நமது மக்களின் மனநிலையும் ஊடகங்களின் மனநிலையும் ஒரே மாதிரியானவை. அதாவது நுகர்வு கலாச்சாரம், கேளிக்கைகைகளை மையமாகக் கொண்டவை. பெரும்பான்மை போக்கிற்கு முட்டுகொடுப்பவை. அதன் சமீபத்திய உதாரணம் தான் இந்தியாவில் உருவாகியிருக்கும் பொருளாதார மந்தநிலையைப் பற்றிய ஊடகங்களின் திடீர் எழுச்சி.
ஆண்டாண்டு காலமாக நமது கட்டுமானத்துறை தேக்கநிலையில் இருப்பதை நாம் கதறிக்கொண்டெ இருக்கிறோம். அதைப் பற்றி பேச அல்லது விவாதிக்க ஒரு குரலும் எங்கும் எழவில்லை.கானால், இன்று இந்தியாவில் வாகன விற்பனைச்சரிவு என்றதும் இதை விவாதிக்காத ஊடகங்களே இல்லை.
கட்டுமானத்துறை என்பது இந்த சமூகத்திற்கு பலன் தராத துறை என்பது போல ஒதுங்கி இருந்த ஊடகங்கள் ஆற்றுமணல் பிரச்சனை, மலேசிய மணல் கப்பல் அலைக்கழிப்பு, சிமெண்ட் அநியாய விலை உயர்வு என கட்டுமானத்துறை இடர்களை இந்த சமூகத்திற்குக் கொண்டுச் செல்ல தயாராக இல்லை. சிமெண்ட் ஒரு மூட்டைக்கு ரூ. 100 உயர்ந்தபோது, அதை பத்திச் செய்தியாகக் கூட வெளியிடாத ஊடகங்கள், பவுன் விலை ரூ.40 உயர்வு என்றால், உடனே நிபுணர்களை அணுகி அதற்கான காரணங்களை விலாவரியாக எழுதுகின்றன. பேசுகின்றன. ஆவின் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்வு என்றவுடன் அதைப்பற்றி கவர்ஸ்டோரி எழுதுகின்றன.
தங்கம், பால், கார், பைக் இவை போன்றே மனிதனுக்கு வீடும், கட்டடமும் மிக அவசியமானது. கட்டடத்துறைக்கு மட்டும் தானில்லை. எந்தத்துறை சரிந்தாலும் குரல் கொடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது.
வேளாண்மை பாதிக்கப்பட்ட போது, கட்டுமனத்துறை தேக்கம் அடைந்த போது குரல் கொடுக்காததன் விளைவு தான், இந்த மாபெரும் பொருளாதர அழுத்தம். ஏனெனில், எல்லாத் தொழில்களுமே ஒன்றையயான்று சார்ந்த தொழில்களாகும். வேளாண்மை இன்றி, கட்டுமானத்துறை இல்லை, கட்டுமானத்துறை இன்றி தொழில் துறை இல்லை. இவை மூன்றும் இன்றி நாட்டில் எதுவும் இல்லை.
ஆட்டோ மொபைல் உலகம் மட்டுமல்ல, எந்தத் துறையும் திடீரெனஒரே நாளில் வீழ்ந்து விடுவதில்லை. பல்வேறான அரசுக் கொள்கைகள், விதிகள், வரிகள், நாட்டில் நிலவும் உள்நாட்டு பொருளாதாரம்.
மூலப்பொருட்கள் இறக்குமதி, ஏற்றுமதி, சுமூகமான அரசியல் சூழ்நிலை, தொழிலாளர்கள் செறிவு, நுகர்வோரின் வாங்கும் திறன் என நூற்றுக்க்கணக்கான சங்கிலித் தொடர் சிதையும்போது தான் குறிப்பிட்ட ஒரு துறை நொடிந்து போகிறது. அதாவது பல எச்சரிக்கை மணிகளை, தொடர்ந்து பலகாலம் அடித்து தான் தொழில் துறைகள் வீழ்ச்சி அடைகின்றன.
கட்டுமானத்துறைச் சார்ந்த துணைத் தொழில்கள் மட்டும் நூற்றுக் கணக்கில் உள்ளன. மனை,வீடு விற்பனைத் துறையில் தேக்கம் ஏற்பட்டால் மற்ற நூற்றுக்கணக்கான தொழில்களும் தேக்கமடையும். பொருளாதாரம் பாதிப்படையும். நுகர்வோர் உலகம் ஸ்தம்பிக்கும்.
உழவையும், கட்டுமானத்தொழிலையும் அரசு முயற்சி எடுத்து தூக்கி நிறுத்தினால் போதும் மற்ற பொருளாதார சிக்கல்கள் தானாகவே சரியாகும். இனியாவது இவை சரிசெய்யப்பட வேண்டும்.
- E. உதயகுமார், நிர்வாக ஆசிரியர்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067183
|