பாராளுமன்ற தேர்தலும் பருத்தி நகரமும்......

24 ஜனவரி 2024   05:30 AM 11 பிப்ரவரி 2019   01:15 PM


தமிழகம் முழுக்க ரியல் எஸ்டேட் தொழில் கடந்த சில ஆண்டுகளாக மிகப் பெரிய நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. என்றாலும் கோவையில் பெரிய அளவில் பாதிப்பில்லை. ஆனால், 2018 ஆண்டு முதல் கோவையிலும் ரியல் எஸ்டேட் தொழில்  லேசாக சரிவைச் சந்தித்திருக்கிறது. கிட்டத்தட்ட 25% அளவுக்கு பதிவுத் துறை அலுவலகத்தில் பத்திரப்பதிவு குறைந்திருக்கிறது. 

மக்களின் வாங்கும் சக்தி குறைந்துவிட்டதுடன், வீடு மற்றும் மனைகளின் விலையும் அதிகரித்துவிட்டது இதற்கு முக்கிய காரணம். இதுபோக, ரியல் எஸ்டேட் துறையில் மிக அதிகமாக இருக்கும் கைடுலைன் வேல்யூ குளறுபடிகள் உள்ளிட்ட காரணங்களும் உள்ளன. 

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், நிலங்களின் விலை உயரவில்லை. மாறாக, சில இடங்களில் நிலங்களின் விலை குறைந்திருக்கிறது. விலை இன்னும்கூட குறையலாம் என்பதால் மனை வாங்குவது கணிசமாகக் குறைந்திருக்கிறது.

கடந்த ஓராண்டில் அடுக்கு மாடிக் குடியிருப்புகளின் விற்பனை கோவையில் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கிறது. 2018 ஜூன் மாத நிலவரப்படி  கோவையில் குறைந்தபட்சமாக 15 ஆயிரம் அடுக்குமாடி வீடுகள் விற்பனை ஆகாமல் இருக்கிறது. கோவையில் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் தேவைக்கும் அதிகமாகக் கட்டி வைக்கப் பட்டுள்ளன. இவற்றை எப்படியாவது விற்றால் போதும் என்ற அடிப்படையில் தற்போது விலை சற்று குறைக்கப்பட்டு உள்ளது

ரியல் எஸ்டேட் தொழில் மேம்பட அரசுத் தரப்பில் எந்த முயற்சியும் செய்யப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது. 

ரியல் எஸ்டேட் தொழில் நசிவுக்கு கைடுலைன் வேல்யூ பிரச்னையில் தொடங்கி பல பிரச்னைகள் உள்ளன. இவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. பெருமளவில் லஞ்சம் பெறப்படுகிறது. தொடர்ச்சியான வற்புறுத்தலின் பேரில் கட்டட அப்ரூவலுக்கு சதுர அடிக்கு 43 ரூபாய் என்றிருந்த லஞ்சம், இப்போது 13 ரூபாய் குறைக்கப் பட்டு, 30 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தெரியுமா? என்பது தெரியவில்லை.

கோவையில் தொண்டா முத்தூர், சிங்கா நல்லூர், பீளமேடு, காளப்பட்டி, துடியலூர்,மலுமிச்சம்பட்டி, நஞ்சுண்டாபுரம் போன்ற பகுதிகளில் போடப்பட்ட லே அவுட்கள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகவில்லை. மக்களிடம் மனை, வீடுகளை வாங்குவதில் தயக்கம் உள்ளது. 

கோவையைப் பொறுத்தவரை, ஐ.டி. ஹப் என்று சொல்லப்படும் சரவணம்பட்டியில் முதலீட்டு நோக்கிலும், வணிக பயன்பாட்டுக் காகவும் நிலம் வாங்குபவர்கள் அதிகமாக உள்ளனர். இதனால் அங்கு ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக உள்ளது. 

மிகச் சிறந்த சீதோஷ்ண நிலை, சுகாதாரமான சூழல் காரணமாக முழுமையான குடியிருப்புப் பகுதியான வடவள்ளி வீழ்ச்சியைச் சந்திக்கவில்லை. 

வடவள்ளியைப் போலவே இதமான சுற்றுச்சூழல், நல்ல காலநிலை காரணமாகவே பொள்ளாச்சியில் ரியல் எஸ்டேட் உச்சத்தை எட்டியது. 

 ஆனால், தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட வீழ்ச்சி பொள்ளாச்சியையும் விட்டு வைக்கவில்லை. 

கடந்த இரு ஆண்டுகளாக எந்த வளர்ச்சியிலும் இல்லாமல் முடங்கியே கிடக்கிறது. கடந்த ஓராண்டில் நிலங்கள் விற்பனை, பதிவு போன்றவை கணிசமாக சரிந்திருப்பதாகச் சொல்கிறார்கள் புரமோட்டர்கள். 
என்றாலும், பொள்ளாச்சி நகரில் மகாலிங்கபுரம், வெங்கடேஷா காலனி, சிடிசி டிப்போ பகுதியிலும், புறநகரில் சேரன் நகர், சின்னாம்பாளையம், மின்நகர், கோட்டம்பட்டி ஏரியாக்களில் ஓரளவு நல்ல விலை போகிறது. 

கோவையில் தொழில் துவங்குபவர்கள் தங்கள் வீட்டை பொள்ளாச்சியில் கட்ட ஆர்வம் காட்டத் துவங்கியதால், மனைகளின் விலை கடந்த 2010 முதல் 2012-ம் ஆண்டு வரை எகிறியது. நடுத்தர மக்கள் துவங்கி மேல்தட்டு மக்கள் வரை பல தரப்பட்ட மக்களும் பொள்ளாச்சியில் இடம் வாங்க ஆர்வம் காட்டினர். 

இதனால் 15 ஆண்டுகளுக்கு முன்னர் ஏக்கர் 4 லட்சம், 5 லட்சத்துக்கு விற்ற இடங்கள் 2011, 2012-ம் ஆண்டுகளில் சென்ட் 2, 3 லட்சத்துக்கு விற்கும் அளவு ரியல் எஸ்டேட் உச்சத்தை எட்டியது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் பெரிய முன்னேற்றம் இல்லாமல் தான் இருக்கிறது. 

சென்னையைப் போல. இப்போது கோவையிலும் பில்டர்கள் அதிகரித்து விட்டார்கள். மேலும் சென்னையைச் சேர்ந்த பில்டர்கள் கோவையிலும் தங்கள் புராஜெக்டுகளைச் செய்ய துவங்;கி விட்டனர்.

இதன் காரணமாக வீடு, அபார்ட்மென்ட் வாங்கு பவர்களுக்கு நிறைய சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக மனை, வீடு, அபார்ட்மென்ட் வாங்குவது குறித்து முடிவெடுப்பதில் மக்கள் தாமதிக்கின்றனர். வீடு வாங்க வேண்டிய கட்டாயமுள்ளவர்கள் கூட முடிவெடுக்க தாமதிக்கும் சூழலும் இப்போது உள்ளது.

என்றாலும் கோவை, பொள்ளாச்சி உட்பட தமிழகத்தின் ஒட்டு மொத்த ரியல் எஸ்டேட் சந்தையே பாராளுமன்ற தேர்தலை எதிர்பர்த்து இருக்கிறது என்பது தான் உண்மை.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067894