தலை விரித்தாடும் தண்ணீர் பஞ்சம் அடுக்கு மாடிவாசிகள் செய்ய வேண்டியது என்ன?

23 ஜனவரி 2024   05:30 AM 18 ஜூலை 2019   10:41 AM


மறுபடி ஒரு தண்ணீர்ப் பஞ்சம். சரியாக 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படி பெரிய பஞ்சம், வறட்சி  வட மாவட்டங்களில் ஏற்பட்டு விடுகிறது. நீர் இருப்பு தீரும் வரை யாருமே கண்டு கொள்ள மாட்டார்கள். இனி தண்ணீர் சப்ளை கிடையாது என அறிவிக்கப்பட்டால்தான் ஊடகங்கள் விழித்துக் கொள்கின்றன. மழை அளவைக் கண்காணிக்கின்றன. அடுத்து என்ன செய்ய வேண்டும் என பத்தி பிரித்து எழுதுகின்றன. அரசின் நீர் மேலாண்மை பற்றி விமர்சிக்கின்றன. எல்லாம் ஜூன் இறுதி வரை தான். ஒரு மழைப்பொழிவுக்குப் பின் பஞ்சமாவது, வறட்சியாவது? எல்லாம் பூட்ட கேஸ்..

2015 பெருவெள்ளத்தில் தலைக்கு மேல போன வெள்ளத்தைப் பிடித்து வைத்திருந்தால் 10 ஆண்டுகளுக்கு தலைநகரில் தண்ணீரின் தேவை இருந்திருக்காது. சென்ற ஆண்டின் காவிரிப்பெருக்கை காபந்து செய்திருந்தால் இன்று தமிழகம் தண்ணீரில்லா மாநிலமாகி இருக்காது.

 

அப்போது ஆட்சியை பிடிக்கவும், காபந்து செய்யவுமே ஆட்சியாளர்களுக்கு நேரம் சரியாக இருக்க ஓட்டு போட்ட மக்கள் மறுபடி காலி குடங்களை ஏந்தி இரவு நேரங்களில் தண்ணீர் வேட்கைக்கு போகின்றனர்.


ஆட்சியாளர்களைக் கேட்டால், எல்லாம் நெம்மேலியின் இரண்டாவது கடல்நீர் சுத்திகரிப்பு திட்டம் குடிநீர் திட்டம்,  பேரூர் கடல்நீர் சுத்திகரிப்பு திட்டம், நெசப்பாக்கம் & பெருங்குடி கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் ஆகியன முழுப்பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் தண்ணீர்ப்பஞ்சம் இருக்காது என்கிறார்கள்.

 

‘‘இவர்களை ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்ததற்கு நாம் கழிவு நீரைத்தான் குடிக்க வேண்டும்.  வேறுவழி? கடல் நீரையும், கழிவுநீரையும் பெரும் செலவு செய்து குடிநீராக்கப் போராடும் பெருமகனார்கள் ஏன் இயற்கையான மழைநீரை சேமித்து வைக்க தவறுகிறார்கள்? அத்தனை மழை பொழிந்தும் சென்னையில் உள்ள கோவில் குளங்களில் ஒரு சொட்டு நீர்கூட போய்ச்சேராமல் தடுக்கவல்ல ஆக்கிரமிப்பாளர்கள் மீது ஏன்  நடவடிக்கை இல்லை?’’

 

என சீறுகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பளார் திரு.சீமான்.மேலும் அவர் கூறும்போது, ‘‘இங்கே எந்த பிரச்சனைக்கும் நிரந்தரத்தீர்வு இல்லை. கோடைக்காலத்தில் தான் கட்டுமானப் பணிகள் நடக்கும். ஆனால், தண்ணீர் இல்லாமல் கட்டுமானப் பணிகள் நிற்கின்றன. ஐடி அலுவலகங்களில் நீங்கள் அலுவலகம் வராதீர்கள், வீட்டிலிருந்தே வேலை செய்யுங்கள் என்கிறார்கள். வீட்டில் மட்டும் தண்ணீர் வருகிறதா என்ன?

 

பல மீட்டர் ஆழத்திற்கு நிலத்தடி நீர் மட்டம் போய்விட்டது. தண்ணீர் வளம் இன்றி இந்த மாநிலம் ஒரு நாள் சுடுகாடு ஆகும் என்றேன். எவரும் கேட்கவில்லை. இப்போது அதை நோக்கித்தான் போகிறோம். 2015 க்குப் பிறகு தமிழகத்தில் சரியான மழைஇல்லை..இந்த ஆண்டும் மழை பொய்த்தால் நாம் என்னாவது?
தண்ணீரைக் கேட்டால், கடல் நீரை, கழிவு நீரை சுத்திகரித்துத் தருகிறார்களாம். இதை விட ஒரு காலக்கொடுமை இல்லை. தானாக வந்த மழைநீரை கடலில் கலக்க விட்டு, பின் அதை மறுபடி குடிநீராக்குவது வேண்டாத வேலை..செலவு வைக்கும் வேலை. 

 

நம்மை  சுத்திகரித்த கழிவுநீரை, கடல்நீரை குடிக்கச் சொல்லும் பெருமகனார்கள், மேதைகள் ஏன் குடிநீர் பாட்டில் நிறுவனங்களை, குளிர்பான நிறுவனங்களை, மதுபான நிறுவனங்களை, சுத்திகரித்த கடல்நீரைப் பயன்படுத்தச் சொல்வதில்லை?.

 

அவர்கள் ஏரி,ஆறு, குளங்களை, ஆழ் குழாய் கிணறுகளை சுரண்டியதால் தானே இந்த அளவிற்கு நமக்கு பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது? இதை யார் கேட்பது?

நீரின்றிஅமையாது உலகு என்கிறார் நம் பாட்டன். 2100 ஆண்டுகளுக்கு முன்பே நீரின் முக்கியத்துவம் தெரிந்து வான் சிறப்பு என்னும் அதிகாரத்தை எழுதிவிட்டுப் போனார் என்றால், அந்த தெளிவு ஏன் அரசுக்கு இல்லை?.


எல்லாம் விடுங்கள். நாம் ஏதாவது ஒரு வழியில் நீரைப்பெற்று விடுகிறோம். பயன்படுத்துகிறோம். ஆனால், சிட்டுக்குருவி,காகம், யானை, புலி , மான் இவையயல்லாம் எங்கே போய் காசு கொடுத்து நீர்குடிக்கும்? பூமியை நாம் வறண்ட நிலமாக்கி மனித குலத்துக்கு மட்டுமல்லாது, பல்லுயிர்களுக்கும் மாறாத துயரத்தை க்கொடுத்து விட்டோம். இதற்கெல்லாம் என்ன பதிலைச் சொல்லப்போகிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்?’’ என கொதிக்கிறார் சீமான்.

 

சமூக ஆர்வலரும் பொருளியல் நிபுணருமான சகாதேவன்  கூறும்போது, ‘‘நகரமயமாக்கல் கொண்டு வந்த துயரம் இது? கிராமங்கள் காலியாகி விட்டது. எல்லோருமே நகரங்களுக்கு படைஎடுக்கிறார்கள். வேலை வாய்ப்புகள். தொழில்கள் பரவலாக்கப்படவில்லை யயன்றால், மக்கள் செறிவு இப்படித்தான் ஒரே இடத்தில் அளவுக்கதிமாகி விடும். சென்னை ஓஎம் ஆரில் மட்டும் எத்தனை வீடுகள் பாருங்கள்?.

 

சென்னையில் அனைத்து பகுதிகளில் தண்ணீர் பிரச்சினை இருந்தாலும், வளர்ந்து வரும் பகுதியான பழைய மாமல்லபுரம் சாலையில் (ஓ.எம்.ஆர்) தண்ணீர்ப் பிரச்சினை விசுவரூபம் எடுத்து உள்ளது.  தற்போதைய நிலவரப்படி இந்தச் சாலையில், சுமார் 360 தனியார் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பொது மக்கள் குடியேறி உள்ளனர். இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் ஒவ்வொன்றிலும் 6 வீடுகளிலிருந்து சுமார் 3 ஆயிரத்து 500 வீடுகள் வரை உள்ளன. ஷாப்பிங்மால், நீச்சல்குளங்கள் என நட்சத்திர ஓட்டல்கள் தரத்தில் அனைத்து வசதிகளும் கொண்ட நகரத்திற்கு (ஒரு குட்டி ஹைடெக்சிட்டி) ஈடாக இருக்கின்றன இங்குள்ள சில அடுக்குமாடி குடியிருப்புகள்.

 

சராசரியாக ஒரு அடிக்குமாடி குடியிருப்பில் ஆயிரம் பேர் வசிப்பதாகக் கணக்கிட்டாலும் 360 அடுக்குமாடி குடியிருப்புகளில் 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இச்சாலையில் டி.சி.எஸ்., சி.டி.எஸ்., என சுமார் 82-க்கும் மேற்பட்ட தகவல்தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. சிறுசேரி சிப்காட்டில் மட்டும் 31 தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. இதில் டி.சி.எஸ்.எனும் தனியார் தொழில்நுட்ப பூங்காவில் மட்டும் 36 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

 

ஆக மொத்தம் இந்த பழைய மாமல்லபுரம் சாலையில் மட்டும் கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் புதியதாகக் குடியேறி உள்ளனர். இவர்கள் தினசரி குளிப்பது முதற்கொண்டு குடிப்பது வரைக்குமான தண்ணீர் வசதி வெளியிலிருந்தே பெறப்படுகிறது.

 

பழைய மகாபலிபுரம் சாலை அருகில் உள்ள தாழம் பூர், சிறுசேரி, பொன்மார், புதுப்பாக்கம், மாம்பாக்கம், காயார், பனங்காட்டுப்பாக்கம் வென்பேடு, இள்ளலூர், தண்டலம், ஆலத்தூர், பையனூர், திருப்போரூர், கன்னகப்பட்டு, காலவாக்கம், தையூர் உள்ளிட்ட சுமார் 22-க்கும் மேற்பட்ட சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகளிலிருந்து டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்துவரப்படுகிறது. இப்படி குடிநீர் சப்ளை செய்யும் லாரி ஒவ்வொன்றும் 12 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் இருந்து 32 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டவையாக உள்ளது. 

 

சராசரியாக 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒரு டேங்கர் லாரி நாள் ஒன்றுக்கு ஒரு கிணற்றிலிருந்து ஒரு லாரி மூலம் 2 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் இருக்கும் 346 கிணறுகளில் நாள் ஒன்றுக்கு என்றாலும் கூட 6 கோடியே 92 லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சி விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கே கிட்டத்தட்ட 7 கோடி லிட்டர் என்றால் ஒரு மாதத்திற்கு மட்டும் 210 கோடி லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது.

 

ஒரு மாதத்திற்கு மட்டும் சராசரியாக ஒரு ஏரித்தண்ணீர் காலி ஆகிறது.அதாவது 800 ஏக்கரிலிருந்து, 1,500 ஏக்கர் வரை விவசாயம் செய்ய பயன்படுத்தப்படும் பாசன நீர் செலவாகிறது. கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடிகட்டி பறக்கும் இந்த தண்ணீர் வியாபாரத்தால் பழைய மாமல்லபுரம் சாலையை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகு விரைவாகக் குறைந்து வருவதால் கடல்நீர் உயர்ந்து கிராமங்களுக்குள் ஊடுருவி வருகிறது. 

 

பாசனநீரை விற்பனை செய்யும் விவசாயிகளைக் குறைசொல்லியும் பயனில்லை. ஏனென்றால் பண நட்டமும் மன உளைச் சலுமே விவசாயிக்கு மிஞ்சுகிறது. இதனால் விவசாயம் செய்வதை விட்டு தண்ணீரை விற்கும் நெருக்கடிக்கு ஆளாகிறான் விவசாயி. தண்ணீர் விற்பதன் மூலம், ஒரு நடைக்கு ரூ.200 கிடைக்கிறது. 

 

சராசரியாக 10 நடை போனாலும் நாள் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் என மாதத்திற்கு ரூ.60 ஆயிரம் கிடைக்கிறது.ஆனால், இந்தநிலை நீடித்தால் இந்த ஆண்டே பழைய மாமல்லபுரம் சாலையைச் சுற்ஷீயுள்ள 300-க்கும் மேற்பட்ட விவசாய கிராமங்கள் வறட்சியையும் கடும் தண்ணீர்ப் பஞ்சத்தையும் சந்திக்கவேண்டிய சூழல் நிலவுகிறது. மேலும், விளைநிலங்கள் குடியிருப்புகள் அத்தனையும் உப்புமண் ஆகி மண் மலடுதட்டிபோகும் பெரும் அபாயம் ஏற்படுவதாக கூறப்படுகிறது என குமுறுகிறார்.

 

சரி இதற்கு என்ன தான் வழி?

 

1. முதலில் கேட்டட் சிட்டி புராஜெக்ட் வீடுகளில் குடியேறுவதை தவிர்க்கப் பாருங்கள். மற்ற டைப் வீடுகளை விட, ஆயிரக்கணக்கான வீடுகள் இருக்கும் புராஜெக்டில் வசிப்பது குடிநீர்ப் பஞ்சத்திற்கு சீக்கிரம் வழி வகுக்கும்.


2. வீட்டு ஓனர் சங்கங்கள் மூலமாக பேசி ­rவர் மூலம் குளிப்பதற்கு தற்காலிக கட்டுப்பாடு விதிக்கலாம்.


3. அதிக மக்கள் செறிவுள்ள ஓஎம்ஆர் போன்ற பகுதிகளில் குடியேறுவதை தவிர்க்கலாம்.


4. விசேஷ சுத்திகரிப்பு உபகரணங்கள் மூலம் கிடைக்கும் நிலத்தடி நீரை வீணாக்காமல் சுத்திகரித்து பயன்படுத்தலாம்.


5. ஒவ்வொரு வீட்டிலிருந்தும் குளியலறை, வாஷ் பேஷன் மற்றும் சிங் வெளியேறும் நீரை சுத்திகரிக்க ஆர். ஓ அல்லது ஈடிபி நிறுவலாம். இதை மறுபடி வீட்டுப் பயன்பாட்டிற்கே (சமையல் குடிநீர் தேவை நீங்கலாக) கொண்டு வரலாம்.


6. கொஞ்ச காலத்திற்கு பராமரிப்பு பணிகள், நீச்சல் குளம் போன்றவற்றிற்கு லீவு விடுங்கள்.வந்திருப்பது மெகாபஞ்சம் தான். எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்கொண்டு முறியடிப்போம்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067443