பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் கட்டும்போது...

24 ஜனவரி 2024   05:30 AM 26 மார்ச் 2019   11:02 AM


கட்டிடங்கள் பல் வகைப்படும், அவற்றின் பயன்பாடுகளும் பல்வகைப்படும். ஒவ்வொரு வகைக் கட்டிடங்களையும் திட்டமிடும் போதும், வடிவமைக்கும் போதும், உருவாக்கும் போதும் சில பொதுவான பாதுகாப்புத் தேவைகளுடன், அவற்றின் பயன்பாட்டுத் தேவைகளுக் கேற்ப பல சிறப்பு அம்சங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் கட்டிடங்கள் அமைக்கப் படுவது அவசியம் என்று முந்தைய கட்டுரைகளில் பார்த்தோம்.. அவ்வகையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் போன்ற பயிலகக் கட்டிடங்களை திட்டமிட்டு கட்டும்போது சிவில் பொறியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள் குறித்து இக் கட்டுரையில் பார்க்கலாம்.

பயிலகக் கட்டிடங்கள் அனைத்தையும் குறித்து முழுமையாய் விவரிப்பது இயலாத காரியம். பயிலகங்கள் பல வகைப் படுகின்றன. பள்ளிக்கூடம் எனக் கூறி விடுகிறோம். ஆனால் அவை பயிலும் மாணவர்களின் வயது வரம்பு மற்றும் பயிலும் கல்வி நிலைக்கேற்ப, ஆரம்பப் பள்ளி, மேனிலைப் பள்ளி எனப் பலவாறு வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு வகைப் பள்ளிகளுக்கும் தேவைகள் வேறுபடுகின்றன. அதுபோலவே, கல்லூரிகளும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, தொழில்நுட்பக்கல்லூரி, சட்டக்கல்லூரி, சமையல் கலைக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி, இசைக்கல்லூரி, திரைப்படக் கல்லூரி, உடற்பயிற்சிக் கல்லூரி, என பலவகைப்படுகின்றன.

 

இங்கும் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி, கொடுக்கப்படும் பயிற்சிகளுக்கு ஏற்ப அந்தந்த கட்டிடங்களின் தேவைகளும், வடிவமைப்பும் வேறுபடுகின்றன. அவை அனைத்தையும் ஒரே கட்டுரையில் எழுதுவது இயலாது. ஆகவே, சில பொதுத் தேவைகள் பற்றி மட்டுமே இங்கு தர விழைகிறேன். அதிலும் குறிப்பாக பள்ளிக்கட்டிடங்கள் குறித்து மட்டும் இக்கட்டுரையில் பார்க்கலாம்.


பள்ளி அல்லது கல்லூரிக்கான கட்டிடத்தைக் கட்டும்போது சிவில் பொறியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1. கட்டிடம், அதன் பயன்பாட்டுக் காலத்தில் அதன்மீது சுமரக்கூடிய அதிக பட்ச பளுவை பாதுகாப்பாகத் தாங்க வேண்டும்.அத்துடன் எதிர்பாராமல் ஏற்படக் கூடிய தீ விபத்து, வெள்ளம், நில அதிர்வு விசை ஆகியவற்றையும் தாங்கக் கூடியதாயிருக்க வேண்டும்.

2. கட்டிடமும், அதன் பகுதிகளும் அவற்றின் பயன்பாட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது உறுப்புகளின் வளைவு, உருவ மாற்றம், அதிர்வு, அடித்தள அமிழ்வு போன்றவை அனுமதிக்கப்பட்ட அளவுகளுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.

3. கட்டிடம் அதிக காலம் உழைக்கக் கூடியதாய் (ஆயுள் உள்ளதாய் ) இருக்க வேண்டும்.
இந்திய தர நிர்ணய குழுமம் (Bureau of Indian Standards) இவற்றிற்காக பல்வேறு விதிகளை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு தேவைகளுக்கு I.S 456, I.S.875, I.S 144435, I.S 1893, 4326, 13828, 13920 மற்றும் National Building Code போன்றவற்றைத் திருப்தி செய்யும் வகையில் கட்டிடம் கட்டப்பட வேண்டும்.

இவை தவிர, குறிப்பாக பள்ளிக் கட்டிடங்களின் அடிப்படைதேவைகள் குறித்து I.S.8827 பல பரிந்துரைகளை முன் வைத்துள்ளது. பள்ளிக் கட்டிடங்களின் வெளிச்சம், காற்றோட்டம், அதற்கான திசையமைப்பு, குறித்து I.S.2440, I.S.7662, I.S.10894 போன்றவையும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பள்ளிக் கட்டிடங்களில் அமைக்க வேண்டிய சிறப்பு அமைப்புகள் குறித்து I.S. 4963 யும், மாணவர்களின் வயதுக்கேற்ற உடல் அளவுகள் மற்றும் அவர்களுக்கான இருக்கை வசதிகள், வகுப்பறை அளவுகள் (நீள, அகல, உயரம்) குறித்து I.S. 4837, 4838, 8827 ஆகியவை பல விவரங்களை அளிக்கின்றன.

இவையன்றி மத்திய அரசும், ஒவ்வொரு மாநில அரசுகளின் கல்வித்துறைகளும் பல சிறப்பு தேவைகள் குறித்து விதிகள் வகுத்துத் தந்துள்ளன. ஒரு பள்ளி மத்திய அல்லது மாநில அரசின் அங்கீகாரம் பெற வேண்டுமாயின், அவை வரையறுத்திருக்கும் விதிகளுக்கேற்ப கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும்.

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067796