தேர்வாய்க் கண்டிகை நீர்த்தேக்கம் அவசியமா? தமிழக அரசு செய்த தண்டச்செலவு

21 ஜனவரி 2024   05:30 AM 16 பிப்ரவரி 2021   12:00 PM


கடந்த 21-11-2020 அன்று இந்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்  ஷா அவர்கள் தேர்வாய் - கண்ணன் கோட்டைகண்டிகை நீர்த்தேக்கத்தைத் திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பெரும் விளம்பரத்தோடு நிகழ்ந்த நிகழ்ச்சி இது. 
 
 
இந்த நீர்த்தேக்கத்திற்காக ஏறக்குறைய ரூ.500 கோடி தண்டச் செலவு செய்த அய்.ஏ.எஸ் அதிகாரிகளையும் த.நா.பொ.ப.து பொறியாளர்களையும் மற்றும் சென்னைக்குடிநீர் (Chennai Metro Water) பொறியாளர்களையும்   எந்த  வகையில்  திருத்துவது? தெளிவான பொறியியல் நோக்கமின்றி, குருட்டாம் போக்கில் மக்களின் வரிப்பணத்தைப் பயனற்ற திட்டங்களில் அரசு செலவிடுவதைத் தடுப்பது எவ்வாறு...?
 
 
அரசுத் திட்டங்களைப் பற்றிய எல்லாத் தகவல்களும் திட்டம் ஆரம்பிக்கும் முன்பே (Detailed Project Report) இணைய தளத்தில் வெளியிட்டுத் தகுதியும் சமுதாய அக்கறையுமுடைய - பொறியாளர் வல்லுநர்களிடமிருந்து கருத்துரைகள் கேட்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளோடு இக்கட்டுரை தொடங்குகிறது.
 
 
திட்ட விவரங்கள் தெரிவிப்பவை எவை :
2000-2010 ஆண்டுகளில் சென்னைக் குடிநீர் மற்றும் நகராட்சித்  துறையிலிருந்த சில அய்.ஏ.எஸ் அதிகாரிகள் (Secretary to Government, MA&WS, MD, Chennai Metro Water & PWD – Chennai Region WRO Engineers) சென்னையின்  குடிநீர்த் தேவைக் கொள்ளளவினை 16.00 டிஎம்சிக்கு உயர்த்த வேண்டும்.  அதற்காகச் சென்னை மாநகரைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் கூடுதலாக (Additional Storages) புதிய  நீர்த்தேக்கங்களை உருவாக்கிக் கட்டமைக்க வேண்டும் என்று எல்லா ஆய்வுக் கூட்டங்களிலும் கூட்டுக் கலந்துரையாடல்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
 
 
அதனடிப்படையில்தான் திருவள்ளூர் மாவட்ட கண்ணன்கோட்டை-தேர்வாய்க் கண்டிகை என்ற இரண்டு ஏரிகளை ஒன்றாக இணைத்து ஒரு புதிய கூடுதல் நீர் தேக்கத்தை - 0.50டிஎம்0 + 0.50டிஎம்சி (இருமுறை நிரப்புதல் அடிப்படையில்) எனும் கொள்ளளவில் நிரப்புவது எனத் திட்டம் தீட்டி 2013ஆம் ஆண்டில்  ரூ. 330 கோடி திட்ட மதிப்பீட்டில் வேலைகளைத் தொடங்கினர். 
 
 
இத்திட்டத்தின்படி - தமிழ்நாட்டு எல்லையில் பூண்டி கால்வாயின்  ‘0’ புள்ளி (Zero Point) இலிருந்து பூண்டி நீர்த்தேக்கத்திற்குக் குடிநீர் வழங்கும் கண்டலேறு பூண்டி கால்வாயில் (கே.பி. கால்வாய்) (LS + 2200 மீட்டர் +42.576kP மட்டத்திலிருந்து)  ஒரு கிளைக் கால்வாயை - (வினாடிக்கு 1000 கன அடி எடுத்துச் செல்லத்தக்க கொள்ளளவு கொண்ட திறந்தவெளி மண்கால்வாயை) (Open Earthen Canal) - 7.90 கி.மீ தொலைவுக்கு வெட்டி கண்ணன்கோட்டை - தேர்வாய்க் கண்டிகை நீர்த்தேக்கத்தை ஆண்டிற்கு இருமுறை நிரப்புதல் அடிப்படையில் (0.50 TMC + 0.50 TMC) நிரப்புவது.  இதற்காக 1495 ஏக்கர் தனியார் நிலத்தைத் ரூ.160கோடி தொகை கொடுத்து கையகப்படுத்த வேண்டி இருந்தது. 
 
 
இத்தகைய தனியார் நிலத்தை கையகப்படுத் துவதில் உள்ளூர் மக்களின் எதிர்ப்பால் - நீண்ட காலதாமதம் ஏற்பட்டது. இந்நிலம்  கையகப்படுத்துவதற்காக ரூ.160கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.   
 
 
கால நீட்டிப்பினால் இத்திட்டச் செலவு ரூ.330 கோடியிலிருந்து ரூ.380 கோடியாக அதிகரித்துள்ளது. இதையே முன் வார்த்த உறுதிபெறு காங்கிரீட் குழாய்கள் (1600/2000மிமீ விட்டமுடைய) மூலமாக சாலையோரங்களில் எடுத்துச் சென்றிருந்தால் ரூ.175.87 கோடி செலவில் இரண்டு ஆண்டுகளில், (தனியார் நிலம் கையகப்படுத்தலின்றி). விரைவாக நிறைவேற்றி யிருக்கலாம். மேலும் குடிநீரைத் திறந்த கால்வாயின் வழியாக எடுத்துச் சொல்லும்போது நீர் ஆவியாதல், மண் உறிஞ்சுதல் இவற்றால் இழப்பு ஏற்படுவதோடு குடிநீர் மாசடையவும் செய்கிறது. மேலும் இதற்காக நிலம் கையகப்படுத்த  வேண்டியும் நேர்கிறது. 
 
 
இத்திட்டத்தின் இன்னுமொரு பகுதியாக +35.16மீ (MSL) உயரமுள்ள கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் தேக்கிய தண்ணீPரை 17.50 கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ளூர்ச் சாலைகளின் ஓரமாக 900மிமீ விட்டமுடைய குழாய்களின் மூலமாக (LS 3850 மீ  இடத்தில்) +43.10மீ உயரமுடைய கே.பி கால்வாயில் இறைவைகளினால் நீரேற்றி மீண்டும் கொண்டுவந்து விடுவது. அதன் பின்னர் இந்தத் தண்ணீர் கே.பி கால்வாயில் மீதமுள்ள 21.425 கி.மீ  தூரம் ஓடி பூண்டி நீர்த்தேக்கத்தில் சேர்ப்பது. இதற்காகச் சென்னைக் குடிநீர் (Chennai Metrowater) ரூ.102.50 கோடியைச் செலவழித்துள்ளது.
 
 
இந்தச் செலவையும் சேர்த்து இந்தத் திட்டத்தின்  மொத்தத் திட்ட செலவு ரூ.482.50கோடியாக உயர்ந்துள்ளது. இதைப் பற்றி செய்தி ஊடகங்கள் செய்தி ஏதும் தரவில்லை. ஏனென்று தெரியவில்லை.  
 
 
குறிப்பான குறைபாடுகள்: 
எதற்காக கேபி கால்வாயிலிருந்து L.S+ 2200மீ இடத்திலிருந்து 7.90 கிமீ தூரத்திற்குத் திறந்தவெளி கால்வாய் வெட்டி -  கே.பி கால்வாய்த்;  தண்ணீரைத் திருப்பி கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்;தேக்கத்திற்கு எடுத்துச் சென்றபின் மீண்டும் நீரேற்றும் குழாய்கள் வழியாக  (சாலை ஓரங்களின் வழியே) 17.50 கிலோமீட்டர் தூரமுள்ள கே.பி கால்வாயிலேயே L.S+3850 மீட்டரில் விடவேண்டிய அவசியமென்ன? 
 
 
இப்பொழுது உள்ள கே.பி கால்வாய் 0 புள்ளியிலிருந்து 25.275 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய் (இடைப்பட்ட L.S+2200மீ வழ L.S+3850மீ பகுதி கால்வாயும்) -  இந்த கிருஷ்ணா நதி தண்ணீரை எடுத்துச் செல்லத்தக்க வகையிலிருக்கும் போது எதற்காக இப்படி ஒரு கிளைக் கால்வாய் நீர்த்தேக்கம் - மறுபடியும் கே.பி கால்வாயிலேயே Bye Pass செய்து எதற்காக விடப்படுகிறது? இதனால் கண்ணன்கோட்டை - தேர்வாய்க் கண்டிகை நீர்த்தேக்கம் கூடுதல் நீர்த்தேக்கமாக இல்லாமல் இடையிட்ட நீர்த்தேக்க மாகவே (Transit Storage) அமைந்திருப்பதைக் காணலாம்.
 
 
இது கூடுதல் கொள்ளளவு கொண்ட புதிய நீர்த்தேக்கமாகவும் செயல்படவில்லை. அதற்குப் பதிலாக பூண்டி நீர்த்தேக்கத்திலே தண்ணீரை ஆண்டுக்கு இருமுறை நிரப்பினால் (2 fillings) எந்தச் செலவுமின்றி 3.23 டிஎம்சி தண்ணீரைக் கூடுதலாகச் சேமித்து வைக்க முடியும். ஆண்டுதோறும் ஆந்திர அரசு கே.பி கால்வாய் மூலமாக நமக்கு ஒப்பந்தப்படி 12 டிஎம்சி தண்ணீரை ஆறுமாதங்களுக்கு மேலாக தர வேண்டும். 
 
 
இந்த முழுத் தண்ணீரையும் பூண்டியில் ஆண்டுதோறும் சேமித்து சோழவரம், செங்குன்றம் மற்றும் செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கங்களின் மூலமாக (இருமுறை நிரப்பல் மூலமாக) எவ்விதக் கூடுதல் செலவும் இன்றி (ரூ.482.50 கோடி தண்டச் செலவின்றி வேறென்ன?) நம்முடைய 4 நீர்த்தேக்கங்களில் 22.50 டிஎம்சி (இருமுறை நிரப்பினால்) நமக்கு கிடைக்கும் நீரைச் சேமித்து வைக்கும் வசதி இப்பொழுதே இருக்கிறது.
 
 
எனவே புதியதாகக் கட்டமைக்கப்பட்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தால் சென்னைக் குடிநீருக்கு எந்தப் புதிய கூடுதல் பயனுமில்லை.
 
 
மேலும்  உண்மையில் கூடுதல் கொள்ளளவு வேண்டி (நீரை தேக்கி வைக்கும் வசதி) சேர்த்து வைத்திட 
 
 
பூண்டி நீர்த்தேக்கத்தைச் சராசரியாக ஒரு மீட்டர் ஆழப்படுத்;தினால் 1.15 டிஎம்சி தண்ணீரைக் கூடுதலாகச் சேர்த்து வைக்கலாம்.  6 மாதங்களில்  ரூ.163.15 கோடியில் இதை எளிதாகச் செய்திருக்க முடியும்.  இந்தச் சமயத்தில்  கே.பி கால்வாய் (0 புள்ளி முதல் பூண்டி நீர்த்தேக்கம் வரை 25.275 கி.மீ தூரம்) பலவாண்டுகளாகச் சரியாகப் பராமரிக்கப்படாமல் பலவிடங்களில் சேதமடைந்துள்ளது. 
 
 
இந்த 25.275கி.மீ தூரத்தை முழுவதும் Concrete Lining செய்தால்  (ரூ.35.70 கோடி 
செலவில்) கிருஷ்ணாநீர் முழுமையும் விரைவாக பூண்டி நீர்த்தேக்கத்தில் சேர்க்க முடியும். பூண்டி கால்வாயை நீர்வள ஆதார அமைப்பு, த.நா.பொ.ப.து மேம்படுத்திட இரண்டுகட்ட திட்டங்களைத் தயாரித்து நிறைவேற்றி வருவதாகத் தெரிவித்துள்ளனர் 
 
 
முதல் கட்டம் 2015 - பூண்டி கால்வாய் 13 கிமீ முதல் 25.275 கிமீ வரை   - ரூ.19.88கோடி இரண்டாம் கட்டம் டிசம்பர் 2020 - 3900மீ முதல் 8500மீ வரை (4250மீ துரம்)  - ரூ.24.00 கோடி
 
 
இதற்கு மாற்றாக 25.275கி.மீ முழு தூரத்தையும் Concrete Lining செய்தாலே ரூ.35.70 கோடி மட்டுமே செலவாகும் போது எதற்காகப் பகுதி பகுதியாக கூடுதலாகச் செலவு செய்து பழுது நீக்கல் வேலை செய்ய வேண்டும்.? இதுவும் தவறான அணுகுமுறை. 
 
 
சென்னை குடிநீருக்கு கூடுதல் நீர் தேக்கங்கள் ஏன்  தேவையில்லை?
 
 
மேற்கூறிய தகவல்களிலிருந்து கண்ணன்கோட்டை தேர்வாய்க் கண்டிகை நீர்த்தேக்கத் திட்டம் எவ்வித மறுஆய்வும் தணிக்கையுமின்றி பாசன வல்லுனர்களின் கருத்துரை ஏதும் கேட்கப்படாமல் சென்னை குடிநீர் வாரிய பொறுப்பில் உள்ள அய்.ஏ.எஸ் அதிகாரிகள் சொன்னபடி குருட்டாம்போக்கில்  ரூ.482.50 கோடி மக்கள் வரிப்பணம் தண்டச்செலவாக (unproductive) செய்யப்பட்டிருப்பது தெளிவாகிறது.
 
 
இதே நீர்மேலாளர்கள் (Water Managers) 2030ஆம் ஆண்டுகளில் தேவைப்படும் குடிநீர்த்; தேவை 20.00 டிஎம்சியாக இருக்கும். இப்போது இருக்கும் நான்கு நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 11.257 டிஎம்சி  மட்டுமே. எனவே மீதி 8.75 டிஎம்சி கொள்ளளவுடைய புதிய நீர்த்தேக்கங்கள் விரைந்து உருவாக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கொள்கை முடிவு தீர்மானம் மிகச் 
சரியானதன்று, தேவையற்றது.
 
 
தற்போது சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் அளவு 200அடன (மீஞ்சூர் நெம்மேலி 200அடன) ஆண்டுக்கு 2.10 டிஎம்சி). சென்னைப் புறநகரில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து பெறும் நீர் 0.50 டிஎம்சி
 
 
வீராணம் ஏரி - நெய்வேலியில் இருந்து பெறும் நீர் - 75cusecs (1.00 டிஎம்சி).
 
 
மேலும் இன்னொரு கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் 200 அடன (2.10 டிஎம்சி) கட்டமைக்கப்பட்டு வருகிறது.  
 
 
இவை போக சென்னை குடிநீருக்கு ஓராண்டுக்கு தேவைப்படுவது  9.96 டிஎம்சி மட்டுமே. இதை இன்றுள்ள நான்கு நீர்த்தேக்கங்களிலேயே (11.257 டிஎம்சி) தேக்கி வைக்கமுடியும். 
 
 
இந்தக் கூடுதல் நீரை பூண்டி, சோழவரம் செங்குன்றம் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் வருடத்திற்கு இருமுறை நிரப்புதல் நவம்பர் 2020 இறுதியிலும் கூட இவற்றில் நீர் இருப்பு மொத்தம் 9.00 டிஎம்சி  மட்டுமே. (இவை ஆண்டு முழுவதும் 50மூ அளவு கூட பெரும்பாலும் நிரம்புவதில்லை) என்ற அணுகுமுறையைக் கடைபிடித்தால்,  ஆண்டுக்கு கூடுதலாக 11.257 டிஎம்சி நீரைத் தேக்கி வைத்து பயன்படுத்த முடியும். 
 
 
எனவே 2030 ஆம் ஆண்டுகளில் சென்னை மாநகரகத்திற்கு தேவைப்படும் (மதிப்பிடும் அளவு) 20.00 டிஎம்சி தண்ணீரை மேலே குறிப்பிட்ட நான்கு ஏரிகளிலேயே சேமிக்க முடியும். எனவே கூடுதலாகப் புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கவேண்டிய தேவை ஏற்படாது. மக்கள் வரி பணத்தை வீணடிக்கவும் தேவையில்லை என்பது தெளிவாகிறது.
 
 
கடந்த 50 ஆண்டுகளில் (2015 தவிர) இந்த நான்கு நீர்த்தேக்கங்களில் ஒரே சமயத்தில் முழுக் கொள்ளளவுக்கும்  நீர் நிறைந்திருந்தது என்பதற்குரிய புள்ளிவிவரங்கள் ஏதுமில்லை. 2015 டிசம்பர்ஃ ஜனவரியில் மற்றும் 2020 நவம்பர் இவற்றின் நீர் இருப்பு  80% -11.257 x 0.80 = 9.00 டிஎம்சி மட்டுமே. 
 
 
  தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் பல நீர்வளத் திட்டங்கள் உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி பன்னாட்டு நிதி நிறுவனம் இவற்றில் ஆலோசகர்களால் தயாரிக்கப்பட்டுக் கூடுதல் நிதி மதிப்பீடு செய்யப்படுகின்றன. 
 
 
இக்குறைகளைப் போக்கிட....
அரசு திட்டங்கள் (Detailed Project Report) நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக அத்துறை சார்ந்த இணைய தளங்களில் குறைந்தது 3 மாதங்களுக்குத் தொடர்ந்து வெளியிடப்பட வேண்டும் அரசு திட்டங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்னரே முன் தணிக்கை (Preaudit) செய்யப்பட வேண்டும் 
 
 
• அரசே திறமையும் துறையறிவும் உடைய வல்லுநர்களிடம் இருந்து (குறைந்தது 3 பேர்) அத்திட்டங்கட்;குக் கருத்துரைகள் (Technical – Financial Comments) பெறப்பட்டு அவை அரசால் ஆராயப்படவேண்டும் 
 
 
இதைத்தவிர நாட்டு நலனிலும் வளர்ச்சியிலும் அக்கறை கொண்ட துறை சார்ந்த வல்லுநர்களிடம் (அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றோர் உட்பட) இருந்து பெறப்படும் கருத்துரைகளையும் முழுமையாகக் கருதியே அரசு திட்டங்கள் இறுதி செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான் தண்டச் செலவுகள் தடுக்கப்படும். ஊதிப்பெரிதாக்குதலும் நடக்காது. 
 
 
எனவே இக்கட்டுரையில் தெரிவித்தவாறு கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் திட்டத்தில் ஏறக்குறைய ரூ. 500 கோடி அரசின் பணம் (நிதி) வீணடிக்கப்பட்டுள்ளது. அது ஒன்றும் சென்னை மாநகரின் அய்ந்தாவது கூடுதல் நீர்த்தேக்கமல்ல- கிருஷ்ணா நதி நீரைக் கொண்டு செல்லும் வழியில் இடைப்பட்ட நீர்த்தேக்கமாக திருப்பி விடும் வேலையை மட்டுமே செய்கிறது. இதில் தமிழ்நாடு அரசு பெருமைப்பட்டுக் கொள்ள ஏதுமில்லை என்பதும் சுட்டிக் காட்டப்படுகிறது.
 
 
தமிழக அரசின் தலையாய பொறியியல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் அரசுச் செயலாளர் முதல் இணைச் செயலாளர், துணைச் செயலாளர் போன்ற பதவிகளிலும் முதலமைச்சர், நிதியமைச்சரின் நேரடி செயலாளர் பதவியும் அந்தந்த துறைகளில் திறமையும் அனுபவமுடைய தொழில்நுட்ப மேலாண்மையாளர்களை (Technocrats) நியமித்து இத்தகைய தவறுகளையும், தண்டச் செலவுகளையும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
 
 
-------------———————————
 
 
2021, ஜனவரி மாத, பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து ..
 
 
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற: 88255 77291

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2066622