ஜல்லிகள் ஜாக்கிரதை

24 ஜனவரி 2024   05:30 AM 01 நவம்பர் 2018   10:09 AM


சாதாரண பொதுமக்கள் முதல் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் வரை சிமெண்ட், ஸ்டீல் போன்ற பொருட்கள் மீது கொண்டிருக்கும் அதே விழிப்புணர்வை கான்கிரீட்டின் உறுதுணையாக விளங்கும் கருங்கல், ஜல்லிகள் மீதும் கொண்டிருப்பார்கள் எனச் சொல்ல முடியாது. உண்மையில் பிற கான்கிரீட் கூட்டுப்பொருட்கள் மீது கொண்டிருக்கும் அதே முக்கியத்துவத்தை ஜல்லிகளுக்கும் தருதல் வேண்டும்.

 

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமெனில், விலை அதிகமான சிமெண்ட் எவ்வளவு முக்கியமோ, அதே அளவில் விலை குறைவான ஜல்லிகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஜல்லிகள் கான்கிரீட்டுக்கு உருவம், கொள்நிலை மாறாத்தன்மை மற்றும் சிக்கனத்திற்கு வழி வகுக்கின்றன.

ஜல்லிகளில் பலவகை உண்டு. தரமான குவாரிகளில் கிடைக்கும் ஜல்லிகள்தான் கட்டுமானத்திற்கு சிறந்தது. சோற்றில் கல் இரு

ந்தால் எப்படி தூக்கி வீசுகிறோமோ அது போல கல்லில் (ஜல்லி) தூசிகள் இருந்தால் அது சோறாக இருந்தாலும் அப்புறப்படுத்த வேண்டியதுதான். ஜல்லிகள் கெட்டிப்பட்ட கான்கிரிட்டிற்கு வலிமை, விரைப்புத்தன்மை, குறைவான சுருக்கம், அடர்த்தி, நீடித்துழைக்கும் தன்மையைத் தருகின்றன. கான்கிரீட்டில் 70-80 சதவீதம் ஜல்லி-மணல்கள் உள்ளன. ஜல்லி அளவு குறையுமானால் இடைவெளி அதிகரித்து, சிமெண்டு பசையின் அளவு அதிகரிக்கும். இதனால், கான்கிரீட்டில் வெப்ப உயர்வு, சுருக்கங்கள், நுண்வெடிப்புகள் தோன்றவாய்ப்பு உண்டு.

 

ஜல்லிகளின் அளவு :

ஜல்லிகளின் பொது அளவுகள் 40 மி,மீ, 20 மி.மீ, 12.5 மி.மீ மற்றும் 10 மி.மீ ஆகும். ஒவ்வொரு அளவுள்ள ஜல்லியும் எப்படி ரகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.


ரகப்படுத்தப்பட்ட ஜல்லிகளையே உபயோகிக்க வேண்டும், இதனால் ஜல்லிகள், கான்கிரீட் அதிக அளவிற்கு அடைப்படும் தன்மையை பெறுகின்றன, இதனால் சிமெண்ட்-மணல் தேவை குறையும், கான்கிரீட் நீடித்துழைக்கும், 20 மி,மீ. என்ற அளவில் மட்டும் வாங்குவது சரியாக இருக்காது. 20 மி.மீ 
மற்றும் 10 மி.மீ. என்ற இரண்டு பகுதிகளாக பெற்று நமது கட்டுமானப் பணிக்கு உகந்த கான்கிரிட்டிற்கு தேவையான விகிதாசாரத்தில் கலக்கவேண்டும்.

 

தரமான ஜல்லி :

களிமண், வண்டல் மண் போன்றவை ஜல்லியில் இருந்தால் அவற்றை நீக்க ஜல்லியை கழுவவேண்டும். இல்லாவிட்டால் ஜல்லி, மணல், சிமெண்ட் இடையே சரியான தேவையான பிணைப்பு ஏற்படாது. தாவர, உயிர்ப்பொருட்கள் (வேர் போன்றவை) ஜல்லிகளில் கலந்திருந்தால், அவற்றை எடுத்துவிடவேண்டும், இல்லாவிட்டால் கான்கிரீட்டின் வலிமை குறையும்.


ஜல்லிகள் பல வடிவங்களில் கிடைக்கின்றன, கனச் சதுரமாகவும், கோணல்களுடனும், தீர்க்கமான விளிம்புகளுடனும் உள்ள ஜல்லிகள் சிறந்த பலனை அளிக்கும். அதேசமயம் உருண்டை வடிவ ஜல்லிகளை உபயோகிப்பதில் தவறில்லை.


செதில் வடிவ நீண்ட ஜல்லிகளை உபயோகித்தால் கான்கிரீட்டின் ஆரோக்கியம் குறையும். செதில் வடிவ மெல்லிய நீண்ட ஜல்லிகளை வெளியே எடுத்தபிறகே மற்ற ஜல்லிகளை உபயோகிக்க வேண்டும்.


ஜல்லிகள் தயாரிப்பாளர்கள், விற்பனை செய்பவர்களிடமிருந்து ஜல்லிகள் I.S 383 குறிப்பேட்டிற்கு உட்பட்டுள்ளது என்பது பற்றிய சான்றிதழை கேட்டு வாங்கவேண்டும்.

 

ஜல்லிகளை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்?

 

கட்டுமானத்தொழிலில் பயன்பாடுகளுக்கு ஏற்ப ஜல்லிகள் சுத்தமாக சரியான அளவுகளில் தேர்ந்தெடுக்கப் பட வேண்டும். 11/2, 3/4, 1/2, 1/4, அளவுகளில் ஜல்லிகள் கிடைக்கிறது. 20 mm. 12 mm, 6 mm என பயன்பாட்டு அளவிற்கு ஏற்ப ஜல்லிகள் உடைக்கப்படும்.

 

20 mm ஜல்லிகள் வீடு கட்டுவதற்கும், தார்ச் சாலை போடுவதற்கு பயன்படும், 1: 2: 4 என்ற விகிதத்தில் கலவை போட்டால் சிறந்த கான்கிரீட் கிடைக்கும். பெரும்பாலான ஒப்பந்ததாரர்கள் 20 mm (தனிமுக்கால்) ஜல்லிகளை அதிகமாக பயன்படுகிறார்கள். இதனை போடுவதால் சிமெண்ட் நுகர்வு (Cement Consumption) குறைவாக இருக்கும். ஆனால் கலவை உறுதியாக இருக்காது. இது கட்டுமானத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

 

கான்கிரீட் கலவை விகிதத்தின் போது ஜல்லிகளின் அளவு (Size) எந்த அளவிற்கு முக்கியம் என்பதை அறிய ஒரு சோதனை உண்டு. 1x11 சதுர அடிக்கு 1 கான்கிரீட் கட்டை (Cube) ) தயார் செய்ய 3/4," (20 mm ஜல்லியை நிரப்பி சாந்து கொட்ட வேண்டும். இந்த கான்கிரீட் கட்டை உலர்ந்த பிறகு உடைத்து உள்ளே பார்த்தால் வெற்றிடங்கள் (Voids) இருக்கும். எனவே, 70 சதவீதம் 3/4,’’ ஜல்லியையும் 30 சதவீதம் 1/2'’ ஜல்லியையும் பயன்பாட்டுக்கு ஏற்ப பயன்படுத்தி கான்கிரீட் போட்டால் எதிர்காலத்தில் வெடிப்புகள், கீறல்கள் (Hairline Crack) ஏற்படாது.

 

தரமற்ற ஜல்லிகள் தரும் ஆபத்து :

 

ஜல்லிகளின் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு இன்று தேவை. இது இல்லாததால்தான் சாதாரண பாறை கற்கள் மற்றும் கிணற்று ஜல்லிகளை எல்லாம் இடித்து ஜல்லி என்ற பெயரில் விற்று வருகிறார்கள். இந்த ஜல்லிகளைப் பயன்படுத்தி கட்டடம் கட்டினாலோ, தளம் போட்டாலோ கட்டத்திற்கு மிகவும் ஆபத்து.

 

இந்த ஜல்லிகளால் மின்கசிவு, வெடிப்பு, கீறல் போன்றவை ஏற்படும், ஒரு டன் அழுத்தத்தைக் கூட இந்த ஜல்லிகள் பயன்படுத்தப்பட்ட கட்டுமானங்கள் தாங்காது. அதேபோன்று ஒரே அளவான தனி ஜல்லியைப் பயன்படுத்துவதும் தவறு. 3/4,’’ ஜல்லியும் 1/2'’ ஜல்லியும் கலந்து இருக்க வேண்டும். தனிமுக்காலும் தனி அரையும் வாங்கி 1 : 1 அல்லது 2 : 1 அல்லது 3 : 1 என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டும். பளபளப்பு (மைகா) அதிகம் உள்ள ஜல்லியும், தகடு போன்ற ஜல்லியும் தரக்குறைவானதாகும்..

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067628