உங்கள் வீடு தானியங்கியாக வேண்டுமா?

24 ஜனவரி 2024   05:30 AM 27 மார்ச் 2019   10:57 AM


தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த விழிப்புணர்வு மக்களை "ஸ்மார்ட் ஹோம்ஸ்' எனப்படும் தானியங்கி வீடுகளை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. இந்தியாவின் "ஸ்மார்ட் ஹோம்ஸ்'சந்தை, ஒவ்வொரு ஆண்டும் 30 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியடைய வாய்ப்பிருப்பதாக ஓர் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இன்றைய உழைக்கும் வர்க்கம் வசதியான வாழ்க்கையை விரும்புவதும், தொழில்நுட்ப முன்னேற்றமும் தான் இதற்குக் காரணம்.

இப்போது வீடு வாங்குபவர்களில் பெரும்பாலானோர், ஏற்கெனவே தானியங்கி வசதிகளுடன் இருக்கும் வீட்டை வாங்கவே விரும்புகின்றனர். இன்னும் சிலர் வீட்டை வாங்கிய பிறகு, அதில் தானியங்கி அம்சங்களைப் பொருத்திக்கொள்கின்றனர்.இன்றைய பொருளாதாரச் சூழலில், வீட்டையும், ஆற்றலையும் நிர்வகிப்பதற்கு மக்கள் நிலைத்தன்மையுள்ள தீர்வுகளை எதிர்பார்ப்பதே இதற்குக் காரணம்.

அதனால், "ஸ்மார்ட் ஹோம்' சந்தை அதிகரிக்கத் தொடங்கியிருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்றே கூறலாம். நவீனத் தொழில்நுட்பங்கள் வளர வளர, வீடு வாங்குபவர்களின் தேவைகளும் பெரிய
மாற்றத்தை அடைந்திருக்கின்றன. புவிவெப்பமடைதல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், மாற்று எரிசக்தி போன்ற சூழல் சார்ந்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்திருப்பதும் இதற்குக் 
காரணமாகச் சொல்லலாம்.

அத்துடன், தானியங்கி வீடுகளில் இருக்கும் பாதுகாப்பு வசதியும், ஆற்றல் திறன் மிகுந்த இயங்குமுறையும் மக்களை அதிகம் கவர்ந்திருக்கின்றன. உங்கள் வீட்டின் மின் இணைப்புகள், செயல்பாடுகள், வசதிகள் என எல்லாவற்றையும் ஸ்மார்ட் போனிலிருந்தும், கணினியிலிருந்தும் கட்டுப்படுத்த முடியும்.

இப்போதைய பொருளாதார நிலைத்தன்மையற்ற சூழலில், இந்தத் தானியங்கி வீடுகள் விரைவில்
பண மதிப்புக்கு ஏற்ற வகையில் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்கின்றனர் நிபுணர்கள். இதற்கு ஆரம்பகால முதலீடு அதிகமாக இருந்தாலும், நீண்டகால அடிப்படையில் மேம்பட்ட வசதி
களையும், பாதுகாப்பு அம்சங்களையும் சாதகமாகச் சொல்லலாம்.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் கட்டுநர்கள், வீடு வாங்குபவர்களின் இந்தத் தேவையை உணர்ந்து 
தானியங்கி வீடுகளை அமைக்கத் தொடங்கியிருக்கிறார்கள். டெல்லி அருகே குர்கவுனில் ஒரு ரியல்எஸ்டேட் நிறுவனம், "குரலுணரும்' அமைப்புடன் தானியங்கி வீடுகளை வடிவமைத்திருக்கிறது.
ஓரு தானியங்கி வீட்டில், மின்விளக்குகள், வெப்பநிலை, மல்டி-மீடியா, பாதுகாப்பு, ஜன்னல்கள், கதவுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்த முடியும். அதாவது, நாமே இயக்க முடியும்.

எப்படிச் செயல்படும்?

தானியங்கி வீடுகளில், வீட்டு உபயோகப் பொருட்களின் பயன்பாட்டை நேர அடிப்படையில் எங்கிருந்தும் கையாளலாம். உதாரணத்துக்கு, மைக்ரோ அவனை நீங்கள் வீட்டுக்கு வருவதற்கு முன்னால் சூடுபடுத்தி வைக்க முடியும்.

இந்த வீடுகளில், "அலார்ம்' அமைக்கப்பட்டிருப்பதால், நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வீட்டைப் பூட்டிவிட்டு நிம்மதியாகப் பயணிக்கலாம்.உங்கள் வீட்டு ஃபிரிட்ஜின் செயல்பாடுகளையும் விரும்பியபடி கட்டுப்படுத்த முடியும். ஒரு தானியங்கி வீடு, ஃபிரிட்ஜின் உள்ளடக்கங்களைப் பட்டியலிட்டு, அதற்கேற்ற உணவு ஆலோசனைகளை வழங்கும்.

உங்கள் செல்லப்பிராணிகளுக்கு நீங்கள் இல்லாத நேரத்தில் உணவு வழங்கவும் முடியும். அதே மாதிரி செடிகளுக்கும் தண்ணீர் ஊற்ற முடியும்.உங்கள் வெப்பநிலைத் தேர்வைப் பதிவு செய்து, நேரத்துக்குத் தகுந்தபடி உங்கள் தானியங்கி வீடே மாற்றிக்கொள்ளும்.

நீங்கள் இல்லாத நேரத்தில் ஆற்றலைச் சேமிப்பதற்கான ஆலோசனைகளையும் அது வழங்கும். இதனால் மின்சாதனங்களை ஆற்றல் திறனுடன் பயன்படுத்தலாம்.

இந்தியாவில் மூன்று படுக்கையறை கொண்ட ஒரு வீட்டை, அடிப்படை வசதிகளுடன் கூடிய தானியங்கி வீடாக மாற்ற ரூ. 3,50,000 வரை செலவாகலாம்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067805