எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ்நாட்டில் திருட்டுகளும், கொள்ளைகளும் குறைவது கிடையாது. இரவு நேர போலீஸ் ரவுண்டுகள் முன்பை விட அதிகமாகி விட்டன. எலக்ட்ரானிக் சேஃப்டி சிஸ்டங்களும் தற்போது அதிகமாகி விட்டன. முன்பைவிட மேம்பட்ட விதத்தில் பொருட்கள் காக்கப்படுகின்றன ஆனால், என்ன காரணத்தினாலேயோ திருட்டுக் குற்றங்களும் அதிகமாகி விட்டன.
அவ்வப்போது திருட்டு பயத்திற்கு தீர்வு என்ன?. எவ்வாறு நமது உடைமைகளை காப்பது? போன்ற கட்டுரைகளும் பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன என்றாலும், திருட்டுகள் குறைவதில்லை. வருடத்திற்கு வருடம் இத்தனை சதவீதம் என்று திருட்டுக் குற்றங்கள் ஏறிக்கொண்டு இருக்கின்றன. அதற்காக, ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது’ என்று பாட்டுப் பாடிவிட்டு சென்று விட முடியுமா?
அந்தக் காலத்து கருப்பு வெள்ளை படமான, காசேதான் கடவுளடா! திரைப்படத்தில் பணத்தையும், நகைளையும் அந்த வீட்டின் இரகசிய அறை ஒன்றில் வைத்திருப்பார்கள். அந்த அறைக்குச் செல்வதற்கு ஏகப்பட்ட இரகசிய வழிகள் இருக்கும். கருவிகள் இருக்கும். அலாரங்கள் பொருத்தப்பட்டு இருக்கும். அதுபோன்ற அந்த சேஃப்டி சிஸ்டம் பெரிய வீடுகளுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும்.
ஆனால், இடப்பற்றாக்குறை நிலவும் இச்சூழலில் நகைகளையும், பணத்தையும் எங்கு வைப்பது? ஹாலில் அல்லது பெட்ரூமின் மூலையில் இருக்கும் பீரோவில்தானே வைக்க வேண்டி இருக்கிறது. (சிலர் பீரோவைப் பூட்டி விட்டு சாவியை பீரோவின் மீதே வைப்பதுதான் இன்னும் கொடுமை. இன்னும் சிலர் ஒருபடி மேலே, வாசற்படியில் ஓரமாய் ஆணி அடித்து ரொம்ப பாதுகாப்பாய் வீட்டின் சாவியைத் தொங்கவிட்டிருப்பார்கள்) அதிக பட்சம் பால்கனியிலும், ஜன்னல்களிலும் கிரில்களை அமைப்பதோடு நமது சேஃப்டி முறைகள் முடிந்து விடுகின்றன. இன்னும் சிலர் வீடியோ போன், எலக்ட்ரானிக் லாக் வரைக்கும் செல்கிறார்கள். இவர்கள் அனைவரும் காசேதான் கடவுளடா படத்தின் இரகசிய அறை போல தனது 600 ச.அடி வீட்டிலும் இரகசிய அறை அமைக்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்.
தற்போதைய ஆர்க்கிடெக்சர் வழி முறைகளில் இதுவும் சாத்தியமாகி இருக்கிறது. வீடு பெரிதாக இருக்கத் தேவையில்லை. வீட்டை இடித்துக் கட்டவும் தேவையில்லை. அதிக செலவும் செய்ய வேண்டி இருக்காது.
எல்லாவற்றையும் விட மிக முக்கிய விஷயம், உங்கள் வீட்டின் இரகசிய அறை எங்கிருக்கிறது என்பது வெளியாட்கள் எவரும் நினைத்துப் பார்க்கவே முடியாது என்பதுதான்.
இங்குள்ள படங்களில் உள்ளது போன்று படிக்கட்டுகளின் பின்புறம், படிக்கட்டை ஒட்டிய காலணி அலமாரியின் பின்புறம், புத்தக அலமாரியின் பின்புறம் மற்றும் இதுபோன்று நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத வீட்டின் பகுதிகளுக்கு பின்புறம் உங்களது இரகசிய அறையை அமைத்து விடலாம்.
தச்சு வேலை அதிகம் தேவைப்படும் இந்த வேலைக்கு, நம்பகமான ஆட்களை அமர்த்திக் கொள்வது நல்லது. இவற்றை திறப்பதற்கான முறை, திறப்பதற்கான கருவி ஆகியவை எவரும் அறிந்து கொள்ளாத வகையில் நீங்கள் அமைத்து விட்டால், திருட்டைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. உங்களது இரகசிய அறையை அதிகபட்சம் 50 முதல் 100 ச.அடியில் அமைக்கப் போகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். 200 முதல் 300 ச.அடி இருக்கும் உங்களது படுக்கை அறையில் தாராளமாக இந்த இரகசிய அறைகளை அமைத்துக் கொள்ளலாம். வாட்ரோப்பின் பின்புறம், ஷோகேஸின் பின்புறம் போன்ற இடங்களுக்குப் பின் காலி இடங்களை ஏற்படுத்தி அவற்றை இரகசிய அறைகளாக நம்மால் மாற்ற முடியும்.
கொள்ளை போன பிறகு புலம்புவதற்கு பதில் சில ஆயிரங்களை செலவழித்து, கொஞ்சம் மூளை யையும் செலவழித்து இரகசிய அறைகளை ஏற்படுத்திக் கொண்டால் நீங்கள் பாடுபட்டு சேர்த்த பணம் தப்பிக்கும்.
வருமான வரி அதிகாரிகள் கேட்டால் மட்டும் கொஞ்சம் திறந்து காட்டுங்கள். ப்ளீஸ்!
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067786
|