கனவு இல்லத்தை வடிவமைப்பதற்கான சரியான கட்டிடக் கலைஞரை எப்படித் தேர்ந்தெடுப்பது என்பது நம்மில் பலருக்கு விடை தெரியாத கேள்விதான். அப்படியே சரியான கட்டிடக் கலைஞரைத் தேர்ந்தெடுத்துவிட்டாலும் அவரிடம் என்னென்ன விஷயங்களைக் கேட்பது என்று நமக்கு முழுமையாகத் தெரியாது. ஆனால், அவரிடம் தெளிவான கேள்விகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வதன் மூலம் மட்டுமே நம்முடைய கனவு இல்லத்தின் அடிப்படையான விஷயங்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும். பாதுகாப்பான வாழ்வுக்கான தரமான கட்டுமானம், சுகாதாரம் போன்ற அம்சங்களுடன் நம்முடைய முதலீட்டை இல்லமாக மாற்றுவது ஒரு கட்டிடக் கலைஞரின் பொறுப்பு.
அதேமாதிரி, கட்டப்படும் கட்டிடம் சட்ட வரையறைக்குள் கட்டப்படுகிறதா என்பதை உறுதிசெய்வதும் அவருடைய கடமைதான். இந்த இரண்டு பொறுப்புகளையும் ஒரு கட்டிடக் கலைஞர் நேர்மையாகவும், திறமையாகவும் செய்கிறாரா என்பதை உறுதிசெய்ய ‘கவுன்சில் ஆஃப் ஆர்கிடெக்சர்’ (Council of Architecture) என்ற அமைப்புச் செயல்படுகிறது. இந்த அமைப்பு இந்திய அரசால் கட்டடிக்கலைஞர்கள் சட்டத்தின்படி 1972-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
கட்டிடக் கலைஞர்களின் நன்னடத்தைக் கோட்பாடுகளைக் கண்காணிக்கவும், சட்ட உரிமம் வழங்கும் பணிகளையும் இந்த அமைப்பு செய்துவருகிறது. ஒரு கட்டிடக்கலைஞர் கட்டுமான அறிவு, அழகியல் போன்ற விஷயங்களைப் பிரதானமாக வைத்தே பெரும்பாலும் செயல்படுவார். அவரிடம் உங்கள் வீடு எப்படிப்பட்ட அம்சங்களுடன் வடிவமைக்கப்பட வேண்டும் என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும். உங்கள் வீட்டைப் பற்றிய கற்பனை வடிவமைப்பை அவரிடம் முதலில் எடுத்துரைத்துவிடுங்கள். உங்களுடைய கற்பனை வடிவமைப்பை அந்த அளவுக்கு அவர் உள்வாங்கிக்கொள்கிறாரோ, அந்த அளவுக்கு உங்கள் வீடு உங்கள் மனதுக்கு நெருக்கமாக இருக்கும்.
கட்டிடக் கலைஞரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன், வீட்டைப் பற்றிய உங்களுடைய விருப்பங்களை விரிவாக எழுதுங்கள். ஒவ்வொரு அறையும் எப்படியிருக்க வேண்டும், ஒவ்வொரு பகுதியும் எப்படியிருக்க வேண்டும் என்பதை விளக்கமாக எழுதுங்கள். அறைகளின் பயன்பாடுகளைத் தாண்டி எல்லா விஷயங்களையும் எழுதுங்கள். எந்த மாதிரியான கட்டுமானப் பொருட்களும், வடிவமைப்புப் பொருட்களும் பயன்படுத்த வேண்டும் என்ற விருப்பத் தேர்வையும் எழுதுங்கள். இணையத்தில் இருந்து உங்களுக்குப் பிடித்த வடிவமைப்புப் படங்களையும் சேகரித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏன் அவை பிடித்திருக்கின்றன என்பதற்கான குறிப்புகளையும் எழுதிவைத்துக் கொள்ளுங்கள். வீட்டின் வெளிச்சம், இடம், அமைப்பு என எல்லாவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுத்து
எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.
இது உங்களுடைய வீட்டின் அடிப்படையான ‘அவுட்லைன்’ திட்டமாக இருக்கும். குடும்பத்தினருடன் பேசி, உங்களுடைய எண்ணங்களுக்கு இறுதிவடிவம் கொடுங்கள். இதை வைத்து கட்டிடக் கலைஞர் உங்களுடைய விருப்பத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
Er.KV. Velmurugan.BE
www.buildersline.in
PH:No:8825479234
Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.
Total No.of Visitors :
2140883
|