எந்த ஒரு தொழில் துறையாக இருந்தாலும் அதற்கான தனித் தனி விதிகளும் சட்டங்களும் இருப்பது இயல்பு. ஆனால் அது மற்ற துறைகளை விட மிக கவனமாக கடைப் பிடிக்க வேண்டியது நமது கட்டிடத் துறையாகும். அதனால்தான் கட்டிடத் துறையைப் பொறுத்த வரை, மனைப் பிரிவு போடுவதில் துவங்கி, அடித்தளம் அமைப்பது, காங்கிரீட் கலப்பது, எத்தனை உயரத்தில் தளம் அமைதல் வேண்டும்? எத்தனை தளங்கள் அமைதல் வேண்டும்? படிக்கட்டு உயரம் என்ன? அகலம் என்ன? பலகனி அளவு எவ்வளவு இருக்க வேண்டும்? என்றெல்லாம் பல பல விதிகள் உள்ளன. குடியிருப்பு கட்டிடங்களை விட, வணிகக் கட்டடங்களுக்கான அடிப் படை விதிகள் ஏராளமாக இருக்கின்றன.
அதுவும் சென்னையில் மக்கள் + போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கட்டும் கட்டிடங்கள் என்றால் கேட்கவே வேண்டாம், கட்டிடத்தின் பாதுகாப்பு மட்டுமல்ல, அதில் வசிக்கக்கூடிய மக்களின் பாதுகாப்பிற்கும், அவ்வழியே வருவோர் போவோர்களுக்கான பாதுகாப்பிற்கும் தான் ஏராளமான கட்டட விதிகள் இங்கே வகுக்கப்பட்டுள்ளன.
ஆனால், கட்டடத்தின் விதிகளை காற்றில் பறக்க விட்டு கட்டும் கட்டடங்கள் சென்னை மாநகரில் ஏராளமாக இருக்கிறது. இவற்றிற்கெல்லாம் எந்த அடிப்படையில் திட்ட அனுமதி வழங்குகிறார்கள்? குடிநீர் மின் இணைப்பு தருகிறார்கள்? என்பதுதான் புரியவில்லை.
செட் பேக் விடாமல் வீடு கட்டுவது, சாலையில் ரேம்ப் அமைப்பது, பார்க்கிங்கிற்கு இடமே இல்லாமல் அமைப்பது. வணிக வளாகம் என்றால் அதற்கு தேவையான அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமல் கட்டிடம் அமைப்பது என ஏராளமான விதிமுறைகள் 50% கட்டிடங்களில் கடைபிடிப்பதில்லை. ஒரு கேட்டட் கம்யூனிட்டி அல்லது அப்பார்ட்மெண்ட் பில்டிங்கிற்கு தரப்படும் முக்கியத்துவம் கவனமும் சி.எம்.டி.ஏ தனிப்பட்ட கட்டிடங்களுக்கு தருவதில்லை என்பது மட்டும் கண் கூடு.
சென்னையில் குரோம் பேட்டை பகுதியில் நான் நேருக்கு நேராக பார்த்த ஒரு கட்டடம், மேற்சொன்ன எந்த விதிகளையும் கடைபிடிக்காமல் கட்டபட்டிருந்தது. இது ஒரு தனி மனிதருக்கான தனிப்பட்ட குடியிருப்பு மற்றும் வணிக வளாகம் இணைந்த கட்டிடமாகும். கீழ் தளத்தில் வணிக வளாகம் மேலே குடியிருப்பு என இஷ்டத்திற்கு கட்டியிருக்கிறார்கள்.
இங்கே பார்க்கிங்க் எதுவும் அமைக்கவே இல்லை. செட் பேக் விடவில்லை. குரோம்பேட்டை நாகப்பா நகரில் பொன்னப்பன் தெரு முனையில் இந்த நி+4 கமர்ஷியல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு வணிக பயன்பாட்டு மின்சாரம், வாட்டர், கழிவுநீர் இணைப்பு என அனைத்தும் வழங்கப்பட்டது. எந்த பொறியாளர் இதற்கு பிளான் தயாரித்துக் கொடுத்தார்? என தெரியவில்லை.
இதன் உரிமையாளர் யார்? என விசாரித்தால் அவர் அரசு வழக்கறிஞராக பணியாற்றுபவர் என்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் விதிகள் பொருந்தாதா? அல்லது சி.எம்.டிஏ விற்கு இது பற்றிய கவனம் செல்லவில்லையா? என்பது தெரியவில்லை.
நமது கவனத்திற்கு இது வந்தபோது, உடனடியாக பில்டர்ஸ் லைன் அதிகாரப்பூர்வ டிவிட்டர் கணக்கில் இந்த தகவலை சிஎம்டிஏ டிவிட்டர் கணக்கோடு சேர்த்து நாம் டேக் செய்து புகைப்படத்துடன் பதிவிட்டோம்.
(படத்தினைக் காண்க) ஆனால், இதுவரை சிஎம்டிஏ தரப்பில் இருந்து எந்த பதில் நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
இதுபோல உங்களிள் கண்களில் ஏதேனும் கட்டட விதிமுறைகள் அப்பட்டமாக இருப்பது மீறப்பட்டிருப்பது பார்த்தால் உடனடியாக நமது மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். நாம் செய்தியோடு பதிவிடுவோம். சி.எம்.டி.ஏ நடவடிக்கை எடுக்கிறார்களா? இல்லையா? என்பது வேறு விஷயம். ஆனால் பொதுவெளியில் பதிவிடுகிறார்கள் என்றால் குறைந்தபட்சம் இது போன்ற ஒரு சில வீட்டு உரிமை யாளர்களின் அராஜகப் போக்கு கொஞ்சமாவது குறையும் அல்லவா?