கட்டுமானங்களுக்கு விரிவடையும் இணைப்புகள் ஏன் அவசியம்?

24 ஜனவரி 2024   05:30 AM 09 நவம்பர் 2018   12:56 PM


பெரிய கட்டுமானங்களுக்கு ஆங்காங்கே விரிவடையும் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். குறிப்பாக பாலங்களுக்கு தவறாமல் இது அமைக்கப்படிருக்கும், மிக நீளமான கட்டிடங்களை உருவாக்கும் போது அவைகளில் விரிவடையும் இணைப்புகள் (Expansion Joints) அமைப்பது தொன்று தொட்டு வழக்கமாக இருந்து வருகிறது. 

விரிவடையும் இணைப்பு என்பது என்ன? ஒரே கட்டிடத்தில் இரு பகுதிகளை தனித்தனியாக பிரிப்பது தான் இந்த விரிவடையும் இணைப்பு. உதாரணத்திற்கு ரயில் தண்டவாளங்களுக்கிடையே இவ்வாறான அமைப்பை உருவாக்குவது சகஜமாக இருந்து வருகிறது.

எதற்காக இவ்வாறு அமைக்கப்படுகிறது?

வெப்பத்தினால் பொருள்கள் விரிவடைவது நாம் அனைவரும் அறிந்ததே. அதேபோல் கட்டிட பாகங்களும் விரிவடைகின்றன. இவ்வாறான செய்கையினால் பல பாகங்கள் தொடர்ந்து ஒன்றாக இருப்பதனால் வெப்பத்தினால் பாகங்கள் வெப்ப சக்தியினால் முறுக்கப்பட்டு உருக்குலைகின்றன. அதனால் அவைகள் சேதமுற வாய்ப்புகள் உண்டாகின்றன. இதனை தடுக்கவே இரு பாகங்களுக்கிடையே இடைவெளி விடப்படுகிறது. இந்த இடை வெளியில் வெப்பசக்தி வீணடிக்கப்படுகிறது. இதன் மூலம் கட்டிடங்களில் ஏற்படும் விரிசல்கள் தவிர்க்கப்படுகின்றன.


இணைப்பு இடைவெளி யினால் நன்மை சரி. இதனால் இடையூறுகள் ஏற்படுமா?

இவ்வாறு அமைக்கப்படும் இணைப்பு இடைவெளியால் சிற்சில தீங்கும் விளைகின்றன. இதனை சரி வர பராமரிக்கப்படாவிடில் இந்த இடைவெளி வழியாக மழை
நீர் கட்டிடத்திற்குள் உட்புக ஏதுவாகிறது. இதனால் கட்டுமானத்தின் கான்கிரீட் பழுதடைய துவங்குகிறது. பறவையின் எச்சங்கள் தங்கி அதன்மூலம் , விருட்சங்கள் உருவாகும் ஆபத்தும் உண்டு.
(ரயில் தண்டவாளங் களுக்கிடையே இடைவெளி விடும்போது அதனை பிஸ் பிளேட் என்ற அமைப்பை போல்ட்டை பயன்படுத்தி பொருத்தப்படுகிறது. ரயில் ஓடுகையில் சக்கரங்கள் இந்த இடைவெளியை கடக்கும் போது டக்டக் என்று அதிக சத்தம் உண்டாகி பயணிகளுக்கு தொந்தரவாக இருக்கின்றன).


கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
விரிவடையும் இணைப்புகள் அமைக்கையில் தேவையான பெயர்ப்பு இணைப்பில் மிகக்குறைந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துமாறு பார்த்து கொள்ள வேண்டும். இணைப்புக்கு இருபக்கமும் உள்ள பாகங்கள் தனிதனியே காலங்களில் மீது தாங்குமாறு அமைக்க வேண்டும். 1s:3414 கோட்பாடு நூலின் படி 30 மீ நீளத்திற்கு ஒரு விரிவடையும் இணைப்பை ஏற்படுத்த வேண்டும்.

கட்டிட பாகங்களில் பளு வேற்றும் போது இருவேறு பாகங்களுக்கிடையே மிக அதிகமான வித்தியாசம் இருக்கமானால் விரிவடையும் இணைப்பை அமைக்க வேண்டும். அல்லது கட்டிடத்தின் வடிவத்திலோ அல்லது பிளானிலோ உடனடியான மாறுதல்கள் இருக்குமானால் இணைப்பை அமைக்க வேண்டும்.
இடைவெளியின் அளவு 20மி.மீ -25மி.மீ இருக்க வேண்டும்.

 

இந்த இணைப்பை தவிர்க்க முடியுமா?

தற்போதைய காலகட்டத்தில் ரயில் தண்டவாளங்களுக்கிடையே இடைவெளி இல்லாமல் வெல்டிங் மூலம் தொடராக ஏற்படுத்தப்படுகின்றன. வெப்பசக்தியினால் உண்டாகும் விசைகளை வேறு விதத்தில் பலப்படுத்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு தண்டவாளத்திற்கும் ஸ்லீப்பருக்கும் இடையே மிக பலமுள்ள கிரிப்புகள் கொண்டு இணைக்கப்படுகின்றன. கான்கிரீட் ஸ்லீப்பர்கள் பயன்படுத்தி ரயில் பாதையை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது.ரயில்பாதைகளுக்கு ஒகே. ஏனெனில் அது முழுக்க முழுக்க இருப்பினால் ஆனது. ஆனால் சிமெண்ட், கம்பிகள் கலந்த கான்கிரீட் கட்டுமானங்களை விரிவடையும் இணைப்புகள் இன்றி உருவாக்க முடியுமா?
தேவையற்ற குப்பைகள், தூசு தங்குவதற்கான நிரந்தர இடமாகமாறி விடும் விரிவடையும் இணைப்புகள் நிச்சயம் வேண்டுமா?

விஷ ஜந்துகள், பூச்சிகளின் தங்குமிடமாகி விடுகிற ஆபத்து உள்ள விரிவடையும் இணைப்புகள் இல்லாமல் பெரிய கட்டிடங்களை, கட்டுமானங்களை உருவாக்க முடியாதா? என்றால், கட்டிடங்களும் இணைப்புகளே இல்லாமல் ஒரே தொடராக ஒருங்கிணைந்த அமைப்பாக செய்ய முடியும். வெப்பச்சக்தியினால் உருவாகும் விசைகளை சமாளிக்க அதிகப்படியாக இரும்பு கம்பிகளை பயன்படுத்தி கட்டிடத்தில் சேதமோ விரிசல்களோ இல்லாமல் பாதுகாக்க முடியும்.

கம்பிகளின் தேவையை ஸ்டரக்சரல் பொறியாளர் வெப்பத்தின் அடிப்படையில் கணிக்கப்பட வேண்டும். சில நேரங்களில் கட்டிடத்தின் தோற்றத்திற்காக இணைப்பை தவிர்க்க வேண்டிய நிர்பந்தம் உண்டாகிறது. சிலநேரங்களில் கட்டிடத்தின் பக்கவாட்டு பளுவை எதிர்க்கவும் மிக வலுவான ஃப்ரேம் செயல்பாட்டை உறுதி செய்யவும் தேவைப்படுகிறது.

சில கட்டிடக்கலை வல்லுனர்கள் கொண்ட அமைப்புகள் (architectural companies) தற்போது இவ்வாறான வெப்பசக்தியினால் விரிவடையும் இணைப்புகளை தவிர்க்கும் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளன.

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067692