நல்ல பூச்சு வேலையும், தரமான ஃபினிஷிங்கும் (நிறைவூட்டல்) தான் ஒட்டுமொத்த கட்டுமானத்திற்கே அழகைக் கொடுக்கிறது. அதில் உள்ள முக்கிய அம்சங்களை அறிந்து கொள்வோம். கட்டு வேலையின் போது அதில் விடப்பட்ட துளைகளை பூசு வேலை செய்வதற்கு முன்னால் சரிவர அடைக்க வேண்டும். இதைப் போலவே கான்கிரீட்டும், கட்டு வேலையும் இணையும் இடங்களில் உள்ள துவாரங்களையும் முன்னதாகவே அடைக்க வேண்டும். கான்கிரீட் பரப்பில் பூசுவதற்கு முன்னர் கொத்திவிட (புள்ளி போடுதல் என்றும் கூறுவர்) வேண்டும். இவ்வாறே கட்டு வேலை இணையும் இடங்களிலும் 12 மி.மீ அளவுக்கு கீறி விட வேண்டும். இப்படி செய்வது பூச்சு வேலை செய்யும் போது நல்ல பிடிப்பாக இருக்கும்.
இவ்வாறு கொத்திவிடுவது அதிக பட்சம் 3 மி.மீ மிகாமல் 30 மி.மீ இடைவெளிவிட்டும் இருக்க வேண்டும். பூசுவதற்கான பரப்பின் மீது ஒட்டிக் கொண்டுள்ளா தூசு, பிசிறு இவற்றை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் மேற்பரப்பினை சுரண்டியும் நார் வயர் புருசு (coir wire brush) கொண்டு சுத்தம் செய்தும் தூசு தும்பு நீங்க துடைக்க வேண்டும். பின்னர் சுத்தமான நீர் கொண்டு கழுவி பூச்சு வேலை செய்வதற்கு முன்னர் 6 மணி நேரம் ஈரமாக இருக்கும்படி செய்ய வேண்டும்.
சிமெண்ட் கலவையினை சிறுக சிறுக கலக்க வேண்டும். காரை பூசும்போது 15 செ.மீ x 15 செ.மீ அளவாக நிரப்ப வேண்டும். இவ்வாறு செய்வது 1.5 மீ முதல் 2.0 மீ வரை குறுக்கிலும் நெடுக்கிலும் இடைவெளிவிட்டு செய்ய வேண்டும்.
மொத்த பரப்பிற்கும் குறிப்பிட்டுள்ள கனத்தை விட சற்றே கூடுதலாக இருத்தல் வேண்டும். பின்னர் மூங்கில்குச்சி கொண்டு இணைப்புகளில் சரியாக நிரப்ப வேண்டும். மட்டப் பலகை கொண்டு சமன் செய்து சட்டுவக் கரண்டியால் (Trowel) சீரான நிலைக்கு தேய்த்து முடிக்க வேண்டும்.
ஜன்னல் கீழ்மட்ட அளவு போன்ற இடங்களில் இணைப்புகள் சரியாக நிரப்பி பூச வேண்டும்.ஒரு வேளை காரைப்பூச்சுக்கு மேல் வேறு பொருள் பூச்சு செய்யப் பட்ட வேண்டியிருப்பின் பூச்சு வேலை முடித்த பின்னர் அதில் கீறல் கோடுகள் போட வேண்டும். இவைகள் வேறு முடிக்கும் பூச்சுகள் செய்திட பிடிமானமாக அமையும்.
சுவற்றில் பூசு வேலை செய்யும் போது மேற்க்புறம் ஆரம்பித்து கீழே முடிக்க வேண்டும். மூலைகள், விளிம்புகள் (edges) மற்றும் இணைப்புகள் சீராக அமையும்படி சுத்தமாக பூச வேண்டும்.
பூச்சு வேலை முடித்து 24 மணி கழிந்த பிறகே ஈரப்பதப்படுத்தலை (curing) ஆரம்பித்து தொடர்ந்து 7 நாட்களுக்கு அதனை செய்ய வேண்டும். பூசியவுடன் மழைநீர் அல்லது மற்ற பாதிப்புகள் ஏதும் ஏற்க்படா வண்ணம் பாதுகாக்க வேண்டும்.
பூசிய பின்னர் குறை பாடுள்ள பகுதிகளை கவனித்திட வெடிப்புகள் ஏற்பட்டுள்ள னவா என்றும் அல்லது தட்டும் போது வெறுமையான (hollow) ஒலி ஏற்படுகின்றதா எனவும் கண்டறியலாம். அவ்வாறு குறை பாடுகள் ஏதும் இருப்பதாக தெரிந்தால் அந்த பகுதியினை தட்டி மீண்டும் சரியாக பூச வேண்டும்.
உள்பக்க சுவர்கள் மற்றும் தரைகளை இரும்பு டட்டுவக் கரண்டியால் மழமழப்பாகவும், வெளிப்புறங்களில் (வெய்யில் படக் கூடிய) தரைகள் மற்றும் சுவர்களை சொரசொரப்பாகவும் பூச வேண்டும்.
சாரம் அமைத்தல்
பூசு வேலை செய்திட சாரங்கள் அமைக்கும் போது இரட்டைச் சாரமாக அதாவது செங்குத்தாக இருக்கும் தாங்கு முட்டுகள் ஜதைகளாக இருக்க வேண்டும். இப்படிச் செய்வதால் சுவர்களில் பாதிப்பு (துளையமைத்து சாரக்கம்பிகள் பொருத்துவது) தவிர்க்கலாம். இவ்வாறு ஜதையாக சாரக்கொம்புகள் வைக்க இயலாமல் சுவற்றில் துவாரங்கள் விட்டு சாரம் போட்டால், பின்னால் இத்துளைகள் 1:2:4 விகித கான்கிரீட் கலவை கொண்டு அடைக்க வேண்டும்.
இப்படி செய்வதால் மழைல் காலங்களில் மழைநீர் கசிவினை தடுத்திடலாம்.
நிறைவூட்டல் (Finishing)
நிறைவூட்டல் என்பது சுவர்களில் வர்ணப்பூச்சு என்பதாகும். சுவர்களில் சுண்ணாம்பால் வெள்ளை அடிக்கலாம். வர்ணம் கலந்தும் அடிக்கலாம். உலர் டிஸ்டெம்பர் (Distemper), ஆயில் (oil) டிஸ்டெம்பர், சிமெண்ட் வர்ணம், ப்ளாஸ்டிக் எமல்ஷன் (Plastic Emulsion) வர்ணம், சுவர்ப்பூச்சும் சிற்ப ஒப்பனைக்குரிய அரைசாந்து (stucco work) பணிகள், எண்ணெய் வகை வர்ணம் (oil paint) கொண்டும் நிறைவூட்டல் அளிக்கலாம்.
இப்பணிகள் செய்யும் போது அமைக்கும் சாரங்கள் ஜதைகளாக முன்னர் கூறியது போல் அமைய வேண்டும். உட்கூரையின் (ceiling) மீது வெள்ளை/வர்ணம் அடிக்கும் போது மேடை அமைத்து பணியினை செய்யலாம்.ஏணிகளை பயன்படுத்தும்போது பழைய கோணி கிழிசல்களை ஏணியின் மீது மேல்புறமும் கீழ்புறமும் கட்ட வேண்டும். அப்படிச் செய்வதால் சுவர்களில் மற்றும் தரைகளில் செய்திட்ட பூசு வேலைகளில் கீறல் ஏற்படாவண்ணம் பாதுகாக்கலாம்.
பூச்சு வேலையும், நிறைவூட்டலும் முடிந்த பிறகு எலக்ட்ரிக், பிளம்பிங் பணிகளுக்காக சுவரைக் கொத்தாமல் இருக்க வேண்டும்.
-பொறி.கோபிநாத ராவ்
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067170
|