வீடு தராமல் இழுத்தடிக்கும் பில்டர்கள் முழுதாக கட்டி முடித்து குடிபுகும் வீடுதான் பாதுகாப்பானதா?

24 ஜனவரி 2024   05:30 AM 15 ஏப்ரல் 2019   02:59 PM


6மாதத்தில் வீடு தருகிறேன். முழுப்பணம் கட்டுங்கள்’ என்று வாக்குறுதியைத் தந்து விட்டு ஆண்டு கணக்கில் வீடு தராமல் இழுத்தடிக்கும் தில்லு முல்லு வேலையைச் செய்கிற கட்டுமான நிறுவனங்கள் தமிழ் நாட்டில் இப்போது அதிகமாகி விட்டன. பெரிய பாரம்பரிய நிறுவனங்கள் கூட இந்த வேலையைச் செய்வதால் சாதாரண பொதுமக்கள் அதிர்ந்து போய் இருக்கிறார்கள்.

கனவு வீட்டை வாங்க பணத்தை செலுத்தி விட்டு தங்களுக்குரிய வீட்டைப் பெறாமல் கட்டுமான  நிறுவனத்தின் அலுவலகப் படிகளில் அன்றாடம் ஏறி இறங்கி அல்லாடச் செய்யும் பில்டர்களின் போக்கு கண்டிக்கத்தக்கது. ரெரா போன்ற கிடுக்குப்பிடிச் சட்டம் வந்தும் கூட ஏமாற்று பில்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த ஒரு சாப்ட்வேர் தம்பதி தனது நேரடி கசப்பு அனுபவத்தை நம் அலுவலகம் தேடி வந்து நம்மிடம் முறையிட்ட போது,
‘‘சார் எனக்கு சென்னை போரூரில் அலுவலகம் உள்ளது. என் மனைவிக்கும் அதே இடத்தில் தான் வேலை. தற்போது வாடகைக்கு தான் இருக்கிறோம். சொந்த வீடு வாங்குவதற்கு, போரூரில் எங்களுக்குப் பிடித்த  புதிய வீடுகள்  கிடைக்கவில்லை. எனவே, போரூருக்கு அருகே, திருவேற்காடு பகுதியிலும் வீடுகள் பார்த்தோம். 

அங்கே  மூன்றெழுத்து பெயருடைய (விரைவில் பெயர் வெளியிடுவோம்) பெரிய கட்டுமான நிறுவனம் கோயில் நகரம் என்னும் பெயரில் தனது புராஜெக்டை கட்டி வந்தது. 4 மாடிகள், 12 பிளாக்குகள்,( அதில் ஏற்கெனவே 5 பிளாக்குகள் விற்று ஆட்கள் குடிவந்து விட்டனர்)  500 வீடுகள் என உருவாகும் இந்த புராஜெக்டில் மூன்று ஃபிளாட் உடைய வீட்டை வாங்க அதன் தலைமை அலுவலகத்தை 2018 மார்ச் மாதம் அணுகினோம். குடிபுகத் தயாரான வீட்டைத் தான் நாங்கள் வாங்க  இருந்தோம். ஆனால், அது போல் எங்களுக்குப் பிடித்தமான ஒரு புதிய வீடு அங்கே  இல்லாததால் இந்த புராஜெக்டில் வீட்டை வாங்க தீர்மானித்தோம். 

அதுவும் தவிர, அந்த நிறுவனத்திலேயே நமக்கு தெரிந்த ஒருவர் குறிப்பிட்ட கட்டுமான நிறுவனத்திற்கு இன்டிரியர், ஹோம் தியேட்டர் பணிகளைச் செய்து  வருவதால், தெரிந்த ஆட்கள் இருக்கிறார்கள். இங்கே எந்த பிரச்சனையும் இருக்காது. நம்பி வாங்கலாம் என முடிவு செய்தோம். 

2 பெட்ரூம் ஃபிளாட் 45 லட்சமும் 3 பெட்ரூம் பிளாட் 65 லட்சமும் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்க நாங்கள்  3 பெட்ரூம் பிளாட் வாங்க விரும்பினோம். அதில் 70 சதவீத தொகையை அவர்கள் சொன்ன விதிமுறைப்படி, சொன்ன தேதிக்குள் கட்டி விட்டோம். பணத்தைக் கட்டுவதற்கு முன் எங்களுக்கு இரு சந்தேகங்கள்  தோன்றின. 1. அவர்கள் தந்த புரௌசரில்., லொகேrன் எங்கே? எத்தனை மாடிகள்? எத்தனை வீடுகள்? எவ்வளவு நிலப்பரப்பு? என்னென்னெ வசதிகள்? போன்ற முப்பதுக்கும் மேற்பட்ட  தகவல்கள் இருந்தன. 

ஆனால்., வீட்டை எப்போது கட்டித் தருவோம்? என்ற விவரம் மட்டும் சாமார்த்தியமாகத் தவிர்த்து விட்டார்கள். இரண்டாவது, அந்த புராஜெக்டின் எண்ணை ரெரா இணையதளத்தில் போட்டு விசாரித்தால் வீட்டை ஒப்படைக்கும் தேதி 2019 ஜூன் என்று தான் வந்தது. எங்களுக்கு ஒன்றரை ஆண்டுக்கு பின் தருவதாக இருந்தால்., அவர்களிடம் வீடே வாங்கத் தேவையில்லை என்பது தான் உண்மை. மூன்று 
மாதம் முதல் 6 மாதம் என்றால் காத்திருக்கலாம். ஒன்னரை வருசம் என்றால்? அதுவரை நான் வாங்கிய வங்கிக்கடனுக்கு இ.எம்.ஐ கட்ட வேண்டும். வசிக்கும் வீட்டிற்கு வாடகையும் கட்ட வேண்டும். இரட்டைச் செலவாகி விடும்.

எனவே, ‘இந்த வீடு வேண்டாம்’ என நாங்கள் மறுத்த போது, அவர்களின் மார்கெட்டிங் அதிகாரிகளோ ஆறே மாதத்தில்.,  அதாவது 2018  செப்டம்பரில் தருவதாக சொன்னார்கள்.

‘‘சார் சர்வ நிச்சயமாக ஆறே மாதத்தில் இந்த புராஜெக்ட் முடிந்து விடும். இப்போதே பாதி வேலைகள் முடிந்து விட்டன. இன்னும் கொஞ்ச வேலைகள் தான் பாக்கி. நீங்கள் நம்பலாம். நாங்கள் எப்போதுமே ரெராவில் குறித்த தேதியை விட முன்னதாகத்தான் வீட்டை ஒப்படைப்போம். 70 ஆண்டு பாரம்பரிய நிறுவனம்..அது..., இது..’  என கெஞ்சாத குறையாக எங்களை கன்விஸ் செய்தார்கள். அவர்கள் சொன்னதை நம்பியும்., பெரிய பாராம்பரிய நிறுவனம் நம்மை ஏமாற்ற மாட்டார்கள் என நம்பியும்.,, படிக்காத பாமரர் போல நாங்கள்  90% பணத்தையும் வங்கியிலிருந்து வாங்கி பணத்தைக் கட்டினோம். 

அவர்களும்  செப்டம்பர் 2018 இல் வீட்டைத் தருவதாக ஒப்பந்தத்தினை வரைந்து தந்தார்கள்.
ஆனால், 2018, செப்டம்பரில் எந்த அறிவிப்பும் அவர்களிடமிருந்து வராததால் அலுவலகம் சென்று விசாரித்தேன். ‘டைல்ஸ் மட்டும் ஒட்ட வேண்டும். அடுத்த மாதம் வாருங்கள்’ என்றார்கள். அடுத்த மாதம் போனால், ‘குழாய் போட வேண்டும்’ என்றார்கள். இப்படியே ஒவ்வொரு மாதம் கடத்திக் கொண்டு போய்.. இப்போது போய் கேட்டால் ‘நான்  அந்த புராஜெக்டை  பார்க்கவில்லை. வேறு ஒரு அதிகாரியைப் போய் பாருங்கள்’ என்று அலைகழிக்கிறார்கள்.  

இதற்கு நடுவே அந்த நிறுவனத்தில் வேலை செய்த எங்களுக்கு அறிமுகமான நபரும் வேலை விட்டு விலகிச் சென்று விட்டார். யாரைக் கேட்பது? என்று தெரியவில்லை. ஒரு கட்டத்தில் அந்த நிறுவனமே “நாங்கள் ரெராவில் உள்ள தேதியின் படி தான் வீட்டை ஒப்படைப்போம். அதாவது  ஜுன் 2019 தான் எங்கள் இலக்கு’ என்று திமிராகச் சொல்கிறது. அப்படியயன்றால் வீட்டை புக்கிங் செய்யும் போது ஏன் எங்களிடம் தவறான வாக்குறுதி தந்து எங்களிடம் பணம் பிடுங்கினார்கள்?. எங்கள் பணத்திற்கு இந்த ஒன்னரை ஆண்டுகாலத்திற்கான வட்டி என்ன ஆயிற்று? வீட்டு வாடகையை யார் கட்டுவது?

ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு பொறுமையாக இருந்தோம். எப்படியும் ஒன்னரைஆண்டு இழுத்து கொண்டு போய் ரெராவில் குறித்த தேதியின் படி ஒப்படைப்பார்கள். வேறு வழியே இல்லை. ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். அந்த தேதியிலேயே வாங்கிக் கொள்ளலாம். வீட்டை விற்பதற்காக பொய் சொல்லி  நன்றாக ஏமாற்றி விட்டார்கள். 

மேற்படி நட்டத்தை ஏற்றுத்தான் தீர வேன்டும். என மனதைத் தேற்றிக்கொண்டோம். ஆனால், கொடுமை என்னவென்றால்., இவர்கள் 2019 ஜூன்  மாதம் கூட வீட்டைக்கட்டி ஒப்படைக்க மாட்டார்கள் என்று தான் தோன்றுகிறது. சைட்டில் போய் பார்த்தால் வேலைகள் நடக்கவில்லை. எங்களைப் போலவே இந்த புராஜெக்டில் பலரும் இந்த நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். எங்களுக்கு வீடு எப்போது கிடைக்குமோ? எனத் தெரியவில்லை’’ என்றார் மன வருத்தத்துடன்.

அவர்கள் சொன்ன நிறுவனத்திடம் நாமும் தொலைபேசியில் பேசினோம். அவர்கள் நமக்கும் சரியான தகவலை, அல்லது பதிலைச் சொல்லவில்லை. இத்தனைக்கும் நமது பத்திரிகையே அவர்களை சென்னையின் நம்பத் தகுந்த 30 பில்டர் லிஸ்டில் தேர்ந்தெடுத்து சிறப்பு செய்திருந்தது.

இந்த நிறுவனத்தின் அடாவடி செயல் பற்றி கிரடாயில் கொடுக்கப்பட்டிருந்தாலும்  எவ்வித நடவடிக்கையும் இல்லையாம்.

இது பற்றி ஒரு ரியல் எஸ்டேட் ஆலோசகர், & நிதி நிபுணரிடம் கேட்ட போது, தன் பெயர் வெளியிட வேண்டாமென கேட்டுக்கொண்டு,‘‘பெரிய நிறுவனம் என்னும் போர்வையில் நாணயம் தவறி நடந்துக் கொள்வது இது ஒன்றும் புதிதல்ல. டிஎல்ப் ,மார்க், சாரா போன்ற பல நிறுவனங்கள் இந்த வேலையைச் செய்கின்றன. பணத்தை வாங்கி 5 ஆண்டுகள் கழித்துக் கூட வீட்டைக் கட்டித் தருவதில்லை.  நம் ஊரில் இதெற்கெல்லாம் உடனடி சரியான சட்ட தீர்வு இல்லை.

இதற்காக பொதுமக்கள் நீதிமன்றம் போனால் கிரிமினல் வழக்காக அல்லாமல், சிவில் வழக்காக பதிவாகும் போது நீண்ட நாள்கள் கழித்து தான் நீதியே கிடைக்கும். அதுவரை நமக்கு ஏற்படும் பணக்கஷ்டமும், மனக்கஷ்டமும் யார் எதிர்கொள்வது?

இந்த போரூர் தம்பதியினரின்  புகாரையே எடுத்துக் கொள்ளுங்கள். எப்படியாவது அவர்களிடமிருந்து பணம் பெற்று விடுவதற்காக ஆறே மாதத்தில் வீட்டை தருவதாகச் சொல்லி, பணத்தை வாங்கிய பிறகு இப்போது ரெரா தேதிக்கு  இழுத்துக் கொண்டு  வந்து விட்டார்கள். 

ரெரா தேதியிலாவது வீடு கிடைக்காதா? என்னும் மன நிலைக்கு  வாடிக்கையாளர்களை ரொம்ப சாமார்த்
தியமாகக் கொண்டு வருவது தான் அவர்களின் இலக்கு. ரெராவில் இருந்தால் கூட குறிப்பிட்ட தேதியில் வீடு கொடுக்காமல் அந்தப் புராஜெக்டை இன்னும் இழுத்தடிக்க அவர்களால் முடியும். பொது மக்களிடமிடருந்து  வட்டி இல்லாமல் முதலீடு பெற இப்படி செய்கிறார்கள். 

மேலும், “மனை விலை ஏறி விட்டது, கட்டுமானப் பொருள் விலை ஏறிவிட்டது. இன்னும் பணம் கொடுங்கள்’ எனக் கேட்போரும் உண்டு, இன்னும் சில நிறுவனங்கள் இந்த புராஜெக்ட் லேட் ஆகும். புக்கிங் சரியாக இல்லை. எங்கள் இன்னொரு புராஜக்டில் வீடு இருக்கு. வாங்கிக் கொள்கிறீர்களா? இங்கிருந்து சில கி.மீ தூரம் தான். ஆனால் கூட சில லட்சங்கள் ஆகும். என நா கூசாமல் கேட்கிறார்கள். இதையயல்லாம் முறைப்படுத்துவது தான் ரெரா என ஒருவர் நம்பினால் ,அவரைப் போல  முட்டாள் யாருமில்லை..’’என்றார் காட்டத்துடன்.

மேலும், அவர். ‘‘மவுலிவாக்கம் கதை என்ன ஆயிற்று? அந்த புராஜெக்டில் வீட்டை வாங்கிய வாடிக்கையாளர்கள் புக்கிங் பண்ணும் போது 10%, அஸ்திவாரம் போது 15%, தளம் போடும் போது 45 % பெயின்டிங், பிளம்பிங் என வீடு ஒப்படைப்பு தேதி என பல படிநிலைகளில் குறிப்பிட்ட சதவீத கட்டணம் செலுத்தினார்கள். ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஏறக்குறைய 60%  க்கும் மேல கட்டணம் செலுத்திய பிறகு. கட்டடம்  இடிந்து விட்டது. இப்போது யாருக்கு நட்டம்? கட்டி முடித்த வீட்டை வாங்கி இருந்தால் இந்த நட்டம் ஏற்பட்டிருக்குமா?

நீங்கள் வீட்டை வாங்க முடிவு செய்துவிட்டீர்கள் என்றால், குடியேற ரெடியாக இருக்கும் வீடு தான் சரி. கை மேல காசு, வாயில் தோசை. இதைத் தான் செய்ய வேண்டும். பூமி பூஜை போட்ட உடனே காலி இடத்தை பார்த்து, எலிவேrனை பார்த்து விட்டு வீட்டை புக்கிங் செய்ய ஆசைப்படாதீர்கள். 

ரியல் வீட்டை, ஃபினி´ங் ஆன வீட்டைப் பார்த்து பணம் கட்டுங்கள். கட்டி முடித்து விற்பனை ஆகாத எத்தனையோ ஆயிரம் வீடுகள் நகரத்தில்  உள்ளன. அவற்றில் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். வராத பண்டிகைக்கு ஏன் துணிமணி  வாங்கி வைத்து காத்திருக்க வேண்டும்?.
 
ஆனால், முதலீட்டு நோக்கிற்காக வீடு வாங்கு வோருக்கு இது பொருந்தாது’’ என்றார் ஆனால், காஞ்சிபுரம்  மாவட்டத்தைச் சேர்ந்த கட்டுநர் ஒருவர் கூறும்போது, “சார்! பில்டர்களுக்கு ஆதரவாய் பேசுகிறேன் என நினைக்காதீர்கள். எந்த பில்டரும் வேண்டுமென்றே வீட்டைத் தராமல் இழுத்தடிக்க நினைக்க மாட்டார்கள். சமயம், சந்தர்ப்பம், அரசு கொள்கைகள், திடீர் வரிச்சுமை, நிதி சுணக்கம், ஸ்லோ புக்கிங் நிறைய காரணங்கள் உண்டு. 
ஆனால், அதை தவிர்க்கத்தான் ஒரு புராஜெக்டிற்காக திரட்டிய நிதியை அந்த புராஜெக்டிற்கே போட வேண்டும் என விதி இருக்கிறது. ஆனால், இந்த புராஜெக்டை முடிக்க நிதி இல்லாத போது வேறொரு புராஜெக்டிலிருந்து  நிதி எடுத்து விடுகிறார்கள். அதனால், அந்த வேறொரு புராஜெக்ட் ஸ்தம்பித்து விடுகிறது.
ஆனாலும், இதெல்லாம் கட்டுநர் பிரச்சனை. வாடிக்கையாளர் தலை மீது சுமத்தக் கூடாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். கட்டுனர் குறிப்பிட்ட ரெரா தேதியிலிருந்து வீட்டைத் தராமல் தள்ளிப்போனால் நாம் அவர்களைச் சாடலாம்.  கிரடாய் உறுப்பினர் என்றால் கிரடாய்  அலுவலகத்தில் புகார் தரலாம். பிஏஐ உறுப்பினர் என்றாலும் புகாரளிக்கலாம்.

முக்கியமாக வீடு  வாங்கும் வாடிக்கையாளர்கள்  ரெராவில் சொல்லப்படிருக்கும் பணிநிறைவு நாளை 
மட்டுமே நினைவில் கொள்ள வேண்டும். அந்த மார்க்கெட்டிங் ஆட்கள் சொல்வதைக் கேட்காதீர்கள். அவர்கள் சொல்வதெல்லாம் நிறுவனத்தின் கருத்தல்ல. அவர்கள் தங்கள் இலக்கைத் தொட ஆயிரம் வாக்குறுதிகளை அள்ளி வீசுவார்கள். அதை நாம் நம்பி விடக்கூடாது.  “ரெரா தேதிக்கு முன் தருகிறேன்‘ என இப்போதுள்ள சூழ்நிலையில் எந்த பில்டர் சொன்னாலும் அதன் உண்மைத் தன்மையை  ஆராய வேண்டும்.

ஏனெனில், குறித்த நாளுக்கு முன்னே ஒரு பில்டர் புராஜெக்டை முடிக்கிறார் என்றால், அதற்கு அந்தப் புராஜெக்டின் எல்லா வீடுகளும் விற்றிருக்க வேண்டும். நிலைமை இப்போது அப்படியா இருக்கிறது? 
பில்டர்கள் ஒரே நேரத்தில் தன் சக்திக்கு மீறி பல புராஜெக்ட்களை செய்யும் போது நிதி நெருக்கடி ஏற்பட்டு, அதனால் தனது இத்தனை ஆண்டுகாலம் சேர்த்து வைத்த நற்பெயர், பாரம்பரியம், புகழை இழந்து விடுகிறது. அதே போல, எந்த ஒரு நிறுவனத்தையும் அதன் ஒரே தவறான செயல் பாட்டிற்காக குறைவாக மதிப்பிட்டு விடக் கூடாது என்பது என் கருத்து’’ என்றார் அந்தப் பெயரை வெளியிட விரும்பாத கட்டுநர்.

கட்டுநர்கள் யாரும் வேண்டுமென்றே வீட்டை ஒப்படைக்க தாமதம் செய்வதில்லை என்பது உண்மையாகவே  இருக்கட்டும். ஆனால் அது எப்படி பணம் செலுத்தியும் வீடு கிடைக்காமல் அல்லாடும்  மக்களுக்கான தீர்வாக இருக்கும்? இதே போல சாரா ஹோம்ஸ் என்னும் இந்திய அளவிலான கட்டுமான நிறுவனத்தில் சிங்கப் பெருமாள் கோவில் பகுதியில் தனிவீடு வாங்க  தலா 20 லட்சம் வரை கட்டி பல  ஆண்டுகளாகியும் வீட்டைப் பெறாமல்  பல வாடிக்கை யாளர்கள் இழுத்தடிக்கப் படுகிறார்கள் என்கிற செய்தி வெளிவந்துள்ளது. 

அவர்களில் 5 பேர் சமீபத்தில் நமது அலுவலகத்திற்கு வந்து  நேரில் புகார் தந்தார்கள். 400 க்கு மேற்பட்ட வீடுகள் உடைய அந்தப் புராஜெக்டில் வீட்டை ஒப்படைப்பாதாகச் சொன்ன தேதியைத் தாண்டி 2 ஆண்டுகளாகியும்இது வரை யாருக்குமே வீடுகள் ஒதுக்கப்பட வில்லை’ என்னும் உண்மையைச் சொல்லி நம்மை பகீரென அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு “சட்ட ரீதியான உதவி களை நிச்சயம் செய்வோம்’ என்று உறுதி கூறிஅனுப்பி வைத்தோம்.
நமக்குத் தெரிந்து இது ஒன்றிரண்டு புகார்கள் தான். இது போல நிறைய நிறுவனங்கள் பொது மக்களை வெறும் நிதி திரட்டும் இயந்திரமாக பார்க்க ஆரம்பித்து  பலகாலம் ஆகி விட்டது. 

இது பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போகிறேன் என சொன்னால், “வீடு, சொத்து வழக்கு  சீட்டிங் மற்றும் கிரைம் பிரிவில் வராது. இது சிவில் வழக்கு. நீதிமன்றத்தை நாடுங்கள்’ என சம்பந்தப்பட்ட  கட்டுமான 
நிறுவனமே சொல்கிறது என்றால் வீடு வாங்க ஆசைப்படும் அப்பாவி பொது மக்களை இந்த நாட்டின் நீதி அமைப்புகள் எப்படி காக்கிறது  பாருங்கள்?.

தன் வாழ்நாளெல்லாம் சம்பாதித்தப் பணத்தை ஒரு நேர்மையற்ற கட்டுமான நிறுவனத்திடம் தந்து அல்லல் படும் வாடிக்கையாளரை அலைகழிக்கும் ஈனச்செயலை செய்யும் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு 
மட்டும் தீங்கு விளைவிக்கவில்லை.

இனி வீடு வாங்கும் எண்ணம்  தன் தலை முறைக்கே வேண்டாம் என  பொதுமக்கள் அலறுகிற வாய்ப்பிருப்பதால் கட்டுமானத் தொழிலுக்கும். ,நேர்மையாக தொழில் செய்யும் சக கட்டுநர்களுக்கும் கூட அவர்கள் தீங்கினை விளைவிக்கிறார்கள் என்பதை நாம் சொல்லவும் வேண்டுமோ..?

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067769