நவீன காலகட்டத்தில் வீடு கட்டுதலும், வீடு வாங்குதலும் பெருங்கானல் நீராகி விட்டது. கட்டுமானச் செலவை விட மனையின் விலை நகர்ப்புறங்களில் அதிகரித்து விட்டது தான் அதற்கு காரணம்.
மேலும், புறநகர்ப்பகுதிகளில் கூட தனி வீட்டைக் கட்டுவதற்கு சாமானியர்கள் நினைத்து பார்க்க முடியாது. உங்கள் பட்ஜெட் 25 லட்சத்திற்குள் என்றால் சிங்கப் பெருமாள் கோவில், ஒரகடம், செங்கல்பட்டு, எண்ணூர், பொன் னேரி, ஆவடி, திருநின்றவூர் செங்குன்றம், காரனோடை என தூர தேசங்களில் சென்னையை விட்டு 30 கிமீ தூரத்திற்கப்பால்தான் தூக்கி அடிக்கப்படுவீர்கள்.
சென்னைப் போன்ற பிஸியான நகரங்களில் ரியல் எஸ்டேட்டின் உண்மை நிலை இப்படி இருக்க, மாதம் 30 ஆயிரம் மட்டுமே சம்பாதிக்கக்கூடிய ஒரு வாரக்கூலி டெய்லர் சென்னை கிழக்கு தாம்பரத்திலேயே 1 கோடி ரூபாய் மனையில் 1 கோடி ரூபாய் கட்டுமானச் செலவில் ஆக மொத்தம் 2 கோடி மதிப்புடைய வீட்டைக் கட்டி தனக்குச் சொந்தமாக்கிக்கி கொண்டுள்ளார் என்றால் ஆச்சரியம் தானே!
ஒருவேளை பூர்வீக நிலம், வங்கி முதலீடு, தங்க நகைகள் போன்ற ஏதேனும் பண வரவுகள் காரணமா? எதுவுமே இல்லாமல் இது எப்படி சாத்தியம்?
தையற்கலை கலைஞர் ஜெய் சங்கர் நமது வாசகரும் கூட.அவரை நேரில் சந்தித்தோம். பேட்டி என்றதும் தயங்கியவர், இதெல்லாமா ஒரு சாதனை? என நழுவ பார்த்தவரை ஒருவாறு பேட்டிக்கு சம்மதிக்க வைத்தோம்..
“சார் நான் 10 ஆம் வகுப்பு வரை படித்தேன். சென்னை புரசையில் தான் வீடு. நினைவு தெரிந்தவரை வாடகை வீடுதான். எனக்கு மேலே இரு அண்ணன்கள். அவர்களுக்கும் சாதாரண வேலைதான். நான் டெய்லரிங் கற்றுக் கொண்டு வார சம்பளத்திற்கு வேலை பார்த்தேன். எனக்கு திருமணத்திற்கு பெண் பார்க்க ஆரம்பித்த போது மாத வருமானம் 8 ஆயிரம் தான்.
அது எந்த ஆண்டு?.
‘‘2004, 2005 காலவாக்கில். எனக்குப் பல இடங்களில் பெண் பார்த்தார்கள். ஆனால் டெய்லர் வேலை, வாடகை வீடு என்பதால் யாரும் பெண் கொடுக்கவில்லல். வந்தவர்கள் எல்லாம் சொந்த வீடு இருக்கா? என்று கேட்டே என்னை நோக வைத்தார்கள். அப்போதுதான் எப்படிப்பட்டாவது வீடு வாங்க வேண்டும் என்ற வைராக்கியம் என் மனதில் படர்ந்தது. ஆனால் வீடு என்பது அத்தனை லேசா? சொந்தமாக முழம் மனை கூட இல்லாதவன் வீட்டுக்கனவைக் காணலாமா?
அப்போதெல்லாம் சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தவணை முறையில் மாதம் ரூ.500 கட்டினால் 5 ஆண்டுகளில் கால் கிரவுண்ட் நிலம் கொடுப்பதாக திட்டத்தை முன் வைத்தன. எனக்கு அது கூட கட்ட முடியவில்லை..
சிரமப்பட்டுதான் காலத்தை நகர்த்தினோம். இந்தச் சூழ்நிலையில் எனக்கு சொந்த்தில் ஒரு வரன் அமைந்தது. அவர்களும் அதே கேள்வியே என்னிடம் கேட்டார்கள். ‘‘சொந்த வீடு இருக்கா?’’
அப்போது அவர்களிடம் சொன்னேன். “சொந்தவீட்டை எதற்காக கேட்கிறீர்கள்?” எனக் கேட்க. “சொந்த வீடு இருந்தால் தான் காலம் முழுக்க என் மகள் மாதம் பிறந்தால் வாடகை கட்டணுமே என்கிற கவலை இல்லாமல் வாழ்வாள்’ எனச் சொன்னார்கள்.
“அப்படியயனில் ஒன்று செய்யுங்கள். நீங்கள் உங்கள் மகள்கல்யாணத்திற்காக செலவிடப் போகும் பணத்தைக்கொண்டு ஏதேனும் வீட்டை லீஸ்க்கு எடுத்து கொடுங்கள் போதும். உங்கள் மகளுக்கு வாடகைத் தொல்லை இருக்காது’’ என்றேன்.
“” அப்படியெனில், கல்யாணம்?”
“அதை சிம்பிளாக செய்யுங்கள். கோயிலில் திருமணம் போதும்’’ என்றேன்.
‘‘ நகைகள், சீர்வரிசை?’’
‘‘எதுவும் வேண்டாம்’ உறுதியாகச் சொன்னேன். அவர்கள் திகைத்துப் போனார்கள்.
‘‘இப்போது நிலம். சொத்துக் களுக்கு தான் மதிப்ப்யு இருக்கிறது. வரும் காலத்தில் இது பன்மடங்காகப் பெருகும். இந்தச் சமயத்தில் நாம் வீண்செலவு செய்யாமல் நிலத்தில் முதலீடு செய்யலாம். அல்லது லீஸ் முறையில் வீட்டுக்கு குடித்தனம் போகலாம். அல்லது வங்கிகளில் முதலீடு செய்யலாம். அதைவிடுத்து 3 லட்சரூபாய் செலவு செய்வது வீண் செலவு. அது எங்கள் எதிர்காலத்திற்கு ஒரு பயனையும் தராது’’ என விளக்கிவ கூறினேன்.
“அதை பெண்வீட்டார் ஏற்றார்களா?”
“ஏற்கவே இல்ல. பெண்ணுக்கு தாய்மாமன் எதிராக இருந்தார்.இரண்டு மாதம் கழித்து அவர்களே என்னை அழைத்தார்கள். ‘‘எங்க பக்கம் ஜனம் அதிகம் தம்பி. ஒரே பெண்ணுக்கு இப்படி கோயிலில் திருமணம் வைத்தால் உறவுகள் அதிருப்தி அடைவார்கள். உனது சிக்கன வாழ்வியல் நடைமுறையை நாங்கள் மதிக்கிறோம். ஆனாலும். உனது முடிவை மாற்ஷீக்கொள். மேற்கொண்டு பேசலாம் என்றார்கள்.
நானோ, ‘‘நீங்கள் சாதாரண குடும்பம். வாடகை வீட்டில் தான் வாழ்கிறீர்கள். நானும் அப்படித்தான். இந்த சூழ்நிலையிலும் கடுமையாக போராடி உங்கள் மகளுக்கு பெரும் செலவு செய்து திருமணம் செய்து வைக்கிறீர்கள். யோசித்து பாருங்கள். 3 லட்சம் என்பது பெரும் பணம் அல்லவா? ஒரு நாள் கூத்துக்கு இப்படி செலவு செய்வது சரியான நடை முறையா? அந்தப்பணத்தை எங்களிடம் கொடுத்தால் நாங்கள் நல்ல முறையில் வாழ்க்கையை துவங்க உதவியாய் இருக்குமல்லவா?
உறவுகள், நண்பர்கள் முக்கி யம்தான். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் உடன் பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் இவர்களில் ஒரு 5 பேரிடமாவது இனமாக இல்லாமல் கடனாக ஒரு பத்தாயிரம் ரூபாயைப் பெற்று விடுங்கள் பார்ப்போம். பெரும்பாலும் ‘‘இப்போ பணம் இல்லை’’ என்றுதான் சொல்வார்கள்.
அவர்களைக் குறை சொல்ல வில்லை. அவரவர்களுக்கு ஆயிரம் கமிட்மென்டுகள். இந்தமாதிரியான சூழ்நிலையில் நீங்கள் அவசரப்பட்டு இவ்வளவு பணத்தைச் செலவு செய்யாதீர்கள். ஒருவேளை வேறு எவர் மாப்பிள்ளையாக வந்தாலுமே 3 லட்சம் செலவு செய்யாதீர்கள்’’ என்றேன்.
என் பதில் அவர்களுக்குப் பிடித்து விட்டது. வடபழனி முருகன் கோவிலில் வெறும் 20 ஆயிரம் செலவில் என் துணைவியை கரம் பிடித்தேன். அத்தியாவசிய செலவு மட்டும் செய்தார்கள்.நெருங்கிய உறவுகள், நண்பர்கள் மட்டும் வந்திருந்தார்கள்.
திருமணம் முடிந்ததும் பெண் வீட்டில் 3 லட்ச ரூபாயை பண்டலாக கொடுத்தார்கள்.
ஆனால் நான் வீடு லீசில் கவனம் செலுத்த வில்லை. கிழக்கு தாம்பரத்தில் கிரவுண்ட் 1.5 லட்சம் என இரண்டு கிரவுண்ட் மனைகளை என் மனைவி பெயரில் பத்திரப்பதிவு செய்தேன். இது நடந்தது 2005-ல். சரியாக அப்போது எனக்கு 27 வயது’’ .
லீசு போவதற்கு பதில் மனை வாங்கி விட்டீர்கள். உங்கள் திட்டம் தான் என்ன?
‘‘அதாவது வாடகைக்கு பதில் லீஸ் நல்ல மாற்றுவழிதான். ஆனால் அதில் அதிக லாபமில்லை. மேலும்
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வீட்டைக் காலி செய்ய வேண்டும். அல்லது லீஸ் பணத்தை ஏற்றித் தரச் சொல்வார்கள். மேலும், உடனுக்குடன் லீஸிற்கு வீடு கிடைப்பது அரிது. தவிர லீஸ் பணம் வளராது. அது தவிர, அப்போதெல்லாம் வீட்டு வாடகை ரூ 2000 என்ற அளவிலேயே இருந்தது. எனவே தான் லீஸை தவிர்த்தேன். மனையில் முதலீடு செய்தேன்”.
உங்கள் சொந்த வீட்டுக்கனவு?
‘‘அதற்குத்தான் வருகிறேன். எனது திட்டம் என்ன வென்றால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2 மனைகளில் 1 மனையை விற்று அதன் மூலம் இன்னொரு வீட்டைக் கட்டிக் கொள்வது தான். அதாவது 40 வயதில் சொந்த வீட்டில் குடிபுகுவது”.
15 ஆண்டுகளா? இது ரொம்ப தாமதமாயிற்றே...?
‘‘ஆமாம்.. எப்போதுமே இல்லை என்பதற்கு பதில் ,தாமதம் ஓகே தானே. அதுவுமில்லாமல், சொந்தமாக இடம் இல்லமால், சொத்து இல்லாமல், சேமிப்பு இல்லாமல், யாருடைய உதவியும் இல்லமால், பெரிய வருமானம் இல்லாமல் ஒரு வீட்டைக் கட்டி முடிப்பதுது என்றால், அதும் 40 வயதில் கட்ட முடியும் என்றால் அது சீக்கிரம் தானே. சோ அதன்படி திட்டமிட்டோம்.
நான் அதிக பட்சம் எதிர்பார்த்தது. கிரவுண்டுக்கு 25 லட்சம் தான். ஆனால் 2008 ஐ தான்டிய பிறகு என் நல்ல நேரம் ரியல் எஸ்டேட் சந்தை உச்சத்திற்கு போனது. இறங்கவே இல்லை.. 2010 வாக்கில் என மனையை கேட்டு கிரவுன்டுக்கு 50 லட்சம் தர தயாரென ஆட்கள் வர என்னால் நம்பவே முடியவில்லை. வெறும் 5 ஆண்டுகளில் 30 மடங்கு அதிகம். நிலத்தின்மதிப்பு தங்கத்தை விட பல மடங்கு உச்சம் தொட, நான் உஷாராகி.. மனையை சுற்றிலும் வேலிகள் அமைத்து பிராப்பர்டி விற்பனைக்கு அல்ல என பலகை வைத்தேன். ஏனெனில் 2018 இல் என் நாற்பதாவது வயதில் தான் மனை விற்க இருந்தேன்.
காலம் ஓடியது..2018 இல் கிழக்கு தாம்பரத்தில் பிரதான இடத்தில் இருக்கும் என் மனையை பில்டர் ஒருவருக்கு 1 கோடிக்கு விற்றேன். அவரையே என் மனைக்கு 80 லட்சம் கட்டுமானச் செலவில் 3300 ச.அடி யில் ஜி+1 கட்டுமானம் கட்டித்தரச் சொன்னேன். கீழே 1500 ச.அடியில் 3 படுக்கை அறைகள் கொண்ட வீடு எனக்காகவும்., மேலே தலா 900 ச.அடியில் இரு வீடுகளும் கட்டித் தந்தார். மீதிப்பணத்தை இன்டிரியர் மற்ற தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொண்டேன். மேல் வீடுகளில் இருந்து மாதம் 30 ஆயிரம் ரூபாய் வாடகை வரும்படி பார்த்துக்கொண்டேண். தட்ஸ் ஆல்.. ”என்றார்.
அது சரி. உங்கள் திட்டம் ரியல் எஸ்டேட் விஸ்வரூபம் எடுக்கவே சக்சஸ் ஆனது . இல்லையயன்றால்.?
‘‘நீங்கள் நினைப்பது தவறு. மனை, தங்கம், வங்கி இது மூன்றும் நிலை முதலீடுகள் என்பார்கள். மெதுவாக ஏறும். அதாவது 1 லட்சம் முதலீடு செய்தால் 8 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். ஆனால், 2008 இல் அடித்த பொருளாதார அலை, உலகளாவிய மக்களின் வாங்கும் திறன், கட்டுப்படுத்த முடியாத ரியல் எஸ்டேட்
வணிகம், பன்னாட்டு நிறுவனங்களின் வருகை, இதெல்லாம் மனையின் விலையை வெகுவாக உயர்த்தி விட்டது. இதை நானே கூட எதிர்பார்க்கவில்லை.
நீங்கள் சொன்னது போல், இப்படி அபரிதமாக மனை விலை உயராது போனாலும். எனக்கு மனைக்கு 25 லட்சம் கிடைத்தாலும் கூட எனக்கு பெரும் லாபமல்லவா? ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் வீண் ஆடம்பரத்தை தவிர்த்ததால் எனக்கு பெரும் பலன் கிடைத்தது’’.
அப்படியயனில் இனி திருமணங்களில் வரவேற்பு நிகழ்ச்சிகளே நடத்தக்கூடாது என்கிறீர்கள்?
‘‘இல்லை. நடுத்தர மக்கள் இப்போது நகரங்களில் 7 முதல் 10 லட்சம் செலவு செய்கிறார்கள். கிராமங்களில் 4 முதல் 6 லட்சம் செலவு செய்கிறார்கள். வசதி படைத்தவர்கள் தாராளமாய் செலவு செய்யட்டும். ஆனால், சொத்துக்கள் ஏதும் இல்லாதவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய தொகையை செலவு செய்து தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்விப்பது மிகப் பெரிய முட்டாள் தனம். அதற்கு பதில் தங்கள் பிள்ளைகளுக்கு சொந்தமாக மனை வாங்கித் தரலாம். வங்கிகளில் முதலீடு செய்து அவர்களுக்கான எதிர்கால நம்பிக்கையை தரலாம். முதன் முதலில் நான் இதைப் பேசிய போது எல்லோருமே என்னை ஏளனம் செய்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் இல்லத் திருமணங்கள் கோவில்களில் நடைபெறுகிறது.
நல்லமாற்றம் தொடங்கி விட்டது’’ என்கிறார் பெருமையுடன்ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தங்கள் வாழ்க்கையில் செய்யும் பெரும் செலவு திருமணச்செலவு தான் அதை தவிர்த்தாலே அவர்களால் பிற்காலத்தில் சொத்துக்களை வாங்கிக்கொள்ள முடியும் என ஆணித்தரமாக ஜெய்சங்கர் கூறுவதை நம்மால் மறுக்க இயலாது.
இக்கட்டுரையின் மூலமாக ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு திருமண வரவேற்பு போன்ற ஆடம்பரங்கள் தவிர்க்கப்பட்டால் அப்பணத்தில் சொத்துக்கள் வாங்கப்பட்டால் அதைவிட நமக்கு ஆனந்தம் ஏதுமில்லை.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067435
|