எங்கும் எதிலும் வேதிப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்கிற எண்ணம் வலுப்பெற்று வருகிறது. பயோ டீசல், பயோ எனர்ஜி, ஆர்கானிக் ஃபுட் என்றெல்லாம் எத்தனையோ விதமான இயற்கை கண்டுபிடிப்புகள் நம் வாழ்க்கை முறையை மாற்றி வருகின்றன.
கட்டுமானத் தொழிலிலும் இந்த அங்ககமாற்றங்கள் அபரிமிதமான புதுமைகளைப் புகுத்த இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் பயோ டைல்ஸ் எனப்படும்
உயிரியல் ஓடுகள்.
பயோ பிளாஸ்டிக் என்று குறிப்பிடப்படும் உயிரியல்
பிளாஸ்டிக் வகைகளை பாலிலாக்டைட்கள் என்ற பன்மங்களிலிருந்து உருவாக்கலாம். இந்த உத்தியைப் பயன்படுத்தி வெப்பத்தையும் அழுத்தத்தையும் தாக்குப் பிடிக்கக் கூடிய பிளாஸ்டிக்குகளைத் தயாரிக்கலாம்.
இவை இயற்கையாக மட்கும் தன்மை கொண்டவையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளலாம். அதிக உறுதி கொண்டவையாக உற்பத்தி செய்யலாம். மீண்டும் மீண்டும் புதுப்பிக்கும் விதத்திலும் தயாரிக்கலாம். இதனால் மூலப் பொருள் தட்டுப்பாடு என்பதே இல்லாமல் செய்யலாம். கட்டடக்கலை, உள் அலங்காரம், கட்டுமானம் போன்ற பல்வேறு துறைகளின் தேவைகளை நிறைவேற்றக் கூடிய பிளாஸ்டிக்குகள் எதிர்காலத்தை வளமுள்ளதாக்கும்.
பயோ ஓடுகளைத் தயாரிப்பதற்கு விதவிதமான உத்திகளைப் பயன்படுத்தலாம். இதுவரை எண்ணிப் பார்க்க முடியாத வடிவமைப்பு நுட்பங்களையும் புகுத்தலாம். சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவித கேடும் நேராமல் பார்த்துக் கொள்ளவும் முடியும். உயிரியல் ஓடுகளைத் தயாரிக்கக் கடுகு எண்ணெய் முக்கிய
மூலப் பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதிலிருந்து கிடைக்கக் கூடிய எபாக்ஸி வகைப் பிசின் இதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
இதனுடன் இயற்கையில் கிடைக்கும் நாரிழைகளையும் கலந்து கொள்கிறார்கள். நிலத்திற்கடியில் அழுத்தப்பட்டுக் கிடக்கும் ஒரு வகை மண்ணும் இதில் சேர்க்கப்படுகிறது. ஜெர்மனியில் இத்தகைய மூலப் பொருட்களைப் பயன்படுத்தி உயிரியல் ஓடுகளைத் தயாரித்திருக்கிறார்கள்.
நன்மைகள் என்ன?
சுற்றுச் சூழல் மாசுபடுவது உயிரியல் ஓடுகள் தயாரிப்பில் மிக மிகக் குறைவு. எடை குறைவான ஓடுகளைத் தயாரிக்க இயலும். அதே நேரத்தில் உறுதியை விட்டுத் தரத் தேவையில்லை. மூலப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு வராது. தயாரிப்பிற்குத் தேவைப்படும் எரிபொருள், மின்சாரம் போன்றவையும் குறைவு. ஆகவே வழக்கமான பீங்கான் ஓடுகளைக் காட்டிலும் உயிரி ஓடுகள் வரவேற்கத் தக்கவை.
உருவாக்கும் உத்திகள் எளிதானவை. கற்பனைக்கு வலு சேர்ப்பவை.சதுரம், முக்கோணம் என எத்தகைய துண்டு வடிவிலும் தயாரிக்கலாம். வண்ண வண்ணச் சேர்க்கைகளை எளிதாக உருவாக்கலாம்.
ஒளிரவும் வைக்கலாம்
ஒளியை வெளிவிடும் வகையிலான ஃப்ளோரெசன்ட் வகை ஓடுகளையும் தயாரிக்க முடியும். இதற்குத் தேவையானதெல்லாம் குறிப்பிட்ட வகை வண்ணச் சாயங்களைக் கலப்பதுதான். உயிரி ஓடுகளை ஒளி ஓடுகள் என்று அழைத்தாலும் தப்பில்லை. சாலைகளில் எச்சரிக்கைப் பலகைகளை அமைப்பது முதல் உள் அலங்கார வேலைகளில் புதுமையைப் புகுத்துவது வரை எத்தனையோ செய்யலாம். சுவர்களிலும் தரைகளிலும் உயிரி ஓடுகளைப் பதிக்கலாம். சமையலறையிலாகட்டும் குளியலறையிலாகட்டும் அழகுக்கு அழகு சேர்க்கலாம்.
உற்பத்திச் செலவும் குறைவு. நுகர்வோருக்கும் சிக்கனமானது. தாக்குதலைத் தாக்குப் பிடிக்கும் திறனும் இந்த உயிரி ஓடுகளுக்கு அதிகம். ஆகவே, உற்பத்தி வரிசையில் ஒன்றிரண்டு கட்டங்களை நேரடியாகவே தாண்டிவிட்டு முடிவடைந்த நிலைக்குச் செல்வது எளிது. இதன் மூலம் உற்பத்திச் செலவைக் கணிசமாகக் குறைக்க வழி பிறக்கும்.
கட்டுமானக் கழிவுகள் சுற்றுப்புறத்தைப் பெரிதும் மாசுபடுத்துகின்றன என்ற குறையையும் தவிர்க்கலாம். உயிரி ஓடுகள் இயற்கையில் மட்கக் கூடிய தன்மை கொண்டவையாக இருப்பதால் சுற்றுச் சூழல் மாசு ஏற்பட வழி இல்லை. உயிரி ஓடுகளைப் பயன்படுத்திக் கட்டப்பட்ட கட்டுமானங்களில் வசிப்பவர்களின் இரசனையும் சுகானுபவங்களும் இதுவரை இல்லாத அளவுக்கு மாறும்.
ஒரு கட்டத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து வகை ஓடுகளுக்கும் விடை கொடுத்து விட்டு முழுக்க முழுக்க உயிரி ஓடுகளை மட்டுமே பயன்படுத்தும் நிலை வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
ஜெர்மனியில் உள்ள ஹேல் நகரைச் சேர்ந்த ஃப்ரான் ஹோஃபர் இன்ஸ்டிடியூட் ஃபார் மெக்கானிக்ஸ் அண்ட் மெட்டீரியல்ஸ் (Fraunhofer Institute for mechanics&materials) என்ற ஆராய்ச்சி நிலையத்தில் உயிரி ஓடுகள் குறித்தவிரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெர்லின் நகரில் இத்தகைய ஓடுகளைக் கண்காட்சிக்கு வைத்திருந்தது கவனிக்கத் தக்கது.
ஏற்கனவே பயோ எரிவாயு, பயோ டீசல் என்ற நிலையிலேயே நமது கண்டுபிடிப்புகள் பயன்பாடு அளவில் பரவலாகாமல் தட்டுத்தடுமாறுகின்றன என்ற சூழ்நிலையில் பயோ ஓடுகளின் பயன்பாடு பற்றி நமக்கு ஐயம் இருக்கவே செய்கிறது. என்றாலும், வீணாகும் பயோ கழிவுகளிலிருந்து தயாரிக்கப்படும் பயோ ஓடுகள் மூலம் சுற்றுப்புறம் காக்கப்படுவதோடு அல்லாமல் கட்டுமானச் செலவில் சில ரூபாய்களாவது மிச்சப்படும் என்பதற்காகவாவது பயோ ஓடுகளை நாம் வரவேற்க வேண்டும்.
- பில்டர்ஸ் லைன்
மாத இதழிலிருந்து...
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in
சந்தாவிற்கு... 8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067531
|