மத்திய பட்ஜெட் எப்போது தாக்கல் செய்யப்பட்டாலும் அதில் பெரிதும் கண்டுகொள்ளப்படாமல் விடுபடுவது நம் கட்டுமானத்துறை. அல்லது பெரிய சுமைகளை ஏற்றி வைத்து தடுமாற்றத்திற்கு உள்ளாகுவதும் கட்டுமானத்துறைதான்.
நியாயமாக ரயில்வே துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது போல, நாட்டின் நான்காவது பெரிய துறையும், பல லட்சம் கோடி முதலீடு செய்யப் படுவதுமான ரியல் எஸ்டேட் ரூ கட்டுமானத்துறைக்கும் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது நல்ல பலன்களைத் தரும் என்கிறார்கள் தேசிய ரியல் எஸ்டேட் செயற்பாட்டாளர்கள். அப்போது தான் ரியல் எஸ்டேட் ரூ கட்டுமானத்துறையின் சிறப்பு கூறுகளை,தேவைகளை ஆரய்ந்து வளர்ச்சிக்கான திட்டங்களை கொள்கைகளை அறிவிக்க முடியும் என்கிற குரலும் எழாமல் இல்லை.
சரி. அதை விடுங்கள். இந்த பட்ஜெட்டில் வரி தளர்வுகளையும், சலுகைகளுயும். புதிய மாற்றங்களையும் ஒவ்வொரு ஆண்டும் எதிர்நோக்கி இருக்கும் கட்டுனர்கள் இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டை எப்படி பார்க்கிறார்கள்?
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பே ரியல் எஸ்டேட் துறை எப்படி இருக்கிறது? இதன் வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்கிற தீர்க்கமான சிந்தனை எந்த ஆட்சியாளர்களுக்கும் பொருளாதார நிபுணர்களுக்கும் ஏண் இல்லை என்பது புதிராக இருக்கிறது.
நைட் ப்ராங்க் ரிசர்ச் என்கிற ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனத்தின் சீனியர் இயக்குனர் திரு. ஜோசப் திலக் கூறும்போது" 2013-ல் 4.20 லட்சம் ரியல் எஸ்டேட் திட்டங்கள் தொடங்கப்பட்டன. ஆனால், 3.29 லட்சம் திட்டங்கள் தான் விற்கப்பட்டன. 2014-ல் 3.19 லட்சம் திட்டங்கள் தொடங்கப்பட்டு 2.79 லட்சம் திட்டங்கள் விற்கப்பட்டன. இப்படி தொடர்ந்து சரிந்து 2017-ம் ஆண்டில் வெறும் 1.03 லட்சம் திட்டங்கள் மட்டுமே தொடங்கப்பட்டன. அதே 2017-ல் 2.28 லட்சம் திட்டங்கள் விற்கப்பட்டன. 2018-ல் 1.82 லட்சம் திட்டங்கள் தொடங்கப்பட்டு, 2.42 லட்சம் திட்டங்கள் விற்கப்பட்டன. இப்போது தான் மீண்டும் பழைய நிலைக்கு கொஞ்சம் வீடுகள் விற்பனை வந்திருக்கிறது ஆனால், இன்னமும் நிறைய வீடுகள் விற்கப்படாமல் தேங்கிக் கிடக்கிறது" என புள்ளி விவரம் கூறுகிறார்.
அவ்வாறெனில், பட்ஜெட் - 2019 இல், மலிவு விலை வீடுகள் திட்டத்தை இன்னும் பரவலாக மக்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பது, நிலங்களை ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுக்கு குறைந்த விலையில் அல்லது இலவசமாகக் கொடுத்து கட்டுமானத் துறையில் இருக்கும் கூடுதல் விலைப் பிரச்னையைக் குறைத்து அனைவரையும் வீடு வாங்க வைப்பது இதெல்லாம் முக்கியமான அம்சங்களாக இருந்திருக்க வேண்டும்.
மலிவு விலை வீட்டு விற்பனைக்கு தனியாக எந்த ஒரு திட்டமும், கொள்கையும் இறுதி செய்யப்படவில்லை.
அது மட்டுமல்ல, ரியல் எஸ்டேட் துறைக்கு அரசு சிங்கிள் விண்டோ க்ளியரன்ஸ், வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதத்தை ஆர்பிஐ ரெப்போ ரேட் குறைப்புக்கு தகுந்தாற் போல் குறைப்பது... என பல்வேறு டிமாண்ட்களை பட்ஜெட் கண்டு கொண்டதே இல்லை என்பது தான் பெரும்பாலேரின் கருத்தாக உள்ளது.
குட் ரிட்டர்ன்ஸ் செய்தி நிறுவனத்தின் துணை ஆசிரியரும், பொருளாதராம்,நிதிச் சந்தை வல்லுனருமான திரு.கௌதமன், 'இந்திய ரியல் எஸ்டேட் என்பது சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் வியாபாரம் கொண்ட பெரிய துறை. இந்த துறையை நம்பி படித்த பட்டதாரிகள் தொடங்கி படிக்காத சித்தாட்கள், மேஸ்திரிகள் வரை வேலை பார்த்து வருகிறார்கள். இந்திய ரியல் எஸ்டேட் துறையில் சுமார் 5.2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் மிகப் பெரிய துறை.
ஆனால், பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, ரெரா என பல்வேறு புதிய அரசு திட்டங்கள் இந்திய ரியல் எஸ்டேட் துறையை பெரிதும் நேரடியாக பாதித்திருக்கிறது. இதனால் வீடுகளின் விலையும் கொஞ்சம் அதிகமாகவே எகிறிஇருக்கிறது. இந்தியாவின் ஏழு முக்கிய நகரங்களில் மட்டும் சுமார் 4.40 லட்சம் வீடுகள் மற்றும் ரியல் எஸ்டேட் திட்டங்கள் விற்கப்படாமல், விற்க முடியாமல் தேங்கி நிற்கிறதாம். தில்லி என்சிஆர் பகுதியில் மட்டும் சுமார் 1.50 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் விற்கப்படாமல் தேங்கி நிற்கின்றன" இதற்கான தீர்வாகத் தான் பட்ஜெட் இருக்க வேண்டும்" என்கிறார்.
ஜே எல் எல் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி ரமேஷ் நாயர் கூறும்போது, ' ரியல் எஸ்டேட் துறைக்கு போதுமான பணம் இல்லாததால் தான் பெரிய தேக்கத்தில் இருக்கிறது. ரியல் எஸ்டேட் திட்டங்களுக்குத் தேவையான நிதியும் கிடைக்காமல் இருக்கிறது. வங்கி அல்லாத நிதி சார் நிறுவனங்களில் எற்பட்ட சிக்கல்களால், இந்திய ரியல் எஸ்டேட் துறையில் பெரிய சிக்கல்கள் எழுந்திருக்கின்றன.
2017 - 18 முந்தைய காலங்களில் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் இருந்து மட்டும் சுமார் 35,000 - 40,000 கோடி ரூபாய் ரியல் எஸ்டேட் துறைக்கு பணம் புழங்கும். அந்த நிதி 2018 - 19 ஆண்டுகளில் இல்லாததால் ரியல் எஸ்டேட் தடுமாறிக் கொண்டிருக்கிறது பட்ஜெட்டில் நிறைய வீட்டுக் கடன்களை வழங்குவதற்கான உத்தரவுகளை எதிர்பார்த்தோம்." என்கிறார்.
இந்த ஆண்டு பட்ஜெட் மேற்சொன்ன எதையும் கவனத்தில் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து 2012-ம் ஆண்டு வரை குடியிருப்புகளின் விலை மிகவும் வேகமாக அதிகரித்தது. அதன்பிறகு, இப்போது வரைக்கும் தேக்க நிலையில்தான் காணப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக விலை அதிகரிப்பானது பணவீக்க உயர்வு என்கிற அளவுக்குக்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மூன்றாண்டுகளாக சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை அதிகரிக்கவில்லை.சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை கடந்த 2000 முதல் 2014 வரையிலான காலத்தில் 42% அதிகரித்தது. 2000-2014 வரையிலான காலகட்டதில் சென்னையை விட அதிகமாக டெல்லி (73%), நொய்டா (60), புனே (59%) ஆகிய நகரங்களில் விலை அதிகரிப்பு அதிகமாக இருந்தது. அகில இந்திய அளவில் சராசரி விலை உயர்வு இந்தக் காலகட்டத்தில் 44% ஆக இருந்தது. சென்னையில், கடந்த 2014 முதல் 2017 வரையில் விலை அதிகரிப்பு வெறும் 4 சதவிகிதமாகவே உள்ளது. விற்காமல் தேங்கிக் கிடைக்கும் ஃப்ளாட்களில் 67%, 1-2 படுக்கை அறை கொண்ட வீடுகளாக இருக்கின்றன.
இந்தப் பிரிவில்தான் கடந்த இரு ஆண்டுகளில் அதிக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. விற்காமல் தேங்கிக் கிடைக்கும் ஃப்ளாட்களில் 33%, மூன்று படுக்கை அறை வீடுகளாக இருக்கின்றன. இந்த வீடுகளைப் பெரும்பாலான நுகர்வோரால் வாங்க முடியாத நிலையே காணப்படுகிறது.
ஆனால், ரியல் எஸ்டேட் நிபுணர் திரு. செழியன். பட்ஜெட் 2019-ஐ வரவேற்கிறார். 'உள்கட்டமைப்பு, ரியல் எஸ்டேட்டிற்கு பொத்தாம் பொதுவாக நன்மை இல்லையென சொல்லிவிட முடியாது. மத்திய அரசின் 2019- 2020 -ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஓர் இனிய செய்தியைச் சொல்லியிருந்தார்கள். சொந்த வீடு வாங்குபவர்களுக்கு ரூ.3.5 லட்சம் வரை வரிச்சலுகை கிடைக்கும் என்பதுதான் அந்தச் செய்தி. ரூ.45 லட்சம் மதிப்புள்ள வீட்டை வாங்குவதற்கு, இதற்கு முன்பு ரூ.1.5 லட்சம் மட்டுமே வட்டிச் சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதை 2 லட்சம் அதிகமாக்கி ரூ.3.5 லட்சமாக அதிகரித்திருக்கிறார்கள்.
இந்த அறிவிப்பின்படி வரும் மார்ச் 31, 2020 வரை, அதாவது இந்த நிதியாண்டு இறுதிவரை வீடு வாங்குவோருக்கு இந்தச் சலுகை கிடைக்கும். முதன் முறையாக வீடு வாங்கும் நடுத்தர மக்கள் பயன் அடையும் வகையில் இத்திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்.
மத்திய அரசின் இந்தச் சலுகையால் வீடு அதிகமாகக் கட்டப்படும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. இந்தத் திட்டத்தால் பெரு நகரகங்களில் உள்ள நடுத்தர மக்கள் மட்டுமல்லாமல், இரண்டாம் கட்ட நகரங்கள், பேரூர்களில் உள்ள நடுத்தர மக்களுக்கும் வரப்பிரசாதமாக அமையலாம். ஆனால், ரூ. 45 லட்சம் மதிப்புள்ள வீடு என்றால், அந்த மதிப்பு வீட்டுக்கு மட்டுமே வட்டிச் சலுகை கிடைக்குமா, வீட்டை எப்படி மதிப்பிடுவார்கள் என நிறையக் கேள்விகளும் சந்தேகங்களும் எழலாம். அதைத் தீர்க்க வேண்டிய பொறுப்பு கட்டுனர்களுக்கு இருக்கிறது." என்றார்.
இந்த 3.5 லட்சம் சலுகை பூஸ்ட் எனக் கொண்டால், மற்ற அம்சங்களை என்னவென்று சொல்வது?
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067339
|