கட்டிடம் கட்டுதலை எளிமையாக்கும் ‘பிம்’ கட்டிட விவரத் தொகுப்பு

24 ஜனவரி 2024   05:30 AM 24 அக்டோபர் 2018   11:40 AM


பொதுவாக, ஒரு கட்டிடத்தை திட்டமிட்டு, வடிவமைத்து, நிர்மாணிக்கும் பணிகளை மேற்கொள்ளும் ஆர்கிடெக்ட், பொறியாளர், கட்டுநர் மற்றும் உரிமையாளர் போன்றவர்களுக்கு எண்ணற்ற விவரங்கள் தேவைப்படுகின்றன. ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் அவர்களுக்குத் தேவையான விவரங்களைத் தேடிப் பெறுவது மிகவும் கடினமான பணியாகவும், அதிக நேர விரயத்தை ஏற்படுத்துவதாகவும் அமைகின்றது. சில நேரங்களில் சில விவரங்கள் சரியாகக் கிடைக்காததால், பணிகளில் தவறுகள் ஏற்பட்டு அதன்நிமித்தம் பல வகைத் தடங்கள்களும், பண விரயமும், கால விரயமும் ஏற்படுகின்றன.

 

இப்போது அந்நிலை இல்லை. என்னென்ன கட்டுமானப் பொருட்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பவை குறித்து உரிமையாளரே திட்டமான முடிவுகளை எடுக்கிறார். அதுபோலவே பல வகை கட்டுமானப் பொருட்கள் சந்தையில் கிடைப்பினும், அவற்றில் நல்ல பொருட்கள் எவை? என அறிந்து வாங்கி பயன்படுத்தவும் தேவையான விவரங்கள் பல வழிகளில் உரிமையாளருக்கும், கட்டுநருக்கும் கிடைக்கின்றன. இவை மட்டுமின்றி, நாம் விரும்பும் வகையில் வீட்டைக் கட்டி முடிக்கப் பணம் எவ்வளவு தேவைப்படும் என்பதையும் துல்லியமாகக் கணக்கிட்டு முன் கூட்டியே அறியவும் முடிகிறது.

 

இத்தனை வசதிகளுக்கும் மூல காரணங்கள் எவை எனச் சுருக்கமாகக் கூற வேண்டுமாயின், முன் அனுபவம் மற்றும் தகவல் பகிர்வு எனக் கூறலாம். ஏற்கனவே இதைப் போன்ற கட்டிடங்கள் பலவற்றைக் கட்டியதன் மூலம் தெரிந்து கொண்ட பல விrயங்களை, கட்டுநர்கள் மற்றும் நண்பர்கள், புதிதாக வீடு கட்டவுள்ளவரிடம் பகிர்ந்து கொள்தல் தகவல் பகிர்வு ஆகும்.

 

ஆனால், அனைவர்க்கும் இத்தகைய அனுபவமிக்க மற்றும் சரியான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளக் கூடிய கட்டுநர்களோ, நண்பர்களோ கிடைக்க வாய்ப்பில்லை. அத்தகையோருக்கு உதவுவதற்காக உருவாக்கப்பட்ட பெட்டகம் தான் கட்டிடத் தகவல் களஞ்சியம் அல்லது கட்டிட விவரத் தொகுப்பு ஆகும். ஆங்கிலத்தில் இது Building Information Modeling சுருக்கமாக BIM என அழைக்கப்படுகிறது. முதன்மையாக கட்டிடத் தகவல் களஞ்சியம் அல்லது தொகுப்பு, ஒரு கட்டிடத்தின் பல்வேறு உறுப்புகளின் இயற்கை மற்றும் பயன்பாட்டுக் குணங்களை முப்பரிமாண வடிவில் உள்ளடக்கியுள்ள எண் கணித வடிவப் பெட்டகம் ஆகும். இதில் அடங்கியுள்ள தகவல்கள் கட்டுநர் மற்றும் உரிமையாளர்களுக்குப் பல வழிகளில் பயன்படுவது மட்டுமின்றி, மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்தவை யாகவும் உள்ளன. இத்தகைய தகவல் பெட்டகங்களில் ஒவ்வொரு நாளும் புதிய விவரங்கள் சேர்க்கப்பட்டு முன்னேற்றப்படுகின்றன.

 

இத்தொகுப்பில் கடடிடத்தின் ஒவ்வொரு உறுப்பிற்கும் தனித்தனி அறைகள் அமைக்கப்பட்டு, அங்கங்கு அந்தந்த உறுப்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களும் சேர்த்து வைக்கப்படுகின்றன. ஒரு கட்டுநர், தனது கட்டிடத்தின் முப்பரிமாண வடிவத்தைத் திரையில் பார்க்கவும், தேவையான மாற்றங்கள் செய்யவும், முப்பரிமாண ஒருங்கிணைப்பு மேற்கொள்ளவும், உறுப்புகளை முன்வார்ப்பு செய்யவும், நிர்மாணப் பணிகளைத் திட்டமிடவும், நிர்வகிக்கவும், பல்வகை வேலைகளின் அளவுகளை முன் கூட்டியே கண்டறியவும், தேவையான முன்னேற்பாடுகள் செய்யவும், பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் இத்தொகுப்பிலுள்ள விவரங்கள் மிகவும் பயன்படுகின்றன. ஒரு திட்டத்தின் ஆரம்ப நிலையிலிருந்தே இத்தொகுப்புகள் உரிய வகையில் பயன்படுத்தப்படும் பட்சத்தில், பொருட்கள் மற்றும் பணியாளர்கள் பயன்பாட்டில் சிக்கனம் மேற்கொள்ளப்பட்டு, வீண் செலவுகள் மற்றும் தொழிலாளர் பிரச்சனைகள் தவிர்க்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

 

மேலும், ஒரு கட்டிடம் கட்டப்படுவதற்கு ஆர்கிடெக்ட் மற்றும் வடிவமைப்புப் பொஷீயாளர்கள் திட்டமிடுதல், வடிவமைத்தல் போன்ற பணிகளை முழுமையாக முடித்த பின்னரே கட்டுநரிடம் நிர்மாணிக்கும் பணி கொடுக்கப்படுகிறது. இவர்கள் ஒருவர் கருத்தை மற்றவர் அறியாமல் தனித்தனியாக அவர்களது பணிகளை மேற்கொள்ளுவதால் ஏற்படும் வேறுபாடுகள், முரண்பாடுகள் கட்டிடத் தகவல் தொகுப்பைப் பயன்படுத்தும்போது ஏற்படுவதில்லை.

 

சுருக்கமாகக் கூறுவேண்டுமாயின், கட்டிடத் தகவல் களஞ்சியம் ஒரு கணிப்பொறி அடிப்படையிலான தகவல் சேகரிப்புப் பெட்டகம் ஆகும். நிதி மேலாண்மை, ஊதியப்பட்டியல் தயாரிப்பு, பொருட்கள் மற்றும் பணிகள் குறித்த அடிப்படை அம்சங்கள், வரைபடங்கள், ஒப்பந்த ஆவணங்கள், கட்டுமான கால அட்டவணை, பணப்பட்டுவாடா பட்டியல், தரக்கட்டுப்பாட்டு விவரங்கள், பொருள் பயன்பாடு மற்றும் இருப்புப் பதிவேடுகள், பணி அளவைப் பதிவேடு, பணி ஆய்வுப் பதிவேடுகள், பணி முன்னேற்ற அறிக்கைகள், இயந்திரப் பயன்பாடு, மின் தேவை, சட்ட விதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பேரிடர் நிவாரணம், பணிகளின் போது பயன்படுத்தப்படும் பல்வகை உபகரணங்கள் ஆகியவை குறித்த பல்வேறு விவரங்கள், நம்பத்தக்க பல மூலங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டு,பயனீட்டாளர்களுக்கு நேரடியாகப் பயன்படும் வண்ணம் பல்வேறு மென் பொருள்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 


பண வரவு செலவு கணக்கு பேணுதல், கட்டிட வரைபடங்கள் தயாரித்தல், முன் மதிப்பீடு தயாரித்தல் போன்ற குறிப்பிட்ட பணிகளுக்கென்றும் தனித்தனியாக பல மென்பொருட்கள் உள்ளன.

 

இந்த கட்டிட தகவல் தொகுப்புகளை முழுமையாகப் பயன்படுத்த விரும்பும் கட்டுமான நிறுவனங்கள், மிக விரைவாகச் செயல்படக் கூடிய கணினிகளையும், மென் பொருட்களையும், தகவல் தள சேவைகளையும் பெற்றிருக்க வேண்டும் மென்பொருட்களும், அவை சார்ந்த தகவல் தளங்களும், நிறுவனத்தின் தொடர்புடையவையாக இருக்க வேண்டும்.

 

- பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067539