வீட்டுபத்திரம் தொலைந்து போனால் என்ன செய்வது?

24 ஜனவரி 2024   05:30 AM 15 டிசம்பர் 2018   12:51 PM


நம்மில் பலருக்கும் வீடு வாங்குவதில் அசைக்க முடியாத நம்பிக்கையும், ஆர்வமும் இருக்கும். ஆனால், ஆரம்ப நிலையில் உள்ள  இந்த கவனம் எல்லாம் வீடு வாங்கியபின் பெரிதாக தெரிவதில்லை. வாங்கிய அல்லது கட்டிய வீட்டை முறையாக பராமரிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த வேளையில் உங்கள் பெயருக்கு பதிவு செய்யப்பட்ட சொத்தை வெளிப்படையாக பாதுகாப்பது போன்று, அதன் ஆவணங்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம். உங்கள் பெயரிலான கிரையப் பத்திரத்தின் அசல் பிரதியை வங்கியில் கொடுத்து வீட்டுக்கடன் வாங்கியிருந்தால், அந்த ஆவணத்தை பாதுகாக்கும் பொறுப்பு வங்கியையே சாரும்.

அதே வேளையில், அதன் நகல் பிரதிகள் உங்களிடம் இருக்க வேண்டியது அவசியம். அசல் பிரதி உங்களிடம் இருக்கும்போது, அதை பாதுகாக்க வேண்டிய முழு பொறுப்பும் உங்களையே சாரும். அப்படிப்பட்ட சூழலில் அசல் பிரதியை பாதுகாப்பாக வைப்பதுடன், அதை வெளி நபர்கள் யார் கைக்கும் கிடைக்காமல் பார்த்துக் கொள்வதும் முக்கியம். நிர்வாக ரீதியான பணிகளுக்காக ஏதாவது அரசுத்துறையின் ஆய்வுக்கு தேவைப்படும் சமயத்திலும், அசல் பிரதியை அடிக்கடி வெளியில் எடுப்பது நல்லதல்ல. இத்தகைய தேவைகளுக்காக அசல் ஆவணத்தின் நகல் பிரதிகளை கைவசம் வைத்துக் கொள்வது நல்லது.


காணாமல் போனால்...
இவ்வளவு கவனத்துடன் இருந்தாலும், சில சமயங்களில் அசல் ஆவணங்கள் காணாமல் போகும் சூழலும் எழும். அப்போது, கலங்கி நிற்காமல் அடுத்தகட்ட நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் சொத்தின் அசல் ஆவணம் தொலைந்து போனால், அது வீட்டில் இருந்து தொலைந்தால், உங்கள் வீடு அமைந்துள்ள பகுதிக்கான காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும். புகார் கொடுத்ததற்கான காவல்துறை வழங்கும் ஒப்புகை கடிதத்தை பெற வேண்டும். அடுத்து, சம்பந்தப்பட்ட ஆவணம் தொலைந்து போனது குறித்து பத்திரிகை விளம்பரம் வெளியிட வேண்டும்.


பிரதி ஆவணம் பெற...
இதன் பின்னும் கிடைக்காவிடில், நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சொத்தின் விவரங்கள், காவல்துறையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் அலுவலகத்தை அணுகி, பிரதி ஆவணம் கோரி விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு பிரதி ஆவணம் பெற விண்ணப்ப கட்டணம், ரூ.100ம், கூடுதலாக ஒவ்வொரு பக்கத்துக்கும் ரூ.20 வீதம் கட்டணம் செலுத்த வேண்டும். இதன்படி விண்ணப்பித்த ஒரு சில நாள்களில் உங்களுக்கு பிரதி ஆவணம் கிடைத்துவிடும். எனவே, அசல் ஆவணம் தொலைந்துவிட்டால், கலங்கி நிற்காமல் உடனடியாக அதன் பிரதி ஆவணத்தை பெற நடவடிக்கை எடுப்பதன் மூலம் உங்கள் சொத்தை யாரும் அபகரித்துவிடாமல் தடுக்கலாம்.

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067780