காலத்தை வென்ற கட்டுமானப் பொறியாளர் சர். விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த தினத்தை நாம் பொறியாளர் தினமாக கொண்டாடி வருகிறோம். இதன் ஒரு பகுதியாக நமது கட்டுமானத் துறை மாத இதழும், தென்னிந்தியாவின் முன்னணி சிமெண்ட் நிறுவனமான மஹா சிமெண்ட் நிறுவனமும் இணைந்து சிவில் துறை பொறியாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இடையே தமிழக அளவில் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தியது.
இதில் 1500 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் வரபெற்றன. அதில் ரொக்கப் பரிசு , கேடயம் மற்றும் சான்றிதழ்கள் பெறக்கூடிய 50 வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் விழா, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே, விஜய் பார்க் ஹோட்டலில் கடந்த மாதம் 19ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது.
ஏறத்தாழ 12 தலைப்புகளில் இந்தப் போட்டி நடைபெற்றது. மொத்த பரிசுத்தொகையாக ஒரு லட்சம் மற்றும் பில்டர்ஸ்லைன் தபால் சந்தா, ஆன் லைன் சந்தா, கட்டுமான நூல்கள் என 3 லட்ச ரூபாய் அளவிற்கு சிறப்புப்பரிசுகள் வழங்கப் பட்டன.
இந்த போட்டியில் வெற்றிப்பெற்ற கட்டு நர்கள், பொறியாளர்கள், சிவில் பேராசிரியர்கள், மாணவர்கள் என பலரும் விழாவிற்கு நேரில் தங்கள் நண்பர்கள், உறவினர்களுடன் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு மஹா சிமெண்டின் உதவி துணைத் தலைவர் திரு. ஆர். சிவராம கிருஷ்ணன் , மார்கெட்டிங் மேலாளர்கள் திரு. சீனிவாசன் & திரு. ஜெயதிலக், வாடிக்கையாளர் சேவை பிரிவின் தலைவர் திரு. D. பிரபு பால் ஆகிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். பில்டர்ஸ்லைன் சார்பாக நிர்வாக ஆசிரியர் திரு. E.உதயகுமார், ஆசிரியர் பா.சுப்ரமண்யம் மற்றும் ஆசிரியர் குழுவினர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியை மஹா சிமெண்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரிவின் தலைவர் திரு. D. பிரபு பால் அவர்கள் தொகுத் தளித்தார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் வருகை தந்திருந்த கல்லூரி மாணவர்கள் இடையே ஒரு துரித கேள்வி பதில் நிகழ்ச்சியை திரு.பிரபு பால் நடத்தினார். சிமெண்ட் மற்றும் கான்கிரீட் தொடர்பாக அவர் கேட்ட தொழில்நுட்ப கேள்விகளுக்கு சிவில் பயிலும் மாணவர்கள் உரிய பதில்களை சொல்லி வெற்றிப் பெற்றனர். விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் நடைப்பெற்ற இந்த கேள்வி பதில் நிகழ்வு மிகுந்த வரவேற்பினைப் பெற்றது.
அதன் பின் திரு.பிரபு பால் அவர்கள் மஹா சிமெண்ட் நிறுவனத்தைப் பற்றிய காணொளிக் காட்சியை வழங்கினார். மஹா சிமெண்ட் நிறுவனத்தின் துவக்கம், சீரிய பயணம், ஆண்டுக்காண்டு மஹா சிமெண்ட் பெற்ற முன்னேற்றம் ஆகியவற்றை குறித்தும் தென்னிந்தியாவின் மிக வேகமாக விற்பனையில் உயர்வு கொண்டு வரும் மஹா சிமெண்ட் நிறுவனத்தின் பல்வேறு சிமெண்ட் தயாரிப்புகள் குறித்தும் அந்த காணொளிக் காட்சியின் வழியாக வாசகர்களுக்கு விளக்கினார்.
அதை தொடர்ந்து பில்டர்ஸ்லைன் பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் திரு. சி. உதயகுமார் உரையாற்றினார். தமிழர் கட்டடக்கலை சிறப்பு பற்றியும், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கட்டுமானப் பொறியாளர்களின் பங்களிப்பு எத்தனை முக்கியமானது என்பதுப் பற்றியும் பேசினார்,
சர்.விஸ்வேஸ்வரய்யாவின் கட்டுமானத்துறைச் சேவையைப் பற்றியும் அவர் உரையாற்றினார். மேலும் அவர் கூறும்போது,” ”கடந்த 20 ஆண்டுகளாக பில்டர்ஸ்லைன் பத்திரிக்கையை சற்றும் தரம் குறையாமல் பல்வேறு சிரமங்களுக்கு இடையே நடத்தி வருவதற்கு உறுதுணையாக இருக்கக் கூடிய வாசகர்கள், கட்டுமான நிறுவனங்கள், கட்டடப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் ஆகியோருக்கு எனது தாழ்மையான நன்றிகள்.
இதுபோல கட்டுரைப் போட்டி நடத்துவதன் மூலமாக எங்களை நாங்கள் புதுப்பித்து கொள்கிறோமோ இல்லையோ தமிழக அளவில் ஒட்டுமொத்த கட்டுமானத்துறையில் ஒரு ஆழ்ந்த சலசலப்பை ஏற்படுத்துகிறோம் என்றால் அது மிகையல்ல. பொறியாளர் தின கட்டுரைப் போட்டியின் வாயிலாக
ஏறத்தாழ 1500 போட்டியாளர்களிடம் கட்டடவியல் குறித்த பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம். கட்டடப் பொறியியலின் மகத்துவத்தை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் செல்ல வேண்டும் என்னும் எங்கள் நோக்கம் பில்டர்ஸ்லைன் பத்திரிக்கை நடத்துவதன் மூலமாகவும், இதுபோன்ற மெகா கட்டுரைப் போட்டிகளை நடத்துவதன் மூலமாகவும் நிறைவேறி வருகிறது.
கிராமப் புற மாணவர்கள் இடையே கட்டிடப் பொறியியலை நமது தாய்மொழியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் தான் பில்டர்ஸ்லைன் துவங்கப்பட்டது. இன்று பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள் எங்கள் பில்டர்ஸ்லைன் மாத இதழுக்கு சந்தாதாரராக இருக்கிறார்கள் எனும் போது எங்களது பணி சரியான இலக்கை நோக்கி செல்கிறது என்பதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. இந்த மாபெரும் கட்டுரைப் போட்டிக்கு நிதியுதவி அளித்து வெற்றிப்பெற்ற 54 போட்டியாளர்களுக்கு ரொக்க பரிசு வழங்குவதற்கு ஏற்பாடு செய்த மஹா சிமெண்ட் நிறுவனத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்’’ என்றார்.
பில்டர்ஸ்லைன் ஆசிரியர் திரு. பா.சுப்ரமண்யம் பேசும்போது, “ ”இரண்டாம் முறையாக இக்கட்டுரைப் போட்டி மஹா சிமெண்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது. இம்முறை அதிக எண்ணிக்கையில் மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டார்கள் என்பது பாராட்டுக்குரியது. அதே சமயம்
பங்கேற்பதற்கான கட்டுரைகளை மட்டும் படைக்காமல் பரிசுக்குரிய கட்டுரைகளை படைக்க வேண்டும்’’ எனக் குறிப்பிட்டார்.
மேலும் அவர் பேசும்போது, “சிவில் பயிலும் மாணவர்கள் பொருளாதார மந்த சூழ்நிலைகளை குறித்து அச்சம் கொள்ள வேண்டாம். விரைவில் இந்தியப் பொருளாதாரமும், கட்டுமானத்துறையும் மீண்டு எழும். அதே சமயம் மாணவர்கள் தங்களது பாடத்திட்டம் தாண்டி நிறைய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், சம காலத்தில் போட்டிகள் அதிகம் உள்ளன’’என்று குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து இறுதியாக பேசிய மஹா சிமெண்டின் உதவி துணைத் தலைவர் திரு. ஆர். சிவராமகிருஷ்ணன், “”எங்கள் மஹா சிமெண்ட் நிறுவனம் 1998ல் மிக எளிமையான முறையில் எங்கள் சேர்மன். டாக்டர். திரு. ரமேஷ்வர் ராவ் அவர்களால் 0.2 மில்லியன் டன் உற்பத்தித்திறன் கொண்டதாய் துவங்கப்பட்டது. இந்த 21 ஆண்டுகளில் மஹா சிமெண்ட் நிறுவனம் இன்று ஆண்டுக்கு 10 மில்லியன் டன் உற்பத்தித்திறன் கொண்டதாக வளர்ச்சி அடைந்திருக்கிறது. இந்த வளர்ச்சிக்கு காரணமான அத்துனைப் பொறியாளர்களுக்கும், கட்டுநர்களுக்கும், டீலர்களுக்கும் வீடுகட்டும் பொதுமக்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
தயாரிப்பு, தரப்பரிசோதனை, பேக்கிங், ஸ்டோரேஜ் ஆகியவற்றில் நாங்கள் சர்வதேச தரத்தில் அதிநவீன தொழில்நுட்ப முறைகளின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு தரமான சிமெண்ட்டை வழங்கி வருகிறோம் என்பதையும் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தக் கட்டுரைப் போட்டியைப் பற்றிக் குறிப்பிட வேண்டும் என்றால் பில்டர்ஸ்லைனுடன் இரண்டாம் ஆண்டாக இணைந்து மஹா சிமெண்ட் நடத்துகிறது.
கட்டிடவியல் குறித்தும், கான்கிரீட் குறித்தும் தமிழகம் முழுக்க விழிப்புணர்வை ஏற்படுத்துகிற இந்தக் கட்டுரைப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்வுக்கு எப்போதுமே மஹா சிமெண்ட் ஆதரவு நிச்சயம் உண்டு. அடுத்தஆண்டு இன்னும் அதிகமான அளவில் பொறியாளர்கள் பங்கேற்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்“ என்றார்.
மேலும், திரு. ஆர்.சிவராமகிருஷ்ணன் அவர்கள் கட்டுரைப் போட்டியில் வெற்றிப்பெற்ற தேர்வாளர்களையும் தனித்தனியே குறிப்பிட்டு அவர்களது கட்டுரைகளைப் பாராட்டி வாழ்த்தினார். ஹிராநந்தனி பில்டர்ஸிலிருந்து இப்போட்டியில் கலந்து கொண்ட வெற்றியாளர் திரு. காளிதாஸ் (உதவி துணைத்தலைவர்) அவர்களைக் குறிப்பிட்டு, ஹிராநந்தனி பில்டர்ஸ் நிறுவனத்துடன் மஹா சிமெண்ட் நிறுவனம் 20 ஆண்டுகளாக வர்த்தக உறவினைக் கொண்டிருப்பதை நினைவு கூர்ந்தார்.
அதன் பின் பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது. வெற்றி பெற்ற 54 போட்டியாளர்களுக்கு அவர்களுக்குரிய பரிசுகளை மஹா சிமெண்ட் நிறுவனத்தின் உதவி துணைத்தலைவர் திரு. ஆர்.சிவராமகிருஷ்ணன் மற்றும் பில்டர்ஸ் லைன் நிர்வாக ஆசிரியர் திரு. சி. உதயகுமார் அவர்களும் பரிசுகள் வழங்கி கௌரவப் படுத்தினார்கள்.
மதிய உணவுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066995
|