தமிழக கட்டுமானத் துறையை பொறுத்தவரை சென்னைக்கும் கோவைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சென்னை ரியல் எஸ்டேட் சந்தையின் ஏற்ற இறக்கங்களை எப்போதும் எதிரொலிக்கக் கூடியதாகவே கோவை ரியல் எஸ்டேட் இருக்கும். வீட்டின் விலை, மக்களின் வாங்கும் திறன், கட்டுமானப் பொருட்களின் விலை கட்டுமானத் தொழிலாளர்களின் கூலி போன்றவை கூட ஏறத் தாழ சென்னையைப் போன்றதாக இருக்கும்.
2018ல் கோவை கட்டுமானத் துறை எவ்வாறு இருந்தது? 2019-ல் எவ்வாறு இருக்கும்? பாராளுமன்ற தேர்தலுக்கு முன் பின்னான சூழல்களுள் எது கட்டுமானத் துறைக்கு உகந்தது? போன்ற பல கேள்விகளை கோவையின் முன்னனி கட்டுமானச் சங்கங்களின் உயர்மட்ட தலைவர்களை அணுகிக் கேட்டோம்.
கோவை கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் தலைவர் பொறி. டி.ஜே.மோகன் ராஜ் கூறும்போது, ‘‘கடந்த சில ஆண்டுகளாக இங்கு மந்தமான சூழல் இருந்தது உண்மை தான் ஆனால், 2018 இறுதியில் கட்டுமானத் துறை ஓரளவு மீண்டெழுந்திருக்கிறது எனச் சொல்லலாம்.
பொறியாளர்கள், கட்டுநர்கள், பரப்பரப்பாக செய்யத் துவங்கியிருக்கிறார்கள் மக்களும் வீடுகளை வாங்க தன் முனைப்போடு வருகிறார்கள். சென்ற சில ஆண்டுகளில் மணல் பற்றாக்குறை எங்களுக்கு மிகப் பெரிய தலைவலியாக இருந்தது. அதன் பின் கட்டாயமாக எம்.சேண்ட் பயன்படுத்த வேண்டிய நிலை வந்த பின் கூட அது போதுமானதாக இல்லை. ஆனால் தற்போது அந்த பிரச்சினை எல்லாம் தீர்க்கப்பட்டு சமச்சீரான பணிகள் கோவையில் தற்போது நடந்து வருகின்றன. அது இன்னும் வேகம் எடுக்கும் என எதிர்ப்பார்க்கலாம்’’.
கோவை கட்டுமானத்துறையில் விரைந்து தீர்க்க வேண்டிய பிரச்சினைகளாக நீங்கள் கருதுவது என்ன?
‘‘எம் சேண்ட் தரம் தான் இப்போது பிரச்சினையாக இருக்கிறது. எம்சேண்ட் தரத்தை கண்காணிக்க எந்த அமைப்பும் இல்லை.மற்றபடி தமிழகத்தில் உள்ள சிமெண்ட், ஸ்டீல் விலை ஏற்றம் கட்டுபாடுகள் இன்றி உயர்வது கவலையாக இருக்கிறது. ஆட்கள் கூலிக் கூட, சென்ற ஆண்டின் இந்த ஆண்டு 100 முதல் 150 ரூபாய் வரை உயர்ந்திருக்கிறது’’என்றார் .
கோவை கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு. கே. ராகவன் கூறும் போது, ‘‘கடந்த ஆறு ஆண்டுகளாக தேக்க நிலையில் இருந்த கோவை ரியல் எஸ்டேட் தற்போது விறுவிறுப்பான நிலையை எட்டிருக்கிறது. கோவை மட்டுமல்ல தமிழகம் முழுக்க இதே நிலை நீடித்தால் பழைய பொற்காலத்தை எட்டி விடலாம். ஆனால் அதற்கு அரசின் கொள்கைகள் மிக முக்கிய பங்கு வகிக்கும். மேலும் வங்கிக்கடன் மீதான வட்டி விகிதம் குறைவது கூட, கட்டுமானத்துறை வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு அன்-அப்ரூவ்ட் லே-அவுட்களுக்கு அப்ரூவல் தரப்பட மாட்டாது என அரசு அறிவித்ததனால் கட்டுமானத்துறை மாபெரும் தேக்கத்திற்கு காரணமாக இருந்தது. ஏனெனில் தமிழ்நாட்டில் 62% கட்டுமானப் பணிகள் அன் அப்ரூவ்ட் சைட்டில் நடைப்பெறக் கூடியதுதான். இது ஜெயலலிதா முதல்வராக இருந்த போது வந்த பத்திரப்பதிவு துறை அஷீவிப்பாகும். அதாவது இனிமேல் உருவாககக் கூடிய லே-அவுட்களுக்கு மட்டும் தடை விதிக்காமல் ஏற்கனவே இருக்க கூடிய 62% லே-அவுட்களுக்கு தடை விதித்தது தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டை ஸ்தம்பிக்க வைத்து விட்டது.
இதைத் தொடர்ந்து எங்களைப் போன்ற சங்கங்கள் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக தற்போது அன்-அப்ரூவ்ட் லே- அவுட்களை பதிவுச் செய்ய உத்தரவு வந்து இருக்கிறது.
ஆனால் அதுக்கூட ஓராண்டுக்குள் பதிவுச் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை. எனவே ‘எப்போது வேண்டுமானாலும் பதிவுச் செய்து கொள்ளலாம் என அதில் திருத்தம் செய்ய வேண்டும். வேண்டுமெனில் பதிவுச் செய்யும் காலத் தாமதத்திற்கு ஏற்றாற்போல் அல்லது நிலத்தின் மதிப்பிற்கேற்ப அபராதத்தொகை வசூலித்துக் கொள்ளலாம்’ என்ற அறிவிப்பு வந்தால் தற்போது இருக்கக் கூடிய அன் அப்ரூவ்ட் லேஅவுட்கள் அப்ரூட் மனைகளாகும்.
இது கோவைக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே நல்லதாகும்’’என தன் கருத்தை முன் வைத்தார் திரு.ராகவன்.
பில்டர்ஸ் அசோசிஷயன் ஆப் இந்தியாகோயம்புத்தூர் சேப்டர் தலைவர் திரு. சின்னச்சாமி கூறும் போது ‘‘2019 ல் கோவை ரியல் எஸ்டேட் வீறு கொண்டு எழுமா ?என்று கேட்கிறீர்கள்.
எப்போதுமே ஒரு தொழிலின் அல்லது துறையின் வெற்றியை நேர்மறை எதிர்பார்ப்புடன் அணுக வேண்டும். எனவே, கோவையில் தனி வீடுகள், அடுக்கு மாடி வீடுகள் போன்ற வீடுகளின் விற்பனை அதிகமாகி அதன்மூலம் கட்டுமானத்துறை மிக உன்னதமான நிலைக்கு வரும் என நம்புவோம். ஆனால், 2019 ல் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய காலக் கட்டம் குறுகலானது. இந்தக் கால கட்டத்தில் கோவை ரியல் எஸ்டேட் துறையில் பெரிய மாற்றங்கள் வர வாய்ப்பில்லை. ஆனால் தேர்தலுக்கு பிந்தைய மாதங்களில் மக்களிடையே ஒரு நிச்சயத்தன்மையும் ரியல் எஸ்டேட் ஸ்திர தன்மையும் நிலவும் என எதிர்பார்க்கலாம்’’.
நீண்ட காலமாக தீர்க்க படாத கோவை மாவடத்தின் பிரச்சினைகள் என்ன ?
‘‘அப்படி கோவைக்கென தனியே பிரித்துப் பார்க்கக் கூடிய பிரச்சனை என தனியே எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கோவை மாவட்டத்திற்குள்ள எல்லா பிரச்சினைகளும் தமிழகம் முழுக்க இருக்க கூடியவை தான். விலையேற்றம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் பல முறை விவாதித்தாகி விட்டது. ஆனால் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. அகில இந்திய அளவில் கட்டுமானத்துறையை அசைத்து பார்த்த ஒரு பெரிய பிரச்சினை ஜிஎஸ்டி ஆகும்.
இதைப்புரிந்து கொள்ளவே நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். இது போல அரசுகளின் திடீர் திடீர் கொள்கைகள் தான் கட்டுமானத்துறையை வெகுவாக பாதிக்கின்றன’’.
கோவை மாவட்டத்தில் எம்சேண்ட் தரமில்லாமால் சப்ளை செய்யபப்டுவதாக எழும் புகார் குறித்து ..
‘‘அப்படி எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எங்கள் சங்கத்தில் அரசு புராஜக்டுகளை செய்யும் காண்ட்ராக்டர்களும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். தனிவீடுகளை மற்றும் தனியாருக்கான வீடுகளைக் கட்டும் பில்டர்களும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். நாங்கள் அத்தனை பேருமே எம்.சேண்ட்டைத் தான் பயன் படுத்துகிறோம். யாரும் இது போன்ற பிரச்சனையை சொன்னது இல்லை.
எம்சேண்ட் ஆற்று மணலுக்கு மாற்று மணல் மட்டுமல்ல, ஆற்று மணலை விட விலைக் குறைவான மணலாகும். எனவே, நான் அறிந்த வரையில் கோவை மாவட்டத்தில் தரமற்ற எம்சேண்ட் விற்கப்படுவதாக செய்திகள் இல்லை.
ஒரு மாவட்டத்திற்கு நூற்றுக்கும் மேற்பட்ட எம்சேண்ட் குவாரிகள் இயங்குகின்றன. அவற்றுள் எம். சேண்ட்டை எவ்வாறு தயாரிக்க வேண்டும்? தர நிர்ணய அளவு விதிகள் என்ன? என்பதை எல்லாம் அரசு வரையறுத்திருக்கிறது. அதன்படி இயங்கக்கூடிய குவரிகளிடமிருந்து எம் சேண்ட்டை பெற்றால் தரம் தொடர்பான பிரச்சினை எழ வாய்ப்பில்லை அல்லவா’’.
அரசு புராஜெக்க்டுகளை பெறும் காண்ட்ராக்டர்கள் ஆர்டர் பெறுவதில் மற்றும் வேலைக்கான தொகையைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதா?.
‘‘அது பற்றிநான் கருத்து கூற விரும்ப வில்லை.’’ எனக் கூறினார்.
பொள்ளாச்சி கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் தலைவர் திரு.சிங்காரவேலு, அவர்களிடம் பேசிய போது ,கோவை கட்டுமானத்துறை பாதிப்பு பொள்ளாச்சியில் இருக்குமா?
‘‘நிச்சயமாக இல்லை ஏனெனில் கோவை கட்டுமானத்துறை என்பது அடுக்கு மாடி, ஐடி பார்க், ஓட்டல், வணிக வளாகம், தொழிற்சாலை, தனிவீடு, வில்லா, தொடர்வீடு போன்ற பல வித கட்டுமானங்களை உள்ளடக்கியது. இதன் சந்தையும் சந்தை நிலவரமும் வெவ்வேறு காரணிகளால் உருவாகக் கூடியதாகும்.
ஆனால், பொள்ளாச்சியில் அது போன்ற விஸ்தாரமான சந்தை கிடையாது. தேவையின் அடிப்படையில் உருவாகக்கூடிய தனி வீடுகளே இங்கு பிரதான பங்கை வகிக்கின்றன. எனவே, சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் நிலவக் கூடிய சூழ்நிலைகள் பொள்ளாச்சி போன்ற சிற்றூர்களில் காணப்படாது’’.
பொள்ளாச்சி ரியல் எஸ்டேட் சந்தையின் தற்போதைய டிரண்டிங் பற்றிச் சொல்லுங்களேன்..
‘‘பாரம்பரிய களிமண் செங்கற்களின் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது. ஏ.ஏ.சி பிளாக்குகள் காங்கிரீட் ஹாலோ பிளாக்குகள், ஃப்ளை ஆஷ் போன்ற கட்டுமானக் கற்களை பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக ஏ.ஏ.சி பிளாக்குகள் கொண்டு பொள்ளாச்சியில் நிறைய வீடுகள் கட்டப் படுகின்றன. ஏனெனில் ஏ.ஏ.சி பிளாக்குகள் கொண்டு சுவர் அமைக்கும் போது பூச்சி வேலைக்கு குறைவான சிமெண்ட் தேவைப்படுகிறது. மேலும் சுவர் கட்டு வேலைக்கு ஏ.ஏ.சி பிளாக் தயாரிக்கும் நிறுவனமே ஒரு விசேஷ பசையை தருகிறது. அதை பயன்படுத்தி நாம் ஏ.ஏ.சி கற்கள் சுவரை கட்டுவதால் சிமெண்ட் மணல் உபயோகம் குறிப்பிட்ட வேலைக்கு தவிர்க்கப்படுகிறது. இதுப்போல அனைத்து வகை நவீன தொழில்நுட்பங்களை பயபடுத்துவதில் முன்னோடியாக பொள்ளாச்சி உள்ளது.
ஆற்று மணல் அரிதாகி விடவே எம்சேண்டை பரவலாக பயன்படுத்த பொறியாளர்கள் பழகிக் கொண்டோம். ஆனால் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் எம்சேண்டை ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். அவர்களுக்காகவே அதிக விலை கொடுத்து மணலை வாங்க வேண்டியதாக இருக்கிறது. பொள்ளாச்சி மக்களிடையே எம்சேண்ட் குறித்த விழிப்புணர்வு பரவலாக வேண்டும் என்பது இங்குள்ள பொறியாளர்களின் எதிர்ப்பார்ப்பாகும் என்றார் திரு.சிங்காரவேலு.
கோவை கட்டுமானத்துறை 2018 இல் எப்படி இருந்தது? 2019 எப்படி இருக்கும் என கோவையின் பி.ஏ.ஐ சேப்டர் செயலாளர் திரு. கே. பன்னீர் செல்வத்திடம் கேட்டபோது,
‘‘கோவை கட்டுமானத்துறையில் தனியாருக்கான வீடுகளைக் கட்டி தரும் பில்டர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏற்ற தாழ்வு இருப்பதாக நான் கருதவில்லை. தமிழகம் முழுக்க தேக்கநிலை ஏற்பட்ட போது கூட, கோவையில் பட்ஜெட் மற்றும் நடுத்தர மக்களுக்கான வீடுகளின் தேவைகளில் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் தான் இருந்தது.
இதனால் இந்த ஆண்டில் முற்பாதி அல்லது பிற்பாதி இவற்றுள் எது கட்டுமானத்துறைக்கு உகந்தது? என்றெல்லாம் பிரித்து பார்க்க வேண்டியது இல்லை கடந்த ஆண்டை விட, இனி வரும் காலம் ஏற்றம் தரும் என நம்பலாம்’’என்றார்.
மாறுபட்ட சங்கங்களின் தலைவர்களின் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டு இருந்தாலும் அவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு ஒன்று தான். அது கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகக் கட்டுமானத்துறை 2019இல் முழு பாய்ச்சலோடு வெற்றி நடை போட வேன்டும் என்பதே.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067923
|