ஆட்சிமாற்றம் நிகழ்ந்தால் தான் அவலங்கள் தீரும்...

21 ஜனவரி 2024   05:30 AM 01 பிப்ரவரி 2021   11:00 AM


 

தென் சென்னை கட்டுநர்களில் முக்கியமானவரும், அரசியல், எழுத்து,சமூகப் பணி என பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பவருமான டாக்டர்.ரூபி.ஆர். மனோகரன் சென்ற ஆண்டு நாங்குநேரி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களத்தில் போட்டியிட்ட பிறகு மீடியாக்களில் இன்னும் பிரபலமாகி விட்டார்.

 
கொரானா காலக்கட்டத்தில் நாங்குநேரி மக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்காக நான்கு மாதங்களும் அங்கேயே ஊர் ஊராக, தெருத் தெருவாக பார்வையிட்டு தன் சொந்தப்பணத்தில் பல்வேறு சமுகநலப்பணிகளைச் செய்து வந்தார். இந்த இடைவிடாத மக்கள் பணியில் கொரானா நோய்த்தொற்றிலும் பாதிக்கப்பட்டார். பின் அதிலிருந்து மீண்டெழுந்து, உடனே சென்னை டூ நாங்கு நேரி என வார வாராம் கிளம்பி சென்று விடுவதை வழக்கமாக்கிக் கொண்டார்.
 
தீவிர அரசியலில் நுழையும் முன்பே, மாநில அரசையும், மத்திய அரசையும் வெளுத்து வாங்கிய ரூபி.ஆர்.மனோகரன் காங்கிரஸில் நுழைந்த பிறகு, இன்னும் சினத்துடன் கர்ஜிக்கிறார்.
 
“கட்டுமானத்துறையை குழிதோண்டி புதைத்து கார்ப்பரேட்காரர்களை வளார்த்து விடும் சூழ்ச்சியைத்தான் மத்திய, மாநில அரசுகள் செய்து வருகின்றன. இதனால் சிறிய நடுத்தர கட்டுநர்களை ஒழித்து கட்ட சதி நடக்கிறது. ஆட்சி மாறினால் தான் இந்த அவலம் நீங்கும்’ என முழங்கும் ரூபி. மனோகரனை சந்தித்தோம்.
 
கட்டுநர் என்னும் புரைஃபைலிலிருந்து அரசியல் ஐகான் ஆகிவிட்டீர்களே?
 
“நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரிகள் தான் தீர்மானிக்கிறார்கள் என்பார் மாபெரும் புரட்சியாளர் மாவோ. இங்கே கட்டுமானத்துறை உள்ளிட்ட பல துறைகளில் நிர்வாக இயந்திரம் சரியாக செயல்படவில்லை. நமது கட்டுமானத்துறையில் ஏராளமான பிரச்சனைகள், கோரிக்கைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்றன. அரசு துறையில் பிரிண்டரில் பழுது என்பதற்காக 30 கோடி மதிப்புள்ள கட்டுமான திட்டம் ஒப்புதலில் கால தாமதம் ஏற்படுகிற அவலம் தமிழ்நாட்டில் தான் நடக்கிறது. இவர்களிடம் மீண்டும் ஆட்சி போனால் தமிழக கட்டுமானத்துறை அவ்வளவு தான்.
 
இதே நிலைதான் விவசாயம், தொழில் துறைகளில் காணப்படுகின்றன. எதிலும் மெத்தனம், அலட்சியம், எல்லா ஒப்புதலுக்கும், சான்றிதழிற்கும் லஞ்சம் இவை தான் அரசு நிர்வாகத்தில் காணப்படுகின்றன.
 
அதிகாரம் நாம் சொல்வதைக் கேட்காத போது அதிகாரத்தை நாம் கையில் எடுப்பதை தவிர வேறு வழியில்லை. அதிகாரத்தை பெறும் வழிதான் அரசியல்.
 
பில்டர் என்னும் புரொஃபைலில் நான் ஓரளவு சாதித்து விட்டேன். இன்னும் அதில் கவனம் செலுத்தினால் இன்னும், இன்னும் சம்பாதித்துக் கொண்டிருக்க முடியும் தான். ஆனால் அதற்கு முடிவே கிடையாது. நிறைவும் ஏற்படாது. அதனால் தான் நல்ல மாற்றம் நோக்கி தீவிர அரசியலில் நுழைந்திருக்கிறேன்‘’.
 
மோடி அரசை தொடர்ந்து நீங்கள் எதிர்த்து கொண்டே இருக்கிறீர்களே?
 
“எதைச் செய்தாலும் திட்டுகிறீர்களே? என்றால் திட்டு வதை போல நீங்கள் செய்கிறீர்கள் என்று அர்த்தம்.
 
டிமானிட்டைசைசேஷன் , ரெரா, ஜிஎஸ்டி இதெல்லாம் கட்டுமானத்துறைக்கு என்ன நன்மை கொண்டு வந்தது? அதனால் வீட்டு விற்பனை குறைந்ததா? இல்லை அதிகரித்ததா? இப்போது கூட மத்திய நிதிஅமைச்சர் வீடு வாங்குவோருக்கு சலுகை என ஒரு வெற்று அறிவிப்பை வெளியிடுகிறார்.
 
படித்தால் சிரிப்பு ஒரு பக்கம். கோபம் ஒரு பக்கம் வருகிறது. கைட் லைன் வேல்யூ -விற்பனை விலை இடையேயான வித்தியாச அளவை அதிகரித்து சலுகை தருகிறார்களாம். இதனால் ஒரு பலனுமில்லை.
 
நாட்டின் மிகப்பெரிய துறை கட்டுமானத்துறை. வேலைவாய்ப்பைத் தருவதிலும் அதுதான் முதன்மையாக இருக்கிறது. ஆனால், மத்திய, மாநில அரசுகள் இதை ஒரு லாபம் கொழிக்கும் துறையாகத்தான் பார்க்கிறது. திட்ட அனுமதி பெறுவது முதல் கம்ப்ளீகஷன் சர்ட்டிபிகேட் பெறுவது வரை ஒரு கட்டுநர் எல்லா துறைகளுக்கும் கப்பம் கட்ட வேண்டி இருக்கிறது. கட்டும் கப்பமெல்லாம் கடைசியில் வீட்டு விற்பனையில் வைக்கப்பட்டு நுகர்வோரின் தலையில் விடிகிறது. இதனால் வீட்டு விலை அதிகமாகி வீடுகள் விற்காமல் தேங்குகிறது.
 
சென்னை போன்ற ஹாட் சிட்டிக்குள் 25 லட்சத்தில் 450 ச.அடி வீடு கொடுக்க முடிகிற சூழ்நிலை வரும்போது வீட்டு விற்பனை தாமாகவே விண்ணைத் தொடும். அதற்கு தான் மத்திய, மாநில அரசுகள் திட்டம் தீட்ட வேண்டும்.
 
அதற்கு மனை வழிகாட்டியின் மதிப்பு சரிப்படுத்த வேண்டும்,
சிமென்ட் உள்ளிட்ட கட்டட பொருள்களின் விலை கட்டுப்படுத்தப்பட வேண்டும், திறமையான கட்டுமானத் தொழிலாளர்கள் உருவாக மாவட்டம் தோறும், ஊர் தோறும் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப் பட வேண்டும். வீடு வாங்குவோருக்கு பத்திரப்பதிவு செலவு, முத்திரை தாள் செலவு, குறைக்கப்படவேண்டும், ஜிஎஸ்டி விகிதம் மாற்றி அமைக்கப்பட வேண்டும். வீட்டுக்கடன் விகிதம் குறைக்கப்பட வேண்டும். இவை தான் நிஜமான ரியல் எஸ்டேட் சீர்திருத்தங்கள்.
 
இதைச் செய்யாமல்,”அனைவருக்கும் வீடு தருகிறோம், ஸ்மார்ட்சிட்டி கொண்டு வருகிறோம். பாதியில் நின்று போன கட்டுமானத் திட்டங்களுக்கு நிதி தருகிறோம்’ என அறிவிப்பதெல்லாம் வெறும் கவர்ச்சிக்கும் , பரபரப்புக்கும் அஷீவிக்கப்படுகிற வெற்று செயல்பாடாகும்.
 
கொரானா ஊரடங்கு காலகட்டத்தில் இவர்கள் செய்த காமெடியை பார்த்து உலகமே எள்ளி நகையாடியது. 9 ஆம் தேதி, 9 மணிக்கு, 9 நிமிடம் மணி அடிக்கச் சொன்ன ஒரே பிரதமர் உலகிலேயே இவர் தான். நாடே முககவசம் அணிந்து நடமாடிய போது ஹெலிகாப்டரில் பூமழை தூவியதும் இவர்கள் தான். உருப்படியான திட்டங்கள் ஏதும் முளைக்காத போது அவர்கள் இது போல மணிஆட்டி வித்தைகளைக் காட்டிதான் காலத்தை ஓட்டுவார்கள். மக்கள் கவனத்தை திசை திருப்புவார்கள்.
 
நாடே வீட்டில் அடங்கிக் கிடக்க, சுங்கச் சாவடி கட்டணத்தை உயர்த்தி, மேலும், எரிபொருள் கச்சா எண்ணெய் விலை உலக ஆயில் சந்தையில் சரிந்து கிடக்கும் சூழ்நிலையில் மனச்சான்றே இல்லாமல் எரிபொருள் விலையை உயர்த்தி மக்களை பொருளாதார ரீதியாக சித்திரவதை செய்த மத்திய அரசை சட்டமன்ற தேர்தலில் புறக்கணிக்க தமிழக மக்கள் தயாராக இருக்கிறார்கள்.
 
மெட்ரோ, மேம்பாலம் என உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அரசு கவனம் செலுத்துவதாக மீடியாக்களில் செய்தி வெளியாகிறதே?
 
“மெட்ரோ, உள்ளிட்ட ஏராளமான பொது உள் கட்டமைப்புத் திட்டங்கள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்டவை தான். இவர்கள் அவற்றை முடித்து வைத்து பெயர் வாங்கிகொள்கிறார்கள். உங்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒரு புராஜெக்டை சொல்கிறேன்.
 
சென்னை மதுரவாயல்- துறைமுகம் பறக்கும் சாலை திட்டம். இது மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் திமுக இருக்கும்போது கொண்டு வரப்பட்ட அற்புதமான திட்டம். கட்டுமானப் பணிகள் பாதி மட்டும் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்து அதிமுக ஆட்சியில் வந்த மர்ந்தது.
 
திமுக ஆரம்பித்த எந்த திட்டத்தையும் தடுத்து நிறுத்தும் அவர்களது அராஜகப் போக்கு பற்றி மக்களுக்கு நன்கு தெரியும். பெரம்பூர் ரயில் பாலம், மின்ட் மேம்பாலம், வில்லிவாக்காம் சுரங்கப் பாலம் இது போன்ற நல்ல திட்டமெல்லாம் நடைபெற்று விடாமல் பாதுகாப்பது தான் அவர்களது வழக்கம் . அது போலவே மதுரவாயல்- துறைமுக பறக்கும் சாலை இந்த அரசினால் கைவிடப்பட்டது. சென்னை மக்களுக்கு ஏற்பட்ட இந்த துரோகத்திற்காகவே இந்த அரசை மன்னிக்க மாட்டார்கள்’’.
 
வரும் தேர்தலில் ஆட்சி மாற்றத்தின் அவசியத்தை தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்களா?
“நிச்சயமாக உணர்ந்திருக்கிறார்கள். தரமில்லாத கல்வி, இரட்டை தலைமையில் குழப்பமான நிர்வாகம், எதிலும் தெளிவில்லாத அரசியல் நிலைப்பாடு, மத்திய அரசின் எல்லா முடிவுகளுக்கும் தலை ஆட்டும் போக்கு, புதிய தொழில்களை, தொழில்முனைவோரை ஊக்கு விக்காமை, கடுமையான வேலைவாய்ப்புத் தட்டுப்பாடு, விவசாய பெருமக்களுக்கு இழைக்கும் அநீதி இதெல்லாம் தமிழக மக்களை பெரும் துயரில் தள்ளி இருக்கிறது.
 
“இப்போது வாழ்வது போல இனி ஒரு கணமும் வாழவே முடியாது என்ற நிலைக்கு மக்கள் வரும் போது அவர்கள் வெகுண்டு எழுவது தான் புரட்சி’ என்கிறான் மாவீரன் சேகுவாரா. அந்த புரட்சி தமிழகத்தில் மக்கள் ஆளும்கட்சியை எதிர்த்து வாக்குப்பதிவு செய்யும்போது அனைவருக்கும் தெரியும். இந்த ஆட்சி தூக்கி எறியப்படும்.
 
அதன் பின் கட்டுமானத்துறை உள்ளிட்ட எல்லாத் துறைகளுக்கும் நல்வாழ்வு மலரும்.
 
நாங்குநேரியில் சென்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு நீங்கள் தோல்வி அடைந்த பின்னும் தொடர்ந்து அங்கேயே முகாமிட்டு மக்கள் நலப் பணிகளைச் செய்து வருகிறீர்களே?
 
“முகாம் இல்லை. வீடு வாங்கி குடியேறி விட்டேன். நாங்குநேரி இனி எனக்கும் சொந்தத்தொகுதி தான். சென்ற தேர்தலில் இந்த நாங்கு நேரி மக்களுக்கு ஒரு வாக்குறுதியைத் தந்தேன். “தேர்தலில் தோற்றாலும் சரி ஜெயித்தாலும் சரி இனி நாங்குநேரி தான் எனக்குச் சொந்தத் தொகுதி. உங்கள் அனைவருக்குமான வலுவான வாழ்வாதரத்தையும், பொதுக் கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தும் வரை இங்கே தான் உங்களோடு இருப்பேன்‘ என வாக்குறுதி தந்தேன். அதைத்தான் இப்போது செய்து கொண்டிருக்கிறேன். வரும் தேர்தலில், மீண்டும் இதே தொகுதியில் எனக்கு காங்கிரஸ் சார்பாக சீட் கிடைத்தாலும் சரி. கிடைக்காது போனாலும் சரி, சீட் கிடைத்து நான் ஜெயித்தாலும், தோற்றாலும் இந்த மக்கள் தான் என் குடும்பம். இவர்களுக்காக உழைப்பது தான் என் அடுத்தக்கட்ட வாழ்க்கை.
 
ஏன் நான் இப்படி சொல்கிறேன் என்றால், ஒரே முறை ஆட்சியாளர்கள் அல்லது அரசு அதிகாரிகள் நாங்குநேரி தொகுதி மக்களை, அவர்கள் வாழ்க்கை முறையை நேரில் பார்த்து விட்டு வந்தால் கல் மனசுக்காரர்களும் நெஞ்சம் கலங்குவார்கள். அப்படி ஒரு ஏழ்மையான நிலையில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்குள்ள கிராமங்களில் வாழும் மக்கள் ஏறக்குறைய 60 ஆண்டுகள் பின் தங்கி இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 100, 150 ரூபாய் தான் அவர்களது அதிக பட்ச சம்பளமாக இருக்கிறது. இன்னும் பீடி சுற்றும் வேலையை நாளொன்றுக்கு 15 மணி நேரம் செய்து வருகிறார்கள்.
 
என் மக்கள் இன்னும் ஏழையாகவே இருக்கிறார்கள். அப்படி அவர்கள் ஏழையாக இருந்தால் தான் தேர்தல் நேரத்தில் இவர்களது ஓட்டுக்கு பணம் கொடுத்து விலைக்கு வாங்க முடியும் என்கிற ஆளும் கட்சியின் மனப்பான்மை தாம் இவர்கள் இந்த துயர நிலையில் தொடர்ந்து இருப்பதற்கு காரணம். இப்படிப்பட்ட ஆட்சியாளர்களின் நரித்தனத்தை இம்மக்கள் உணர்ந்து கொண்டால் இவர்களுக்கு விரைவில் விடிவு காலம் ஏற்படும்’’.
 
உங்கள் சேவையை, நாங்குநேரி மக்கள் எப்படி வரவேற்கிறார்கள்?
 
“சொந்தச் சகோதரனாக என்னை பார்க்கிறார்கள். அண்ணன் வசந்தகுமாரைப் போல நான் எளிமையாக இருப்பதாக பாராட்டுகிறார்கள். இப்போது நாங்குநேரியின் எல்லா கிராமங்களும், தெருக்களும் எனக்கு அத்துப்படி.
 
“ இந்த தொகுதியில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ வைக் கூட இக்கட்டான கொரானா காலத்தில் எங்களால் பார்க்கமுடியவில்லை. நீங்கள் தோற்றிருந்தாலும் யாதொரு எதிர்ப்பார்ப்புமின்றி எங்களுக்காக உழைக் கிறீர்களே!’ என மனமார பாராட்டுகிறார்கள். இவர்களுக்காக என் சொந்தப் பணத்தை செலவழிப்பதில் எனக்கு எந்த தயக்கமுமில்லை என்றே கருதுகிறேன்.
 
முன்பே சொன்னபடி எனக்கு வெற்றி தோல்வி முக்கியமில்லை. ஆயுள் முழுக்க இவர்களுடன் இருக்க வேண்டும். அது தான் என் அவா.
 
மற்றபடி தேர்தலில் வென்றால் மகிழ்ச்சி, தோற்றால் பயிற்சி, என்றும் தொடரும் என் முயற்சி” என்கிறார் சிம்பிளாக.
 
நாம் சந்தித்த பல நேர்மையான கட்டுநர்களில் ரூபி மனோகரனும் ஒருவர். தெளிவான ஆவண ஒப்படைப்பு, குறித்த நேரத்தில் வீட்டை ஒப்படைத்தல், விற்பனைக்குப் பிந்தையை சேவை என இம்மூன்றிலும் சிறப்பு முத்திரையை பதிக்கும் ரூபி மனோகரன் அரசியலிலும் வெற்றி முத்திரை யைப் பதிப்பார் என நம்பலாம்.
 
இந்த நேர்காணல் வீடியோவை கீழ்காணும் லிங்கில் கிளிக் செய்து பார்க்கவும்...
 
---------------------------------------------------------------------------------------

2020, டிசம்பர் மாத , பில்டர்ஸ் லைன் கட்டுமான இதழிலிருந்து.

 

பில்டர்ஸ் லைன் இதழினை ஆன்லைனில் படிக்க :
http://www.buildersline.in/subscription.php?reg=

 

பில்டர்ஸ் லைன் இதழினை தபாலில் பெற:
Call: 8825577291

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2066635