிதந்து கொண்டு ஓர் மனித இனம் உயிர் வாழ்கிறது, தெரியுமா?
பிலிப்பைன்ஸ் நாட்டில் வசிக்கும் ஒரு பழங்குடி இனம் மனோபோ இவர்கள் ஆண்டு முழுவதுமே பல புயல்களையும் வெள்ளத்தையும் எதிர்கொள்கிறார்கள் எப்போதும் ஈரத்தில்தான் வாழ்க்கை. ஆறுகள், ஏரிகள், மற்றும் சதுப்பு நிலங்கள் தான் இவர்களின் வாழ்விடம்.
இவர்கள் வீடுகளின் உயரம் 10 மீட்டர் தண்ணீர் உயரத்தால் இவை வெள்ளத்தில் மூழ்குவதற்குப் பதிலாக மிதக்கும். இதற்கான ஒரு தனித்துவம் தொழிற்நுட்பத்தை இப் பழங்குடி மக்கள் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்கள்.
2012-ல் வீசிய டைபூன் புயல் பயங்கர மானது, காற்று சத்தமாக ஊளையிட்டது பலமணி நேரம் மழைக் கொட்டித் தீர்த்தது சர்வ சாதாரணமாக 2000 பேரைக் கொன்று ஒரு பேரழிவை நிகழ்த்தி சென்றது. அப்புயல் ஆனால். இப்பபழங்குடி சமூகத்தின் சேதத்தை மதிப்பிட்டபோது இவர்களது வீடுகள் அப்படியே இருந்தன. வழக்கமாக ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் புயல்களை சமாளிப்பதற்காக அவர்கள் மூதாதையர்கள் வழிகாட்டி கட்டடப்பட்ட வீடுகள் அவை. அதனால் தான் இவ்வளவு பெரிய சூறாவளி யிலும் மீண்டிருக்கிறது.
மனோபோ சமூகத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் இப்படியான மிதக்கும் வீடுகளில் வசிக்கிறார்கள் சாலைகளோ நடைபாதைகளோ இல்லை. இவர்களின் வீடுகள் நீர் நிலைகளோடு இணைக்கப்பட்டிருக்கும்.
வீடுகள் மட்டுமல்ல, பொதுக்கூடங்கள் பள்ளிகள் தேவாலயங்கள் போன்ற அடிப்படைத் தேவைகளும், அதே நீர் நிலையில் தான் கட்டப்பட்டிருக்கும். அதோடு மற்ற உயிரினங்கள் வாழ்வதற்கு விலங்குப் பண்ணைகளையும் அமைத்திருக்கிறார்கள். வாத்துக்கள், கோழிகள் மற்றும் பன்றிகளுக்கு மிதக்கும் இடத்திலேயே உணவளிக்கிறார்கள். குழந்தைகளை சிறிய படகுகளில் பள்ளிக்கும் அனுப்புகிறார்கள். வெள்ள நாட்களில் வீட்டுக்கு உள்ளிருந்தே மீனும் பிடித்துக் கொள்வார்கள்.
டிசம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்களில் பருவகால மழை இவர்கள் வாழும் நீர்மட்டத்தை உயர்த்திவிடும் வெள்ளம் வருடாந்திர நிகழ்வு. வறண்ட காலங்களில் தண்ணீர் குறையும் இப்படியான சமச்சீரற்ற தன்மையிலும் மிதந்தே வாழ்கிறார்கள். மூங்கில் மற்றும் பால்சா மரத்தில் தெப்பம் போன்ற ஒன்றை செய்கிறார்கள். அதன் மீது ஒன்று அல்லது இரண்டு தளங்களைக் கொண்ட வீடுகளைக் கட்டுகிறார்கள். இம்மரங்கள் நீர் நிரம்பிய ஏரி மற்றும் சதுப்பு நிலங்களுக்கு நடுவில் மூழ்கி வளர்கின்றன. மூங்கில் மரங்களைச் சுற்றி காரைக்கயிறுகள் மற்றும் கொடிகளைப் பயன்படுத்தி மேடைகளை நங்கூரமிடுகின்றனர். வீட்டின் கூரைகள் மற்றும் சுவர்கள் ஓலைகளால் அமைக்கப்படுகிறது. நிபா,பிரம்பு,பனை போன்றவற்றின் ஓலைகள் இதற்கு பயன்படுகிறது.
இந்த மிதக்கும் வீடுகள் நீர்மட்டம் உயர்ந்து தண்ணீரில் மூழ்கும் நிலை வந்தால் சதுப்பு நிலத்தின் மற்றொரு பகுதிக்கு மாற்றிக்கொள்ளலாம். வானிலை மோசமென சொல்லும் காலங்களில் பாதுகாப்பாக தங்கள் வீடுகளை இணைத்து வைத்துக் கொள்கிறார்கள்.
பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற தீவுக்கூட்ட நாடுகளில் கடல் மட்டம் அதிகரிப்பின் அச்சுறுத்தல்களுக்கு இம்மாதிரியான மிதக்கும் வீடுகள் ஒரு நல்ல தீர்வாகக் கருதப்படுகிறது. நெதர்லாந்து, நியூஸ்லாந்து போன்ற நாடுகள் இரும்பைப் பயன்படுத்தி கான்கிரிட்டால் வலுவூட்டப்பட்ட நவீன மிதக்கும் வீடுகளை உருவாக்கியுள்ளன.
வெள்ளம் புயல்களைப் போல் இப்போது வறட்சிக்கும் கட்டுமான வழிகளை உருவாக்கியுள்ளனர். அவற்றையும் அதே அடித்தள கோட்பாட்டிலேயே வடிவமைத்துள்ளனர்.
மனோபோ மக்களுக்கு மீன் பிடித்தல் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. இதுதான் இவர்களின் ஆன்மீகமும் கலாச்சாரமும். இவர்கள் சுற்றுச்சூழலையும் வாழும் இடத்தையும் ரொம்பவே மதிக்கிறார்கள். மீனவர்கள் விடியற் காலையில் எழுந்து தங்கள் படகு மூலம் ஏரிகளின் ஆழமான பகுதிகளுக்குச் சென்று மீன்பிடிக்கிறார்கள். தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்கும் அளவுக்கு மீனைக் கொண்டு வருகிறார்கள் உபரியாக இருந்தால் அண்டை வீட்டாருடன் பகிர்ந்து கொள்கிறார்கள். அதனினும் உபரியாக இருந்தால் மீன் சந்தைகளுக்கு கொண்டு போய் விற்கிறார்கள்.
இயற்கையோடு இழைந்த தற்சார்பு வாழ்க்கையும், தற்சார்பு கட்டிடக்கலையும் தான் மக்கள் இனத்தை எப்போதும் காத்து வருகிறது. அதை கல்வியில் மேம்பட்ட நாம்தான் காற்றில் பறக்க விட்டு விட்டோம். கற்றறியாத மனோபா மக்களுக்கு அதனை யாரும் கற்பிக்க தேவையில்லாமலேயே, அதைப் பின்பற்றுகிறார்கள். அதுதான் ஆச்சரியம்.