ஊருக்கு இளைத்தவன் உழவன்?

24 ஜனவரி 2024   05:30 AM 10 ஜூன் 2019   02:22 PM


நெஞ்சு பதைக்கிறது. மறுபடியும் அராஜகம். எளியவர்களுக்கு எதிரான  அதிகாரத்தின் கை ஓங்கல். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில்  ஒட்டு மொத்த நாடும்  ஒரு நிலைப்பாட்டில் இருக்க கேரளாவும், தமிழகமும் மட்டும் ஆளும் மத்திய அரசுக்கு எதிரான ஒரு வலுவான  நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது. 

இது மாநில அளவிற்கு  நம் மக்களுக்கு அனுகூலமானதா?  இல்லையா? என்ற மாறுபட்ட குரல்கள் தொடந்து  ஒலிக்க, சத்தமே இல்லாமல் தமிழகத்தின் ஒரு மூலையில் விளைநிலத்தின் நடுவே வந்து ஆக்கிரமித்து  இருக்கிறார்கள் பன்னாட்டு கார்ப்ரேட்காரர்கள்.

இவர்களுக்கு உதவுவது யார்., ? இவர்கள் ஏன் எப்போதும்  தமிழக விவசாய நிலங்கள் மீது குறிவைக்கிறார்கள்?

முன்அறிவிப்பு ஏதும் இல்லாமல்,  அனுமதியும் இல்லாமல்.,வெறும் பத்து போலீஸ்காரர்கள் துணை கொண்டு நாகை மாவட்டத்தில், தரங்கம்பாடியில் பொன் விளையும் பூமியில் ஓஎன்ஜிசி  நிறுவனம் ஜேசிபி இயந்திரம் கொண்டு குழி தோண்டும் வேலையை ஆரம்பித்திருக்கிறது.

படிப்பறியா உழைப்பாளி மக்கள் பரிதவித்து நிற்கிறார்கள். அவர்களால் உடனே வக்கீலையும்., நீதிமன்றத்தையும் நாட முடியாது. விதைத்ததை திரும்ப வழித்தெடுக்கவும் முடியாது. அவர்களுக்கு உதவி செய்ய எந்த ஆட்சியாளர்களுக்கு எப்போதும் நேரம் இருந்தது இல்லை.

ஊருக்கு இளைத்தவன் ஆண்டி என்பார்கள். இப்போது ஊருக்கு இளைத்தவன் உழவன் என்றாகி விட்டது. அவன் நிலத்தையும் உடமையும் தொட்டால் அது பற்றி பேச, எதிர்க்க யாருக்கும் திராணி இல்லை. அல்லது அவர்களது திராணியும், நேர்மையும் நல்ல விலைக்கு போயிருக்கலாம்.

தமிழகத்து உழவர்கள் குடிநீரின்றி விளைநிலத்தை கார்ப்ரேட் காரர்களுக்கு தாமாகவே விற்க ஆரம்பிக்கும் சூழலுக்காக கோரப்பசி கொண்டு காத்திருக்கின்றன தீய சக்திகள். அவர்களுக்கு  விளைநிலங்களின் கீழ் உள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற ரசாயண இத்யாதிகள் தான் இலக்கு.  தேர்தல் திருவிழா முடிந்த கையோடு மறுபடியும் ஒரு போராட்டத்துக்கு தமிழக மக்கள் தயாராக வேண்டும். யாருக்கு எதிரான ,
யாரை நோக்கிய போராட்டம் எனத் தெரியாமல் போராடும் மக்களுக்கு ஏன் ஏற்படுகின்றன இந்த  தொடர் இன்னல்கள்? 

காரணம் ஒன்றே ஒன்று தான். 

பக்கத்து மாநிலத்தில் கடைமடையில் கூட தண்ணீரை வரவழைத்து சாதனை செய்தவரை அம்மக்கள் தோற்றுப்போகச் செய்தார்கள். இங்கே ஆற்றுமணலை அள்ளி வெளிமாநிலத்திற்கு விற்று, ஆற்றையே 
அபகரித்தாலும், அவரையே ஜெயிக்க வைத்து விடுகிறோம். அது தான் வேறுபாடு. 

- E. உதயகுமார், நிர்வாக ஆசிரியர்

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067547