இந்த புத்தாண்டு வீட்டைப் பற்றிக் கனவு கண்ட பொதுமக்களுக்கு ரொம்ப விருப்பமான ஆண்டு. அதுவும் வீட்டுக்கடன் என்பது பேயா ? தேவதையா? என தெரியாமலேயே முழித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பிரதமரின் புதிய அறிவிப்பு பல மகிழ்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் வீட்டுக் கடனுக்கு பல்வேறு மானியங்களை அறிவித்து இருக்கிறார். இதன் மூலம் வீட்டுக் கடன் வாங்கும்போது கணிசமான மானியத்தைப் பெறலாம் என்கிறார்.
மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டமான ‘பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா’ குறிப்பிட்ட, வளர்ந்து வரும் நகர்ப்பகுதிகளில் மட்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், நகர்ப்பகுதியில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானப்பிரிவினர் பயன் பெற முடியும். மற்றும் வங்கிக் கடன் பெறுபவர்களுக்கு 6.5% வட்டி மானியம், அதாவது 2,30,000 ரூபாய் வரை மானியம் பெறலாம்.
தற்போது பிரதமர் அஷீவித் துள்ள இந்த திட்டத்தின்படி, கிராமப்புறத்தில் உள்ளவர்களும் பயன் பெற முடியும். இந்தத் திட்டத்தின் கீழ். 2017-ம் ஆண்டில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் (ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளவர்கள்) வீட்டுக் கடனாக ரூ.9 லட்சம் வரை பெறுபவர்களுக்கு 4% வட்டி
மானியமும், நடுத்தர வருமானப் பரிவினர் (ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்குக் குறைவாக உள்ளவர்கள்) ரூ.12 லட்சம் ரூபாய் வரை கடன் பெறுபவர்களுக்கு 3% வட்டி மானியமும் கிடைக்கும்.
கிராமப்பகுதியில் உள்ள வீட்டை மாற்றி அமைப்பதற்குப் பெறப்படும் கடன் தொகை 2 லட்சம் ரூபாய்க்கு 3% வட்டி மானியம் பெறலாம். (ரூ.6 லட்சம் வரை வருமானம் பெறுபவர்கள்) என்றும் அறிவித்து இருக்கிறார் பிரதமர். இந்த வீடுகள் அனைத்தும் அப்ரூவல் பெற்றுப் கட்டப்படுபவையாக, கட்டப்பட்டவையாக இருக்க வேண்டும்.
தற்போது அனைத்து வங்கிகளிலும் வட்டி விகிதத்தைக் குறைத்து வருகிறார்கள். இதன்மூலம் வட்டி விகிதம் சுமார் 8% என்ற வகையில் வருகிறது.
பிரதமர் அறிவித்த திட்டத்தின் கீழ், கிராமப் பகுதியில் வீட்டுக்கடனுக்கு வட்டி மானியமாக 4% பெறும்போது. 4% வட்டியை மட்டுமே செலுத்த வேண்டி இருக்கும். இதன் மூலம் 1 லட்சம் ரூபாய்க்கு 500 ரூபாய் மாதத் தவணையாகச் செலுத்த வேண்டும். ரூ.9 லட்சத்துக்கு ரூ.4,500 மாதத் தவனையாகச் செலுத்த வேண்டி இருக்கும்.
கிராமப் பகுதியில் வீடு கட்டுவதாக இருந்தால் குறைந்தபட்சம் 30 சதுர மீட்டரில் (323 சதுர அடி) வீடு இருக்க வேண்டும். இப்போது இந்தத் திட்டத்தின் கீழ் கொஞ்சம் பெரிய வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். இந்த வீட்டைக் கட்ட ரூ.9 லட்சம் என்பது போதுமானதாகவே இருக்கும். இது நல்ல திட்டம்தான். இதனை எப்படிச் செயல்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்தத் திட்டத்தின் வெற்றி இருக்கும் என்கிறார்கள் சென்னையின் கட்டுநர்கள் மற்றும் டெவலப்பர்கள்.
பிரதமர் அறிவித்த திட்டத்தை தேசிய அளவில் செயல்படுத்தி வரும் தேசிய வீட்டு வசதி வங்கியின் சென்னை அலுவலகத்தில் இந்தத் திட்டம் குறித்து விசாரித்தபோது, ‘அனைவருக்கும் வீடு என்ற பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தில் பயன் பெற பொருளாதார அளவில் பின்தங்கி இருப்பவர்கள், ஏற்கெனவே வீடு இல்லாத நிலையில், வீடு வாங்கும்போது அல்லது புதிதாக வீடு கட்டும்போது இந்தத் திட்டத்தில் பயன் பெற முடியும். இந்தத் திட்டம் அறிவித்து, ஒரு வருடம் ஆன நிலையில், இப்போதுதான் பல வங்கிகளும் செயல்படுத்த முனைப்பு காட்டி வருகின்றன. தற்போது 300 கோடி ரூபாய் வரை வங்கிகளுக்கு மானியமாக வழங்கி இருக்கிறோம். தற்போது கிராமப்பகுதியும் சேர்ந்து இருப்பதால், இனிவரும் காலங்களில் பயனாளிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067459
|