கட்டட உறுதியும் கான்கிரீட் இடுதலும்

23 ஜனவரி 2024   05:30 AM 22 நவம்பர் 2019   11:15 AM


காங்கிரீட் உறுப்புக்கள் நேரடியாகவோ, மண் மூலமோ, தண்ணீர் மூலமோ, சல்பேட் எனப்படும் உப்போடு தொடர்பு கொள்ளும் சூழலில், மண் மற்றும் தண்ணீரில் கலந்துள்ள சல்பேட் உப்பின் அளவுக்கேற்ப பயன்படுத்தப்படும் வெவ்வேறு வகை சிமெண்டுகளுக்கான குறைந்தபட்ச அளவுகள், பின்பற்ற வேண்டிய அதிக பட்சமான சிமெண்ட் - தண்ணீர் விகிதம் ஆகியவை ஐ.எஸ் கோட் புத்தகத்தில் அட்டவணை 4-இல் (Table 4 of I.S 456) மிக விவரமாய் தரப் பட்டுள்ளது.

 

(b) வலுவூட்டிக் கம்பிகளுக்கான காங்கிரீட் கவசம் (உட்பிரிவு எண் 8.2.3) காங்கிரீட்டினுள் அதன் வலிமையை அதிகரிப்பதற்காக வைக்கப்படும் எஃகுக் கம்பிகள் துருப்பிடிக்காத வண்ணம் பாதுகாக்கப் பட்டால் தான் அந்த காங்கிரீட் நீண்ட நாட்கள் வலிமையுடன் நிலைத்திருக்கும். அக்கம்பிகள் காங்கிரீட்டின் வெளிப் பரப்புக்கு மிக அருகில் வைக்கப்படும்போது, அவை மாறி மாறி தண்ணீர் மற்றும் காற்றுடன் தொடர்பு கொள்ளும் சூழல் நிமித்தம் வேதியல் மாற்றங்களுக்குள்ளாகி துருப்பிடிக்க ஆரம்பிக்கிறது.

 

கம்பியின் உட்பகுதிகளை துரு அடையும்போது கம்பியை விரிவடையச் செய்கிறது. கம்பிகளின் மேற்பகுதி உரிய ஆரம்பித்து, அது ஒரு கேன்சர் வியாதி போல் கம்பியின் உள் நோக்கியும், அதன் நீள வாட்டிலும் பரவுகிறது. இப்படி கம்பிகளின் கனஅளவு அதிகரித்து அவை உப்புவதால், அவற்றை ஒட்டி அமைந்துள்ள காங்கிரீட் வெளியே தள்ளப்படுகிறது. 


இச் சூழலில் சரியான அளவில் கவசம் கொடுக்கப்படாத பட்சத்தில் மெல்லிய காங்கிரீட் பகுதி உரிந்து துண்டு, துண்டாய் கீழே விழ ஆரம்பிக்கிறது. தற்போது துருப்பிடித்தக் கம்பிகள் வெளியே முழுமமையாய் தெரிகின்றன.

 

அவற்றை உடனே கவனிக்காவிட்டால், அதன் மேல் சுதந்திரமாகப் படும் காற்றிலுள்ள ஈரப்பதத்தின் காரணமாய் மேலும் விரைவாக துருப்பிடித்து, அவ் வுறுப்பு முற்றிலும் செயலிழக்கவோ, இடிந்து விழவோ வழி வகுக்கிறது. சில பழைய கட்டிடங்களின் காங்கிரீட் உறுப்புக்களை உடைக்கும் போது 40 ஆண்டுகளுக்கு முன் அதனுள் வைக்கப் பட்ட உருட்டை “மைல்ட் ஸ்டீல் கம்பிகள் ‘ இன்னும் புதிய கம்பிகளைப்போல அப்படியே உள்ளதைக் காணலாம்.

 

அதே வேளையில் 20 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டு, சரியாக பாதுகாக்கவோ, பராமரிக்கவோ படாத ஒரு காங்கிரீட் கூரைத்தளத்தை உடைக்கையில், கம்பிகளையே காண முடியாத, அல்லது 10 மிமீ கம்பிகள் 3 மிமீ கம்பிகளாக இருப்பதை மட்டுமே காணும் நிலையும் உள்ளது. ஆகவே காங்கிரீட்டின் மேல் பரப்பு அடிக்கடி அல்லது தொடர்ந்து தண்ணீர் படாத வகையில் மூடிப்பாதுகாக்கப் படுவதோடு, அதில் வைக்கப் படும் வலுவூட்டிக் கம்பிகள் உரிய கவசத்துடன் (Cover) புதைக்கப்படுவது மிக முக்கியமாகும்.

 

சாதாரணமாக, வலுவூட்டிக் கம்பிகளுக்கு அளிக்கப் பட வேண்டிய குறைந்த பட்ச காங்கிரீட் கவச அளவுகள் இ.த.456-இன் அட்டவணைகள் 16 மற்றும் 16A (Tables 16 & 16A of I.S 456) ஆகியவற்றில் தரப்பட்டுள்ளன. அட்டவணை 16 இன் படி, கம்பிகளுக்கான குறைந்த பட்ச தோராய காங்கிரீட் கவசம் தீவிர
மற்ற சூழலில் 20 மி மீ: மிதமான
சூழலில் 30 மி மீ: தீவிரமான சூழலில் 45 மி மீ: மிகத்தீவிரமான சூழலில் 50 மி மீ: அதிக பட்ச மோசமான சூழலில் 75 மி மீ எனக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்த அளவுகள் தூண்கள். உத்திரங்கள், ஸ்லாபுகள் போன்ற அனைத்து உறுப்புக்களுக்கும், அவைகளில் வைக்கப்படும் அனைத்துவகைக் கம்பிகளுக்கும் பொருந்தும். ஒரு சிறிய விதி விலக்காக, தீவிரமற்ற சூழலில், 12 மி.மீ மற்றும் அதற்குக் குறைவான அளவிலான கம்பிகளுக்கு தோராய கவசம் 15 மிமீ கொடுக்கப்படலாம். தீவிரமான மற்றும் மிகத்தீவிரமான சூழலில், M35 கிரேடுக்குக் குறையாத காங்கிரீட்டுகளில் இக்குறைக்கப்பட்ட கவச அளவு (15 மி மீ ) கொடுக்கப் படலாம்.

 

இது திவிர, தீ விபத்துக் குள்ளாகும் கட்டிடங்களின் காங்கிரீட் உறுப்புக்கள் வெப்பமடையும் போது, அதனுள் அமைந்துள்ள கம்பிகள் கான்கிரீட்டின் வெளிப்பரப்பிற்கு மிக அருகில் இருக்குமாயின், அவை காங்கிரீ ட்டை விட அதிக அளவில் விரிவடையும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாய், காங்கிரீட்டில் விரிசல்கள் தோன்றி கம்பிகள் வெளி நோக்கி வளையலாம்.

 

இவ்வாறான உடைதலைத் தவிர்க்க, ஒவ்வொரு காங்கிரீட் உறுப்புக்களுக்கும், தோரயமாக எவ்வளவு நேரத்துக்கு தீ எதிர்ப்புத்தன்மை தேவைப்படும் என்ற தேவையின் அடிப்படையில், கம்பிகளுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கவச அளவுகள் வரையறுக்கப் பட்டு, அட்டவணை 1616A (Table 16A of I.S. 456) இல் கொடுக்கப்பட்டுள்ளன.

 

ஒரு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்படும் பட்சத்தில் அதை அணைக்க ஒரு குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். இவ்வாறு ஆகக் கூடிய கால அளவுக்கேற்ப காங்கிரீட்டில் உறுப்புக்களின் தடிமனுக் கற்ப அமைய வேண்டிய கவச அளவுகள் அந்த அட்டவணையில் தரப்படுள்ளது.

 

உதாரணமாக, ஒரு மணி நேரத்திற்கு எரியும் தீயின் வெப்பத்தைச் சாமாளிக்க, ஸ்லேப், உத்திரம் ஆகிய உறுப்புக்களில் 20 மி மீ கவசமும், தூண்களில் 40 மி மீ கவசமும் அளிக்கப்பட வேண்டும். அது போல இரண்டு மணி நேரம் தாக்குப் பிடிக்க, தனித்தாங்கி ஸ்லேபில் 35 மிமீ, தொடர் தாங்கி ஸ்லேபில் 25 மிமீ, தனித்தாங்கி உத்திரத்தில் 40 மிமீ, தொடர் தாங்கி உத்திரத்தில் 30 மிமீ, தூண்களில் 40 மிமீ என குறைந்த பட்ச கவச அளவுகள் கொடுக்கப் பட்டுள்ளன.

 

இது போல அரை மணி முதல் 4 மணி கால அளவு வரை அரை மணி இடைவெளியில், வெவ்வேறு உறுப்புக்களுக்கான குறைந்தபட்ச அளவுகள் தர வழிகாட்டு அட்டவணையில் தரப்பட்டுள்ளன.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2066987