சென்னையில், இனி வரும் காலம் மழைக்காலம்தான். ஆனால், மழை நீரை சேமிக்கத் தகுந்த கட்டமைப்புகள் இல்லாததால், தண்ணீர் வீணாகிறது. இந்நிலையில், வெறும் 2,250 ரூபாயில், தன் வீட்டின் மாடியில் பொழியும் மழைநீரை, ஒரு சொட்டு கூட வீணாக்காமல் சேமித்து வருகிறார், தனியார் கட்டுமான நிறுவன பொறியாளர். அவர் பெயர் தயானந்த் கிருஷ்ணன், சென்னை, குரோம்பேட்டையை அடுத்த சிட்லபாக்கம், அவென்யூவைச் சேர்ந்தவர். கட்டடப் பொறியாளரும் கூட.
இவர், நண்பர்களுடன் சேர்ந்து, சொந்தமாக கட்டுமான நிறுவனம் வைத்துள்ளார். 100 சதவீதம் மழை நீரை சேமிக்க வேண்டும் எனும் தன் இலக்கை அடைய, வீட்டிலேயே அதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி உள்ளார்.
இது குறித்து அவர் பேசும்போது,“சிட்லபாக்கத்தில், இரண்டு ஆண்டுகளுக்கும் மேல், குடிநீர் வினியோகம் சீராக இல்லை. பெரும்பாலான வீடுகளில், ஆழ்துளை கிணறுகள் அமைத்து, நிலத்தடி நீரை உறிஞ்சி, சுத்திகரிப்பு இயந்திரம் வாயிலாக, அந்த தண்ணீரை சுத்தம் செய்து குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். அதிலும், இந்தாண்டு கோடையில் நிலத்தடி நீர் வறண்டு, அதாள பாதாளத்திற்கு சென்றதால், நிலைமை படுமோசமானது. இதையடுத்து, என் குடும்பத்தின் தண்ணீர் தேவையை, நானே பூர்த்தி செய்ய, மழைநீரை முழுவதுமாக சேமிக்க முடிவு செய்தேன்.
அதன்படி, ஜூலை மாத இறுதியில் பெய்த மழையின்போது, என் வீட்டு மாடியில் தேங்கிய மழைநீரை, குழாய்கள் வழியாக தரைக்கு கொண்டு வந்து, நைலான் வலை வைத்து, சுத்தம் செய்து, அவற்றை, பேரல்களில் சேமித்தேன்.
முதலில், 200 லிட்டர் கொள்ளளவு உள்ள, இரண்டு பேரல்களில் மட்டுமே சேமித்த நிலையில், மழை சற்று தீவிரமாக பெய்தது. இதையடுத்து, பேரலை தவிர்த்து, வீட்டில் உள்ள கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியிலும் சேமிக்க முடிவு செய்தேன். தொடர்ந்து, மாடியில் இருந்து தரைத்தளத்திற்கு வரும் குழாய்களை, ரப்பர் குழாய் மூலம், கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இணைத்து, அங்கும், நைலான் வலை வைத்து, தண்ணீரை சுத்தம் செய்து சேமித்தேன். இதற்கு எனக்கு, 2,250 ரூபாய் மட்டுமே செலவானது. இதனால், ஒரு சொட்டு மழைநீரை கூட வீணாக்காமல், 18 ஆயிரம் லிட்டர் நீரை, என்னால் சேமிக்க முடிந்தது.
பொதுவாக, 1,000 சதுர அடி பரப்பு உள்ள ஒரு வீட்டின் மாடியில், 10 மி.மீ., அளவு மழை பெய்தால், அதில் இருந்து, 800 லிட்டர் நீரை சேமிக்கலாம்.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மட்டும், ஆண்டிற்கும், 1,400 மி.மீ., மழை பொழிகிறது.அந்த வகையில், 1.12 லட்சம் லிட்டர் நீரை சேமிக்கலாம். இதில் சராசரியாக, மூன்று பேருள்ள குடும்பத்திற்கு குடிப்பதை தவிர, மற்ற தேவைகளுக்கு ஆண்டிற்கு, 1.09 லட்சம் லிட்டர் தண்ணீரே தேவைப்படுகிறது. இந்த தண்ணீரை, மழைநீரை சேமிப்பதை வைத்தே, நாம் பெற்று கொள்ளலாம். முடிந்தவரை, புதிதாக வீடு கட்டும் ஒவ்வொருவரும், கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, மழைநீரை சேமிக்க வேண்டும். அவ்வாறு, இல்லாதவர்கள் பழைய முறைப்படி, மழைநீரை பூமிக்குள் செலுத்தியாவது சேமிக்க வேண்டும்.
இதை தவிர்த்து, நிலத்தடி நீரை உறிஞ்சுவது என்பது, எந்த விதத்திலும் நமக்கு நன்மை அளிக்காது. அது, இயற்கையை நாம் தெரிந்தே அழிப்பதற்கு சமமாகும்’’ என்றார்.
தற்போது, தயானந்த் கிருஷ்ணனை போலவே, அவரது வீட்டின் அருகில், கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி வைத்திருக்கும், 15க்கும் மேற்பட்டோர், தங்கள் வீடுகளிலும் மழைநீர் சேமிப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
மேலும், பலர் கட்டமைப்பை ஏற்படுத்த இவரிடம் ஆலோசனை கேட்டு வருகின்றனர்.
அவரிடம் ஆலோசனை பெற விரும்புவோர் : 9790819813 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி : தினமலர்
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2066989
|