பில்டிங் ‘பாத்-வே’ - சாலையை தவிர்க்கும் ஹாங்காங்....

23 ஜனவரி 2024   05:30 AM 23 அக்டோபர் 2018   11:14 AM


உலகின் அதிசொகுசு மற்றும் உல்லாசமான நகரமான ஹாங்காங் பற்றி வாசகர் ஒருவர் அரிய செய்தியயான்றை நமக்கு பகிர்ந்திருந்தார். அது பற்றி விரிவாக ஆராய, அந்த தகவல்கள் நமக்கு பெருத்த ஆச்சரியத்தைத் தந்தன.

 

அதாவது உலகில் சாலை & வீதிகளுக்கு இணையாக கட்டடம் டூ கட்டடம் இணைப்பு நடை பாதைகளை (Building Pathway ) உருவாக்கியுள்ள முதன்மை நகரம் ஹாங்காங். புரியவில்லை அல்லவா? நீங்கள் சென்னை எல்.ஐ.சியில் வேலை நிமித்தம் செல்கிறீர்கள். வேலை முடிந்த பிறகு பக்கத்தில் உள்ள ராயப்பேட்டை EA மாலுக்குச் செல்ல நினைக்கிறீர்கள் என்ன செய்வீர்கள்? முதலில் எல்.ஐ.சி லிருந்து லிஃப்ட் மூலம் கீழே இறங்குவீர்கள். பின்பு வாகனம் ஒன்றி ல் ஏறி 500மீ தொலைவில் உள்ள EA. மாலுக்கு 2 கி.மீ தூரம் சுற்றிக்கொண்டு போவீர்கள். அங்கே பார்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு மறுபடியும் லிஃப்ட் அல்லது, எஸ்கலேட்டர் மூலம் மால் காம்ப்ளெக்ஸில் தேவையான தளத்தில் நுழைவீர்கள்.

 

இதற்கு எத்தனை நேரம்?, எரிபொருள்?, மின்சாரம்? போதாதற்கு போக்குவரத்து நெரிசலையும் நீங்கள் ஏற்படுத்தி விடுகிறீர்கள். இதுவே, எல்.ஐ.சி இரண்டாம் தளத்திலிருந்து EA மால் முதல் தளத்திற்கு ஒரு இணைப்பு நடைமேம்பால பாதை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

 

அதாவது நம் ஊரிலேயே பெரிய மருத்துவமனைகள், அரசு வளாகங்கள் ஆகியவற்றிலேயே கூட இந்த வசதி உண்டு. பிளாக் என்கிற ஒரு குறிப்பிட்ட கட்டட டவரிலிருந்து இன்னொரு பிளாக்கிற்கு செல்ல மேலேயே நடைபாதை இருக்கும். இதைதைத்தான் (Building Pathway) என்கிறார்கள். இதனால், அந்த கட்டிடத்தில் இருந்து இறங்கி மறுபடியும் வேறு கட்டடத்திற்கு ஏற தேவையில்லை. இதே கான்செப்டைத்தான் ஹாங்காங் கடைபிடிக்கிறது. ஆனால் ஒரு வளாகக் கட்டடத்தை மட்டுமல்ல, நகரத்தில் உள்ள எல்லா கட்டடங்களையும் இதன் மூலம் இணைக்க நினைக்கிறது. 2004 ஆம் ஆன்டிலிருந்து இந்தப் பணிகள் நடக்கின்றன.
இதன் மூலம் அருகருகே உள்ள ஹோட்டல்கள், மருத்துவ
மனைகள், லாட்ஜ்கள், அரசு அலுவலகங்கள், ­ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் போன்ற வெவ்வேறு நபர்களுக்கு சொந்தமான தனித்தனி கட்டடங்கள் இணைக்கப்பட்டு மக்களுக்கு எளிதான வழி உருவாக்கப்பட்டுள்ளது.

 

அதாவது, ஹாங்காங்கில் ஹோட்டல் ஒன்றில் நீங்கள் இருபதாவது மாடியில் ரூம் போட்டு இருக்கிறார்கள். இப்போது நீங்கள் அருகே உள்ள வங்கிக்கு போக வேண்டும் என்றால் முதல் தளத்திற்கு வந்து விட வேண்டும். (எல்லா இணைப்பு நடை பாதைகளும் முதல்மாடி உயரத்திற்கு தான் அமைக்கப்பட்டிருகின்றன).

அங்கிருந்து உங்கள் வங்கியிற்கு போக வழி உண்டு. அதாவது நிலத்தை, தரையை, சாலையைத் தொடாமலேயே நீங்கள் பயணம் செய்யலாம். நடராஜா சர்வீஸ்.

 

1 கிமீ தூரம் முதல் 4 கி.மீ தூரம் வரை பல்வேறு கட்டடங்களுக்கு இடையே இணைப்பு நடைபாதைகள் ஹாங்காங்கில் உண்டு. ஒரு சில நடைபாதைகள் 6 கி.மீக்கு மேலேயும் அமைந்துள்ளன. உங்கள் கால்களுக்கு நடப்பதற்கு திரானி இருந்தால் ஹாங்காங் முழுவதையும் சுற்றி வந்துவிடலாம். ஒரே வழியாக
இல்லாமல், அவ்வப்போது நடை பாதை முடிந்துவிட்டால் நிலத்திற்கு வந்து, அருகே உள்ள ஏதேனும் பெரிய கட்டடத்தில் நுழைந்தால் கண்டிப்பாக பொது வழி ஒன்றிருக்கும், அதன் மூலம் உங்கள் நடை பயணத்தை ஷாப்பிங்கைத் தொடரலாம்.

 

இதனால் அந்தந்த கட்டடத்தில் வசிப்போரின் பிரைவஸி பறிக்கப்படுமா? என்றால் கிடையாது. அதற்காகவே எல்லா கட்டடங்களுக்கும் தனது முதல் தளத்தை பொது வழி அமைப்பதற்காக தியாகம் செய்திருக்கிறார்கள். 2004 -க்கு பிறகு ஹாங்காங்கில் கட்டப்படும் எல்லாகட்டடமும் இம்முறையில் தான் கட்டப்படுகின்றன. இதுவரை ஹாங்காங்கின் 38% கட்டடங்கள் தங்களுக்கு இடையே இணைப்புப் பாலத்தை ஏற்படுத்தியுள்ளன. 2040 முடியும் போது எந்தக் கட்டத்தில் நீங்கள் நுழைந்தாலும், கீழே இறங்காமலேயே ஹாங்காங்கின் எல்லா கட்டடத்திலும் நுழைய முடியும்.

 

இது முழுதும் ஒருங்கிணைக்கப்பட்டால் எல்ல நடை பாதை வழிகளும் முடிவிலா பாதைகளாகி விடும். இம்முறையில் சாலைகளில் பயணிப்போரின் எண்ணிக்கை 30% குறைந்துள்ளனவாம்.

மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்களுக்கு இது தான் சிறந்த வழி என பல ஆராய்ச்சியாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஹாங்காங்கில் கடந்த 5 ஆண்டுவரை சாலையில் நடக்காதவர்கள் / வாகனங்களில் பயணிக்காதவர்கள் 21% ஆகும் என அந்நகராட்சி புள்ளியில் விவரம் தெரிவிக்கிறது. இவர்கள் எல்லாமே பில்டிங் டூ பில்டிங் தாவுபவர்கள்.

இது போன்று பயணிப்பவர்களுக்கு ரோட் மேப் போலவே ‘பில்டிங் பாத்-வே’ மேப்பும் உண்டு. ஆப்ஸ் மூலம் தங்கள் மொபைல் போனில் பர்த்துக் கொண்டே தாங்கள் விரும்பும் இடங்களுக்குச் செல்கிறார்கள் உள்ளூர் மக்கள்.

 

இந்த லிங்கில் இல்லாத கட்டடங்கள் கூட, அருகே உள்ள லிங்க் இருக்கும் கட்டடங்களுடன் தாங்கள் கட்டடத்தை இணைத்து கொள்ள பேரார்வம் காட்டுகின்றன. ஆனால் அதற்காக கட்டடத்தின் ஒரு சிறுபகுதியை( இரண்டாம் தளம்) அவர்கள் இழக்க நேரும், என்றாலும் மக்களின் போக்குவரத்திற்காக வணிக வளாகங்கள் பலவும் இந்த இணைப்புத் திட்டத்தை வரவேற்கின்றனவாம். சராசரியாக மாதம் ஒன்றி ற்கு நான்கு கட்டடங்கள் பொது லிங்கில் இணைகின்றனவாம்.

இந்தியாவில் இதுபோன்ற ஒரு கட்டிடவியல் ஐடியா செயல்படுத்த தோதான நகரமாக நகரமாக மும்பையைச் சொல்லலாம். ஆனால் இது குறித்து எனக்கு ஏற்படும் சில ஐயங்கள்.

 

1. பலதரப்பட்ட மக்கள் இது போன்ற கட்டடங்களுக்குள் நுழையும் போது கட்டடம் மற்றும் மக்களுக்கு என்ன பாதுகாப்பு?

2. பூகம்பம் மற்றும் தீவிபத்தின் போது, அவை சுலபமாக மற்ற கட்டங்களைத் தாக்குமே? என்ன செய்வது?

3. அதிகப்படியான மக்கள் புழங்குவதற்கான வலிமை தாங்கும் அளவிற்கு அக்கட்டடம் வடிவமைப்பு செய்யப்பட்டிருக்குமா?
இதற்கெல்லாம் யாராவது சீனியர் பொறியாளர்கள் பதில் சொல்லுங்களேன்.

 

கட்டுரையாளர் பா.சுப்ரமண்யம்
பில்டர்ஸ் லைன் மாத இதழிலிருந்து,,,

சந்தாவிற்கு.. 8825479234
ஆன்லைனில் படிக்க.. www.buildersline.in

 

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067476