ஒரு வீடு கட்ட வேண்டுமெனில்,முக்கிய கட்டுமானப் பொருட்களான சிமெண்ட்,செங்கல், ஜல்லிகளுக்கு ஆகும் செலவு ஏறத்தாழ 55 சதவீதமாகும். ஆனால் , மறுசுழற்சி அடிப்படையிலும் நவீன தொழிற்நுட்பம் மூலமாகவும் கீழ்கண்ட பொருட்கள் சந்தையில் வரத்துவங்கியுள்ளன என்பதால் கட்டுமானச் செலவு கணிசமாகக்குறையத் துவங்கும் என் எதிர் பார்க்கலாம்.
1.தானாக வளரும் செங்கல்
2.செயற்கை ஜல்லிகள்
3.பேப்பர் சிமெண்ட்
தானாக வளரும் செங்கல்
ஆண்டுக்கு உலகம் முழுவதும் ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான செங்கற்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தச் செங்கற்களுக்குப் பதிலாகத்தான் இப்போது மாற்றுக் கட்டுமானப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அம்மாதிரியான மாற்றுக் கட்டுமானப் பொருள்களில் ஒன்றுதான் ‘பயோ செங்கல்’ .சாதரண செங்கல் எப்படி உற்பத்தியாகிறது? உலகெங்கிலும் பல லட்சக்கணக்கான மனிதர் களின் உழைப்பால் உருவாகிறது. அதேபோல இந்த பயோ செங்கலும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பாக்டீரியாக்களால் உருவாக்கப்படுகிறது. ஆனால் ஒரு செங்கலை உருவாக்க ஒரு கோடி லட்சம் பாக்டீரியாக்கள் உழைக்கின்றன.
பாக்டீரியாவால் வளரும் செங்கல்
இந்த வகைச்செங்கல் தயாரிப்பில் மண் அடிப்படை மூலக்கூறாகப் பயன்படுத்தப் படுகிறது. அத்துடன் பாக்டீரி யாவுடனான சிமெண்ட் கரைசலும் சேர்த்துக் கொள்ளப்படும். பாக்டீரியவுக்கான உணவாக நைட்ரஜனும் சேர்த்துக் கொள்ளப்படும், இவையில்லாமல் கால்சியமும் நீரும் இந்த்க் கலவையில் சேர்க்கப்படுகிறது. இந்தக் கலவை மணல் படுக்கை மீது வைக்கப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு இப்படியே விடப்படும். இந்தக் கலவை ஐந்து நாட்களுக்குப் பிறகு இறுகித் திடமாகிவிடும். பாக்டீரியாவுக்கான உணவு தீர்ந்து, நீரும் உலர்ந்துவிட கலவையில் உள்ள பாக்டீரியா இறந்துவிடும். இப்போது பயோ செங்கல் உருவாகிவிடும். இதை பயோ-மேசன் செங்கல் என அழைக்கிறார்கள்.
டோசியரின் கண்டுபிடிப்பு
இந்த வளரும் அபூர்வ வகை செங்கலைக் கண்டுபிடித்தவ்ர் ஜிஞ்சர் கிரியக் டோசியர். அமெரிக்காவில் அபூர்ன் கட்டிடத் துறைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். இவர் உயிர் ஆற்றலைப் பயன்படுத்திக் கட்டுமானப் பொருள்களைக் கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் கடந்த பத்து ஆண்டுகளாக ஈடுபட்டிருந்தார். பயோ செங்கல்லை அமெரிக்க, ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த தொழில் நுட்ப உதவியாளர்களைக் கொண்டு கண்டுபிடித்துள்ளார் டோசியர்.
இந்தக் கண்டுபிடிப்பு, சிறந்த பசுமைச் சவால் பொருளாகவும் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.இது மட்டுமல்லாது, புதிய கட்டுமானப் பொருளுக்கான பல விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளது. இந்தச் செங்கல் விரைவில் உலகம் முழுவதும் பயன்பாட்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை ஜல்லிகள்
சென்ற பில்டர்ஸ் லைன் இதழில் தொழிற்சாலை கழிவிலிருந்து கான்கிரீட் தயாரிக்கும் ஆய்வினைக் கண்டோம். அது போன்றே, பல்வேறு கழிவுகள், கற்களிலிருந்து ஜல்லிகளை நாம் தயாரித்து பயம்படுத்த முடியும். மாற்று ஜல்லிகளை பயன்படுத்துவதால் குவாரிகளிலிருந்து ஜல்லிகள் பெறப்படுவது வெகுவாகக் குறையும்.
கதவுகளுக்கும், ஜன்னல்களுக்கும் மாற்றுப் பொருள்கள் வந்துவிட்டன. இதன் தொடர்ச்சியாக மாற்று ஜல்லிக்கான ஆராய்ச்சிகளின் விளைவாகச் செயற்கை ஜல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை மேலை நாடுகளில் ஓரளவு புழக்கத்துக்கு வரத் தொடங்கியுள்ளன. செயற்கை ஜல்லிகளை கட்டுமானத்திற்கு ஏற்றபடி எவ்வாறு தயாரிக்க முடியும் ? என்பதைக் காண்போம்.
செயற்கை ஜல்லிகளை தயாரிக்கும் முறை
தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் பலவிதமான கழிவுகளை மூலப் பொருள்களாகக் கொண்டு இந்த வகை ஜல்லி தயாரிக்கப்படுகிறது. இரும்புத் தொழிற் சாலைகளில் உண்டாகும் இரும்புக் கழிவுகளின் துகள்களையும் மூலப் பொருளாகக் கொள்ளலாம். மேலும் அனல்மின் நிலையத்திலிருந்து வெளியேறும் நிலக்கரிச் சாம்பலையும் மூலப் பொருளாகக் கொள்ளலாம்.
இது மட்டுமல்லாது கடற்கரைக் களிமண்ணையும் இதன் பகுதிப் பொருளாகக் கொள்ளலாம். இத்துடன் சோடியம் கலந்து ஆயிரம் டிகிரி செல்சியஸ் சூடேற்ற வேண்டும். இம்முறையில் தயாரிக்கப்படும் வழக்கமான ஜல்லிகள் போலவே தரமானதாகும்.
பொதுவாக ஜல்லி இயற்கையான முறையில் இருந்து கிடைக்கக்கூடியது. அதை வெட்டித் துண்டாக்கி நாம் கட்டுமானத்துக்குப் பயன்படுத்துகிறோம். இம்மாதிரியான இயற்கை ஜல்லி எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. அதனால் கிடைக்கும் இடங்களில் இருந்து மற்ற இடங்களுக்கு இதைக் கொண்டுசெல்ல வேண்டியிருக்கிறது. ஏற்கெனவே கட்டுமானப் பொருள்களில் தட்டுப் பாட்டுடன் இந்தப் பயணச் செலவும் சேர்ந்து மிக அதிக செலவைக் கொண்டுவந்துவிடும்.உதாரணமாக, தென் மாவட்டங்களில், வட மாவட்டங்கள் போல், மணல் குவாரிகள் அதிகமாக இல்லை.
திருச்சியில் இருந்துதான் அதிகமாக ஆற்று மணல் கட்டுமானத்துக்காகக் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் ஆற்று மணலின் விலை அங்கு மிக அதிகமாக இருக்கிறது. இதைச் சமாளிக்க திருநெல்வேலிப் பகுதிகள் எம்-சாண்ட் என அழைக்கப்படும் செயற்கை மணல் உற்பத்தி செய்யப்படுகிறது. இது பரவலான பயன்பாட்டுக்கு வரவில்லை என்றாலும் வெளிப்பூச்சுக்கு மக்கள் இதைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்பது ஆரோக்கியமான மாற்றம். இதுபோல் செயற்கை ஜல்லியையும் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். செலவு ஒரு பக்கம் குறைவானாலும் அதைவிடச் சுற்றுச்சூழலுக்கு செயற்கை ஜல்லி ஏற்றதாகும்.
மேலும், செயற்கை ஜல்லி எடை குறைவானது.
உறிஞ்சப்படும் தன்மையும் அதிகம். சிமெண்ட்டுடன் உடனே பிணைந்து கட்டுமானத்தின் உறுதியைக் கூட்டும். தொழிற் சாலைக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது. பலவிதப் பயன்பாடு உள்ள இந்தக் கட்டுமானப் பொருள் விரைவில் பரவலான பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிவியலார்களும், கட்டிடவியலார்களும், அரசும் இணைந்து செயற்கை ஜல்லிகளுக்கு பொது அங்கீகாரம் அளித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் குவாரிகளின் தேவை, போக்குவரத்து செலவு போன்றவை வெகுவாகக் குறைந்து கட்டுமானச் செலவு கணிசமாகக் குறையும்.
பேப்பர்கிரீட்
கான்கிரீட் தெரியும் இது என்ன பேப்பர் கிரீட் என்று யோசிக்கிறீர்களா? இதிலும் சிமெண்ட் தேவைப்படுகிறது. ஆனால், முழுவதும் சிமெண்ட் அல்ல என்பது, காகிதக் கழிவுகள், போர்ட்லேண்ட் சிமெண்ட் இரண்டையும் ஒருங்கிணைத்து இந்த பேப்பர்கிரீட்டைத் தயாரிக்கிறார்கள். இதிலேயே சிமெண்டுக்குப் பதில் களிமண்ணைப் பயன்படுத்தியும் பேப்பர்கிரீட் தயாரிக்கிறார்கள். சிமெண்ட் பயன்படுத்தாத பேப்பர்கிரீட் பசுமைக் கட்டிடம் அமைக்க உதவுகிறது. தினசரி வீடுகளில் சேரும் செய்தித்தாள்கள், பழைய பத்திரிகைகள் போன்ற அனைத்துக் காகிதக் கழிவுகளையும் இதன் தயாரிப்புக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மிகக் குறைந்த ஆற்றலிலேயே பேப்பர்கிரீட்டை உற்பத்திசெய்ய முடியும். பேப்பர்கிரீட்டைத் தயாரிக்க இருபுறங்களிலும் சக்கரம் கொண்டசிறிய டிரெயிலர் போன்ற ஒரு வாகனம் பயன்படுகிறது. டிரெயிலர் சட்டத்தின் மீது ஒரு வட்ட வடிவ அண்டா போன்ற பெரிய கொள்கலனில் காகிதக் கழிவுகள், சிமெண்ட் அல்லது களிமண், நீர் ஆகியவற்றை ஒன்றாகக் கொட்டுகிறார்கள். தேவையான அளவுக்கு நன்றாகக் கலக்கிய பின்னர் இதைத் தரையில் உள்ள ப்ளாக்குகளில் கொட்டுகிறார்கள். பிளாக்குகளின் மீது டிரெயிலரை இழுத்துச் செல்லும்போது கொள்கலனின் அடியில் உள்ள சிறுதுளை மூலம் இந்தக் கலவை கொட்டப்படுகிறது. இது நன்றாக உலர்ந்ததும் பயன்படுத்தும்வகையிலான பேப்பர்கிரீட்டாகிறது. கூழ்மத்தை அப்படியே சுவரெழுப்பும் இடத்திற்கே கொண்டுசென்று பயன்படுத்த விரும்பினாலும் அப்படியே செய்யலாம். இல்லையயனில், பிளாக்காக உலர்ந்தபின்னர் பயன்படுத்தலாம்.
இந்த பேப்பர்கிரீட்டுகள் வழக்கமாகப் பயன்படுத்தப்படும் கான்கிரீட் பிளாக்குகளைவிட மிகவும் எடை குறைவானவை. மேலும் எவ்வளவு சிறியதாக வேண்டுமானாலும் இதைத் தயாரித்துக் கொள்ளலாம். எனவே, கையாள்வதும் மிக எளிது. பேப்பர் அடிப்படைப் பொருளாக இருந்தாலும் பேப்பர்கிரீட் எளிதில் தீப்பற்றாத தன்மை கொண்டது. ஏனெனில் பேப்பர்கிரீட் ஒரு ஸ்பான்ச் போலவே செயல்படுவதால் ஈரப்பதத்தை எளிதாக உறிஞ்சிக் கொள்ளும். ஈரத் தன்மை உள்ளதால் தீப்பற்ற வாய்ப்
பில்லை. வெயில் காலத்துக்கும் மழைக் காலத்துக்கும் இது ஏற்றது.பயோ செங்கல், செயற்கை ஜல்லிகள், பேப்பர் கிரீட் போன்ற உன்னதமான கண்டுபிடிப்புகளை உலகறியச் செய்து இயற்கை மூலப்பொருட்களின் வளம் காப்போம்.
-டி.எஸ்.தாண்டவ மூர்த்தி
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067816
|