ஹலோ நான் ராமநாதன் பேசுகிறேன். ஒரு எண்ணூறு சதுர அடியில், வீடு ஒன்று தேவைப்படுகிறது. சைட் அட்ரஸ் சொல்றேன் குறிச்சுக்கங்க. வந்து டெலிவரி பண்ணிடுங்க’’.
பீட்சா டெலிவரிக்கு புக்கிங் செய்வது போல வீடுகளுக்கு புக்கிங்கா? என நீங்கள் புருவம் உயர்த்தலாம்.
ஆனால், இந்த நடைமுறை தான் வெளிநாடுகளில் குறிப்பாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து நாடுகளில் பரவலாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் இல்லையா? எனக் கேட்காதீர்கள். பெங்களூரில் சமீபத்தில் “ரெடிமேட் வீடுகள்’ கொண்ட குடியிருப்பு உருவாக்கப்பட்டு தயாராகிவிட்டது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் “ஃபேக்டரி வீடுகள்’ எனச் சொல்லப்படும் ரெடிமேட் வீடுகள் பக்கம் கட்டுமானத்துறை திரும்பலாம்.
மேலை நாடுகளில் இது சகஜமான வடிவமைப்பு பாணி. பிரிகேஸ்ட் பலகங்களால் தயாராகும் கொஞ்சம் அட்வான்ஸ் வீடு இது. மக்கள் தொகைப் பெருக்கம். நகரப் பகுதிகளில் ஏற்படும் இட நெருக்கடி, நிலத்தின் மதிப்பு உயர்வு போன்ற பல காரணங்களால், ரெடிமேட் வீடுகளுக்கு மேலை நாடுகளில் வரவேற்பு கொஞ்சம் அதிகம். முழுக்க முழுக்க ஒரு வீட்டினை ரெடிமேடாக உருவாக்கும் இந்த ஐடியாவிற்கு சொந்தக்காரர் நியூசிலாந்தை சேர்ந்த கட்டிட பொறியாளர் கெவின் மூர் ஆவார்.
ஆயிரம் சதுர அடி வீடு கட்ட குறைந்தது ஆறு மாத காலமாவது ஆகும்.
அதற்கு மேலும் கூட, வடிவமைப்பைப் பொறுத்து காலம் கூட பிடிக்கும். “இந்தப் புதிய தொழில் நுட்பத்தை நீங்கள் பயன்படுத்தினால் ஒரு நாளில் நான்கு வீடு கட்டலாம்’ என்கிறார் கெவின் மூர். கட்டுமானத் துறையில் ஆகும் நேர விரயம் மற்றும் கட்டுமானச் செலவுகளைக் கட்டுப்படுத்த ஒரு புதிய தொழில்நுட்பம் கொண்டு வர என மூர் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தனது பல ஆண்டு முயற்சிக்கு பிறகு 1985-ம் ஆண்டு அவர் Insulated Precast Concrete panels களை உருவாக்கினார்.
இந்தப் பேனல்களின் மூலம் அவர் வீட்டையே ரெடிமேடாக உருவாக்க முடியும் என்பதைக் கண்டறிந்தார். இந்தத் தொழில்நுட்பத்திற்காக அவர் 1989-ம் ஆண்டு உரிமமும் பெற்றுள்ளார் என்றாலும், 2000க்குப் பின்பு தான் இந்த தொழில்நுட்பம் நடைமுறைக்கு வந்தது.
இதன் மூலம் முழு வீட்டையும் ஃபேக்டரியிலேயே உருவாக்கிவிட முடியும். வீடு கட்டப்படும் மனை
யில், அதாவது சைட்டில் கொண்டு வந்து இறக்கினால் போதும்.
வீட்டுக்கான தரை, ஜன்னல்கள், சமயலறை, ஹால் போன்றவை பணியிடத்தில் அல்லாமல் தொழிற் கூடத்தில் தயாரிக்கப் பட்டுவிடுகின்றன. முழுவதும் சரிவர இணைக்கப்பட்ட வீட்டை கட்டுமானத் தளத்தில் வாகனங்கள் மூலம் கொண்டு இறக்கி வைத்தால் போதும்.
அறைகள் மட்டுமல்ல. எலக்ட்ரிக்கல் வயரிங், ஸ்விட்ச், பிளம்பிங் வேலைகளையும் தொழிற்கூடத்திலேயே முடித்து விடுகிறார்கள். மாடிப் படிகளையும் தேவையான அளவுக்கேற்ப முன்பே தருவித்தால், அதையும் தொழிற்கூடத்திலேயே தயாரித்து. கொண்டுவந்துவிடுகிறார்கள்.
நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவரும் இந்தத் தொழில்நுட்பம் இப்போது இந்தியாவிலும் பரவலாகி வருகிறது. ஆனால் இந்தத் தொழில்நுட்பம் தங்கும் விடுதிகள், சிறிய அறைகள் தொகுப்பு வீடுகளுக்கே பொருத்தமானதாக இருக்கும். பெங்களூரு வளர்ச்சி நிறுவனம் இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி 12 ஏக்கர் நிலத்தில் 1520 தொகுப்பு வீடுகளை கட்டியுள்ளது.
இந்த முறையில் பாரம்பரிய முறையில் உபயோகப் படுத்தப்படும் சுவர்களுக்குப் பதிலாகக் கனச் சதுரங்களை (Cubes) யூனிட்டுகளாகப் பிரித்துப் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக, பெங்களூரு வளர்ச்சி நிறுவனத்திற்காக மேற்கொள்ளப் பட்ட வீட்டு வசதித் திட்டத்தில் ஒரு வீட்டை 240 சதுர அடிக்கு 160 சதுரடி என இரு யூனிட்டுகளாகப் பிரித்து வீடுகளை அமைத்தாகச் சொல்கிறார் மூர். இவ்வாறாக 1520 வீடுகளும் கட்டுமான நிலத்திற்கு அருகே ஒரு தொழிற்கூடத்தில் உருவாக்கப்பட்டு எடுத்துவரப்பட்டன.
ரெடிமேட் வீடு என்பதால் அது பாரம்பரிய கட்டிடத்தை விட உறுதி குறைந்தது அல்ல. இம்முறையில் உருவாக்கப்படும் தூண்கள் கான்கிரிட், கம்பிச் சட்டகங்கள் கொண்டு உருவாக்கப்படுகிறது. அதனால் இது பாரம்பரிய முறையைவிடவும் உறுதியானதாகவும் நீடித்து உழைக்கக் கூடியதாகாவும் இருக்கும்.
மேலும், இந்தத் தூண்கள் அதிக எடையை தாங்கக் கூடியது. பூகம்பம் அதிர்வுகளைத் தாங்கக்கூடிய வகையிலும் இதன் அமைப்பு இருக்கும். 95 சதவீத வேலைகள் தொழிற்கூடத்திலேயே முடிந்துவிடும் என்பதால் பொருட்செலவு பாரம்பரிய முறையைக் காட்டிலும் மிகவும் குறைவு. வெளிப்புறச் சுவர்கள் 4 அங்குல கனமும். உட்புறச் சுவர்கள் 3 அங்குல கனமும் கொண்டவை.
ரெடிமேட் தொழில்நுட்பம் மூலம் மிக விரைவாக வீடுகளைக் கட்டிவிட முடியும். மேலும், பாரம்பரியக் கட்டிடக் கலையுடன் ஒப்பிடும்போது பொருட்செலவும் மிகக் குறைவு. “இப்போது இந்தத் தொழில்நுட்பத்தால் நாள் ஒன்றுக்கு நான்கு வீடுகளை உருவாக்கிவருகிறோம். எதிர்காலத்தில் இது 12 ஆக உயரலாம்’ என மூர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
இந்த ரெடிமேட் வீடுகளை எப்படிக் கட்டுகிறார்கள்? காலியாக இருக்கும் ஒரு இடத்தில், சதுரமான இடத்தைத் தேர்வு செய்து அதன் 4 மூலைகளிலும், சிறிய பள்ளம் தோண்டி, அஸ்திவாரம் அமைப்பார்கள். பின்னர் அதில் ரெடிமேட் வீடுகளின் எடையை தாங்கக் கூடிய அளவுக்கு, தரையிலிருந்து மிகக் குறைந்த உயரத்துக்கு ரெடிமேட் தூண்களை அமைக்கிறார்கள். அதன் மீது தரைத் தளத்தை உருவாக்குவார்கள். இதன் நீளம் மற்றும் அகலம் அனைத்தும் வீடு வாங்குபவரின் விருப்பத்துக்கும், செலவு செய்யும் சக்திக்கும் ஏற்ப தீர்மானிக்கப்படும். பின்னர் சுவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஸ்டீல் ராடுகளை ஒருங்கிணைத்து, வலுவான அமைப்பை ஏற்படுத்தி அதில் பிளாஸ்டர் போர்டுகளை நிரப்பி, வலுவான சுவரை உருவாக்குகிறார்கள்.
மேற்கூரை அமைப்பதற்காகத் தொழிற்சாலைகளில் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வலுவான பிளாஸ்டிக் தகடுகளைப் பயன்படுத்துகிறார்கள்.
எல்லாம் சரி. இது தமிழ்நாட்டிற்கு ஒத்துவருமா?
மேலை நாடுகளில் ரெடிமேட் கட்டிடங்களைப் பற்ஷீ இப்படி நேர்மறையாகக் கூறப்படுகின்றன. இந்தியாவில் இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்தப் பாணியில் கட்டிடங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதற்கு முக்கியக் காரணம், காலச்சார ரீதியாக வீடுகளை இப்படி எழுப்ப இந்தியர்கள் யோசிக்கிறார்கள். இரண்டாவது எச்சரிக்கை உணர்வு. ஒராண்டு பார்த்துப்பார்த்து பாதுகாப்பாகக் கட்டப்படும் கட்டிடங்களே சில் சமயம் சிக்கலாக்கிவிடுகின்றன. இரண்டு மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் ரெடிமேட் கட்டிடங்களின் பாதுகாப்பின் மேல் சந்தேகமும் இருக்கிறது என்று சொல்கிறார்கள் கட்டுமானத் துறையில் உள்ளவர்கள்.
மேலை நாடுகளில் பாரம்பரியமாகவும் கலை நயத்துடனும் கட்டப்பட்டு வந்த கட்டிடங்களுக்கு மாற்றாக ரெடிமேட் கட்டிடங்கள் அல்லது வீடுகள் பார்க்கப்படுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை, வீடு என்பது தலைமுறைகளைத் தாண்டிமனிதர்களுடன் ஒன்று கலந்துவிட்ட ஒரு தொடர்பு வீடுகள். பாரம்பரியமாகவும் கலாச்சாரத்துட்டன் ஒத்துப்போகக்கூடிய வீடுகளையே பெரும்பாலும் இந்நியர்கள் விரும்புகிறார்கள்.
ஆனால், விரைவான நகரமயமாக்கல் மற்றும் நகரத்தை நோக்கி இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, நுகர்வு காலச்சாரம் பெருக்கம் போன்ற காரணங்களால், இன்னும் சில ஆண்டுகளில் அந்த நிலை மாறலாம். வீட்டுத் தேவை அதிகமுள்ள இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அந்தத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்ய ரெடிமேட் வீடுகள் நல்ல தீர்வாகவும், மாற்றாகவும் அமையலாம்க லாச்சரமும் ரசனையும் ஒவ்வொரு தலைமுறைக்கும் மாறுபட்டு வருகிறது. ஆன்ராய்ட் போனிலிருந்து கார் வரை இந்த மனநிலை தான் இக்காலத்த லைமுறை யினரிடையே மேலோங்கி இருக்கிறது.
முன்பெல்லாம் தாத்தா வீடு, பாட்டன் வீடு என்று பெருமையுடன் வாழ்ந்து வந்த தலைமுறைகள் இப்போது இல்லை. “எல்லாத்தையும் இடித்து கட்டு’, “எல்லாமே புதுசா இருக்கனும்’ என்கிற தற்கால சந்ததியர்களின் மனப்பான்மைக்கு நூறு ஆண்டுகளுக்கு ஏற்ற வீடுகள் தேவையில்லை. ஏனெனில், அந்த வீட்டை அடுத்து வரும் சந்ததியர்கள் நிச்சயம் விரும்பப் போவதில்லை. பிறகு எதற்கு மாய்ந்து மாய்ந்து ஒவ்வொரு கல்லாக பார்த்து ஆண்டு கணக்கில் வீடு கட்டி, பெரும் பணம் செலவழிக்க வேண்டும்?
இது போன்ற மனநிலை உடையவர்களுக்கு ரெடிமேட் வீடுகள் மிகச் சரி.
முன்பு, ஜன்னல், கதவு போன்றவற்றை வீட்டின் உரிமையாளரே தச்சர்களைக் கொண்டு தயாரித்த காலம் மாறி இன்று அனைத்துமே தயார் நிலையில், கடைகளில் கிடைக்கின்றன. சமையலறைக் கட்டுமானம் என்பது மாடுலர் கிச்சன் என்ற வரையறையை எப்படி பிடித்துள்ளன? அந்த வகையில், ரெடிமேட் வீடுகளும் விரைவில் பிரபலமடையும். எதிர்காலத்தில் ரெடிமேட்வீடுகள் அல்லது கட்டிடங்கள் நகரங்களையும் கிராமங்களையும் அதிக அளவில் அலங்கரிக்கலாம்.
பில்டரஸ் லைன் மாத இதழிலிருந்து ..
முழு இதழினையும் படிக்க.. www.buildersline.in
சந்தா செலுத்த .. 88254 79234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2067423
|