முன்பெல்லாம் வீடு வாங்க வேண்டுமென்றால் ரயில் நிலையம், பேருந்து நிலையம், மார்கெட் அருகில் இருக்கிறதா? எனப் பார்ப்பார்கள். இனி ஏரி அருகில் இருக்கிறதா?, ஆறு அருகில் இருக்கிறதா? நமது கட்டிடம் நீர்நிலையிலோ, அல்லது நீர்த்தடத்தையோ ஆக்கிரமித்து கட்டி இருக்கிறதா? எனப் பார்க்க வேண்டும்.
அத்தகு பாடத்தை நடத்தி விட்டுச் சென்றிருக்கிறது சென்னை வடகிழக்கு பருவமழை. சென்னையின் ஒவ்வொரு அங்குல இடங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட நுனியூ பகுதியோ கேட்கவே வேண்டாம். கடற்கரை பார்த்த வீடுகள் என விளம்பரம் செய்து கடந்த 5 ஆண்டுகளில் விற்கப்பட்ட அந்த வீடுகள் தற்போது வெள்ள நீரில் சிக்குண்டு ,தவித்து வீடு வாங்குதல் குறித்த நில அறிவியலின் தேவையை வாடிக்கையாளர்களுக்கு நன்றாகவே காட்டிவிட்டது. வெள்ளப் படுகையிலும், சதுப்பு நிலங்களிலும் ‘ஏரி பார்த்த வீடுகள்’ என்ற கவர்ச்சி விளம்பரத்துடன் விற்கப்பட்ட வீடுகள் பல நிஜமாகவே ஏரியில் சிக்கிய படகுகளாகிவிட்டன. தென்சென்னையில் பள்ளிக்கரணை, முடிச்சூர் மட்டும் தானில்லை.
மேற்கு சென்னையில் வில்லிவாக்கம், சிட்கோ நகரிலும் இதே நிலைதான்.20 ஆண்டுகளுக்கு முன்பு, சென்னை முழுதும் இருந்த 650க்குப் மேற்பட்ட நீர் ஆதாரங்கள் தற்போது அழிக்கப்பட்டுவிட்டன. இதுபோன்ற பெருமழை பொழிந்தால் தான், அதன் உண்மையான இருப்பிடம் நமக்கு தெரியப்படுகிறது என்கிறது IIT சென்னை ஆய்வு.Adaptive Technologies, என்கிற நிறுவனத்தின் இயக்குநர், லலித் மோகன் வர்மா என்பவர் 20 ஆண்டுகளாக நீரியல் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். அவர் நீர்நிலைகளின் சீற்றம் குறித்து கூறுகையில், “”உற்பத்தி செய்ய முடியாத பொருள் தான் நிலம். அதற்கான தேவை அதிகரிக்கும் போது நிலத்தின் விலை பன்மடங்கு உயர்கிறது. அப்போது என்ன நடக்கும்? கேட்பார்யற்று கிடக்கும் நிலங்களை சீர்படுத்தி விற்க நினைப்பார்கள், நீர் நிலைகளை தூர்த்து, அதை மனையாக்கி விற்கப்பட்டிருக்கிறது. இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருப்பது தான் வேதனை ‘’ என்கிறார்.
இவர் சொல்வது உண்மைதான். சமீபத்தில் போரூர் ஏரியின் ஓரங்களில், கட்டிடக் கழிவுகளைக் கொட்டி அதை மெல்ல மெல்ல வீட்டு மனையாக்கும் கொடுமை கூட நடந்தது. ஒரு சில நல்ல தொண்டு அமைப்புகளின் உதவியுடன் அது முறியடிக்கப்பட்டது. இது போன்ற செயல்கள் கவனிக்கப்படாது போகும் போது, அடுத்ததடுத்த ஆண்டுகளில், மெல்ல மெல்ல நீர்நிலைகள் இருந்த தடம் அழிந்து போகும். ‘அங்கு, அதற்கு முன்பு என்ன இருந்தது என்பதை அப்பகுதி வாசிகளே மெல்ல மறந்து போய் விடுவர்.
புதிதாக, அங்கு வருபவர்கள் அது பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாமல் விலை குறைவாக கிடைகிறதே என்று மயங்கி வீட்டை வாங்க முடிவு செய்து விடுகிறார்கள். பெரும்பாலும், இது சிறிய பில்டர்களின் வீடுகளாகக் தான் இருக்கிறது.
தனியார் என்று தான் இல்லை. அரசும் இப்படித் தான் நீர் நிலைகளின் அருமை தெரியாமல் நடந்து கொள்கிறது. ஒரு புதிய அரசு அலுவலகம் அமைக்க இடம் கிடைக்கவில்லை என்றால், தூர்த்து போய் கிடக்கும் நீர்நிலைதான் முதல் பலி. தென் மாவட்டங்களில் ஒரு சில கலெக்டர் அரசு அலுவலகங்கள் அப்படித்தான் கட்டி இருக்கிறார்கள்.
மதுரை உயர் நீதிமன்றமே பல ஆண்டுகளுக்கு முன்பு தூர்ந்து போன ஒரு நீர்நிலையின் மீது தான் கட்டப்பட்டிருக்கிறது என்கிறார்கள்.
அவ்வளவு ஏன் ? சென்னை ,வில்லி வாக்கம் நூறு அடி சாலை, பாடி மேம் பாலம் ஒட்டிய ஒரு 15 ஏக்கர் பரப்பிலான நீர்நிலைதான் வில்லவாக்கம் ஏரி. தற்போது இது அரசின் தேவைக்காக, ஒரு புதிய பஸ் நிலையம் அமைக்க சிறிது சிறிதாக தூர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அதாவது, இத்தனை சீரழிவிற்கு பிறகும் இப்படி ஒரு கொடுமையான செயல் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. அவர்களுக்கும் நிலம் வேண்டுமெனில், இது TVS நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொடுத்த அரசு நிலம் இருக்கிறது.
இன்னும் வடக்கே ஆராய்ந்தால் ஏகப்பட்ட பொது நிலங்கள் உள்ளன. தனியார் நிலங்களும் உள்ளன. அதெல்லாம் அவர்கள் பார்க்கமாட்டார்கள். ஏனெனில், அவை காஸ்ட்லி. ஆனால், நிஜமான காஸ்ட்லி என்பது நீர் நிலைகள் தான் என்பது மக்களும் அரசும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அரசு புதிய பேருந்து நிலையம் வருகிறது என்றால் யாரும் எதுவும் பேச மாட்டார்கள்? போராட மாட்டார்கள் என்பதற்காக இப்படி ஒரு வேலையைச் செய்கிறார்கள்.
இதனுடைய பின் விளைவு என்னவாக இருக்கும்? இதே போன்று பெருமழை பொழியும் பொழுது, இந்த நீர்நிலைக்கு வர வேண்டிய நீர் வரத்து , வர வேண்டிய இடத்திற்கு வராமல் ,அருகில் உள்ள குடியிருப்புகள், தொழிற்பேட்டைக்கு வந்து விடும்.
அந்த சமயத்தில், அங்கு வசிப்பவர்க்கு வெள்ளப்பெருக்கின் காரணம் தெரியாது. அதிக மழையே வெள்ளத்தினைக் கொணடு வந்ததாக கருதுவர். இந்த கண்ணாமூச்சி விளையாட்டுதான் காலங்காலமாக நடந்து வருகிறது.
ஒரு வீட்டை அல்லது கட்டுமானத்தை வாங்கும் போது, அதன் அமைவிடம் குறித்த நிலவியல் அறிவு வாடிக்கையாளர்களுக்கு இருக்க வேண்டும். இதற்கு ஏரிகள் வரைபடம் அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சென்னை புறநகரின் வரைபடம் நன்கு உதவும்.
இனிமேல் வீடு வாங்குவோர்கள் மட்டுமல்ல, இதுவரை வீடு வாங்கியவர்கள் கூட , தாங்கள் வாங்கிய வீடு எந்த நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம்.அப்படி தவறும் பட்சத்தில் லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்து, வாங்கிய வீட்டின் பாதிதளம் வரை வெள்ளப்பெருக்கு நீர் வந்து நலம் விசாரிக்கும்.
தென் சென்னையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு , தாம்பரம் சி.டி.ஓ காலனியில் வீடு வாங்கிய போஸ் என்பவர் மதுரையைச் சேர்ந்தவர். தென்சென்னையின் நில அமைவியல் தெரியாதவர். ‘இரண்டு ஆண்டுகளாக எந்த மழையிலும் இந்த வெள்ளத்தினை நான் பார்த்ததில்லை. எங்கள் வீடு சாலைமட்டத்தை விட, இரண்டு அடி உயரத்தில் கட்டப்பட்டதாகும். ஆனால், அரை மணி நேரத்திற்குள்ளாகவே எங்கள் முதல் மாடி கிட்டத்தட்ட முழ்கடிக்கப்பட்டுவிட்டது. எதைத்தான் நாங்கள் காப்பாற்ற முடியும். முக்கியமான பொருட்களை எடுத்துக்கொண்டு நாங்கள் படகு மூலம் நகர்ந்து விட்டோம். வெள்ளம் மெதுவாகவே வடிந்தது’’.
எனச் சொல்கிற போஸ் தற்சமயம் வேறொரு வீட்டிற்கு குடிபோகலாம் என்றால் அதுவும் முடியாது. “5 லட்சம் ரூபாய் பெறுமானமுள்ள வீட்டை EMI மூல
மாக 55 லட்ச ரூபாய் வரை கட்டுகிற வரை கட்டுகிற நிர்ப்பந்தத்தில் உள்ளேன். நான் இந்த வீட்டிற்கு இ.எம்.ஐ கட்டியாக வேண்டும், அதே சமயம் இன்னொரு வீட்டை வாடகைக்கு எடுத்து அந்தப் பணத்தை எவ்வாறு என்னால் கட்டமுடியும் என்கிறார்’’ போஸ் முத்துக்குமார்.
இவர் மட்டுமல்ல, “”சாட்டிலைட் படம் மூலம் எங்கள் இருப்பிடத்தை காணும் போது தான், நாங்கள் எப்படி ஒரு தாழ்வான இடத்தில், நீர் நிலைக்கு வெகு அருகில் உள்ள வீட்டை வாங்கியிருக்கிறோம் என்று’’ என பலரும் இப்போது பேசத் துவங்கியுள்ளனர்.
துணை மேலாளர், மத்திய அறிவியல் மற்றும் சுற்றுப்புற சூழல் இயக்கத்தில் பணிபுரியும் சுஷ்மிதா சென் குப்தா கூறும் போது ‘‘1925-ல் மும்பையில் விவசாயம் நடந்து வந்தது. 1990 களில் அந்நிலங்களின் 60 விழுக்காடு சாலைகள், பாலங்கள், சேரிகள், குடியிருப்புகள், வணிக வளாகங்களாக மாஷீவிட்டன என்றாலும் அங்கு நீர்வழிப்பாதைகள் சிதைக்கப்படவில்லை.ஆனால், பெங்களூருவில் அந்நிலை இல்லை. 2005 வெள்ளத்தில் பெங்களூருவை பெருவெள்ளம் சூழ்ந்தது. காரணம் 1960-ல் 262 ஏரிகள் இருந்த பெங்களுருவில் தற்போது 10 ஏரிகள் உள்ளது தான். பெங்களூர் நிலைதான் சென்னைக்கும்.
கோட்டூர்புரத்தில் ஒரு ச.அடி மனை 20,000 முதல் 22,000 வரை செல்கிறது. ஆனால், பாருங்கள் இந்த பகுதிதான் வெள்ளப்பெருக்கில் பலத்த அடிவாங்கியுள்ளது. ஆனால்,ரூ.4,000, 4,500 விற்கும் ராயபுரம், காசிமேடு பகுதிகளில் கொஞ்சம் கூட வெள்ள நீர் இல்லை. இது எதைக் காட்டுகிறது?’’ எனக் கேள்வி கேட்கிறார் சுஷ்மிதா.இனி அமைதியான பகுதி, பசுமையான சூழல் என்றல்லாம் மட்டும் பார்க்காமல் எந்த பெருமழையிலும், வெள்ளத்திலும் சிக்காத பகுதியாகப் பார்த்து தான் பில்டர்கள் வீடு கட்ட வேண்டும். வாடிக்கையாளர்கள் வீடு வாங்க வேண்டும்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067792
|