பாடப்புத்தகம் படித்தால் மட்டும் போதுமா? பாடத்திட்டத்துடன் சிவில் பொறியியல் மாணவர்கள் கற்கவேண்டியவை

23 ஜனவரி 2024   05:30 AM 22 அக்டோபர் 2018   11:05 AM


 நமது பல்கலைக்கழகங்கள் ஒவ்வொரு பட்டப் படிப்பிற்கும் தனித்தனியே பாடத்திட்டங்கள் வகுக்கின்றன. அவ்வாறு பாடத்திட்டங்கள் நிர்ணயிக்கப்படும் போது, படிப்பை மேற்கொள்ளவிருக்கும் மாணவர்களின் நுழைவு நிலைத் தகுதி, படிப்பின் கால அளவு, படிப்பின் நோக்கம் போன்றவை கருத்தில் கொள்ளப்படுகின்றன.ஆயினும், இப்பாடத்திட்டங்கள் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அனைத்து வகைப் பணிகளுக்கான தேவைகளையும் 100% பூர்த்தி செய்வதில்லை. அது இயலாத காரியமும் கூட.

 

உதாரணமாக சிவில் இஞ்சினியரிங் துறையை எடுத்துக் கொள்வோமானால், அது ஒரு பரந்து விரிந்த ஆலமரம் போன்றது. ஆல மரத்திற்கு பல விழுதுகள் இருப்பது போல, சிவில் இஞ்சினியரிங் துறையானது பல்வேறு பிரிவுகளை உள் அடக்கியது. ஒவ்வொரு பிரிவும் தனித்தனி துறைகளாக (கட்டிடத் துறை, நீர்ப் பாசனத்துறை, போக்குவரத்துத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத்துறை, மண் இயக்கத்துறை, கிராம அபிவிருத்தித் துறை, நகரமைப்புத்துறை போன்று) இயங்குபவை. ஆகவே சிவில் இஞ்சினியரிங் என்று பொதுவாக பட்டய அல்லது பட்டப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர், அனைத்து பிரிவுகள் சம்பந்தமான அனைத்து விவரங்களையும் முழுமையாய் கற்க முடியாது; குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அனைத்தையும் கற்பிக்கவும் இயலாது. ஆகவே பல பகுதிகள் பாடத்திட்டத்தில் அறிமுகம் (Introduction to.....) என்றே தரப்பட்டு, அடிப்படை விசயங்கள் மட்டுமே சேர்க்கப் படுகின்றன.

 

ஆகவே, எந்தவொரு மாணவரும் (எத்துறையைச் சேர்ந்தவராயினும்) அவரது பட்டய/பட்டப் படிப்பிற்காக நிர்ணயம் செய்யப்பட்ட பாடப் பகுதிகளை மட்டும் படித்த விட்டு, பணித்தளத்தில் சிறப்பாகப் பணிபுரிவது நிச்சய
மாக சாத்தியம் அல்ல. ஒரு பணியில் சேர்ந்த பின் அக்குறிப்பிட்ட பணிக்குத்தேவையான விசயங்களை தங்கள் அனுபவம் மூலமாகவும், புத்தகங்கள் மற்றும் இணைய தளங்கள் மூலமாகவும், அத்துறையில் ஏற்கனவே பணியிலுள்ள மூத்த பொறியாளர்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

 

ஆயினும், அவர்கள் மேற் கொள்ளும் பணிகளைத்தவிர பிற பணிகள் குறித்த விசயங்களை அப்பணித்தளத்தில் கற்க முடியாது. மாணவர்கள் தங்களுக்கு ஒரு வேலை கிடைக்க என்ன தேவையோ அவற்றை மட்டும் தெரிந்து கொண்டால் போதும் என்று படிக்கக் கூடாது. அது போல வேலை கிடைத்தவுடன் அவ் வேலைக்கு என்ன தேவையோ அதை மட்டும் தெரிந்து கொள்வதோடு கற்பதை நிறுத்திக் கொள்ளவும் கூடாது. அப்படிப்பட்டவர்கள் அவர்கள் வாழ்வில் சிறப்பான முன்னேற்றம் காண்பது மற்றும் சாதனையாளராகத் திகழ்வது ஆகியவை இயலாத காரியமாகும்.

 

தேர்வில் தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றால் போதும் என்ற நொக்கோடு அதற்கு தேவையான விசயங்களை மட்டும் தெரிவு செய்து படிக்கும் மாணவர்களும் உண்டு. இவர்கள் அப்பட்டப் படிப்பிற்காக நிர்ணயம் செய்யப் பட்டுள்ள அரைகுறை பாடத்திட்டத்திலிருந்து சுமார் 50% பகுதிகளை மட்டுமே தேர்ந்தெடுத்து கற்கின்றனர். அதையும் தேர்வுகளை எழுதிய மறுநாளே வசதியாக மறந்து விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு பட்டம்தான் கிடைக்கும். சரியான வேலை கிடைக்காது.
ஒருவர் சிவில் இஞ்சினியர் ஆகவேண்டும் என்று முடிவெடுத்த நாளிலிருந்து வாழ்வின் இறுதிநாள் வரை கற்றுக்கொண்டேயிருப்பதற்குப் போதிய விசயங்கள் இத்துறையில் நிரம்ப உள்ளன.

 

ஆகவே, சிவில் இஞ்சினியரிங் மாணவர் முடிந்தவரை தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கவேண்டும். படிப்பது என்றால் புத்தகங்களில் எழுதப்பட்டுள்ள விசயங்களை வாசித்து தெரிந்து கொள்வது மட்டுமல்ல. அது போலவே, ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களைக் கேட்டு அஷீந்து கொள்வது மட்டும் கற்றல் ஆகாது. மாணவரின் வீட்டின் அருகின் அல்லது தங்கும் விடுதியின் அருகில் ஒரு பெரிய கட்டிடமோ, பாலமோ கட்டப்பட்டுக் கொண்டிருக்கலாம். விடுமுறை நாட்களில் அங்கு சென்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகளைப் பார்வையிடலாம்; பணியிலுள்ள பொறியாளரிடம் பணிகள் குறித்து விசாரித்து அறியலாம்.

 

பேருந்தில் பயணம் செய்யும் போது, கண்ணில் படும் கட்டமைப்புகளைக் கூர்ந்து கவனித்தாலே விசயங்களைத் தெரிந்து கொள்ளலாம். இரயிலுக்காக காத்திருக்கும் நேரத்தில் நடைமேடையின் மேற்கூரை எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது, எவ்வாறு தாங்கப்பட்டுள்ளது, என்னென்ன உறுப்புகள் பயன் படுத்தப்பட்டுள்ளன, அவை எவ்வாறு ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன எனப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நேரம் கிடைக்கும் போது, கட்டுமானப் பொருட்களின் விற்பனை நிலையங்கள் மற்றும் காட்சியகங்களுக்குச் சென்று பல விதமான பொருள்களின் பயன்பாடுகள், விலைகள் மற்றும் அப் பொருட்களின் சிறப்பம்சங்கள் குறித்து விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.

 

தற்கால கல்லூரி ஆசிரியர்களில் பெரும்பாலோர் எவ்வித பணித் தள அனுபவமும் இல்லாத புத்தகப்புலிகளாகவே உள்ளனர். ஆகவே பணித்தளங்களின் மேற்கொள்ளப்படும் சாரம் போடுதல், செங்கல் அடுக்கும் முறை, கிடை மட்டம் கொடுத்தல், சுவர் பூசும் முறைகள், கலவை மற்றும் காங்கிரீட் தயாரிக்கும் முறை, கதவுகள், ஜன்னல்கள், கிரில் கேட்டுகள், ஜாலிகள் ஆகியவற்றை சுவரில் பொறுத்தும் முறைகள், சென்ட்ரிங், பிளம்பிங், ஒயரிங் போன்ற பணிகளைப் பற்றி இந்த ஆசிரியர்களுக்கே எதுவும் தெரிவதில்லை.

 

ஆகவே, கட்டுமானப் பணித்தளங்களில் ஒரு பொறியாளர் மேற்கொள்ளவேண்டிய பணிகள் முழுமையாக கல்லூரிகளில் கற்பிக்கப் படுவதில்லை. இக்குறைகளைப் போக்க சிவில் இஞ்சினியருக்கான Time Saver’s Standards என்று பல புத்தகங்கள் உள்ளன. இவற்றில் இஞ்சினியர்களுக்கு தேவைப்படும் பல அறிய விசயங்கள் தரப்பட்டுள்ளன. கல்லூரிப் படிப்பின் போதே ஓய்வு நேரங்களில் இப்புத்தகங்களை நூலகங்களிலோ இணைய தளங்களிலோ பெற்று படித்து தேவையான விவரங்களைக் குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும். கட்டடத்துறைச் சார்ந்த தமிழ் நூல்கள், பத்திரிகைகளைத் தேடிப் பிடித்து படிக்க வேண்டும்.

 

ஒவ்வொரு மாணவரும் கல்லூரிப் படிப்பை முடித்து பணித்தளங்களில் பணியேற்பதற்கு முன், அப்பணித்தளங்களில் அவர்கள் மேற்பார்வையிட அல்லது அறிவுரை கூறவேண்டிய வேலைகள் குறித்து அறிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். 
 

தங்கள் கருத்துக்களை அதிகாரிகளிடமும், பணியாளர்களிடமும் உரிய முறையில் எடுத்துக் கூறத் தேவையான திறமையையும் (Communication Skil) வளர்த்துக் கொள்ள வேண்டும்.Autocad போன்ற பலவித மென்பொருட்களில் தேவையான பயிற்சிகளைப் பெற்றுக் கொள்வது நல்லது. கல்லூரிப் படிப்பின் போது ஒவ்வொரு பருவத்திற்கும் இடையில் சுமார் ஒரு மாதம் விடுமுறை விடப்படும் காலத்தில் பணித்தளங்களில் தாங்களாகச் சென்று செய்முறைப் பயிற்சி பெறுவது நல்லது.

 

Article By : Er. A.P.Arulmanikkam 
From Builders line monthly
For subscribe : 88254 79234
Visit us : www.buildersline.in

இன்னும் கட்டுரைகள்

Builders Line : No.621, Anna Salai. SIRE Mansion, 3rd Floor(Yamaha showroom above, Old Model school road Beginning),
Near to Gemini Bridge, Chennai - 600006.
Phone : 044-42142483, Email : buildersline@gmail.com
Powered by : JB Soft System, Chennai.

Total No.of Visitors : 2067323