தற்போது எல்லாருமே அதிகப்படியான மழைப் பொழிவையும், அரசு தக்கவைத்துக் கொள்ளத் தவறிய மழைநீரையும் பற்றி பேசுகிறார்கள். ஒருவிதத்தில் பார்த்தால், மக்களாகிய நாம் முயன்றிருந்தால் வெள்ளப்பெருக்கினை கணிசமாக குறைத்திருக்க முடியும். மொட்டை மாடிகளில் பொழிந்த மழைநீரை சாலைகளில் விடாமல், நிலவறைத் தொட்டிகளில் சேகரித்திருந்தால் எத்தனை கோடி லிட்டர் நீர், சாக்கடையில் கலக்காமல், குடிநீராகவே இருந்திருக்கும்? இப்படி இயற்கையின் மூலப்பொருட்களை 0% கூட வீணடிக்காத வீடுகளை “ஜீரோ டிஸ்சார்ஜ் வீடுகள்’ என்கிறோம்.அதாவது அந்த வீட்டு வளாகங்களில் இருந்து, ஒரு சொட்டு நீர் கூட சாலைக்கோ, மழைநீர் வடிகாலுக்கோ போகாது.
இதை இன்னும் விரிவாகக் காண்போம். சென்னையில் ஒவ்வொரு நபருக்கும், ஆண்டுக்கு 54,750 லிட்டர் முதல் 73,000 லிட்டர் வரை நீர் தேவை, அதன் அடிப் படையில், ஒரு டி.எம்.சி., நீர், 3.87 லட்சம் முதல் 5.17 லட்சம் மக்களின், ஒரு ஆண்டிற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும்.சென்னையில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 1549.90 மி.மீ., மழை பெய்வதன் மூலம், 23.31 டி.எம்.சி., நீர் கிடைக்கிறது. இது, 90 லட்சம் முதல் 1.20 கோடி மக்களின், குடிநீர் தேவைக்கு போதுமானது. சென்னையின் மக்கள் தொகை தற்போது 67.27 லட்சம் தான்.
அதாவது, நமக்கு கிடைக்கும் மழைநீர் போதுமானது. ( ஒரு கன.அடி நீர் என்பது = 28.31 லிட்டர் நீராகும். ஒரு டி.எம்.சி (T.M.C - Thousand million Cubic Feet) நீர் என்பது, ஆயிரம் கோடி கன.அடி நீர் ஆகும். அதாவது 28.31 ஆயிரம் கோடி லிட்டர் =ஒரு டி.எம்.சி).தங்கள் வீடு மற்றும் பிற கட்டடங்களின் மேல் விழும் மழைநீரை சேமிப்பதன் மூலம், நீர் தேவையை பூர்த்தி செய்து கொள்வதோடு அந்தந்த பகுதி சாலைகளில், நீர் தேங்காமலும் தடுக்க முடியும். பழைய மழைநீர் சேமிப்பு திட்டத்தில், நிலத்தடி நீரை உயர்த்துவது நோக்கமாக இருந்தது. அதன் நன்மைகளை உடனுக்குடன் உணர முடியாத நிலை இருந்தது. தற்போது கையாளப்படும் மழைநீர் சேமிப்பு முறைகளின் மூலம், அந்தந்த ஆண்டு கிடைக்கும் மழைநீரை அப்போதே பயன்படுத்த முடியும்.
பிளாஸ்டிக் தொட்டி சேமிப்பு முறை
பெங்களூரூவில் பலரும் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் விழும் மழை நீரை எளிய, குறைந்த செலவு முறையில் சுத்திகரித்து நேரடியாக பிளாஸ்டிக் தொட்டிகளில் சேமித்து வருகின்றனர். அப்படி சேமிக்கப்படும் நீரை குளிப்பதற்கு, துணி துவைப்பதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர்.
வீட்டைச் சுற்றி விழும் நீரையும் பிடித்து, தனியாக ஒரு சிமென்ட் தொட்டியில் விடுகின்றனர்.
இப்படி சேமித்தால் எவ்வளவு நீர் கிடைக்கும்?
1 க.மீ.,பரப்பில் (10.76 சதுரடி) 1 மி.மீ., மழை பெய்தால், 1 லிட்டர் நீர் கிடைக்கும். அதன்படி, 500 சதுரடி உள்ள ஒரு மொட்டை மாடியில், 1 மி.மீ., மழை பெய்தால், 46.45 லிட்டர் நீர் கிடைக்கும்.
சென்னையில் மட்டும் , 150 மி.மீ., மழை பெய்தது. எனில், 500 சதுரடி மொட்டை மாடியில் இருந்து 6,967 லிட்டர் நீரை சேமித்திருக்க முடியும்.
இதை சேமிக்காமல், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் கணிசமான அளவு நீர், சாலையில் விடப்படுவதால் தான் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு தெருவில் 10 வீடுகள் இப்படி இருந்தால், 70 ஆயிரம் லிட்டர் நீர் சாலைக்குத் தான் செல்லும். இதனுடன் ஏரி நீர் திறப்பும் சேர்ந்ததால் அளவுக்கதிகமான வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது.
சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் ஓரளவு மழைநீரை சேமிக்கிறார்கள்.
ஆனால், நகருக்குள் இந்த சிஸ்டம் அரிது. ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்ட வீடுகளிலும் இம்முறையைப் பின்பற்றி மழைநீர் சேமிக்கலாம். நகராட்சி அனுமதியுடன் , பாதுகாப்பான நிலவறைத் தொட்டி அமைத்து இனிவரும் மழைநீரை வீதிக்கு விடாமல் காப்பாற்றி வைத்தால், உங்கள் வீடும் “ஜீரோ டிஸ்சார்ஜ் வீடு’ என பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு...8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2070097
|