தீதும் நன்றும் பிறர் தர வாரா!

24 ஜனவரி 2024   05:30 AM 15 ஏப்ரல் 2019   11:40 AM


இதோ இன்னுமொரு தேர்தல்! நமக்கான விடியலை நாமே உண்டாக்கிக் கொள்ள ஜனநாயக வாய்ப்பு. ஏனெனில் அரசியலும், தேர்தலும் தான் நமது  தொழிலையும், வாழ்வையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்குகின்றன. 

இப்போதெல்லாம் எந்தத் துறையைச் சார்ந்தவராகவும், தொழிலைச் சார்ந்தவராகவும், எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தாலும் அவர்களிடம் “உங்கள் ஊரில் உங்கள் தொழில் அல்லது பணவரவு எப்படி இருக்கிறது?’ எனக் கேட்டுப் பாருங்களேன். யாருமே  “சிறப்பாக இருக்கிறது’  எனச் சொல்வது கிடையாது. “ தொழில் செய்வது மிகவும் கடினமாக இருக்கிறது’ என்று தான் நொந்து போய் கூறுகிறார்கள்.

வணிக வளாகங்கள், கண்காட்சிகள், வியாபர மையங்களில் பொருள்களை வாங்கும் கூட்டத்தைப் பார்ப்பதே அரிதாகி விட்டது. எப்போ வியாபாரம் சூடு பிடிக்கும்? என்று திசை தெரியாமல் வர்த்தகர்கள் விழிக்கிறார்கள். தொழிலதிபர்கள் விரக்தியில் ஆழ்ந்திருக்கிறார்கள். வேலையின்மையால் தொழிலாளிகளும் துயரப்படுகிறார்கள். 

கட்டுமானத்துறைப் பற்றி கேட்கவே வேண்டாம். ஏற்கெனவே பல ஆண்டுகளாக கிடக்கும் குற்றுயிராகக் கிடக்கும் கட்டுமானத்துறையை  “திரும்ப நீ எழுந்துடுவியா?’ என்பது போல் தடி கொண்டு மாறி மாறி தாக்கி இன்னும் அதை செயலிழக்க வைத்து விட்டார்கள் ஆட்சியாளர்கள். அரசியல்வாதிகள்.

ஒன்றா ? இரண்டா ? கட்டுமானத்துறை மீது விழுந்த அடிகள்? மனை வழிகாட்டி மதிப்பை உயர்த்தினார்கள்? ஏற்கெனவே மலை உச்சியில் இருந்த மனை விலை கட்டுக்கடங்காமல் போனது. மனை விலை உயர்வாலும்., கட்டடப்பொருள் விலை உயர்வாலும் வீட்டின் விலை மூன்று மடங்காக உயர்ந்து எட்டாக்கனியாகி விட விளைவு ஒரு பக்கம் வீடு வாங்க ஆளில்லை. இன்னொரு பக்கம் வீட்டை வாங்கும் அளவுக்கு மக்களுக்கு சக்தியில்லை.

கட்டுமானத்துறைப் போன்றே ஒவ்வொரு துறைக்கும் ஏராளமான  சறுக்கல்கள், இடையூறுகள், பிரச்சனைகள். இதெல்லாம் யார் தந்தது? 

சென்ற பல தேர்தல்களில் நாம் செய்த தவறான தேர்வுகளின் மொத்த சாரம்சமும் நம்மீது ஏறி இப்போது சுமையாய் அழுத்துகிறது.வரும் தேர்தலிலாவது வாக்களிக்கும் போது நீங்கள் சார்ந்திருக்கும் துறை எப்படி இருக்கிறது? இந்த துயரம் யாரால் நிகழ்ந்தது? இதற்கு என்ன விடிவு? என்பதை அறிந்து உணர்ந்து வாக்களியுங்கள்.

ஏனெனில், தீதும் நன்றும் பிறர் தர வாரா...

E. உதயகுமார், நிர்வாக ஆசிரியர்

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067745