ஒரு வீடு கட்டுவதென்றால் ,எத்தனை அரசு துறைகளுக்கு நாம் இறங்கி ஏற வேண்டியிருக்கும்? மனைபதிவு, பிளான் அப்ரூவல், குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு எனச் சொல்லிக்கொண்டே போகலாம். பணம் குறைவது மட்டுமல்லாமல் மேற்கண்ட அலைச்சல்களுக்காகவும் தான் பல பேர் நம்பிக்கையானவர்களிடமிருந்து பழைய வீடுகளை வாங்கிக் கொள்கின்றனர். இதுவும் ஏறத்தாழ, பழைய கார், பைக்குகளை வாங்குவது போன்றது தான். கொஞ்சம் ஏமாந்தாலும் ஓட்டை உடைசலோடு மாட்டிகொண்டு அழ வேண்டியது தான். எனவே, பழைய வீடு வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன.அவற்றில் சிலவற்றையாவது நாம் அறிவது அவசியம்.
வீட்டின் ஆயுள் மதிப்பீடு
விலை குறைவாக கிடைக்கிறது என்று பழைய வீட்டை வாங்குவதற்கு அவசரப்படக்கூடாது. அந்த வீடு தொடர்பான ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். பழைய வீடு என்பதால் ஆவணங்கள் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று அசட்டையாக இருந்துவிடக்கூடாது. அப்படி ஆவணங்கள் சரியான இருக்கும் பட்சத்தில் வீட்டின் தரம் எப்படி இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அது கட்டி முடிக்கப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகி இருக்கிறது? அதன் ஆயுள் எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதை ஆய்வு செய்வது அவசியம். சிலர் விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக சிதிலமடைந்த நிலையில் இருக்கும் வீட்டை தேர்வு செய்வார்கள். சின்ன சின்ன மாற்றங்களை செய்தால் வீட்டை புனரமைத்துவிடலாம் என்ற எண்ணத்தில் வாங்குவார்கள்.
அப்படிப்பட்ட வீடு எந்த அளவுக்கு பழமையாக இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். பழையகால கட்டுமான வீடாக இருந்தால் விழிப்புடன் இருக்க வேண்டும். அந்த வீட்டில் புனரமைப்பு பணி செய்வதற்கு அதிக செலவு பிடிக்கும். சுவர் வெடிப்புடன் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். சிறிய அளவில் ஏற்படும் வெடிப்பு நாளடைவில் விரிவடைவதற்கு வாய்ப்பு இருக்கிறதா? என்பதை கட்டுமான நிபுணர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
சுவர்களுக்கு புதிய சிமெண்டு கலவை பூச்சு வேலைப்பாடு செய்ய வேண்டியிருக்கும். அது புதுப்பிக்க ஆகும் செலவில் பாதிக்கு மேல் ஆக்கிரமித்துவிடும். அப்படியிருக்கையில் மற்ற பகுதிகளில் மாற்றங்களை செய்ய நினைக்கும்போது செலவு அதிகரிக்கும். பெரும்பாலனோர் பழைய வீட்டை புதுவீடு போன்று மாற்றுவதற்குதான் முயற்சிப்பார்கள்.
புதுப்பிக்க ஆகும் செலவு அதிலும் உள் அமைப்பை நவீன வசதிகளுடன் வடிவமைக்க ஆசைப்படுவார்கள். அதற்கு ஆகும் செலவுகளை கணக்கிடும்போது திட்டமிட்ட பட்ஜெட்டுக்குள் செலவை முடிப்பது சவாலானதாகவே இருக்கும். வீட்டை புதுப்பிக்க எவ்வளவு செலவாகும் என்பது குறித்து தோராயமாக மதிப்பீடு செய்து பட்ஜெட் போட வேண்டும். கையிருப்பு எவ்வளவு இருக்கிறது? மீதி எவ்வளவு பணம் தேவைப்படும்.அதை எத்தகைய வழியில் பெறுவது? என்பதை முடிவு செய்து போது
மான பணத்தை திரட்டி வைத்திருக்க வேண்டும்.
புதுப்பிக்கும் பணி நடைபெறும்போது பணம் திரட்ட முயற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். அது பணிக்கு தொய்வு ஏற்பட வழிவகுக்கலாம். முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவதே வேலையை துரிதப்படுத்தும்.
செலவு அதிகரிக்கும்
புதுப்பிக்கப்பட்ட சுவர்களுக்கு வர்ணம் பூசுவதற்கு தனி செலவு ஆகும். கதவுகள், ஜன்னல்கள் பழமையானதாக இருந்தால் அவைகளை மாற்றி, வார்னிஷ் பூச்சு மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த செலவுகளை எல்லாம் கணக்கிடும்போது செலவுகளை அதிகரிக்கவே செய்யும். ஏற்கனவே பழைய வீடு வாங்குவதற்கு சில லட்சங்கள் செலவாகி இருக்கும். அதை புதுப்பித்தல் பணிக்கும் லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டியிருக்கும் எனும்போது, யோசித்து செயல்பட வேண்டும். முதலிலேயே பழைய வீட்டின் தரத்தை பற்றி மதிப்பீடு செய்து அதற்கு ஏற்ப புதுப்பித்தல் பணிக்கு பட்ஜெட் போட வேண்டும்.
அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சில வேலைகள் நாள்கணக்கில் நீடிக்கும் வேலையாக இருக்கும். அந்த வேலையின் முக்கியத்துவம் கருதி உடனே முடிப்பதற்கு முயற்சிக்க வேண்டும். வேலை முடிவடைவதற்கு நாட்கள் அதிகமானால் செலவும் கூடுதலாகும். ஆகவே, பழைய வீட்டை வாங்கி புதுப்பிப்பதாக இருந்தால் அது லாபம் தருவதாக அமையுமா? என்பதை ஆராய வேண்டும்.
அதோடு, கீழ்கண்டவற்றையும் நினைவில் இருத்தி, பழைய வீடு வாங்க வேண்டும்.
1. பழைய வீடுகளை மழைக்காலங்களில் சென்றுதான் பார்வையிட வேண்டும். அப்போதுதான் நீர்கசிவு, ஓதம் போன்ற பிரச்சனைகள் கண்கூடாக தெரியும்.
2. வீடு பார்க்கப்போகும் போது கட்டட வேலை நன்கு தெரிந்த மேஸ்திரி அல்லது கட்டட பொறியாளரோடு சென்று கட்டத்தின் ஸ்திரத்தன்மையை பொறுமையாக சோதித்தறிய வேண்டும்.
3. முடிந்தால் சொத்து மதிப்பீட்டாளர் ஒருவரை கூடவே நண்பர் அழைத்துச் சென்று, வீட்டின் விற்பனை விலை பெறு
மானதுதானா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
4. கழிவறைகள், செப்டிக் டேங்க், கட்டத்தின் பின்புறம் போன்றவற்றின் பராமரிப்பு நிலை எப்படி உள்ளது என்பத ஆராய வேண்டும்.
5. அந்த பகுதியில் உள்ள வீடுகளின் விற்பனை மதிப்பை தெரிந்து கொள்ள வேண்டும்.
- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067616
|