2020 ஐ நெருங்கும் இந்தக் காலக்கட்டத்திலும் மதுரையின் கட்டுமானச் சந்தை பெரிய அளவில் எழுச்சி காணப்படாமலேயே இருக்கிறது. மதுரையின் பல முன்னணி கட்டுனர்கள் கூட., விசாரித்தால் தற்போது கைவசம் புராஜெக்டுகள் இல்லை என்று தான் சொல்கின்றனர். சொந்தமான மனைகள் இருந்தும் பல புதிய புராஜெக்டுகளைத் துவங்காமல் உள்ளனர். சிலர் பாராளுமன்ற தேர்தலுக்குப் பின் ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கும் என்றும்., சிலர் 2020 க்கு பிறகு தான் எதையும் சொல்ல முடியும் என்றும் சொல்கின்றனர்.
சென்னை, கோவையுடன் ஒப்பிடுகையில், மதுரையில் நகரப் பரவலாக்கம் என்பது மிக மந்தமாகவே உள்ளது. மாநகராட்சி விரிவாக்கத்தில் ஆனையூர், உத்தங்குடி, திருப்பரங்குன்றம், அவனியாபுரம் இணைக்கப்பட்டாலும் அவையாவும் தனித்தனி ஊராகவே இன்னும் பிரிந்து கிடக்கிறது. அந்தப் பகுதிகளில் நல்ல சாலை வசதிகளோ, பாதாளச் சாக்கடை வசதிகள், குடிநீர் விநியோகம் பரவலாக்கப் படவில்லை. அதனால் மக்கள் அங்கு மனைகள் வாங்க யோசிக்கிறார்கள்.
மதுரை மக்களே வேலை தேடி வெளியூர் செல்லும் சூழலில் வீட்டு மனை விற்பனை என்பது அரிதாகிவிட்டது. வட மாநில வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்த மதுரையைத் தற்போது தேர்ந்தெடுத்துள்ளதால், அவர்களால் சில அடுக்குமாடிகள் நிரம்பியுள்ளது.
முத்திரைத் தாள்: கட்டண உயர்வால் வீட்டு மனைப் பிரிவுகள் விற்பனை ஆகாமல் ரியல் எஸ்டேட் முதலாளிகள் பலர் கடன்காரர்களாகி உள்ளனர். தவணை முறைத் திட்டத்தில் பணம் வசூலித்து, கருவேல மர காட்டுக்குள் மனைப்பிரிவை போட்டவர்கள், வீட்டு மனைகளைப் பத்திரம் செய்து தராமல் இழுத்தடித்து வருவதும் ஓரிரு இடங்களில் பிரச்னையாகி இருக்கிறது. ஓரளவு தண்ணீர் வசதியுள்ள திருப்பாலை, ஊமச்சிகுளம், நாகமலை புதுக்கோட்டை, சிக்கந்தர் சாவடி, விளாங்குடி, உயர்நீதி மன்றக் கிளை அமைந்திருக்கும் ஒத்தக்கடை, உத்தங்குடி, புது தாமரைப்பட்டி, கொடிக்குளம் பகுதிகளில் பலர் வீடுகள் கட்டி வருகிறார்கள்.
வீட்டு மனைகள் விற்பனை ஆகாததால், பல புரமோட்டர்கள் குறைந்த விலையில் வீடுகள் கட்டித் தவணை முறையில் கொடுக்கத் துவங்கியுள்ளனர். ஐந்து வருடங்களுக்கு முன்பு, மதுரையில் அபார்ட்மென்ட் வீடுகளுக்கு என்ன விலை இருந்ததோ, அதே விலையில் இப்போதும் கிடைக்கிறது. எஸ்.எஸ். காலனியில் பல அடுக்குமாடிகள் விலை போகாமல், புரமோட்டர்களே வாடகைக்கு விடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது போன்ற நிலை தமிழ் நாட்டில் வேறெங்கும் இல்லை. பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்தால், ‘‘2017-2018-ல், அதற்கு முந்தைய ஆண்டுகளில் நடந்த பத்திரப்பதிவைவிட மிகவும் குறைவாகவே நடந்துள்ளது. கிட்டத்தட்ட 50 சதவிகிதத்துக்கும் குறைவாகவே நடந்துள்ளது என்கிறார்கள்.
சரி. மதுரை, தேனி, பழனி,திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் நிலவரம் என்ன? சிக்கல்கள் என்ன ?
பொறி.எம். நாகராஜன் , ஒட்டஞ்சத்திரம், தலைவர், பேஷியாட் ,
“”சுமார் 2,00,000 மக்கள் தொகை உடைய எங்கள் ஊரில் தனி வீடுகளுக்கான சந்தை மட்டுமே உள்ளது. ஆனால், தற்போது பெரிய அளவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. பொருளாதார சூழல் ஒரு புறம் காரணமாக இருந்தாலும் அரசு நிர்வாக மெத்தனமும் பெரிய பங்கை வகிக்கிறது. ஒட்டன் சத்திரம் நகராட்சி அந்தஸ்து பெற்று 10 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் எங்களுக்கென தனி டிபிஓ (Town Planning Officer) அல்லது டிபிஐ (Town Planning Inspector) இல்லை. இதனால் கட்டிட அனுமதி மிகவும் தாமதமாகிறது. எங்களுக்கென டிபிஐ அதிகாரி உடுமலைப் பேட்டையிலிருந்து வாரம் ஒருதடவை வருவதால் ஒட்டன் சத்திரத்தில் எல்லா கட்டுமானங்களுமே குறித்த நேரத்தில் அனுமதி பெற்று கட்டப்படுவதில் வீண் தாமதம் ஏற்படுகிறது’’.
பொறி. எஸ்.மெல்வின், செயலாளர் ,பே´யாட் ,தேனி.
“”மூன்று லட்சம் பேருக்கு மேல் இருக்கக் கூடிய தேனி மாவட்டத்தில் மனை விற்பனை, தனி வீடுகள் விற்பனை என்பது பெரிய அளவில் இல்லை.4 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விறு விறுப்பு இப்போது இல்லை. பொது மக்களிடையே வீடு வாங்கும் & கட்டும் ஆர்வமும் வெகுவாக குறைந்துவிட்டது. தேனி டவுனைப் பொறுத்தவரை அரசுப் பணியாற்றும் அதிகாரிகளும் வெளிநாடுகளில் பணிபுரியும் ஒரு சிலரும் தான் தேனியில் வீடுகளை கட்டுகிறார்கள். பழைய நிலை வருவதற்கு இன்னும் சில ஆண்டுகளாகும் என்பது தான் என் கணிப்பு’’.
பொறி. மணி, தலைவர், ஏ.சி.இ.எம் - (அசோசியேஷன் ஆஃப் சிவில் இன்ஜினீயர் ஆஃப் மதுரை) ACEM
‘மதுரையில் ஒரு சில இடங்களில் வேகமாகவும், ஒரு சில இடங்களில் சுமாராகவும் புராஜெக்டுகள் நடந்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளை விட இந்த ஆண்டு பொறியாளர்கள் பிஸியாக இருக்கிறார்கள். அழகர் கோவில், பரவை, அலங்கா நல்லூர் ரோடு, இங்கெல்லாம் வீடுகள் கட்டப்பட்டு விற்கப்படுகின்றன. நாகமலை, புதுக்கோட்டை, கற்பாவூரணி ஆகிய பகுதிகளிலும் நாம் புராஜெக்டுகளை பார்க்க முடியும்.
மதுரை கட்டுமானத்துறைக்கு எம்சேண்ட் ஒரு பிரச்சினையாக இருக்கிறது. தரமான எம் சேண்ட் வேண்டுமெனில் அருப்புக்கோட்டை, வாடிப்பட்டி குவாரியிலிருந்து வருகிறது. அதற்கு இரண்டு நாட்கள் ஆகிவிடுகிறது. வேறு இடங்களில் வரும் எம் சேண்டில் தூசு அதிகம் இருக்கிறது. பொதுவாக பொதுமக்கள்
எம் சேண்ட் என்றாலே புறக்கணிக்கிறார்கள். அவர்களை வற்ப்புறுத்துவது என்பதே பெரிய வேலையாக இருக்கிறது. மேலும் செங்கல்லின் விலை நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறது. ஒரு கல்லின் விலை ரூ. 6 லிருந்து ரூ. 9 ஆகிவிட்டது.
இது தவிர, மதுரையை ஆட்டி படைக்கும் சில பிரச்சினைகள் உண்டு. நகராட்சி நிர்வாகத்தின் தலையீடுகள், குறுக்கீடுகள், புதுப்புது விதிகள், வரிகள் போன்றவை ஸ்தம்பிக்க வைக்கிறது. திடீரென புராப்பர்ட்டி டேக்ஸை இரு மடங்காக உயர்த்திவிட்டார்கள். இதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. ரூ.5000 கட்டுபவர்கள் ரூ. 10000 கட்ட வேண்டுமென்றால் வீடுகளை கட்ட ஆசைபடும் மக்களுக்கு இது தயகத்தை ஏற்படுத்திருகிறது அதே போல இதற்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடங்களுக்கு அதன் விதி மீறலை காரணம் காட்டி 50,000 ஒரு லட்சம் என அபராதம் போடுகிறார்கள். 20 லட்சம் சொத்துக்காரார்களுக்கு ஒரு லட்சம் அபராதம்என்பதே பெரிய சுமை அல்லவா? இப்படி அபராதம் கட்டுவதால் அந்த கட்டடம் சரியாகிவிட போகிறதா. ஒரு விதி மீறல் கட்டடம் உருவாகும் வரை அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நகராட்சி நிர்வாகம் என்ன செய்கிறது. மக்களை தவறு செய்ய விட்டுவிட்டு அதன் பின் அபராதம் போடுவது என்பது சரியான முறைதானா?
இதுமட்டுமல்ல வீதியின் அகலத்தை இவர்களே குறைக்கிறார்கள். 60 அடி சாலை, 40 அடி ஆகிறது. 40 அடி சாலை 20 அடி ஆகிறது. இது மட்டும் விதி மீறல் இல்லையா?
மேலும் மீனாட்சி கோயிலை சுற்றி 27 அடி உயரத்திற்கு மேல் கட்டக்கூடாது என்னும் விதி இருக்கிறது. அதாவது இரண்டு அல்லது மூன்றுமாடி தான் கட்டமுடியும். ஆனால் சர்வ சாதாரணமாக ஐந்து மாடிக்கு மேல் விதி மீறல் கட்டடம் கட்டுவதற்கு அனுமதி தரப்படுகிறது. அப்படி விதி மீறல் கட்டடத்திற்காக திட்ட வரவை தரும்படி பொறியாளர்கள் நிர்பந்திக்கப்படுகிறார்கள். தேசிய அளவில், மாநில அளவில் கட்டுமானத்துறைக்கு உள்ள பிரச்சினைகள் போதாது என உள்ளூர் பிரச்சினைகளும் தலைவிரித்து ஆடுகிறது. இதெல்லாம் தீர்ந்தால் தான் மதுரை கட்டுமானத்துறை உன்னத நிலைக்கு வரும்’’ என்றார்.
திரு.சிவகுமார், செயலாளர், பி.ஏ.ஐ மதுரை கிளை,
“”மதுரை ரியல் எஸ்டேட் அடுக்குமாடிச் சந்தையை விட, தனி வீடு சந்தையை சார்ந்ததாகும். கடந்த சில ஆண்டுகளாக இருந்த மந்தநிலை விலகி தற்போது ரியல் எஸ்டேட் சந்தை சுறுசுறுப்பாகி வருகிறது. அழகர் கோவில், ஒத்தக்கடை, புதுத்தாமரைப்பட்டி, மேலூர் வரை வீடு,மனை சந்தை ஓரளவு பிக்கப் ஆகி இருக்கிறது. தேர்தலுக்குப் பிறகு இது இன்னுமும் சூடு பிடிக்கும் என நம்புகிறேன்.
மனை விற்பனையை பொறுத்தவரை லேஅவுட் புரோமோட்டர்கள் போதுமான அகலத்தில் சாலைகள் ,
துணைச் சாலைகள் அமைக்காமல் இருப்பது, நல்ல தரமான தார்ச்சாலையை போடாமல் இருப்பது தான் எதிர்
காலத்தில் நெருக்கடியை உருவாக்குகிறது. இந்த குறை பாடுகளை அவர்கள் தவிர்த்தால் என்றால் மதுரையின் ரியல் எஸ்டேட் வளர்ச்சி இடையூறின்றி வளரும்’’ என்பது என் கருத்து என்றார்.
பொறி.குணசேகர், AMCE நிறுவனத் தலைவர் மதுரை (அசோசியேrன் ஆஃப் மதுரை சிவில் இன்ஜினீயர்)
இங்கு கட்டுமானத் தொழில் கொஞ்சம் கொஞ்சமாக மெருகேறி வருகிறது. சிமெண்ட் விலை கட்டுப்படுத்தி விட்டால் சிறப்பாக இருக்கும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் நமது மாநிலத்தில் தான் சிமெண்ட் விலை அதிகமாக இருக்கிறது.
மனை விற்பனை எடுத்துக்கொண்டால் மதுரைக்கு அருகே 12 கி. மீ. தொலைவில் உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவ மனைப் பற்றிய அறிவிப்பு வெளியானதால் தோப்பூரில் மற்றும் தோப்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மனையின் விலை அதிகரித்து வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைப் புராஜெக்டிற்க்கான நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதாக அறிவிப்பு வரும்போது மனை விலை இன்னும் பன்மடங்கு அதிகரிக்கும். அங்கு நிறைய கட்டுமானப் புராஜெக்டுகள் துவங்கப்படும். இது இன்டஸ்ட்ரிக்கு நல்லது.
ஆனால், மதுரை மக்களின் காஸ்ட் ஆப் லிவ்விங் கூடுவதற்கு வாய்ப்புள்ளது’’ என்றார்.
பொறி. ஜான் சந்தியாகு, திண்டுக்கல் நிறுவனத் தலைவர், பேஷியாட்
“”திண்டுக்கல் மாவட்டம் மட்டுமல்ல , தமிழக அளவில் கொத்தனார்கள் களப்பணி ஆற்றுவது தான் மிகப் பெரிய இடையூறாக இருக்கிறது. ஒரு நகரம் என்றால் முறையான ஒழுங்கான சமச்சீரான, கட்டடங்கள் இருக்க வேண்டும். ஆனால் பொறியியல் அறிவு இல்லாமல், கட்டுமான விதிகளை எதையும் பின்பற்றாமல் சுற்றிலும் இடைவெளி தராமல் நெருக்கடியாக வீடுகளை உருவாக்கி நகரின் அழகையே கெடுத்துவிடுகிறார்கள்.
திண்டுக்கல் போன்ற சிறிய நகரங்களில் வீடுகளைக் கட்டும் கொத்தனார்களை கட்டுப்படுத்தக் கூடிய அவர்களது கட்டிடங்களை கண்காணிக்கக் கூடிய எந்த ஒரு அமைப்பும் இல்லை. இதனால் சிவில் பொஷீயியல் படித்த பொஷீயாளர்களுக்கு போதுமான வேலை வாய்ப்பு உருவாகுவதில்லை. தரமான கட்டுமானங்களை உருவாக்கக்கூடிய அவசியம் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படும்போது தான் தமிழகம் முழுக்கவே கட்டுமானத்துறையின் வளர்ச்சி எழுச்சி பெறும்’’ என்றார்
பொறி. விஜய் அமிர்த ராஜ், தலைவர், பேஷியாட், பழனி
கடந்த 4 ஆண்டுகளாகவே ரியல் எஸ்டேட் துறை தேங்கித் தான் கிடைக்கிறது. ஆனால் பழனி கட்டுமானத்துறையில் தற்போது உருவாகியுள்ள பிரச்சினை எதுவென்றால் வேலையாட்கள் பற்றாக்குறைதான். பழனியில் புகழ்பெற்ற முருகன் கோவில் உள்ளது. அங்கு வரும் யாத்ரிகர்களுக்கு, பயணியர்களுக்கும் சேவை செய்ய பெருமளவில் ஆட்கள் சென்றுவிடுகிறார்கள். அங்கு கடைகள், ஓட்டல்கள், போன்றவற்ஷீல் வேலைச் செய்தால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.
எனவே, பழனியில் விவசாயத்திற்கு, கட்டுமானத்துறைக்கும் போதுமான அளவு ஆட்கள் கிடைப்பதில்லை. திருச்சி, கோவை போல இங்கு வடமாநில தொழிலாளர்களும் கிடையாது என்பதால் கட்டுமானப் பணிக்கு ஆட்கள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது’’ என்றார்.
பொறி.ஜாஹிர் உசேன், தலைவர்,தேனி பி.ஏ.ஐ தேனி கிளை,
“”கடந்த 5 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் 2019ன் துவக்கம் சிறப்பாகவே இருக்கிறது. தேர்தல் காலத்திற்கு பிறகு இன்னும் ஏற்றம் பெறும் என்றே நம்புகிறோம். பிரச்சினைகள் என்று பார்த்தோம் என்றால் உரிய வேலையாட்கள் தேவையான அளவில் கிடைப்பதில்லை. எனவே கேரளாவிலிருந்து ஆட்கள் வேலைக்கு வருகிறார்கள். அவர்களுக்கு அதிக அளவில் சம்பளம் கொடுக்க வேண்டியதாக இருக்கிறது. எம்.சாண்ட் பொருத்தவரை எங்களுக்கு தாராளமாக கிடைக்கிறது என்றாலும் பொதுமக்கள் ஆற்று மணல் தான் வேண்டும் என்கிறார்கள்.
எனவே, அரசு பொது மக்களுக்கு எம்.சாண்ட் குறித்த விழிப்புணர்வை அதிக அளவில் ஏற்படுத்த முன்வர வேண்டும்’’ என்றார். விரைவில் மதுரை ரியல் எஸ்டேட் மறுபடி வீறு கொண்டு எழ காத்திருப்போம்.
மதுரை விலை நிலவரம்...
அடுக்குமாடி (சதுர அடி, விலை ரூபாயில்)
எஸ்.எஸ்.காலனி : 5,500 - 6,500
பைபாஸ் ரோடு : 4,750 - 5,800
சிக்கந்தர் சாவடி : 3,500 - 4,500
விராட்டிபத்து : 2,800 - 3,900
மாடக்குளம் : 2,850- 3,900
பாத்திமா காலேஜ் : 4,500 - 5,500
மனை விலை (ச.அடி, ரூபாயில்)
பைபாஸ் ரோடு : 2500 - 3500
வளர்நகர் : 1000 - 1700
உத்தங்குடி : 1,700 - 2,200
கருப்பாயூரணி : 600 - 1,100
திருப்பரங்குன்றம் : 1,700 - 2,200
ஒத்தக்கடை : 1,100 - 1,700
திருநகர் : 1,500 - 2,200
தனக்கங்குளம் : 900 - 1,500
பாத்திமா காலேஜ் : 1700- 2400
விளாங்குடி : 1,100 - 2,200
கோச்சடை : 1,300 - 2,700
விராட்டிபத்து : 1,200 - 1,400
கடச்சநேந்தால் : 1,100 - 2,200
நாகமலை
புதுக்கோட்டை : 900-1,600
அவனியாபுரம் : 700 - 1,600
கூடல் நகர் : 1,100 - 1,700
ஆனையூர் : 800 - 1,700
திருப்பாலை : 1,900 - 2,700
ஊமச்சிகுளம் : 900 - 1,600
திருமங்கலம் : 350 - 1,100
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067743
|