மாற்று திறனாளிகளுக்கானதா உங்கள் வீடு?

24 ஜனவரி 2024   05:30 AM 03 டிசம்பர் 2018   12:08 PM


பொதுவாக சாதாரண மக்களுக்கு வீடுகளை திட்டமிடும் போதே நிறைய விஷயங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியதுள்ளன. தங்கள் வீடு எப்படியிருக்க வேண்டும் என்பதில் ஒவ்வொருவருக்கும் பல்வேறு வித்தியாசமான எண்ணங்களும் விருப்பங்களும் உள்ளதைக் காணலாம். கட்டிடத்தில் இருக்க வேண்டிய அறைகள், அறைகளின் அளவுகள், ஒவ்வொரு அறைகளும் அமையவேண்டிய திசைகள், குளியலறைகளின் அமைப்பு மற்றும் அளவுகள், கதவுகள் மற்றும் ஜன்னல்களின் அளவுகள், பயன்படுத்தப்படும் பொருட்கள், படிகளின் அளவுகள், சமையல் மேடையின் உயரம் போன்ற அனைத்து விrயங்களிலும் வீட்டைப் பயன்படுத்தப்போகும் உரிமையாளர்களின் பிரத்தியேக விருப்பங்களைக் கேட்டறிந்து அவைகளுக்கேற்பவே திட்டமிட்டு வீடுகள் வடிவமைக்கப்படுகின்றன. ஆனால், நன்றாக யோசித்துப் பாருங்கள்.

 

நாம் எப்போதாவது, மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்துவதற்காக வீட்டை வடிவமைக்கிறோமா? ஏனெனில், பெரும்பான்மை பயனாளர்களை மனதில் கொண்டுதான் உலகின் சகலவிதமான வணிக பொருட்களும் வர்த்தக சந்தைக்கு கொண்டுவரப்படுகின்றன.வீடும் அதற்கு விதிவிலக்கல்ல. எங்கள் வீட்டில் மாற்று திறனாளிகளே இல்லை எனச் சொல்பவர் கூட, இரு விrயங்களை மறந்து விடுகிறார்கள். தங்களைத் தேடி வரும் நண்பர்கள், உறவினர்கள் மாற்று திறனாளிகளாக இருந்தால், நாளை நாமே திடீரென மாற்று திறனாளியாக தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ ஆகும் சூழ்நிலை ஏற்பட்டால்? மாற்று திறனாளிகள் என்பவர்களில் பார்வை , செவி குறைபாடுடையவர்களை விட நடமாடமுடியாதவர்களைப் பற்றிதான் ஒரு வீட்டை வடிவமைப்பவர்கள் கவலை கொள்ள வேண்டும். சாதாரணமாக நடக்க முடியாமல் ஊன்றுகோல் உதவியுடன் அல்லது சக்கர நாற் காலி மூலம் நகருபவர்களைத்தான் பெரும்பாலும் உடல் ஊனமுற் றோர் எனக் கருதுகிறோம்.

 

இப்படிப்பட்டவர்களுக்குத்தான் வீடுகளில் பல விசேட அமைப்பு கள் தேவைப்படுகின்றன. மேலும், கண்பார்வையற்றோர், மூளை வளர்ச்சி குன்றியோர் போன்ற பிற குறைபாடுகள் உள்ளவர்களுக்கும் சில தனிப்பட்ட காரியங்களை கருத்தில் கொண்டு வீடுகள் வடிவமைக்கப்பட வேண்டியதுள்ளது. பொதுவாக , நாமே வீட்டைக் கட்டும்போதும் சரி, பில்டரிடமிருந்து வீட்டை வாங்கும்போதும் சரி. மாற்று திறனாளிகளுக்கேற்ப வடிவமைப்பில் சிற்சில திருத்தங்களை செய்ய இயலும். ஆனால், எங்கள் வீட்டில் மாற்றுதிறனாளி இருக்கிறார் என பலர் வெளியேச் சொல்லத் தயங்குகின்றனர். விளைவு நமக்கான வீட்டை ஏராளமான சிரமங்களுடன் சக்கர நாற்காலியுடனும், நடைத்தடியுடனும் சிரமத்துடனே அவர்கள் நம்முடன் வசிக்கின்றனர்.

 

படிக்கட்டு ஏறுவது முதல் குளியலறை , கழிவறை பயன்படுத்துவது வரை அவர் களுக்கு சிரமம், சிரமம் தான். நீங்கள் மட்டும் படுநேர்த்தியாக ஒரு மாற்றுதிறனாளிக்கான வீட்டை வடிவமைத்து விட்டால் அவர்களது வேலையை மட்டு மல்ல, நமது வேலையையும் அவர்களே செய்து விடுவார்கள். சரி. மாற்றுதிறனாளிகளின் வீடு எப்படி இருக்க வேண்டும்? அதென்ன விசேஷ வடிவமைப்பா? மாற்றுத்திறனாளிகளுக்கான வீடுகள் என்பதற்காக, அவை முற்றிலும் வித்தியாசமாக, ஒரு மருத்துவமனையைப் போல கட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை. சாதாரணமான வீடுகள் சில பிரத்தியேக வசதிகளுடனும், சிறு மாற்றங்களுடனும் பயனீட்டாளர்களின் தேவைகளுக் கேற்ப வடிவமைக்கப்பட்டால் போதுமானது. ஒரு சக்கரநாற்காலி பயன்படுத்தும் நபர் கூடிய மட்டும் பிறர் துணையின்றி தாமாக வீட்டைத்திறந்து உள்ளே நுழைவது முதல், கதவை அடைப்பது, ஒவ்வொரு அறைகளுக்கும் சிரமமின்றி நகருவது, சமையல் செய்வது, பொருட்களை அலமாரிகளில் வைப்பது, எடுப்பது, பாத்திரங்களைக் கழுவுவது, குளியலறை மற்றும் கழிப்பறைகளைப் பயன்படுத்துவது போன்ற காரியங்களை அவராக செய்வதற்கேற்ப சில சிறிய மாற்றங்களுடன் அவருக்கான வீடு கட்டப்பட வேண்டும். இன்னும் விளக்கமாக அதனைக் காண்போம்.

 

1. மாற்றுத்திறனாளிகளுக்கான வீடுகள் தரத்தளம் மட்டுமுள்ள வீடுகளாய் அமைவது நல்லது. ஒரு வேளை மனையின் அளவு காரணமாய் முதல் தளம் அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படின், சக்கர நாற்காலியுடன் ஏறி இறங்க வசதியான அளவில் மின் தூக்கிகள் அமைக்கப்பட வேண்டும்.

 

2. வீட்டின் தரத்தள மட்டம், சாலை மட்டத்திலிருந்து மிக அதிக உயரத்தில் அமையாமல், ஒன்று அல்லது ஒன்றரை அடி உயரத்திற்குள் அமைக்கப்படுவது நன்று. அதே வேளையில் மழை, வெள்ள காலங்களில் வெள்ள நீர் எளிதில் உள்ளே புகாத அமைப்புகளும் திட்டமிடப்பட வேண்டும். ஆபத்து காலங்களில் வீட்டை விட்டு எளிதில் வெளியேறி சாலையை அடையும் வகையில், இணைப்பு வழியமைப்புக்கள் இருக்க வேண்டும்.

 

3. வீட்டினுள் பிறர் உதவியின்றி சக்கரநாற்காலியுடன் ஏறி நுழைவதற்கு வசதியாக, படிகளுக்குப் பதில் மெல்லிய சாய்தளப்பாதை (Ramp) அமைக்கப்பட வேண்டும். அத்தகைய சாய்தளப் பாதையின் இரு ஓரங்களிலும் கைபிடிகம்பிகள் அமைக்கப்பட வேண்டும். சாய்தளப்பாதையின் மேல் மட்டத்தில் பிரதான கதவுக்கு முன் குறைந்த பட்சம் நாற்காலி நிற்கும் அளவுக்கு சமதளப் பகுதி அமைய வேண்டும்.

 

4. வீட்டின் நுழைவு வாயில் மற்றும் ஏனைய கதவுகள் அனைத்தும், சக்கர நாற்காலியில் இடையூறின்றி பயணப்பட வசதியாக அகலமாக அமைக்கப்பட வேண்டும். கதவுகளின் சுத்தமான திறப்பளவு மூன்றேகால் அடிக்குக் குறையாமல் அமைவது நன்று. அறைகளின் தளங்கள் ஒரே மட் டத்தில் அமைக்கப் படுவதோடு வாசல் நிலைகளில் அடிச்சட்டம் தவிர்க்கப்பட வேண்டும். அறைகளில் கட்டில், சோபா, நாற்காலிகள், மேஜைகள் போன்ற பொருட்களை நல்ல இடை வெளியிட்டு போட ஏற்றவகையில் அறைகளின் நீள அகலங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.

 

5. தரைகளில் கார்பெட் விரிப்புகள் தவிர்க்கப் படுவதுடன், தளக்கற்கள் ஈரமடைகையில் வழுக்கா தன்மையுடையவையாய் இருக்க வேண்டும்.

 

6. கதவுகளில் பொருத்தப்படும் தாழ்ப்பாள், கொண்டி, பூட்டுகள், சுவர்களில் பொருத்தப்படும் மின் ஸ்விட்சுகள்,அலாரம் மற்றும் அழைப்பு மணி களுக்கான அழுத்திகள், தொலைபேசி அமைவிடம் போன்றவை தரையிலிருந்து மூன்று முதல் நான்கு அடி உயரத்துக்குள் அமைக்கப்பட வேண்டும். சன்னல்களின் கதவுகளை நாற்காலியில் அமர்ந்தவாறே திறக்கவும் மூடவும் ஏற்ற வகையில் தாழ்ப்பாள் அமைக்கப்பட வேண்டும்.

 

7. நுழைவுக் கதவுகளின் அருகில் கதவுகளைத் திறந்து மூடும் போது கையிலுள்ள பொருட்களை வைத்து எடுக்க வசதியாக அலமாரித்தட்டுகள் அமைக்கப்படலாம். இவை கதவு முழுமையாய் திறந்து மூட இடையூறின்றி அமைய வேண்டும்.

 

8. கை அலம்பும் பேசின்கள், பாத்திரம் கழுவும் தொட்டிகள், அவற்றுக்கான தண்ணீர் குழாய்கள், சமையலறை மேடைகள் அனைத்தும், பயனீட்டாளர் நாற்காலியில் அமர்ந்து பணி புரிய வசதியான உயரத்தில் அமைய வேண்டும். அத்துடன் அவர்கள் பேசின்களுக்கு அருகில் செல்கையில் அவர்களது கால் மூட்டுகளில் இடிக்காத வண்ணம் பேசின்களுக்குக் கீழ் உள்ள கழிவுக்குழாய்கள் பொருத்தப்பட வேண்டும்.

 

9. சமையல் அறை மேடைகளின் உயரம் இரண்டரை அடி உயரத்தில் இருப்பது நன்று. மேடைகளுக்குக் கீழ் உள்ள தட்டுகளுக்கு வெளியே திறந்து மூடும் வகையில் கதவுகள் அமைக்கப்படாமல் ஸ்லைடிங்ஷட்டர்கள் அமைத்தல் நல்லது.

 

10. குளியல் அறைகளில், சுழலக்கூடிய ஷவர்கள், கை ஷவர்கள், சுவர்களில் கைப்பிடிக்கம்பிகள், எளிதில் இயக்கப்படக்கூடிய தண்ணீர் குழாய்கள், உயரம் குறைந்த குளியல் தொட்டிகள் போன்றவை அமைக்கப்படுவது நல்லது. கழிவறையில் EWC சற்று உயரமாக அமைப்பது நன்று. EWC க்கு அருகில் மேலிருந்து தொங்க விடப்படும் வலிமையான கயிறு ஒன்றை, உரிய கைப்பிடி வசதியுடன், பொருத்துதல் நன்று.

 

11. படுக்கையறையில், கட்டிலில் படுத்துக்கொண்டே மின் விசிறிகள், விளக்குகள், தொலைபேசிகள், தொலைக்காட்சிப்பெட்டிகள் ஆகியவற்றைக் கையாளும் வசதிகள் அமைக்கப்பட வேண்டும்.

 

12. அடிக்கடி வீட்டை விட்டு வெளியே வந்து செல்ல வேண்டிய தேவையின்றி, பால், செய்தித்தாள், கடிதங்கள் ஆகியவற்றை வெளியிலிருந்து போடவும், உள்ளிருந்தே எடுத்துக்கொள்ளவும் ஏற்ற வகையில் அவற்றிற்கென பெட்டிகள் அமைக்கப்பட வேண்டும். உள்ளிருந்தவாறே வெளியே வருபவர்கள் / அழைப்பவர்களை பார்க்கவும் பேசவும் ஏற்ற வகையில் உபகரணங்கள் பொருத்தப்படலாம். இவையின்றி கண் பார்வையற்றோருக்காக வீடு வடிவமைக்கும்போது, தரை எவ்வித மேடு பள்ளமின்றி சமதளத்தில் அமைவது முக்கியம்.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067737