பொறியாளரின் தேவையை வலியுறுத்துவோம்! திருச்சி கட்டுமானப் பொறியாளர் சங்கம்

24 ஜனவரி 2024   05:30 AM 09 மார்ச் 2019   06:14 PM


2003 ல் தொடங்கப்பட்ட திருச்சி கட்டுமானப் பொறியாளர் சங்கம் தற்போது 280 உறுப்பினர்களுடன் மாதந்திர மீட்டிங், உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர் செயல்திறன் மேம்பாடு, அன்றாட அலுவல்கள் என பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறது. விரைவில் சொந்த நிலத்தில் கட்டடம் கட்டி குடிபோக இருக்கும் இச்சங்கத்தின் மற்ற விவரங்கள் அறிய முன்னாள் தலைவரும் பேஷியாட் அமைப்பின் மாநில துணைத்தலைவருமான திரு. முரளி குமாரிடம் பேசிய போது, “2003 ல் திருச்சிராப்  பள்ளி கட்டுமானப் பொறியாளர் கூட்டமைப்பு என்ற பெயரில் துவங்கப்பட்ட இச்சங்கத்தின் ஆரம்பக் கால தலைவராக  பொறியாளர் கருணாநிதி பொறுப்பு வகித்தார். அதன் பிறகு பொறி.எஸ்.ஆர்.செந்தில் குமரன், பொறி.செல்வராஜ், நான், பொறி.கனகசபை போன்றோர் பொறுப்பு வகித்து சங்கத்தை வழிநடத்தினோம். 

தற்போது பொறி. ரவிச்சந்திரன் தலைவராக 2018 மே மாதம் முதல் பதவி வகித்து வருகிறார். மாதந்தோறும் சங்கத்  தொழில்நுட்ப கருத்தரங்கை நடத்தி உறுப்பினர்களிடையே தொழில் நுட்ப விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நாங்கள் மிக முக்கியமான நோக்கமாக நினைக்கிறோம். இதற்கென கட்டுமானத்துறையில் மிகச் சிறந்த வல்லுனர்களை அழைத்து வந்து அவர்கள் மூலம் தொழில்நுட்ப விளக்கக் கூட்டத்தை நடத்துகிறோம்.  தமிழ்நாடு அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள பொதுக் கட்டட விதிகளை ஆராய்ந்து அதில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து வலியுறுத்துவதும், சிமெண்ட் விலை போன்ற கட்டிடத் துறை பிரச்சினைகளுக்காக கிராடாய், பி.ஏ.ஐ. போன்ற சங்கங்களுடன் இணைந்து பேஷியாட் மூலமாக 
குரல் எழுப்புவது தான் எங்கள் நோக்கம்’’  என்றார் திரு.முரளிகுமார். 

இவர் விரைவில் ஃபேஷியாட்  மாநில தலைவராக பதவி ஏற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. “நான் மாநிலத் தலைவராக பொறுப்பேற்கும் போது அனைத்து மாவட்ட உறுப்பினர் களுடன் ஒன்றிணைந்து அவர்களின் பேராதரவோடு வீடு கட்டும் ஒவ்வொருரிடமும் ‘பொறியாளர் துணையுடன் தான் வீடு கட்ட வேண்டும்’ என்று வலியுறுத்துவேன். 7,000 சதுர அடிக்கு மேல் வீடு கட்டுவோர் பொறியாளர் துணையுடன் தான் வீடு கட்ட வேண்டும் என அரசு சொல்கிறது. ஆனால், 700 சதுர அடி கட்டுமானம் என்றாலும். பொறியாளர் துணையுடன் கட்ட வைப்பது  தான்” எங்கள் நோக்கம் என்கிறார் முரளிகுமார்.

திருச்சி கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் தலைவர் திரு. ரவிசந்திரனுடன் உரையாடிய போது, “எங்கள் சங்கத்தின் தலைவராக நானும் செயலாளர் ஏ.லோகநாதன், பொருளாளராக பொறி. சுரேஷ்குமார் ஆகியோர் பணியாற்றுகிறோம். சங்க நிர்வாகிகள் பணிஏற்பு விழா, பொறியாளர் தின கொண்டாட்டம், சுமார் 700க்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம் போன்றவற்றை நடத்தினோம். உறுப்பினர்கள் முகவரி மற்றும் புகைப்படம் அடங்கிய டைரக்டரி, சங்கத்தின் சார்பாக டைரி போன்றவற்றை வழங்குகிறோம்” எனக் கூறிய அவர் சமீபத்தில் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பிற்காக சங்கம் சார்பாக மேற்கொண்ட நிவாரணப் பணிகளை குறிப்பிட்டார். 

‘திருத்துறைப்பூண்டிற்கு அருகில் நான்கைந்து கிராமங்களை சேர்ந்த, ஏறத்தாழ 250 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, உடை, போர்வை, நாப்கின், உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பைகளை தந்து எங்களால் முயன்ற சிறு அளவிற்கு பாதிக்கப்பட்டோரின் துயர் தீர்த்தோம்’ எனச் சொன்ன திரு. ரவிசந்திரன் ‘தங்கள் சங்கத்தில் சிவில் பயின்ற பொறியாளர்கள் 2 முதல் 3 ஆண்டுகளுக்கு மேல் களப்பணி ஆற்றி இருந்தால் போதும் உறுப்பினர்களாகலாம்’ என்றார்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067914