ஒளிபுகும் கான்கிரீட் சுவர் கட்டுமானத்தில் ஒரு புதிய உத்தி..

23 ஜனவரி 2024   05:30 AM 29 ஜூன் 2019   11:57 AM


ஒளி புகும் கான்கிரீட்டா? அதெப்படி கான்கிரீட்டில் ஒளி புகும்? அப்படியயனில் கான்கிரீட்டில் ஓட்டைகள் அல்லது நுண் துழைகள் இருக்குமா? கான்கிரீட்டில் ஒளி புக வேண்டுமெனில் கண்ணாடி போல் அல்லவா கான்கிரீட் தயாரிக்கப்பட வேண்டும். அப்படி கான்கிரீட் தயாரிக்கப்பட்டால் வலுவாக இருக்குமா?

 

ஏற்கனவே நல்ல நிலையில் இருக்கும் திடமான கான்கிரீட்டைப் பயன்படுத்தும்போதே நீர்கசிவு, ஓதம், வெடிப்புகள், விரிசல்கள் என ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும்போது ஒளி புகும் கான்கிரீட் என்பது எந்த விதத்தில் சேஃப்டி? என்றெல்லாம் வாசகர்கள் ஆகிய உங்களுக்கு ஏராளமான கேள்விகளும் ஐயங்களும் எழக்கூடும். உங்களுக்கு முதலில் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கட்டடக் கலை வல்லுநர் ஆரோன்லோஸான்ஸ்ஜி பற்றி சொன்ன பிறகுதான் ஒளி புகும் கான்கிரீட் பற்றிய அறிமுகத்தை ஆரம்பிக்க வேண்டும்.

 

கான்கிரீட் பற்றிய 300 - க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டவர்தான் ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த கட்டடக் கலை வல்லுநர் 50 வயதான ஆரோன் லோஸான்ஸ்ஜி என்பவர் இவர் 2001 ஆம் ஆண்டிலேயே ஒளிபுகும் கான்கிரீட் பற்றிய கொள்கை அளவிலான அறிவிப்பை வெளியிட்டார். ஆனால், அந்த காலகட்டத்தில் ஒளி புகும் கான்கிரீட் பற்றிய எவ்வித புரிதலும் ஆய்வாளர்கள் இடையே ஏற்படுத்தப்படவில்லை . பிரிகேஸ்ட் பொருட்களையே பரவலாக பயன்படுத்தாத காலகட்டம் அது. 

 

அதற்குப் பிறகு 2003 ஆம் ஆண்டில் அதிக அளவு ஒளி இழைக் கலவையில் சேர்ப்பதன் மூலம் லைட்ராகான் என்ற ஒளிபுகும் கான்கிரீட் உருவாக்கப்பட்டது.ஜோயல் எஸ் மற்றும் செர்கியோ ஓ.ஜி என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் இதனைச் சாதித்துக் காட்டினார்கள். இந்தக் கான்கிரீட்டின் வழியாக 80% வெளிச்சம் கடந்து செல்வது நிரூபிக்கப்பட்டது. வழக்கமான கான்கிரீட்டின் எடையில் இது வெறும் 30% தான் இருந்தது. என்றாலும் 2010 ஆம் ஆண்டில் ஷாங்காய் நகரில் நடைபெற்ற பொருட்காட்சி அரங்கை இந்த வகைக் கான்கிரீட்டால் அமைத்த போது தான் உலகம் முழுமைக்கும் ஒளிபுகும் கான்கிரீட் பற்றிய சர்வதேச பார்வை விழுந்தது. 

 

பிறகு,  இத்தாலி நாட்டின் அரங்கை உருவாக்குவதற்கு இந்தக் கான்கிரீட் பயன்படுத்தப்பட்டது.ஒளிபுகும் கான்கிரீட்டின் அடிப்படைகான்கிரீட் கடினமான கட்டுமானப் பொருள். அதன் வழியாக ஒளி ஊடுருவாது. ஆனால் ஒளி நுழைய வேண்டுமானால் ஒளி இழைகளைக் கலக்க வேண்டும். இவ்வாறு கலக்கப்படும் ஒளி இழைகள் வழியாக வெளிச்சம் அறைக்குள் வரும். வெப்பம் வராது. சன்னல் இருக்க வேண்டிய இடத்தில் இப்படிப்பட்ட கான்கிரீட் திரையை அமைத்தால் குறைந்த செலவில் வெளிச்சத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். கட்டுமானத்திற்கு உறுதி அளிக்கும் வேலையைக் கான்கிரீட் பார்த்துக் கொள்ளும். வெளிச்சத் தேவைகளை ஒளி இழைகள் கவனிக்கும்.

 

கட்டுமானத்தின் எடையைக் குறைப்பதிலும் இது சிறந்த உத்தியாகச் செயல்படும். இதுவரை இல்லாத புதிய கட்டுமானப் பொருளாக இதைப் பயன்படுத்தலாம். மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒளி இழைகளைக் கட்டுமானத்திற்கும் பயன்படுத்துவதன் மூலம் அந்தத் துறையின் தேவைகளையும் நிறைவேற்ற வல்ல கட்டிடங்களை உருவாக்குவது பல பயன் கொண்டதாக விளங்கும்.

 

ஒளிபுகும் கான்கிரீட்டை உருவாக்குவது எப்படி?

வழக்கமான கான்கிரீட்டை எப்படி உருவாக்குவோமோ அதைப் போலவே ஒளிபுகும் கான்கிரீட்டையும் உருவாக்கலாம். தயாரிப்பு முறை ஏறக்குறைய ஒன்றுதான். கான்கிரீட் ஜல்லிக் கலவையுடன் ஒளி இழைகளையும் கலந்து இட வேண்டும். அவ்வளவுதான் வித்தியாசம். சிறு அடுக்காகக் கலவையைக் கொட்டி அதன்மேல் ஒளி இழைகளைப் பரப்ப வேண்டும். அதற்கு மேல் இன்னொரு சிறு அடுக்கு. அப்புறம் ஒளி இழைகள். இப்படி மாற்றி மாற்றி இடுவதுதான் இந்தத் தயாரிப்பில் உள்ள ஒரே வேறுபாடு.

 

ஆயிரக் கணக்கான ஒளி இழைகள் கான்கிரீட் கலவையின் ஊடாக இடம்பெற்று ஒளிபுகும் தன்மையைஅளிக்கின்றன. இந்த ஒளி இழைகளின் வழியாக இயற்கை அல்லது செயற்கை வெளிச்சம் தாராளமாகப் போய் வர முடியும். தயாரிக்கப்படும் கான்கிரீட்டின் கன அளவில் 4 முதல் 5 % வரையிலான ஒளி இழைகளைக் கலந்தால் போதும். ஒளிபுகும் கான்கிரீட் கிடைத்துவிடும். 

 

இந்த வகைக் கான்கிரீட்டுக்கான ஜல்லிகள் சன்னமானவையாக எடுத்துக் கொள்ளப்படும். பெரும் அளவு ஜல்லிகளைச் சேர்ப்பது இல்லை. கலக்கப்படும் ஒளி இழைகளின் குறுக்களவு 2 மைக்ரோமீட்டர் முதல் 2 மி.மீ வரையிலானதாக இருக்கலாம். எந்த அளவு ஒளி அனுமதிக்கப்பட வேண்டும் என்பதைப் பொருத்து இந்த அளவை முடிவு செய்யலாம்.

 

ஒளிபுகும் கான்கிரீட் தயாரிப்பில் ஜெர்மனியின் சாதனை ஒளி புகும் கான்கிரீட்டைப் பல்வேறு புதிய வழிகளில் பயன்படுத்துவதில் முன்னோடி நிறுவனமாகத் திகழ்கிறது ஜெர்மனியைச் சேர்ந்த லூசெம் லிச்பெடன். ஆக்கென் என்ற நகரத்தைச் சேர்ந்த கார்ப்பஸ் அண்ட் பார்ட்னர் என்ற கட்டடக்கலைஞர்கள் இதனை வடிவமைத்திருக்கிறார்கள். 150க்கு 50 செ.மீ என்ற அளவு கொண்ட பாளங்களை இவர்கள் உருவாக்குகிறார்கள். மொத்தத்தில் 30 மீ அகலமும் 4 மீ உயரமும் கொண்ட பலகைகளை அமைக்கிறார்கள். இவ்வாறு 136 பலகைகளைக் கொண்ட கட்டுமானம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

ஒவ்வொரு பலகையும் வண்ணம் மாறும் தன்மை கொண்டதாக இருக்கிறது. சூரியன் மறையப் போவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இந்தப் பலகைகள்அதிகப் பிரகாசம் கொண்டவையாக மாறுகின்றன. இந்தப் பலகைகளில் 3 % அளவுக்கு ஒளி இழைகள் இடம் பெற்றிருக்கின்றன. இந்தப் பலகைகளில் பொருத்தப்பட்ட ஒளி உமிழ் டயோட்கள் இன்டர்நெட் இணைப்பின் மூலம்இயக்கப்படுகின்றன.  அடிப்படை நிறங்களான சிவப்பு, பச்சை மற்றும் நீல வில்லைகளைப் பயன்படுத்தி 1.6 கோடி வண்ணங்களை உருவாக்க முடிகிறது.

 

தவிரவும்,இந்த முகப்புப் பகுதி முழுவதையும் ஒரு தனி விளம்பரப் பலகையைப் போலவும் பயன்படுத்த முடியும். அலைபேசியைக் கொண்டே இந்த முகப்பின் திரைப் பகுதியில் எழுத்துக்களையும் படங்களையும் காட்சிப்படுத்தலாம். கட்டுப்படுத்தலாம். உள் அறைகள், தடுப்புச் சுவர்கள், தரைப்பரப்புகள் போன்றவற்றையும் இதே முறையில் உருவாக்கிப் பயன்படுத்த முடியும்.

 

வீடுகள்,மருத்துவ மனைகள், அலுவலகங்கள் என எங்கும் இந்த ஒளிபுகும் கான்கிரீட் பலகைகளைப் பயன்படுத்தலாம். புதுமையான ஒளி அமைப்புகளை உருவாக்கலாம். மின் செலவிலும் கணிசமாகச்  சிக்கனப்படுத்தலாம்.

 

அடுத்த சில ஆண்டுகளில் பிரிகேஸ்ட் பொருட்கள் போலவே ஒளி புகும் கான்கிரீட் அனைத்து வித கட்டிடங்களுக்கும் பயன்படுத்தும் வழக்கம் பரவலாகும் என்றே அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067512