வெயிலின் தாக்கத்தை சமாளிக்க வீட்டுக் குளிர்ச் சாதன வசதியை செய்து தான் ஒரே வழி என்றில்லை. அப்படியே குளிர்சாதன வசதியைச் செய்வதாக இருந்தாலும் வீட்டின் படுக்கை அறையில் மட்டுமே தான் செய்ய முடியும். இது தான் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு சாத்தியமான ஒன்றாக இருக்க முடியும். தற்போது, கோடை போன்று பகலில் வீசும் அனல் காற்றை சமாளித்து வீட்டில் புழங்க வேண்டுமானால் வீட்டை குளிர்ச்சியாக மாற்ற வேண்டும்.
வீட்டின் கூரையில் தான் வெயில் நேரடியாகத் தாக்கும். வெப்பமான சூரியக் கதிர்கள் வீட்டின் கூரைகளில் விழுந்து தம் வெம்மையால் வீட்டை மூழ்கத் துடிக்கும். ஆகவே, வீட்டின் கூரைகளில் வெயில் நேரடியாகத் தாக்குவதைத் தவிர்க்கும் வகையிலான வசதிகளை ஏற்படுத்திக்கொள்வது நல்லது. இப்போதெல்லாம் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக வீட்டின் மொட்டை மாடியில் வெள்ளை நிறத்தைப் பூசுவதை வழக்கமாக்கிக்கொள்கிறார்கள். இதைப் போன்ற செயல்பாடுகளால் வெயில் காரணமான வெம்மை வீட்டுக்குள் கடத்தப்படுவதைக் குறைக்கலாம்.
அதேபோல் வீட்டின் ஜன்னல்களில் தொங்கவிடப்படும் திரைகளின் வண்ணங்கள் மெல்லியவையாக இருப்பது கோடைக் காலத்துக்கு உகந்தது. மெல்லிய வண்ணங்களாலான திரைச்சீலைகளில் வெப்பம் தங்கியிருக்கும் வாய்ப்பு குறைவு. எனவே, வெளியில் நிலவும் வெம்மை கலந்த காற்று வீட்டுக்குள் வரும்போது அது திரைச்சீலைகளில் சிறிதளவு வெம்மையைப் படரவிடும். அடர் நிற திரைச்சீலைகளைத் தொங்கவிட்டால் அந்த வெம்மையானது திரைச்சீலையில் தங்கிவிடக்கூடும்.
ஆகவே, கோடைக் காலத்துக்கு ஏற்ற பருத்தித் துணிகளாலான, மெல்லிய வண்ணம் கொண்ட திரைச் சீலைகளை மட்டுமே வீடுகளில் தொங்கவிட வேண்டும். கோடைக் காலத்தில் வீட்டுக்குள் அநாவசியமாக வெப்பம் உருவாகும் நிலையைத் தவிர்த்துவிட வேண்டும். வெம்மையைத் தரும் மின்சாதனங்களை அவசியப்பட்ட நேரத்தில் மட்டுமே இயக்க வேண்டும். பிற நேரங்களில் அவற்றை நிறுத்திவைக்க வேண்டும்.
அதேபோல் வெயில் காலத்தைச் சமாளிப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டைச் சுற்றி வேப்ப மரம் போன்ற இதமான சூழலை எப்போது நமக்களிக்கும் மரங்களை நட்டுவைத்திருந்தால் அது கோடைக் கால வெப்பத்திலிருந்து நம்மைக் காத்து நிற்கும். எவ்வளவு இயலுமோ அவ்வளவு செடி, கொடிகளையும் மரங்களையும் வீட்டைச் சுற்றி அமைக்கும்போது, கடுமையான கோடைக்காலத்தை நாம் பெரிய கஷ்டங்கள் இன்றி கடந்துவிட முடியும். ஒவ்வொரு வீட்டையும் அமைக்கும் முன்னர் செடி, கொடி, மரங்களுக்கென இடம் விட்டே கட்ட வேண்டும்.
இயற்கையான சூழல் அமையாத வீட்டை எவ்வளவு செலவு செய்து கட்டினாலும் அதன் பயன் மிகக் குறைவே. வீட்டுக்குள் முடிந்த அளவு இயல்பான குளுமைச் சூழல் நிலவக்கூடிய சுற்றுப்புறத்தை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதைவிடுத்து கோடைக்கு உகந்தது குளிர்சாதன வசதிதான் என ஏசி அறைகளில் தஞ்சமடைவது மீண்டும் வெயிலை அதிகரிக்கவே உதவும் என்பதை மறந்துவிடக் கூடாது.
ஓசோன் படலம் நாளுக்கு நாள் பலவீனமாகிக்கொண்டே வருகிறது எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து எச்சரித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.மொட்டைமாடியில் தோட்டம் போடுவதன் அவசியத்தை வெயில் காலத்தில் உணரலாம். வீட்டின் கூரைப் பகுதியிலும், சுவர்களிலும் பரவும் வெயில் காரணமாகத்தான் வீட்டில் வெம்மை பரவுகிறது. அதுவும் இப்போதெல்லாம் கான்கிரீட் கட்டிடங்களைத் தானே கட்டி எழுப்புகிறோம். அவற்றில் தங்கும் வெம்மையானது கிட்டத்தட்ட அதிகாலை வரை சிறிது சிறிது வெப்பத்தை உமிழும்.
எனவேதான் வீடானது அனலாகக் கொதிக்கும். ஆக, இந்த வெம்மையைச் சமாளிப்பதில் முன்னெச்செரிக்கை உணர்வுடன் நடந்துகொண்டால் மட்டுமே வெயில் காலத்தை நம்மால் தாங்க முடியும்.வீட்டின் மேல்தளம் சரியாக அமைக்கப்பட்டு இருந்தால் வெப்பம் அதிகமாக வீட்டிற்குள் இறங்காது. இல்லையென்றால், வீட்டின் மேல்தளத்தில் சிறிய கீற்றுக் கொட்டகை போட்டுக் கொள்வதும் நன்மை அளிக்கும்.
குறிப்பிட்ட அறைக்கு மேல் பரவலாக செங்கற்களை வைத்து அதன் மீது கீற்றுகளைப் போட்டு வைத்தாலும் வெப்பம் அதிக அளவில் உள்ளே வராது. வீட்டின் மேல் தளத்தின் மீது வெள்ளை நிற சுண்ணாம்பு அல்லது பெயின்ட் அடித்து விட்டாலும், வெப்பம் உள்ககிரகிக்கப்படுவது தவிர்க்கப்படும்.
வீட்டின் வாயிலில் நடந்து செல்லும் பகுதியில்வெப்பம் கொளுத்துகிறதா? பகல் நேரத்தில் வெறும் காலுடன் நடக்க முடியாத இடங்களில் வெள்ளை நிறப் பூச்சை அடித்து விடுங்கள். வெப்பம் தெரியாது.
தென்னம் ஓலை, பனை ஓலை, வெட்டிவேர் இவற்றால் செய்யப்பட்ட தடுப்பு திரைகளை ஜன்னல்களில், பால்கனிகளில் தொங்கவிடலாம். இவற்றால் வீட்டின் உள் பகுதி குளிர்ச்சியாகும். தனி வீடாக இருக்கும் பட்சத்தில் வீட்டின் மாடியில் நீரில் நினைத்த கோணிகளை பரப்பி வைக்கலாம். இதன் மூலம் வீட்டின் உள்ளே சூடு இறங்குவது குறையும். அத்துடன், வீட்டின் மேல் மாடியில் தென்னங்கீற்றுகளால் பந்தல் போட்டு வைக்கலாம். மாலை வேளையில் மாடியின் தரையில் நன்றாகத் தண்ணீர்த் தெளித்து விட்டு அமர்ந்து கொண்டால் அவ்வளவு ரம்யமாக இருக்கும்.
கோடை காலத்திற்கு ஏற்றவையாக இவை இல்லாவிட்டாலும், இன்றைக்குப் பெரும்பாலான மக்களின் விருப்பமாக அவை இருக்கின்றன. இது போன்ற வீடுகளில் சுரையும், தரையும் இணைக்கும் வகையில் மரத்தினாலான ஒரு தடுப்பைக் கொடுத்தால் வீட்டின் உள்ளே வெளியிலிருந்து கடத்தப்படும் வெப்பம் தடுக்கப்படும். பார்ப்பதற்கும் வீட்டிற்குள் ஏதோ உள் அலங்கார அமைப்பை பிரத்யேகமாக செய்தது போல் இருக்கும்.
வீட்டில் உள்ளே புழங்கும் சூடான காற்றை வெளியேற்றும் எக்ஸாஸ்ட் ஃபேன்களை அதிகமாக பயன்படுத்த வேண்டும். இத்தகைய ஃபேன்களை முகப்பு அறையிலும், படுக்கை அறையிலும் சமையல் அறையிலும் பொருத்த வேண்டும். அதே நேரத்தில் வீட்டின் ஜன்னல்களின் வழியாக குளிர்ச்சியான காற்று வீட்டின் உள்ளே பரவும். வீட்டின் வெளிப்புறத்துக்கு அடர்த்தியான வண்ணத்தை விட மெலிதான வண்ணங்களே சிறந்தவை. மெலிதான வண்ணங்கள் சூட்டையும் வெளிச்சத்தையும் பிரதிபலிக்கும்.
புதிதாக வீடு கட்டும் முயற்சியில் இருப்பவர்கள் 2 அடிக்கு மேலாக 4 அடிக்குள்ளாக மணல் போட்டு அஸ்திவாரம் அமைந்தால் வீட்டின் குளிர்ச்சிக்கு அடிப்படையாக இருக்கும். வீட்டின் முகப்பு அறை, சமையல் அறை, படுக்கை அறை எல்லாவற்றிலும் குறைந்தது ஒரு ஜன்னல் இருக்கும் வகையில் வீட்டை கட்ட வேண்டும்.
வெள்ளை நிறம் வெப்பத்தை உள் கிரகித்துக் கொள்ளாமல் பிரதிபலித்துவிடும். எனவே, எங்கெல்லாம் வெயில் படுகிறதோ அங்கு வெள்ளை நிறத்தை அடிக்கலாம். வீட்டில் இயற்கையான ஏசி வேண்டுமா? வாயில்களிலும், ஜன்னல்களிலும் ஈரமான பெட்ஷீட்களை தொங்க விடுங்கள். போதும். வெப்பம் உள்ளே வராது.
தேவையே இல்லாமல் நீண்ட நாட்களாக வீட்டிற்குள் அடைந்து கிடக்கும் பொருட்களை அப்புறப் படுத்துங்கள். ஒரு பக்கம் வீட்டிற்குள் காற்று வந்தால், அது வேறொரு பக்கம் கண்டிப்பாக வெளியேற வேண்டும். அப்போது தான் வீட்டிற்குள் காற்றோட்டம் சீராக இருக்கும். காலை நேரங்களில் கதவு, ஜன்னல்களை நன்றாகத் திறந்து வையுங்கள். ஆனால், உச்சி வெயிலடிக்கும் போது, அவற்றை மூடிவிடுங்கள்.
தற்போது பிரபலமாகி வரும் ஃபால்ஸ் சீலிங்கை வீட்டின் மேற்கூரையில் பொருத்தினால் வீடு சூடு குறையும். அவ்வளவு வசதி இல்லையா? வீட்டின் மேற்கூரையில் வைக்கோலைப் பரப்பி, அதில் அடிக்கடி நீர் விட்டால் வீடு குளிரும். நம் வீட்டு மொட்டை மாடியிலோ, பால்கனியிலோ சிறுசிறு செடிகளை தொட்டியில் வளர்க்கலாம். இந்த பசுமையான செடிகள் கோடை வெப்பத்தைக் குறைக்கும்.
வீட்டின் காற்றோட்டமான ஒரு ஓரத்திலோ, பால்கனியிலோ, சிறிய தொட்டி அல்லது வாளியில் நீரை நிரப்பி வைத்துப் பாருங்கள். வீடு குளுகுளுன்னு இருக்கும்.
சொந்த வீடு மாத இதழின் பயனுள்ள பழைய கட்டுரைகளைப் படிக்கவும்.., ஆன் லைனில் புதிய சொந்த வீடு மாத இதழ்களைப் படிக்கவும் சந்தா செலுத்துங்கள்....
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067488
|