எந்தச் சொத்தையுமே முறையாகப் பராமரித்து வந்தால்தான் அதிலிருந்து முழுப் பயனையும் அடைய முடியும். வீடும் அதற்கு விதிவிலக்கல்ல. நீங்கள் உங்கள் வீட்டை உரிய முறையில் பராமரிக்க வேண்டுமானால் அவ்வப்போது சில பல புதுப்பிக்கும் வேலைகளை மேற்கொண்டே ஆக வேண்டும். இதை வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டுமா?
முதலில், வீட்டைப் புதுப்பிப்பது என்றால் என்ன என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். இப்போது இருக்கக் கூடிய சில அமைப்புகளை மாற்றிக் கட்ட வேண்டும். இப்போது கிடைப்பதை விட அதிக வசதி கிடைக்க வேண்டும். அழகும் கூட வேண்டும். ஆதாயமும் பெருக வேண்டும்.
இந்த நோக்கங்களின் அடிப்படையில் நீங்கள் உங்கள் வீட்டிற்காக எந்த வேலையைச் செய்தாலும் அதைப் புதுப்பிப்பு வேலை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றிரண்டு பழுதுபார்ப்பு வேலைகளைச் செய்தால் போதும். புத்தம் புதியதைப் போல் மாற்றிவிடலாம். நாற்காலிக்கு நீங்கள் என்னென்ன செய்ய நினைக்கிறிர்களோ அதே போன்றதுதான் வீட்டுக்கும். மாற்றலாம். இடிக்கலாம். கட்டலாம். புதிதாக வாங்கலாம்.
நாளாக நாளாக இயந்திரங்களும் சாதனங்களும் தேய்மானம் அடையும். பழையதாக ஆகும். பயன் குறையும். எனவே அவற்றைப் பராமரிக்க வேண்டும். பழுது பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் மாற்றிவிடவும் வேண்டி இருக்கும்.
பொதுவான ஒரு கணக்கை எடுத்துக் கொள்ளலாம். ஆறு வருடங்களுக்கு ஒரு முறை உங்கள் வீட்டைப் புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்படும். இது ஒரு உத்தேசக் கணக்குத்தான். அதற்கு முன்பாகவே கூட நீங்கள் புதுப்பிக்க நினைக்கலாம்.
ஆனால் ஆறு ஆண்டுகளுக்கு மேல் போய்விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆறு ஆண்டுக் காலம் ஒரு வீட்டில் தங்கி இருந்தால் உங்களுக்கே இலேசாக ஒரு சலிப்புத் தட்ட ஆரம்பிக்கும். அதுவரைக்கும் காத்துக் கொண்டு இருக்காமல் புதுப்பிப்பு வேலைகளை ஆரம்பித்துவிடுவதே நல்லது.
புதுப்பிக்கும் வேலையைச் செய்ய மறந்துவிடும் பலர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவதைப் பார்க்கலாம். அவர்களுக்கு வீட்டுக்கு வருவதை நினைத்தாலே வெறுப்பாக இருக்கும். வேப்பங்காயாய்க் கசக்கும். ஏன்? உரிய காலத்தில், தேவைப்படும் மாற்றங்களைச் செய்யாமல் விடுவதால்தான். உங்களுக்கு அந்த நிலை வரவே வேண்டாம். வீட்டிற்குள் நுழைந்தால் ஒரு புத்துணர்ச்சி உங்களை அறியாமலேயே வர வேண்டும். அதற்குப் புதுப்பிப்பதுதான் ஒரே வழி.
ஃபர்னிச்சர்கள்
உங்கள் ரசனைக்கு ஏற்ற விதத்தில் உங்கள் வீட்டு பர்னிச்சர்கள் இருக்க வேண்டியது முக்கியம். சுவர்களின் நிறம், அலங்காரம், அறைகளின் அளவு,தேவை,வசதி ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கவேண்டும்.
ஏற்கனவே நீங்கள் வைத்திருக்கும் பர்னிச்சர்களை விட்டுப் பிரிய மனம் வரவில்லையா? சரி. புதிதாக வாங்கப் போகும் பர்னிச்சர்களையும் கொண்டு வந்து சேர்த்தால் இரண்டும் ஒத்துப் போகிற மாதிரி இருக்குமா என்பதை யோசியுங்கள்.
அப்படி இருந்தால்தான் நிம்மதி. இல்லாவிட்டால் பெரும் சஞ்சலத்திற்கு ஆளாவீர்கள். பழைய,புதிய பர்னிச்சர்களைக் கலந்து போட்டு இயல்பான சூழ்நிலையை உருவாக்குவது என்பது எல்லாருக்கும் எளிதாக இருக்காது.
புதிதாக நீங்கள் வாங்கும் எந்தவொரு பொருளாக இருந்தாலும் அது உங்களுக்கு எந்த விதத்தில் கூடுதல் பயனை அளிப்பதாக இருக்கக் கூடும் என்பதை அலசி ஆராய வேண்டியது முக்கியம். அப்போதுதான் நீங்கள் எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும்.
உண்மையான மதிப்பு
சில பேர்களுக்குத் தங்கள் வீட்டின் உண்மையான மதிப்பைச் சொல்லத் தெரியாது. தெரியும் என்று சொல்லக் கூடியவர்களே கூடக் குறைத்துத்தான் சொல்வார்கள். ஏன் அப்படி? வீட்டைக் கட்டி முடிக்க ஆன செலவைத்தான் அவர்கள் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.
அது தவறு. வீட்டை அலங்கரிக்கவும் அன்றாடப் பயன்பாடுகளுக்கு உதவவும் நீங்கள் பலவிதமான பர்னிச்சர்களை வாங்கி வைத்திருப்பீர்கள். அவற்றின் விலையையும் கணக்கில் சேர்த்துக் கொண்டு சொல்ல வேண்டும்.
நீங்கள் வீட்டுப்பராமரிப்பிற்காக வாங்கும் பொருளுக்கான விலை ஒரு வகை முதலீடாகும். அதிலிருந்து உங்களுக்கு வருவாய் வர வேண்டும். அது பணமாகத்தான் வரவேண்டும் என்பதில்லை.செலவை மிச்சப்படுத்துவதாக இருக்கலாம். உடல் நலத்தைப் பேணுவதாகவும் அமையலாம்.
நல்லதொரு கட்டில் மெத்தைக்காகச் செலவழிக்கிறீர்கள் என்போம். உங்களுக்கு அருமையான உறக்கம் வரும். உடல் வலி குறையும். உற்சாகமாக எழுந்து கொள்வீர்கள். நல்ல ஓய்வே பல நோய்களை விரட்டும். நீங்கள் மருத்துவத்திற்காகச் செலவிடும் தொகை குறையும். இதுவே ஒரு வகைச் சேமிப்புத்தானே? அரைமணி நேரத்தில் முடிக்கக் கூடிய வேலையை இருபது நிமிடங்களில் முடிக்க உதவும் சாதனம் உங்கள் நேரத்தை மிச்சமாக்குகிறதில்லையா? அது உங்களுக்கு இலாபம் இல்லையா?
தரத்திற்கு முன்னுரிமை எப்போதும் தரமான பொருட்களையே வாங்கிப் பயன்படுத்துவது என்பதில் உறுதியாக இருங்கள். உங்கள் திட்ட எல்லைக்குள் அடங்கக் கூடிய தரமான பொருட்களைத் தேர்ந்தெடுங்கள். விலை அதிகம் என்கிற காரணத்திற்காகத் தரத்தில் விட்டுக் கொடுக்காதீர்கள்.
விலை அதிகம் என்றாலும் தரமான பொருட்கள் நீண்ட காலம் உழைக்கும். விலை குறைவான பொருட்கள் விரைவில் செலவு வைக்கும். வேறு சிலர் விலை அதிகமாக இருந்தால்தான் அது தரமான பொருளாக இருக்கும் என்று நினைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.
அப்படி இல்லை. சிக்கனமாகவே செலவு செய்யலாம். அதிகப்படி ஆடம்பரம் தேவையற்றது. எதையும் திட்டமிட்டே செலவழிக்க வேண்டும். அதிக அளவு பணத்தை வீட்டுப் பொருட்களை வாங்கிக் குவிப்பதிலேயே செலவிட்டுவிட்டால் அப்புறம் முக்கிய செலவுகளுக்குப் பணமில்லாமல் திண்டாட நேரிடும்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067726
|