ஒரு கட்டமைப்பை உருவாக்கும் போது, அக்கட்டமைப்பு எந்த நோக்கத்துக்காக உருவாக்கப்படுகிறதோ, அந்நோக்கத்தை முழுமையாய் நிறைவேற்றும் வகையில் அது உருவாக்கப் பட வேண்டும். அதற்கு முக்கிய தேவைகள் அதன் வலிமையும் (Strength), நிலைத்தன்மையும் (Stability), பயன்படு தன்மையும் (Serviceability) ஆகும். இவற்றோடு நாம் கருதும் மற்றொரு முக்கிய எதிர்பார்ப்பு, அக்கட்டமைப்பின் நீடிப்பு அல்லது நீண்ட ஆயுள் (Durability) ஆகும்.
நம் பயன்பாட்டுக்கென ஒரு ஜோடி செருப்பை வாங்கும் போதுகூட, அது நீடித்து உழைக்குமா? அதற்கு கேரண்டி காலம் உள்ளதா? என்றெல்லாம் பார்த்து வாங்குகிறோம். அப்படியிருக்க பெரும் பணச்செலவில், பல இலட்சங்கள் அல்லது கோடிகள் முதலீட்டில் கட்டப்படும் கட்டிடங்கள், பாலங்கள், கோபுரங்கள் போன்ற அமைப்புகள் நீண்ட காலத்திற்கு நிலைத்திருந்து பயன் பட வேண்டும் என எதிர்பார்ப்பது சரிதானே? ஆகவே, நாம் கட்டும் கட்டமைப்புகள், குறிப்பாக கட்டிடங்கள் நீண்ட நாட்கள் நமக்கு பயன்படுவதற்கு என்னென்ன வழிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
ஒரு கட்டிடத்திற்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பது, அக்கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், மற்றும் பின் பற்றப்படும் கட்டுமான முறையுமாகும்.
ஒவ்வொரு கட்டுமானப் பொருளும் பெற்றிருக்க வேண்டிய குறைந்த பட்ச தன்மைகள் அல்லது பண்புகள் இந்திய தர நிர்ணய குழுமத்தால் (Bureau of Indian Standards) வரையறை செய்யப் பட்டுள்ளன. நமது துரதிர்ஷ்டம் என்னவென்றால், நமது நாட்டில் கட்டிடங்களைக் கட்டுகின்ற பெரும்பாலான கட்டுநர்களுக்கும், இலட்சக்கணக்கில் பணத்தைச் செலவு செய்யும் வீட்டு உரிமையாளர்களுக்கும் இந்த இந்திய தர நிர்ணய விதிகள் (I.S.Codes) பற்றி எதுவும் தெரியாதது தான்.
கடந்த 20 ஆண்டுகளாக பல கட்டிடங்களைக் கட்டி முடித்த ஒரு கட்டுநரிடம், “எத்தனை வகையான சிமெண்டுகள் உள்ளன, தெரியுமா?’ என்று கேட்டேன். “ஒ.பி.சி கிரேடு, சூப்பர் கிரேடு இரண்டு வகைதான் தெரியும்’ என்றார். “இரண்டில் எது சிறந்தது ?’என்றார். இதுதான் இன்றைய கட்டுமான உலகின் பரிதாப நிலை.
இது ஒரு புறமிருக்க, இன்னொரு பக்கம், மத்திய அரசு நிறுவனமான இந்திய தர நிர்ணய குழுமம், நூற்றுக் கணக்கில் வெவ்வேறு தலைப்புக்களில், செய்முறை விதிகளை அச்சிட்டு அவர்களே பாதுகாப்பாய் வைத்துக் கொள்ளுகிறார்கள். உதாரணத்திற்கு கூறுவதாயின், “சுவர் கட்டுமானத்திற்கான சிமெண்ட் கலவைக்குப் பயன்படுத்தப்படும் மணல் எத்தன்மைகள் கொண்டதாயிருக்க வேண்டுமென பத்து பக்கங்கள் கொண்ட I.S 2116 என்ற வெளியீட்டில் விவாரமாய் தரப்பட்டுள்ளது. அதே வேளையில் கான்கிரீட் வேலைகளுக்குப் படுத்தப்படும் மணல் மற்றும் ஜல்லி எத்தன்மைகள் கொண்டவையாக இருக்க வேண்டுமென 20 பக்கங்களைக் கொண்ட I.S 383 என்ற வெளியீட்டில் தரப்பட்டுள்ளது.
சிமெண்டை எடுத்துக் கொள்ளவோமானால், அவற்றின் உட் பொருட்களின் பெளதீக மற்றும் இரசாயன தன்மைகளுக்கேற்பவும், அவை பயன்படுத்தப் படும் பணிகள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு ஏற்பவும் பயன்படுத்தப்படுவதற்கென்று பத்திற்கும் மேற்பட்ட வகைகளிலான சிமெண்டுகள் குறித்து I.S 269, I.S 8112, I.S 12269, I.S 455, I.S 1489,I.S 3466, I.S 6452, I.S 6909, I.S 8041 to 1843, I.S 12330 ஆகிய தொகுப்புகள் விவரிக்கின்றன.
சமீபத்தில் கட்டுமானப் பொருட்களின் தர நிர்ணய விதிகளின் தொகுப்பு என S.P 21-2005(2009) என்ற வெளியீட்டைப் பார்த்தேன். இக்குழுமத்தின்
நூற்றுக்கணக்கான தனித்தனி வெளியீடுகளின் சுருக்க தொகுப்பு: 929 பக்கங்கள்: விலை ரூ.9270. ஒரு கட்டுநர் கூட, இவ்வெளியீட்டைப் பார்த்திருக்கவோ, விலை கொடுத்து வாங்கியிருக்கவோ மாட்டார்கள் எனபது என் எண்ணம் (பெரும் கட்டுமான நிறுவனங்கள் ஒன்ஷீரெண்டு வாங்கியிருக்கலாம்).
மத்திய அரசின் நிறுவனமான இந்திய தர நிர்ணய குழுமம் இத்தகைய வெளியீடுகளைப் பணம் ஈட்டும் வியாபாரத்துக்காக அல்லாமல் அனைவரும் வாங்கிப் பயன்படுத்தும் வகையில் மலிவு விலைப் பதிப்புகளாக வெளியிட்டு, அனைத்து முக்கிய புத்தகக் கடைகளிலும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
பொதுமக்கள் நலனுக்காக, இவற்றை இலவசமாய் பதிவிறக்கம் செய்யும் வகையில், இக்குழுமத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். கட்டுநர்களும் இத்தொழிலில் சிறந்து விளங்க இத்தகைய விதிகளைப் படித்து, புரிந்து பின்பற்ற வேண்டும்.
அவ்வாறு செய்வார்களேயாயின், அவர்கள் கட்டும் கட்டிடங்கள் அவ்வப்போது சிறு சிறு பராமரிப்புகள் மேற்கொள்ளும் பட்சத்தில், 100 ஆண்டுகளுக்கு மேல் கட்டுமானங்கள்அப்படியே நிலைத்து நின்று பயன் படும் என்பது நிதர்சனம்.
ஒரு கட்டிடம் நீடித்து நிலைத்து நிற்க, நல்ல தரமானப் பொருட்களைப் பயன் படுத்தினால் மட்டும் போதாது. அடித்தளம் அமைப்பதிலிருந்து, அலங்காரப் பணிகளைச் செய்து முடிக்கும் வரை, ஒவ்வொரு நிலையிலும் பணிகள் அனைத்தும் உரிய முறையில், தகுந்த மேற்பார்வையுடன் மேற்கொள்ளப்பட வேண்டியது மிக முக்கியமாகும்.
தரமான, விலை அதிகமான பொருட்கள் கூட உரிய முறையில் பயன் படுத்தப்படாவிட்டால், முழுப் பலனைத் தராது. உதாரணத்திற்கு சிமென்டை எடுத்துக் கொள்வோம். மிக உயர்ந்த தயாரிப்பு, அதிக விலை, கூடுதல் கிரேடு (வலிமை) என அல்ட்ரா டெக் 53 கிரேடு சிமெண்டை வாங்கியும், அதைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கான்கிரீட்டை தேவையான கால அளவிற்கு ஈரப்படுத்தாவிட்டால், அதன் பாதி வலிமையைக் கூட பெறமுடியாது.
கட்டிடங்களில் ஏற்படும் பல வகையான விரிசல்கள் குறித்தும், அவற்றிற்கான காரணங்கள் குறித்தும், அவற்றை தவிர்க்க மேற்கொள்ளப் பட வேண்டிய கட்டுமான நடைமுறைகள் பற்றியும் S.P 25 என்ற 76 பக்க கையேடு இந்திய தர நிர்ணய குழுமத்தால் 1984 ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டுள்ளது. இக் கையேட்டை எத்தனை கட்டுநர்கள் படித்துள்ளீர்கள்?.
இக்கையேட்டில், சுவர்களில் செங்கற்களை சூளையிலிருந்து வெளியே எடுத்து 21 நாட்களுக்குப் பின்பே (குளிர் காலத்தில்) பயன்படுத்த வேண்டும், அதிக அளவில் சிமெண்ட் கலந்த கவையை பயன் படுத்தக்கூடாது, கட்டு வேலை, பூச்சு வேலை, காங்கிரீட் வேலைகள் ஆகியவற்றில் விரிசல்கள் ஏற்படாமலிருக்க குறைந்தது 10 தினங்களுக்கு அவை தொடர்ந்து ஈரப்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் கூறப்பட்டுள்ளது. இது எதையும் பின்பற்றாமல், சுவர்களில் விரிசல் வருவது இயற்கையே, தவிர்க்க முடியாது என நாம் திருப்திபட்டுக் கொள்கிறோம்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067174
|