நீர்கசிவு என்கிற கட்டிட வில்லன்..

24 ஜனவரி 2024   05:30 AM 29 அக்டோபர் 2018   10:14 AM


பழைய வீடுகளுக்கு மட்டுமல்ல, புதிய வீடுகள், கட்டிடங்களுக்கும் நீர்க்கசிவுதான் நிரந்தர வில்லன். பொதுவாக நீர்க்கசிவிற்கு பல காரணங்கள் உள்ளன. நீர் வடிய வழியில்லாமல் தேங்குவதாலோ, ஓட்டைகள் மூலமாக நுழைவதாலோ சுவர்களில் நீர்க்கசிவு ஏற்படலாம். புவியீர்ப்பு விசையினால் தாழ்வான பகுதிகளுக்கு செல்லும் நீர், காப்பிலரி போர்ஸினால் (Capillary Force) ஓட்டைகள் மூலமாக உறிஞ்சப்பட்டு எல்லா இடங்களுக்கும் பரவுகிறது. சில நேரம் ஜன்னலுக்கும்,செங்கல் கட்டுமானத்திற்கும் இடையில் ஏற்பகக்கூடிய பிளவுகள் வழியாகவும் நீர் உறிஞ்சப்படலாம். இதனால் நீர்க்கசிவு ஏற்படலாம். பிளவுகளைப் பூச்சைக் கொண்டு அடைப்பதன் மூலம் இதை தடுக்கலாம்.

சில சமயம் “சன்ஷேடின்‘ மேல்தளம் சரிவாக அமைக்கப்படாமல் இருக்கலாம். அழகுக்காக சன்ஷேடின் தொட்டி முறையில் அமைக்கப்பட்டு மழைநீர் வடிவதற்கான துவாரமும் சிறிதாக அமைக்கப்பட்டிருக்கலாம். இதனால் சன்ஷேடுக்கும், சுவருக்கும் இடையில் உள்ள இணைப்புகள் ஈரமாகி நீர்க்கசிவிற்கு வழி அமைக்கலாம். அதனால், சன்ஷேட் கட்டும்பொழுது அதன் மேல்தளத்தை சரியான அளவு சரிவோடு அமைப்பது அவசியமாகும்.


நிலைக்கும், சுவர்க்கும் நடுவே பிளவு ஏற்படலாம். சிறு ஊசியை உள்ளே செலுத்துவதன் மூலமும் பிளவின் அளவைக் கணக்கிடலாம்.

 

சிறு பிளவுகளை ஈயத்தைக் கொண்டு அடைக்கலாம். பெரிய பிளவாக இருப்பின் பூச்சைக் கொண்டு அடைக்க வேண்டும். கதவுநிலை சேதமுற்றுவிட்டதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அழுகி இருக்கும் பட்சத்தில் ஜன்னல் மற்றும் கதவின் சேதமான நிலைப்பகுதிகளை மாற்ற வேண்டும். புதிய மற்றும் பழைய நிலைகளுக்கு நடுவே உள்ள இடைவெளியை வெள்ளை ஈயத்தைக் கொண்டு அடைக்க வேண்டும்.

 

மழையினால் ஏற்படும் நீர்க்கசிவினை நீர்ப்புகா டைல்சை பதிப்பது மூலமாகவோ, நீரை எதிர்க்கும் பூச்சினை பூசுவது மூலமாகவோ தடுக்கலாம்.
நீரை எதிர்க்கும் பூச்சு மழைநீர் உறிஞ்சப்படாமல் தடுக்குமே ஒழிய,பிளவுகளை சரிசெய்வதற்கு உதவாது. தொடர்ச்சியாக மழை பெய்யும் காலங்களில் இத்தகைய பூச்சு மட்டும் போதாது. பிளவுகளையும், ஓட்டைகளையும் உரிய முறையில் அடைத்தபின் இவ்வகை பூச்சு பூசுவதே நீர்க்கசிவைத் தடுப்பதற்கு வழி. இவ்வகை நீர்புகா பூச்சு ஐந்து வருடம் வரை மட்டுமே நிலைத்து நிற்கும். எப்பொழுது நீர் வடியாமல் உறியப்படுகிறதோ அப்பொழுது இவ்வகைப் பூச்சினை மீண்டும் அடிக்க வேண்டும்.

 

ஈரக்கசிவு தரையிலிருந்து வரலாம். தரையிலிருந்து நிலத்தடி நீர் மேலே வருவதே இதற்கு காரணமாகும். இது சுவர்களின் உட்பகுதியினால் உறிஞ்சப்படக் கூடும். இதைத் தடுப்பதற்கு நீர் உட்புகாமல் இருப்பதற்கான பூச்சினை தரையளவிலும் பூச வேண்டும். நீர் தடுப்பு பூச்சு பூசப்படாத பட்சத்தில் தரையினை சுற்றி சிறிது ஆழத்
திற்கு தோண்டி நீரை எதிர்க்கும் பூச்சுகளை உதரணத்திற்குSiliconate Solution - ஐ போன்றவற்றை நீரில் கரைத்து ஊற்றலாம்.

 

கான்கிரீட் பூச்சு சரியாக இல்லாமல் இவ்வகைப் பூச்சுகளைப் பூசுவது மட்டும் போதாது. கான்கிரீட் தரமானதாகவும், நீரை உறிஞ்சாமலும் இருப்பது அவசிய
மாகும். கான்கிரீட் குளோரைடு, சல்பைடு போன்ற இரசாயனப் பொருட்கள் அதிகமாகக் கொண்டிராமல் இருக்க வேண்டும். பின்வரும் தடுப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம் நீர்க்கசிவினை ஓரளவு கட்டுப்படுத்தலாம். அவை பின்வருமாறு:

 

1.சரியான நீர்புகா பூச்சினை உபயோகிக்க வேண்டும்.

 

2. ஒரு மீட்டர் திண்ணத்திற்கு பிளாட்பாரம் மாதிரி,கட்டடத்தைச் சுற்ஷீக் கட்டுவதன் மூலம் மழைநீர் வடிவதற்கு வழி செய்யலாம்.

 

3. சன்ஷேடுகளின் மேல்தளத்தில் சரியான அளவில் சரிவுகள் அமைத்து நீர் தங்காமல் வடிவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

 

4. மழை அதிகமாக விழும் பகுதிகளில் உள்ள கட்டடங்களின் சுவர்களில் திண்ணமான கான்கிரீட் கலவையோடு சரியான நீர்ப்புகா பூச்சிகனைக் கலந்து அடித்து மழைநீரை உறிஞ்சாமல் தடுக்க வேண்டும்.

 

5. முதல் மாடிக் கட்டடத்தின் கழிவறை கட்டுமானத்தில் தவறு ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் கசிவு ஏற்படும். அப்பொழுது கழிவறையின் தரையையோ அல்லது ஒரு பகுதி சுவரையோ இடித்து மீண்டும கட்ட வேண்டும்.


- பொறி. சண்முகம்

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 882547923

4

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067611