உதயமானது கிரிக் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு தொடக்க விழா!

24 ஜனவரி 2024   05:30 AM 15 ஏப்ரல் 2019   04:19 PM


கட்டுமானம் மற்றும் மனைத் தொழிலைப் பாதுகாத்திடும் நோக்கோடு அத்தொழில்கள் சார்ந்த பங்குதாரர்கள் இணைந்து ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் (Construction abd Real Estate Industry) துவக்கவிழா நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. 

கூட்டமைப்பின் தொடக்க விழா நிகழ்ச்சி 03.03.2019 அன்று சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கூட்டமைப்பின் தலைவர் பொன்குமார் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் செயலாளர் ஆர்.ரவி, பொருளாளர் விருகை வி.என்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் எஸ்.யுவராஜ் அவர்கள் வரவேற்று பேசினார். இந்திய கட்டுநர், வல்லுநர் சங்க முன்னாள் அகில இந்தியத் தலைவர் ஆர்.இராதாகிருஷ்ணன் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். 

முன்னாள் பத்திரபதிவுத்துறை தலைவர் மற்றும் அரசுச் செயலாளர் இர.சிவகுமார்  IAS (R)அவர்கள் பெயர்ப் பலகைத் திறந்து வைத்தார். கிரடாய் தலைவர் W.S, ஹபிப், கட்டுநர்&வல்லுநர் சங்க தமிழ்நாடு புதுவை, அந்தமான் நிக்கோபர் மாநிலத் தலைவர் எஸ்.அய்ய நாதன், மையத் தலைவர் எல்.வெங்கடேசன், முன்னாள் அகில இந்தியத் துணைத்தலைவர் மு.மோகன், தமிழ்நாடு, இந்திய இன்ஸ்டியூட் ஆப் ஆர்க்கிடெக்ட்  தலைவர் கே.செந்தில்குமார், தென்னிந்திய இரும்பு மற்றும் ஹார்டுவேர் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.எ.அஜிஸ், அகில இந்திய வரி செலுத்துவோர் சங்கத் தலைவர் சி.எ.முரளி ஆகியோர் உரையாற்றினர். ஏ.ஐ.டி.யூ.சி செயலாளர் ரவி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

விழாவில் கீழ்க்கண்ட நோக்கங்களை அரசிற்கு கோரிக்கைகளாக வைக்கப்பட்டது.

நிலவழிகாட்டி மதிப்பு மற்றும் பதிவுக் கட்டணம் , முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக் கட்டணம் போன்றவற்றின் அபரிமித உயர்வால், நிலம் மற்றும் மனைகளின் பதிவு எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.. எனவே நிலவழிகாட்டி மதிப்பு, முத்திரைத்தாள் கட்டணம், பதிவுக் கட்டணம் போன்றவற்றின் உயர்வுகளைத் திரும்பப் பெற்று நிலம் மற்றும் மனை விற்பனையை 
அதிகப்படுத்திட வேண்டும்.

ஒரு சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள பதிவுக் கட்டணத்தைத் திரும்பப் பெற்று  ஒரு சதவீதமாகக் குறைத்திட வேண்டும். பத்திரப்பதிவுக்கான முத்திரைத்தாள் கட்டணம் பிற மாநிலங்களில் உள்ளதைப் போன்று 7 சதவீதத்தை 5 சதவீதமாகக் குறைத்திட வேண்டும்.

நிலம் வரையறை 
விவசாய நிலம், தொழிற்சாலை நிலம், மற்றும் வீட்டுமனைக் கேற்ற நிலம் என்பதனை அரசு முறையாக வரையறைச் செய்து அறிவித்திட வேண்டும்.

மனைப்பிரிவு (Layout) அனுமதி
வீட்டுமனைகளுக்கான மனைப்பிரிவு வரைபட (Layout) அனுமதியை ஒருங்கிணைந்த விரிவான ஒற்றைசாரள முறையில் (Single Window System) எளிமையாகவும், விரைவாகவும் கிடைத்திட செய்தல் வேண்டும். குறிப்பாக DTCP அனுமதியை 30 நாட்களுக்குள்ளும், CMDA அனுமதியை 40 நாட்களுக்குள்ளும் வழங்கிட வேண்டும்.

கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் வீட்டுமனைகளை எளிதில் வாங்குவதை ஊக்கப்படுத்தி, கிராமப்புற வீட்டுவசதியை மேம்படுத்திடும் நோக்கில் DTCP யயைப் போன்று ஊராட்சி ஒன்றிய அளவில் (Block) வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் வழங்கக் கூடிய ஓர் அமைப்பை (Authority) ஏற்படுத்திட வேண்டும்.

600 சதுர அடி மனைக்கும் அங்கீகாரம்
அரசு வீட்டுவசதி வாரியம், 450 மற்றும் 500 சதுர அடி வீட்டுமனைகளை விற்பனை செய்வதை போன்று, ஏழை, எளிய மக்களின் வாங்கும் சக்தியை மனதில் கொண்டு, அனைவருக்கும் சொந்த வீடு என்ற இலக்கை அடைந்திடும் வகையில், 600 முதல் 1000 சதுர அடி மனைக்கும் அரசு அங்கீகாரம் வழங்கிட வேண்டும்.

கட்டுமானத் திட்ட அனுமதி 
கட்டுமானத்திற்கான அனுமதியை (Building Permission) ஒற்றைச் சாரள முறையில் DPCP மற்றும் CMDA அனுமதியை 30 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும். கட்டுமானம் முடிந்ததற்கான சான்றையும் (Completion Certificate) 30 நாட்களுக்குள் வழங்கிட வேண்டும்.

FSI 2.5 மடங்காக்க வேண்டும் 
கடந்த 25 ஆண்டுகளுக்கு பிறகு FSIயை1.5 லிருந்து 2 மடங்காக அரசு உயர்த்தி உள்ளது. இதனைப் பிற மாநிலங்களில் உள்ளதைப் போன்று 2.5 மடங்காக உயர்த்தி வழங்கிட வேண்டும். FSI அளவு உயரும் போது, வீடுகளின் விற்பனை விலை குறைந்து பொது மக்கள் பயனடைவர்.

மணல் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், நிலத்தடிநீர் பாதிக்காத வகையில், சட்டம் அனுமதித்தபடி  தேவையான மணல் எடுக்கும் ஆழம் சம்மந்தப்பட்டத் துறை அனுமதித்த அளவை மிஞ்சக்கூடாது.

மலேசியா போன்ற வெளி நாடுகளிலிருந்து அசாம் போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் மணலை
இறக்குமதி செய்து கட்டுப்படுத்தப் பட்ட விலையில் தாராளமாக மணல் கிடைத்திட ஏற்பாடு செய்யப்பட வேண்டும். தரமான எம்.சாண்டு கட்டுப்படுத்தப்பட்ட விலை யில் தட்டுப்பாடின்றி கிடைத்திட, ஏற்பாடு செய்திட வேண்டும். எம்.சாண்டு உற்பத்தி &விற்பனைக்கான அனுமதியை வெளிப் படைத் தன்மையோடு வழங்கிட வேண்டும்.

விலை நிர்ணயக்குழு
கட்டுமானத் துறையில் பயன்படுத் தப்படும் மணல், சிமெண்ட், செங்கல், ஜல்லி, கம்பி உள்ளிட்ட 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களின் விலையேற்றத்தால் அவ்வப்பொது கட்டுமானங்கள் தேக்க நிலையை அடைகின்றன. எனவே கட்டுமானப் பொருட்களின் விலையை நிர்ணயம் செய்திட, நிரந்தரமாக செயல்படும் விலை நிர்ணயக்குழு அமைத்தல் வேண்டும். அக்குழுவில் கட்டுமானம் சார்ந்த அனைத்து பங்குதாரர்களும் (Stake Holder) இடம் பெற வேண்டும்.

அரசுப் புராஜெக்டுகளில் பேக்கேஜ் ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும்.

தற்போது, அரசு ஒன்றுக்கு மேற்பட்ட பல ஒப்பந்தப் பணிகளை இணைத்து பேகேஜ் என்ற பெயரில் ஒருவருக்கு வழங்கி வருகிறது. இதனால் , பல ஒப்பந்தக்காரர்கள் செய்ய வேண்டிய வேலையை ஒருவரே செய்வதால் பணிகளை முடிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதனைத் தவிர்த்து பழையபடி தனித்தனியாக ஒப்பந்தப் பணிகளை வழங்கிட வேண்டும். இதனால் பல ஒப்பந்தக்காரர்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படும். வேலைகளும் விரைவாக முடிக்கப்படும்.

ஒப்பந்தத்தில் பொறியாளர்களுக்கு முன்னுரிமை

அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங் களின் கட்டுமான ஒப்பந்தப் பணிகளை வழங்கும்போது பொறியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கிட வேண்டும்.

திறன் பயிற்சி

கட்டுமானத் தரம் சர்வதேச அளவில் உயர்ந்திட ,தொழிலாளர்களின் தொழில் நுட்ப அறிவை அதிகரித்திட, திறன் பயிற்சி அவசியமாகிறது.இதனால் தொழிலாளர்களின் வேலை வாய்ப்புப் பெருகி வாழ்வாதாராமும் உயரும். இதற்காக தமிழ்நாடு கட்டுமானத்தொழிலாளர்கள் நலவாரியத்தின் நிதியிலிருந்து ரூ.50 கோடி மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள உயர் பயிலகத்தை (TAC) முறையாக நடைமுறைப்படுத்திட வேண்டும். 

கட்டுமானத்துறை-தனி அமைச்சகம்

நாட்டினுடைய வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றக்கூடிய அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ளக் கூடியது கட்டுமானத்துறையாகும். எனவே, இதன் முக்கியத்துவத்தைக் கருதி, கட்டுமானத் துறைக்கு தனி அமைச்சகத்தை ஏற்படுத்திட வேண்டும்.

கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம்

தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம் என்பது மொத்தக் கட்டுமான மதிப்பில் செலுத்தப்படும் ஒரு சதவீத செஸ் நிதியிலிருந்து  செயல்படும் ஒரு முத்தரப்பு நிறுவனமாகும். எனவே நலவாரியத்தில் தொழிலாளர்களைப் பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகளைப் பெற்றுதருதல் போன்ற பணிகளை, பழைய நிலைப்படி தொழிற்சங்கம் மூலமே செய்திட வேண்டும். நலவாரியம் முறையாக செயல்பட்டு பதிவு, புதுப்பித்தல், நலத்திட்ட உதவிகள் வழங்கல் போன்ற பணிகளை விரைந்து செய்திட வேண்டும்.

நிலத்தரகுத் தொழிலை முறைப்படுத்திடல்

வீடு மற்றும் வீட்டுமனை விற்பனைத் தொழிலில் நிலத்தரகர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்த வீடு
மனை விற்பனைத் தரகுத்தொழிலை வரைமுறைப்படுத்தி அரசு அங்கீகரித்திட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நிலத்தரகர்களுக்கு அரசு அடையாள அட்டை வழங்கி அவர்கள் மட்டுமே நிலத்தரகுத் தொழிலில் ஈடுபடும் வகையில் ஏற்பாடுகள் செய்திட வேண்டும்.

நிலத்தரகர்கள் நலவாரியம்

தமிழ்நாட்டில் வீடு மற்றும் வீட்டுமனை விற்பனைத் தொழிலில் ஈடுபடும் நிலத்தரகர்கள் அனைவரும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள அமைப்புச் சாரத் தொழிலாளர்கள் ஆவர். எனவே நிலத்தரகர்களை அரசின் அமைப்புச் சாராத் தொழிலாளர்கள் பட்டியலில் இணைத்திட வேண்டும். நிலத்தரகர்களுக்கும் தனி நலவாரியம் அமைத்து, அவர்களைப் பாதுகாத்திட நலத்திட்டங்களைஅரசு நடைமுறைப்படுத்திட  வேண்டும் என்னும் பல கோரிக்கைகள் அரசுக்கு வைக்கப்பட்டன. 

CRIC - ன் நல்ல நோக்கங்கள் நிறைவேற நாம் வாழ்த்துவோம்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067759