துருவப் பகுதிகளில் உள்ள நாடுகளில் மக்கள்தொகை மிகவும் குறைவாகத்தான் இருக்கும். இதற்குப் பூகோள அமைப்பும் முக்கிய காரணம். கிருனா நகரத்தில் மிகப் பெரிய தாது சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து சுரங்கங்களை இந்த நகரில் தோண்டியதால், ஒட்டுமொத்த நகரமும் புதையுண்டு போகும் அபாயம் உருவானது. நிலவியல் வல்லுநர்கள் இது பற்றி ஆராய்ந்து கடந்த 2004-ம் ஆண்டு இந்த அபாயத்தைக் கண்டுபிடித்தனர்.
எனவே, இந்த நகரில் உள்ள பழமையான வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ஒட்டுமொத்த நகரையும் இடம் மாற்ற அந்த நாட்டு அரசு முடிவெடுத்தது. இந்தப் பணியைச் செய்து முடிக்க சுமார் 100 ஆண்டுகள் பிடிக்கலாம் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், 20 ஆண்டுகளில் செய்து முடிக்க கட்டுமான நிறுவனம் ஒன்று முன்வந்தது. முதற்கட்டமாக எந்தெந்த வீடுகளை இடம் மாற்றலாம் என்று முடிவு செய்து, அவற்றை மட்டும் எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் இடம் மாற்றி வருகிறது.
இதேபோல், அங்குள்ள சிறப்புமிக்க வரலாற்றுச் சின்னங்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாமல் புதிய இடத்துக்கு மாற்றும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர். இந்தப் பணிக்காக மட்டும் சுமார் ஒரு பில்லியன் டாலர் செலவாகும் என இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள கட்டுமான நிறுவனம் கூறியுள்ளது.
கிருனா நகருக்கு அருகே 3 கிலோ மீட்டர் தொலைவில் தற்போது இந்தப் புதிய கிருனா நகரை இடம் மாற்றும் களப் பணி நடந்துவருகிறது. இதற்காகப் பிரம்மாண்டமான ஹைட்ராலிக் உபகரணங்களைக் கொண்டு சிறிய வீடுகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுவருகின்றன.
பெரிய கட்டுமானங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களை அதிநவீன கருவிகளைக் கொண்டு அப்படியே பெயர்த்து இட மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. கிருனா நகரம் சற்று பரந்து விரிந்த நகரம். ஆனால், தற்போது இடம் மாற்றம் செய்து அமைக்கும் புதிய நகரை நெருக்கமாக அமைத்து அடிப்படைத் தேவைகளைப் பெருக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.
கடந்த 2014-ம் ஆண்டில் நகரை நகர்த்துவது தொடர்பான ஆய்வுகள் தொடங்கிய நிலையில், தற்போது களப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த 16 ஆண்டுகளுக்குள் இந்த நகரை முழுமையாக மாற்றிவிடுவார்கள். சுமார் 18 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட, குளிர் நிறைந்த இந்த நகரை மாற்ற ஏன் இவ்வளவு முயல்கிறார்கள்? நகரம் புதைகுழிக்குள் சென்றுவிடும் என்பதற்காக மட்டுமல்ல; நகரை இடம் மாற்றம் செய்த பிறகு, அந்தப் பகுதியை முழுவதுமாக சுரங்கமாக மாற்றி தாதுக்களை வெட்டி எடுக்கவே இந்தப் பெரும் முயற்சி நடந்துவருகிறது.