பால்ஸ் சீலிங்கில் பணம் பதுக்கிய பலே கில்லாடி.....!

24 ஜனவரி 2024   05:30 AM 18 ஜனவரி 2019   01:16 PM


வணக்கம் பொறியாள, கட்டுநர் நண்பர்களே இத்தொடரில் என்னுடைய அனுபவத்தையும் உங்களிடையே பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

பொதுவாக புதிதாக சிவில் பொறியியல் முடித்து விட்டு, கட்டுமானத்துறையில் நுழைபவர்களுக்கு ஆர்வம் மிகுதியாக இருக்கும். பெரிய பெரிய கட்டிடங்களை எல்லாம் உற்றுப் பார்ப்பார்கள். அணைகள், பாலங்கள் எல்லாம் நமது வருகைக்கு காத்திருப்பது போல ஒரு பிரமை பிடித்து இருக்கும். ஆனால் அது ஒரே ஆண்டில் தெளிந்து விடும். ஒரு  காண்ட்ராக்ட் வேலையும் நமக்குக் கிடைக்காது. அட குறைந்த பட்சம் ஒரு காம்பவுண்ட் கட்டும் வேலைகூட வந்தால் போதுமே என்ற கடுப்பில் இருப்போம்.

அப்போது யாராவது ஒரு சின்ன ரூம் ஆல்ட்ரேஷன் வேலை கொடுத்தால் அவர்கள் நமக்கு கண் கண்ட தெய்வமாகி விடுவார்கள். வேலை கொடுத்த ஜோரில் அவர் யார்? எப்படிபட்டவர்? என்ன வேலை செய்கிறார்? என்பதில் அக்கறை காட்ட மாட்டோம்.

அப்படி தான் நானும் இருந்தேன்.
கல்லூரி முடித்து இரண்டு மூன்று  ஆண்டுகளுக்கு பிறகு, ஒரு நிறுவனத்தில் பணியாற்றி கொண்டே, தனியாக சிறு சிறு வேலைகளை எடுத்து செய்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு அறைகளை கொண்ட 400 சதுர அடிக்கு, டைல்ஸ் அமைத்து தொங்கும் கூரை/ பொய்கூரை/ ஃபால்ஸ்  சீலிங் போட வேண்டும் என்று ஒருவர் என்னை அணுகினார். என்னால் நம்பவே முடியவில்லை.

‘அட நமக்கு முதல் பெரிய வேலை, புது வேலை கிடைத்திருக்கிறதே’! என்ற கு´யில் வேலை ஒத்துக் கொண்டேன்.
அவருக்கு செலவுகளை  விளக்கி, முழுத் தொகை இவ்வளவு என்று கூறி, பணி தொடங்க முன் பணமும் பெற்று, வேலையைத் தொடங்கி விட்டேன், பணியாளர்களுடன் அங்கு சென்று முதலில் டைல்ஸ் வேலையை முடித்தேன், 

பின்பு தொங்கும் கூரையை அமைத்து பின் சுண்ணாம்பு பூச்சு (Painting works) முடித்து விட்டேன். வாடிக்கையாளரிடம் மீதி தொகை கேட்க, ‘சில நாட்கள் பிறகு தருகிறேன்’ என்றார், நானும் சரி என்று கூறி, வந்து விட்டேன், 
20 நாட்களுக்கு பிறகு, அலைபேசியில் அவர் என்னை அழைத்தார். ‘நீங்கள் செய்த தொங்கும் கூரையில் விரிசல்கள் ஏற்பட்டு உடைந்து விட்டது’ என்றார். 

நான் நேரடியாக சென்று பார்த்தேன், ஆனால், விரிசல் உடைந்தது போல் தெரியவில்லை. அதை தட்டி  வேண்டுமென்றே உடைத்தது போல் இருந்தது. வட்டமாக பெயர்ந்து இருந்தது.
‘‘இதை சரி செய்து தருகிறேன். ஆனால் நீங்கள் தனிக்கட்டணம் தர வேண்டும். நிலுவையில் உள்ள தொகையையும் இதையும் சேர்த்து முழு தொகையை தர வேண்டும்’’

என்றேன். 
அவரும் ‘‘ஆகா அப்படியேசெய்யுங்கள்’’  என ஒத்துக் கொண்டார்.
நானும், அதை சரி செய்துவிட்டு வந்து விட்டேன், சில நாட்களுக்குப் பிறகு, நண்பன் ஒருவர்  அவரைப் பற்றியும் நான் செய்த வேலையின் பின்னணியைப் பற்றியும் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
அவர் சொன்னது இதுதான்.
 ‘‘கணேஷ். நீ போன வாரம். ஒரு  ஃபால்ஸ்  சீலிங் வேலை செய்தாய் அல்லவா? அது மறுபடியும் ரிப்பேர் ஆகி விட்டது என நீ போய் சரி செய்தாய் அல்லவா? உண்மையில்   அது தானாக உடையவில்லை. போலீஸ் அவர் வீட்டை சோதனை செய்ய வந்த போது உடைத்தார்களாம்’’ என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது.

அதாவது, நான் செய்து கொடுத்த தொங்கும் தரையில் அந்த வாடிக்கையாளர், முறையற்ற வழியில் வந்த பணத்தை அந்த தொங்கு கூரையில் துளையிட்டு பதுக்கி வைத்திருந்தாகவும், அதை போலிசார் உடைத்து சோதித்ததாகவும் கேள்விப்பட்டேன். 

அடடா! எப்படி ஒரு தவறான நபருக்கு வேலை செய்து கொடுத்தோம் என மனம் நொந்தேன்.
அதன் பிறகு சில மாதங்கள் பிறகு, அதே வாடிக்கையாளர் மீண்டும் அலைபேசியில் தொடர்பு கொண்டு, மற்றொரு அறையில், மீண்டும் False ceiling உடைந்து விட்டது, தயவுசெய்து சரி செய்து தருமாறு பணித்தார், நான் ‘‘ஐயோ ஆளை விடுங்கள் சாமி!  வெளியூரில் வேலை செய்கிறேன். அதனால் என்னால் உடனடியாக வர முடியாது’’ என்றேன். பின்பு அந்த வாடிக்கையாளர்,  இப்போது பணம் பதுக்கிய வழக்கில் சிறையில் உள்ளார் என்று கேள்விப்பட்டேன். 

நான் மீண்டும் சரி செய்து கொடுத்திருந்தால், அது மிகப்பெரிய தவறாக இருந்திருக்கும். 
ஆகவே, நண்பர்கள் நீங்களும், பணி கிடைத்தால் போதும் என்றும்,  உடனே ஒப்புக்கொள்ளாமல், வாடிக்கையாளர் பற்றி தெளிவாகத் தெரிந்து கொண்டு பணியை எடுங்கள்..

ஒரு கட்டிடத்தில் விரிசல் என்பது பல்வேறுபட்ட காரணங்களால் வர வாய்ப்பு உள்ளது. அதில் ஒரு காரணத்தால் வந்த விரிசலை எவ்வாறு கண்டுபிடித்து அதை, சரி செய்தார்கள்? என்ற அனுபவத்தை, என் நண்பரும் கோவை பீளமேடு பகுதியில் வசிக்கும் சிறந்த கட்டிடத் துறை ஆலோசகரான,பொறி.K.P.செவ்வேல் அவர்கள், என்னிடம் பகிர்ந்து கொண்டதை அப்படியே இப்பகுதியில் தந்துள்ளேன். பலருக்கும் இது பயன்படும். அது பற்றி விரிவாக பார்ப்போம்.

‘‘சில ஆண்டுகளுக்கு முன்பு நண்பர் ஒருவரின் மூலம் ஒரு தொழிலதிபர் என்னைப் பார்க்க வந்திருந்தார். அவர் நகரின் மத்தியில் ஒரு வணிகவளாகம் வைத்திருந்தார். அனுபவம் வாய்ந்த ஒரு மேஸ்திரியை வைத்துக் கட்டிடம் கட்டியுள்ளார். அன்றைய நிலவரப்படி இருந்த உயர்தர முறுக்கு கம்பிகள் மற்றும் சிமெண்ட் கொண்டு கட்டியுள்ளர், ஆனால் கட்டிய 2 ஆண்டுகளிலேயே கட்டிடத்தின் சுவர்களில் மற்றும் ரூஃப் லேபிலும் விரிசல்கள் வர ஆரம்பித்தன. அதற்கான காரணம் தெரியவில்லை.

நான் அக்கட்டிடத்தை சென்று பார்வையிட்டேன். முன்புறம் வணிகவளாகம், பின்புறம் மாணவர்கள் தங்கும் விடுதி. (மேன்சன்) அமைத்திருந்தார். வேறு எங்கும் விரிசல்கள் தென்படாத நிலையில் ஓரிடத்தில் 
மட்டும் சுவரிலும் கூரையிலும் விரிசல்கள் தென்பட்டன.

அஸ்திவாரத்தின் ஸ்திரத்தன்மையைத் தோண்டி பரிசோதனை செய்தும் ஏதும் புரிபடவில்லை. பின்பு கட்டிடத்தின் நீளத்தை அறிந்த போது சுமார் 200 அடி இருந்தது. உடனே அதற்கான காரணம் விளங்கிவிட்டது.
நாம் இரயில் தண்டவாளங்களின் இணைப்பு இடத்தில் சிறிது இடைவெளி இருப்பதை கண்டிருக்கிறோம். இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் இரும்பு தண்டவாளங்களின் நீள விரிவாக்கத்தின் (Expansion) காரணமாக இந்த இடைவெளி விடப்படுகிறது. கட்டிடங்களிலும் வெப்பம் மற்றும் குளிரின் தாக்கம் மாறிமாறிஏற்படும்போது இதுபோன்ற சில பிரச்சனைகள் கட்டடங்களுக்கும் ஏற்படுகிறது. 
 
எதிர்பாராத இடங்களில் வெடிப்புகளும் ஏற்படுவது உண்டு. அதிலும் விடுதியின் ஒரு பகுதி மிகப்பெரிய சமையல் கட்டுடன் தந்தூரி அடுப்பும் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கு முறையாக Exhaust Fan வசதி செய்யப்படவில்லை. இவ்வாறு ஓரு கட்டிடத்தின் பகுதிகள் வேறுபட்ட வெப்பநிலைகளில் இருக்கும் போது. இந்த மாதிரியான விரிசல்கள் வரக்கூடும். என்ற உண்மையை அவரிடம் எடுத்துரைத்தேன்.

பின்பு  IS Code விதிகளின் படி 30M இடைவெளியில் Expansion joint அமைக்கப்பட்டன. அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாலி சல்பைட் சீலன்ட் கொண்டு இந்த Joint கள் அடைக்கப்பட்டன. இப்போது அந்த கட்டிடத்தில் விரிசல்கள் இல்லை’’ என்றார் பொறி. செவ்வேல்.

இன்னும் வெப்பத்தின் மூலம் என்னென்ன பிரச்சனைகள் கட்டிடத்தில் வரக்கூடும் என்பதை பார்ப்போம்.
1. இப்பொமுது நிறைய கட்டிடங்களில் மொட்டை மாடியில் டைல்ஸ் அமைக்க உரிமையாளர்கள் விரும்புகிறார்கள். அதில் சற்று கவனம் தேவை. மொட்டை மாடியில் தான் வெயிலின் தாக்கம் கட்டிடத்திலேயே மிக அதிகமாக இருக்கும். அதை சமாளிக்கும் விதமாக டைல்ஸ்களின் நடுவே சிறிய இடைவெளி விட்டு பதித்து அதன்பின்னர் Filler  மூலம் நிரப்ப வேண்டும். இல்லாவிட்டால் கண்டிப்பாக வெயிலின் தாக்கம் காரணமாக, டைல்கள் நகர்ந்தோ, உடைந்தோ அல்லது தூக்கவோ செய்யும்.

2. நாம் கட்டிடங்களின் முகப்புப் பகுதியில் அலங்கார ஓடுகள் பதிக்கிறோம். கிராணைட் 
மற்றும் டைல்கள் அவ்வாறு பதிக்கும் போது கூடுதல் கவனத்துடன் பதித்தல் வேண்டும். கலவை கனம் அதிகமாகி விட்டால் வெப்பத்தின் காரணமாக சில ஓடுகள் விழுந்த விட வாய்ப்புள்ளது. இப்போது அதற்கென சில இணைப்பான்கள் விற்கப்படுகின்றன (Paste). மிகக் குறைந்த கனத்தில் ( குறைந்தபட்சம் 3 mm அளவில் கூட) போதுமானது.

அதேபோல் டைல்ஸ் வைக்காத இடத்திலும் சுருக்கி அமைத்து சிமெண்ட் தளம் பூசும் போதும் கலவை கனம் அதிகமானால் விரிசல்கள் வரும்.

4. வெளிப்புறச்சுவர்களில் Primer அடித்து தரமான வெளிப்புற பெயிண்ட் அடித்தல் வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் சுவர் மற்றும் ஜன்னல்களில் Paint உரிந்து வந்து விடும், என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே, கட்டிடத்தில் விரிசல் வந்து உள்ளது என்றால் முதலில் மூத்த அனுபவம் மிக்க பொறியாளரைக் கூட்டி வந்து அதை காண்பித்து, அவர் சொல்லும் உண்மையான காரணத்தை ஏற்றுக் கொண்டு. அவர் கூறும் ஆலோசனையின் பெயரில் அதற்கான சரியான செய்முறைப்படி அப்பணியை மேற்கொள்ளும் போது பிரச்சனை மீண்டும் வராது தடுத்து நிறுத்தலாம் என்பது உறுதி.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067847