45 மாடி எஸ் பி ஆர் கட்டடம் என்னவாகும் வடசென்னை?

03 ஜனவரி 2024   05:30 AM 06 பிப்ரவரி 2021   11:23 AM


45 மாடி எஸ் பி ஆர் கட்டடம் என்னவாகும் வடசென்னை?
 
 
மத்திய அரசு அடிக்கடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை அறிவிக்கிறது. அரசு அறிவிப்பு விடும் வேகத்தை பார்த்தால் இந்நேரம் மொத்த இந்தியாவே ஸ்மார்ட் இந்தியாவாக மாறி இருக்க வேண்டும். சரி விடுங்கள் அது வேறு கதை. ஆனால், ஏகப்பட்ட தனியார் நிறுவனங்கள் அறிவிக்காமலேயே ஆங்காங்கு ஸ்மார்ட் சிட்டியை உருவாக்கி வருகின்றன, அதில் ஒன்று தான் வடசென்னை எஸ்.பி.ஆர்.சிட்டி.
 
 
வட சென்னையைக் கலக்கும் ஒரு பெயர் தான் எஸ்பிஆர் சிட்டி . புராஜெக்ட் துவங்கிய போதே இது அமையவிருக்கும் ஸ்டீபன்சன் சாலை ஆக்கிரமிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படியே பாதி நிகழ்ந்திருக்கிறது. (அதை பிறகு பார்ப்போம்)
 
 
எஸ்.பி.ஆர் சிட்டி புராஜெக்ட் அடிக்கல் நாட்டு விழாவின் போது மத்திய உள்துறை அமித்ஷா வந்து கலந்து கொள்வார் என போஸ்டர்கள் அச்சடிக்கப்பட்டன என்பதிலிருந்து இந்த புராஜெக்டின் முக்கியத்துவத்தினை நாமறிந்து கொள்ளலாம். (தனியார் கட்டுமான புராஜக்டில் அமைச்சர்கள் கலந்து கொள்வது எதேச்சையானதா? என்பது தெரியவில்லை?
 
 
புராஜெக்டின் பின்னணி என்னவென்றால்?
கீழ்பாக்கம், அண்ணாநகர், எழும்பூர், புரசை, வேப்பேரி, முகப்பேர் போன்ற பகுதிகளில் வசித்து கொன்டு அன்றாட பிசினஸ்க்காக பாரிமுனைக்கும், சவுக்கார் பேட்டைக்கும் போக்குவரத்து நெரிசலில் தினம் தினம் அல்லாடும் பணக்கார சேட்டுக்கள் மீது இரக்கம் கொண்டு எஸ்பிஆர் நிறுவனம் இந்த ஆல் இன் ஒன் கட்டுமான புராஜெக்டை மூன்று ஆண்டுகளுக்கு முன் லாஞ்ச் செய்தது.
 
 
அதாவது வசித்தல், படித்தல், வர்த்தகம் செய்தலென எல்லாம் ஒரே இடத்தில் . வசித்தல், படித்தல், விளையாட்டு எல்லாம் சரி வர்த்தகம் எப்படி?
 
 
அதற்குத்தான் மார்க்கேட் ஆஃப் இன்டியா ! தென்னகத்தின் ஹோல்சேல் மார்க்கெட் பாரி முனையை இங்கே மினி பாரிமுனையாக கொண்டு வருகிறார்கள். பாரிமுனையில் புகழ்பெற்ற கோவிந்த நாய்க்கன் தெரு, நைனியப்பன் தெரு, கிடங்கு தெரு, என் எஸ் சி போஸ் ரோடு, ரிச்சி தெரு போன்ற தெருக்களில் கடைகள் வைத்திருக்கும் ஜெயின் வியாபாரிகளுக்கு தான் இந்த மார்கெட் ஆஃப் இந்தியா. அவர்கள் வாங்கிய பின் கடைகள் பிறருக்கு கிடைக்கும். முதலில் ரூ.25 லட்சத்திற்கு விற்ற கடைகள் இப்பொது ரூ.30 லட்சத் திற்கு விற்பதின் பின்னணி இதுதான்.
 
 
இந்தக்குடியிருப்பில் வீடு வாங்கிக்கொண்டு, மார்கெட் ஆப் இந்தியாவில் உள்ள தனித்தனி
“பே’ க்களில் மேற்கண்ட தெருப்பெயர்களில் தங்கள் அலுவலகம்/ கடைகள்/ கிடங்கினை வைத்துக் கொள்ளலாம். போதாதற்கு உள்ளேயே ஷாப்பிங் மாலும், தியேட்டர்களும் உண்டு. வெளியாட்கள், வெளி வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் வரப்போக தனிப்பாதை உண்டு.
 
 
கொஞ்சம் கொஞ்சமாக பாரிமுனைக்குச் செல்லும் வியாபாரிகள், வாடிக்கையாளர்களை
மார்க்கெட் ஆஃப் இந்தியாவிற்கு வரவழைக்கும் திட்டம் இது. (இந்தப் புராஜெக்டின் குடியிருப்புகளை ஜெயின் சமூகத்தினர்க்கு மட்டுமே விற்பதாக தகவல் கசிந்தாலும் கடைகளைப் பொறுத்தவரை
மாற்று சமூகத்தினருக்கும் விற்கிறார்கள்).
 
 
குறைந்த பட்சம் ஒரு கோடி ரூபாயில் துவங்கும் இந்த வீடுகள் பெரும் பணக்காரர்களுக்கு மட்டும் தான் என சொல்லித்தெரிய வேண்டியதில்லை. அதிலும் மிகப்பெரிய மல்டி மில்லியனர்களுக்கு என தனி சொகுசு பங்களாக்கள் ஜி+1, ஜி+2, ஜி+3 என்பதாக 18 ஏக்கரில் தனியே 85 பங்களாக்கள் கட்டப்படுகின்றன. இந்த பங்களாக்கள் குறைந்த பட்சம் 5000 ச.அடியில் துவங்குகின்றன. அடுக்குமாடி குடியிருப்பைப் பொறுத்த வரை மூன்று டவர்கள் (டவர் ஏ, டவர் பி, டவர் எச்) 684 லக்சரி வீடுகள் கட்டப்படுகின்றன.
 
 
வாருங்கள். ஒட்டுமொத்த புராஜெக்டையும் விரிவாக அலசுவோம்.
 
 
பசுமையான சூழல் குறையில்லாத காற்றோட்டம் அமைதியான சுற்றுவட்டாரம், சுலபமான போக்குவரத்து, கல்விக்கூடங்கள், ஷாப்பிங் மால், கடைகள் மற்றும் மருத்துவ வசதியும் இருக்க வேண்டும்! என்கிற நோக்கில் கட்டப்படுவதாக சொல்கிறார்கள்.
 
 
45 மாடிகள் கொண்ட சென்னையின் மிக உயரமானகட்டடமான எஸ்பிஆர் சிட்டி டவுன்ஷிப்பில் மொத்தம் 63 ஏக்கர் பரப்பளவில், குடியிருப்புகள் அலுவலகக் கட்டடங்கள், வர்த்தக தலங்கள், கல்வி மற்றும் மருத்துவ மையங்கள், பொழுபோக்கு அம்சங்கள் என ஒருவருக்கு வேண்டிய ஒட்டுமொத்த தேவைகளும் ஒரே இடத்தில் அமையப் பெறுவதுதான் இத்திட்டத்தின் நோக்கம் எனத் தெரிவிக்கிறது எஸ்பிஆர்.
 
 
36 மாடிகள் கொண்ட டவர் ஏ (216 வீடுகள் 3/ 4 படுக்கையறைகள்) - பி, 45 (216 வீடுகள் 2/ 3/ 4 படுக்கையறைகள்) 45 மாடிகள் கொண்ட டவர் யஹச் (216 வீடுகள் 4 படுக்கையறைகள் மட்டும் ) என 3 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் இத்திட்டத்தில் உள்ளன, இதில் டவர் ஏ-வில் உள்ள அனைத்து வீடுகளும் ஏற்கெனவே புக் செய்யப்பட்டுவிட்டனவாம். இது தவிர முன்பு சொன்ன 18 ஏக்கரில் சொகுசு பங்களாக்கள் தனி. 5 லட்சம் சதுர அடியில் உருவாக்கப்படவுள்ள பசுமைத்திட்டத்தின் மூலம் இவ்விடத்தை ரம்மியமாக மாற்றத் திட்டமிட்டுள்ளது எஸ்பிஆர். 4.5 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய பூங்கா ஒன்றையும் நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது.
 
 
கேட்டட் கம்யூனிட்டி குடியிருப்புத் திட்டங்களை விடப் பல மடங்கு பெரிதான டவுன்ஷிப் என்பதால், ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நடைப்பயிற்சித் தடம் ஜிம், ஜாக்கிங் ட்ராக், வெளி விளையாட்டுத்திடல்கள், நீச்சல் குளம், மினி தியேட்டர், என 65-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்கள் கொண்டதாக இருக்கப் போகிறது எஸ்பிஆர் சிட்டி. எஸ்பிஆர் சிட்டி வாசிகளுக்காக 15 லட்சம் சதுர அடியில் எஸ்பிஆர் சிட்டி மால் உருவாகவுள்ளது. சினிமா விரும்பிகளுக்கு திரையரங்குகளும் வரவிருக்கின்றன. எஸ்பிஆர் சிட்டியில் சர்வதேச தரத்திலான ஸ்ரீராம் யூனிவர்சல் ஸ்கூல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 
 
அடுத்ததாக., மார்க்கெட் ஆஃப் இந்தியா. இதில் மொத்தம் 5000+ மொத்த வியாபாரக் கடைகள்
மற்றும் அலுவலகங்களுக்கான இடம் கொண்ட பிரம்மாண்டமான இடமாக உருவாக இருக்கிறது மார்க்கெட் ஆஃப் இந்தியா.
 
 
மின்னணு, மின்சாதனப் பொருள்கள், நகைகள், வீட்டு உபயோகப் பொருள்கள், வீட்டு உள்ளலங்காரப் பொருள்கள், பேக்கேஜ்டு உணவுகள் என அனைத்துவிதமான சாமான்களுக்கும் மொத்த கொள்முதல் இடமாக மார்க்கெட் ஆஃப் இந்தியா இருக்கப்போகிறது. 54 லட்சம் சதுர அடியில், ஒரு சர்வதேச விமான நிலையத்துக்கு நிகராக பிரமாண்டமாக காட்சியளிக்கவுள்ளது.
 
 
உயரமான கூரை கொண்ட குடியிருப்புகள், காற்றோட்டமான அறைகள், தொழிநுட்ப உதவியுடன் கூடிய ஹை டெக் வடிவமைப்பு, ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் என எஸ்பிஆர் சிட்டியின் ஒவ்வோர் அங்குலத்தையும் அளந்து கச்சிதமாக, தரமாக, சொகுசாக வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளது எஸ்பிஆர். சிட்டியின் ஒவ்வோர் அங்குலத்தையும் அளந்து கச்சிதமாக, தரமாக, சொகுசாக வடிமைக்கத் திட்டமிட்டுள்ளதாக எஸ்பிஆர் நிறுவனம் தெரிவிக்கிறது.
 
 
சரி இந்த திட்டத்தில் வடசென்னை என்ன ஆகும்?
1.முதலில் இதன் அமைவிடத்தை நோக்குவோம். வடசென்னையே ஒரு மகாநெரிசல் உள்ள பகுதி., இங்கே 5000 கடைகள் திறக்கப்பட்டால். மால்கள் வந்தால் அதற்கான போக்குவரத்தை புராஜெக்டுகளை சுற்றியுள்ள பெரம்பூர் பேரக்ஸ் தெரு, ஸ்டீபன்ஸ் ரோடு, டாக்டர் அம்பேத்கார் கல்லூரி தெரு, குக்ஸ் தெருக்கள் தாங்குமா?
 
 
அடுத்ததாக சுற்றுப்புறம். இவர்கள் புரோமாவில் காட்டுவது போல பின்னி எஸ்.பி.ஆர் சிட்டியின் அமைவிடம் அப்படி ஒன்று பசுமை போர்த்திய பகுதி இல்லை என்பது வடசென்னைக்காரர்களுக்கு நன்கு தெரியும். சுற்றிலும் கழிவு நீர் சாக்கடை, கூவம், எப்போதும் அகற்றப்படாத குப்பைக்கழிவுகள் இவைகள் தான் இந்த பகுதியின் அடையாளம். எல்லாவற்றிற்கும் மேலாக புராஜெக்டின் அருகில் ஆடு மற்றும் மாடு வெட்டும் இறைச்சிக்கூடங்கள் வெகு அருகில் உள்ளன என்பது எந்த அளவிற்கு சிறப்பானது? என தெரிய
வில்லை.
 
 
3. ஜமாலியா, பெரம்பூரை டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையோடு இணைக்கக் கூடிய ஸ்டீபன்சன் சாலை திடீரென சில மாதங்களாக கூவம் ஆற்றுப்பாலம் பழுது காரணமாக மூடப்படுவதாக அறிவிக்கப் பட்டது. என்னடா இது? இத்தனை ஆண்டுகாலம் இல்லாத அக்கறை இப்போது நெடுங்சாலைத்துறைக்கு வந்திருக்கிறதே ? என இந்த நாம் களத்திற்குச் சென்று பார்த்தபோது, ஆற்றுப்பாலத்தில் எந்த இடிப்பு & கட்டுமானப்பணிகளும் நடக்கவில்லை. எஸ்பிஆர் சிட்டி கட்டுமானப் பணிகள் தான் சாலை வரைக்கும் நீண்டிருக்கிறது.
 
 
அதை மக்கள் கண்ணில் இருந்து மறைப்பதற்கு அஸ்திவாரப்பணியின் போது எடுக்கக்கூடிய களிமண்
குவியலை சாலையில் போட்டு சாமார்த்தியமாக ஒரு ரோட்டையே மக்களின் பயன்பாட்டிலிருந்து நீக்கி இருக்கிறார்கள். இதற்கு நெடுஞ்சாலையும் உறுதுணை. இந்த வழித்தடத்தில் பயணிக்கும் எல்லா பேருந்துகளும் , வாகனங்களும் திருப்பி விடப்பட்டு அதனால் உண்டாகும் எரிபொருளும், நேர விரயமும் யார் சரிக்கட்டுவது?
 
 
நமது கள ஆய்வின் போது, நம்மிடையே பேசிய அந்த ஏரியாக்காரார் ஒருவர் ‘சார் இவங்க வரதுக்கு முன்னாடியே வியாசார் பாடி ஜீவா ஸ்டெrன்ல இருந்து டவ்ட்டன் வரைக்கும் செம்ம டிராஃபிக்.., இந்த லட்சணத்துல அஞ்சாயிரம் கடைங்க ஒரே இடத்துலவந்தா என்னாவறது? அதுக்கு குட்ஸ் கொண்டு வர வண்டி, டிரக் இதெல்லாம் எப்ப வரும்? எப்போ போகும்? முதல்ல அதுக்கு சரியா ரோடு இருக்கா இங்க? அந்தம்மா (முன்னாள் முதல்வர்.ஜெயலலிதா) பாரீஸ் பூக்கடையை காலி பண்ணி கோயம்பேட்டுக்கு மாத்துனாங்க.. இவங்க என்னடான்னா சத்தமில்லாம பாரீஸ் ஹோல்சேல்ஸ் மார்க்கெட்டை போய் இந்த இடுக்கான பகுதியில பாதி மாத்துறாங்க..
 
 
அப்புறம் இவங்க இங்க வந்தா, ஆடு தொட்டியை மூடிடுவாங்கன்னு சொல்றாங்க 100 வருசத்துக்கு மேல இருக்கற தொட்டியை மூடிட்டா, இதை நம்பி வேலை செய்யற நாங்க பொழப்புக்கு எங்க போறது? இப்பவே ஜீவா ரயில்வே ஸ்டெஷன்ல வடக்கு பக்கம் ரொம்ப பேருக்கு ஆசைகாட்டி அவங்க இடத்தை வாங்கி அனுப்பிட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல இது பூராவும் அவங்க இடமா மாற போகுது.
 
 
ஒரு தபா ஸ்டீபன்சன் எஸ் பி ஆர் சிட்டி வர இருக்கற ரோட்ல நான் பைக்ல போறப்ப ஹார்ன் அடிச்சதுக்கு என் வண்டியை மடக்கி, விசாரிச்சி தான் அனுப்புனாங்க அந்த நார்த் டவுன் புராஜெக்டுல இருந்த சில பேருங்க. பஸ்ஸு போற பொதுச்சாலையில் நாங்க ஹார்ன் கூட அடிக்க கூடாதாம். எப்படி இருக்கு பாருங்க? இப்படியே போனா இனி ஸ்டீபன்சன் ரோட்ல நாம போகவே முடியாதுன்னு நினைச்சோம்.
 
 
அதுக்கேத்தமாதிரி.. இப்ப பஸ் போற ஸ்டீபன்சன் ரோட்டை மூடிட்டாங்க. கேட்டா கால்வாய் பிரிட்ஜ் ரிப்பேர் பண்றாங்களாம். இவ்வளவு நாள் ஏன் பண்ணல? தோ பேசின் பிரிட்ஜ் அஞ்சு வருசம் ரிப்பேரா கிடக்கே.., இப்பதானே வேலை பண்ண ஆரம்பிச்சிருக்காங்க., அதிகாரிங்க இதுக்கு மட்டும் இவ்ளோ முக்கியத்துவம் தராங்கன்னா.. இந்த கவர்ன்மென்டு யாருக்கு ஓடி ஆடி வேலை செய்யுதுன்னு தான் புரியலை.கொஞ்ச நாள்ல ஸ்டீபன்சன் ரோட்டில ரெண்டு பக்கமும் செக் போஸ்ட் போட்டு., அந்த அபார்ட்மென்டுகாரங்களுக்குத் தான் அனுமதின்னு சொன்னாலும், சொல்வாங்க. நாம என்ன பண்ண முடியும்?.
 
 
இப்படித்தான் பட்டாளம் மாநகராட்சி கண்ட்ரோல்ல இருந்த ஒரு 40 அடிக்கு 500.மீ இருந்த செல்வபதி செட்டியார் பார்க்கை ஆட்டை போட்டு அபார்ட்மென்ட் கட்டிட்டாங்க. பதிலுக்கு ஸ்டராஹன்ஸ் ரோட்டுல ஒரு குட்டியூண்டு பார்க்கை தரேன்னாங்க.. கேக்கறதுக்கு நாதி இல்ல.
 
 
இங்கே, 700 வீடு, 5000 கடைங்க வரதா சொல்றாங்க. அத்தனை பேருக்கும், தண்ணி சப்ளை எப்படி? ஏற்கெனவே போர்ல தண்ணி இல்லாம, மெட்ரோ வாட்டார வராம குடம் எடுத்துட்டு வீதி
வீதியா திரியறோம். இன்னும் என்ன ஆகப்போகுதோ? இதெல்லாம் விட இந்த புராஜெக்டை காட்டி ரியல்
எஸ்டேட் மதிப்பு கன்னா பின்னான்னு ஏறியாச்சு.’’ என அடுக்கிக்கொண்டே போனவர்.,
 
 
மேலும், “”இந்த பாரீஸ் கடைங்க இங்க வந்தா வேலைவாய்ப்பு வரும்னு சொல்றாங்க., அங்க என்னை மாதிரி ஆளுங்களுக்கா வேலை கொடுக்க போறாங்க?. பூரா ஹிந்திகாரங்க தான் இருக்கப் போறாங்க . பாரீஸ், குடவன் ஸ்ட்ரீட்ல மட்டும் 9 ஆயிரம் வேலை செய்றோம். பாரீஸை நம்பி 2 லட்சம் இருக்கோம். இங்க அவ்ளோ பேருக்கெல்லாம் வாய்ப்பு இருக்கற மாதிரி தெரியல’’ என்றார்.
 
 
புதுப்புது லக்சரி குடியிருப்பு புராஜெக்டுகள் வருவதையோ அவை பணக்காரர்களுக்கு அர்ப்பணிக்கப் படுவதையோ நாம் ஒருக்காலும் குறை சொல்வதில்லை. உண்மையில் இது போன்ற வித்தியாசமான புரட்சிகளை நாம் பாராட்டத்தான் செய்கிறொம். ஆனால் அந்த கட்டுமான திட்டங்கள் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டும் தான் என்ற எல்லை வகுக்கப்படும் போதும், திட்டம் அமைவிடம் சார்ந்த உள்ளூர் மக்களுக்கு வாழ்வாதாரங்கள், அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போதும், இப்படி பொதுச்சொத்துக்கள் சத்தமில்லாமல் ஆக்கிரமிக்கப்படும் போதும் தான் நாம் கண்டனக்குரல் எழுப்ப வேண்டியதாக இருக்கிறது.
 
 
கண்டனம் கூட இல்லை.. வருத்தம்.
 
 
எனிவே கங்கிராட்ஸ் எஸ்பிஆர். உங்கள் கட்டு மானத் திட்டம் விரைந்து நிறைவேற வாழ்த்துகள்!
 
-------------———————————
 
 
2021, ஜனவரி மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து ..
 

பில்டர்ஸ் லைன் இதழினை ஆன்லைனில் படிக்க :
http://www.buildersline.in/subscription.php?reg=
 
 
பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற: 8825577291
 
 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2073017