பாதுகாப்பான, சுகாதரமான கழிப் பறைகள் நம் நாட்டின் கிராமப் புறங்களில் இன்னும் கேள்விக்குறியாக இருக்க தன்னந்தனியாக ஒரே கிராமத்தில் 1, 500 - க்கும் அதிகமான கழிப்பறைகள் கட்டுவதற்கு பயிற்சியளித் திருக்கிறார் ஒரு பெண். அவர் சுனிதா தேவி. ஜார்கண்ட் பகுதியைச் சேர்ந்த சுனிதா தேவி தனது உதய்புரா கிராமத்தை திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத பகுதியாக மாற்றும் நோக்கத்துடன் செயல்பட்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இந்த அரிய சாதனைக்காக சர்வதேச மகளிர் தினத்தன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் இருந்து ‘நாரி சக்தி புரஸ்கார்’ விருதினைப் பெற்றுள்ளார்.
எப்படி கழிப்பறைகள் கட்டுவதற்கு சுனிதா ஆர்வமுடன் பணியாற்றுகிறார்?
முன்பெல்லாம் கட்டுமானப் பணிகளில் பெரும்பாலும் ஆண்களே ஈடுபட்டிருந்தனர். கழிப்பறைகளைக் கட்டுவது சிறு வேலையாக கருதப் பட்டதாலும் அதில் அதிகம் சம்பாதிக்க முடியாது என்பதாலும் கழிப்பறைகள் கட்டும் பணியில் ஆண்களை ஈடுபட வைப்பது கடினமாக இருந்தது. எனவே, மாவட்ட அதிகாரிகள் சுனிதாவின் கிராம பஞ்சாயத்தை அணுகி தன்னார்வலர்களை அழைத்தபோது சுனிதா இணைந்து கொண்டார். சுனிதா தனது கிராமத்தில் கழிப்பறைகள் அவசியம் என்பதை உணர்ந்தார். தூய்மை இந்தியா திட்டத்தால் ஊக்கமளிக்கப்பட்டவர்கள், யூனிசெப் ஆதரவு பெற்ற ஊழியர்கள், சுகாதார நிபுணர்கள் போன்றோர் ஏற்பாடு செய்த கட்டுமானப் பணிக்கான பயிற்சியில் இணைந்துகொண்டார். இந்தப் பயிற்சியில் தனிநபர் வீடுகளுக்கான இரட்டை உறிஞ்சு குழி கழிப்பறைகள் கட்டுமானத்தின் அனைத்து தொழில்நுட்ப அம்சங்களும் இவருக்கு விவரிக்கப் பட்டது. சுனிதா பயிற்சியை முடித்த பிறகு கழிப்பறை கட்ட வசதி இல்லாதோர் அடங்கிய பகுதிகளில் கழிப்பறைகளைக் கட்டத் துவங்கினார்.
இரட்டை உறிஞ்சு குழி தொழில்நுட்பம், கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு புதிதான ஒன்றாகும். எனவே, ஒவ்வொரு கழிப்பறை கட்டுமானத்திலும் அவரே அவர்களை கண்காணித்து வழிநடத்தினார்.
இதுவரை இவர் தானே முனைந்து 475 கழிப்பறைகளைக் கட்டியுள்ளார். 300-க்கும் அதிகமான பெண் கட்டுமானப் பணியாளர்களை 1,500 க்கும் அதிகமான கழிப்பறைகளை கட்ட ஊக்குவித்து பயிற்சியும் அளித்துள்ளார். மக்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தியதற்காக சர்வதேச மகளிர் தினத்தன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் இருந்து ‘நாரி சக்தி புரஸ்கார் 2018’ விருதினைப் பெற்றுள்ளார். சுமார் 300 பெண்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட ஊக்குவித்ததற்காக ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டிருக்கிறது.
சுனிதா தனது கிராமத்தில் கழிப்பறைகள் கட்டுவதுடன் நிறுத்திக்கொள்ளாமல் பெண்கள் அடங்கிய குழு ஒன்றையும் உருவாக்கினார். சுகாதாரம், திறந்தவெளியில் மலம் கழிப்பது, மது அருந்துதல், குழந்தைத் திருமணம், பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் குறித்து விவாதிக்க ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் அனைவரும் சந்தித்துக் கொண்டனர்.
ஒவ்வொரு வீடாகச் சென்று பெண்கள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருவாய் ஈட்ட அவர்களை ஊக்குவித்ததுடன் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத பகுதியாக மாற்றவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இந்த நாட்டில் இப்போது தேவையானது வெற்று விவாதங்கள் அல்ல, செயல்தான் என்பதை சொல்லாமல் சொல்கிறார் சுனிதாதேவி.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066891
|